விக்கி- தமிழ் தாலிபானியம்

தமிழ் விக்கி இணையம்

தேவநேயப் பாவாணர் விக்கி

அன்புள்ள ஜயமோகன்

நீங்கள் “எந்த பொது அமைப்பையும் ‘கைப்பற்றி’ சீரழிக்கும் நமது தீவிர இடதுசாரிகளும் பெரியாரியர்களும் கைவைக்கும்வரை தமிழிலும் அப்படி நீடிக்கலாம்” . ஆனால் தமிழ் விக்கிபீடியா இன்னொரு தலிபான்கள் கையில் சிக்கி உள்ளது – தனித்தமிழ் தலிபான்கள்.

இப்படி ஒரு வகை மொழி எழுதுவதை யை திணிப்பது விக்கி செயல் கொள்கைகளுக்கு எதிரானது. விகிபீடியா அடிப்படை கொள்கையாவது (http://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style#Follow_the_sources) தற்கால மொழி பயன்பாட்டை பின்பற்றுக, பெயர் சொற்கள் முதலியவற்றில் நம்பத்தகுந்த ஆதாரங்களை பின்பற்றுக.  மேலும் பல நாடுகளின் ஆங்கில பிரயோகத்தை பற்றி பேசும் போது, (http://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style#National_varieties_of_English) , எல்லா நாட்டு ஆங்கில நடைகளும் சரியே என்றுதான் சொல்கிறது. அது தமிழ் எழுத்துக்கும் பொருந்தும்.  உதாரணம் விஷயம், விடயம், விதயம், விசயம் என்று ஒரே வார்த்தைக்கு 4 பயன்பாடுகள் உள்ளன; பொதுத்தளமான விக்கியை பொருத்த வரை எல்லாம் சரிதான். ஆனால் விஷயம் என்பதை தமிழ்விகி நிரவாகத்தினர் களைப்பர்.

தமிழ்விக்கியின் நிர்வாகத்தினர் (அதாவது 4,5 பேர்கள்) தீவிர தனித்தமிழ் தலிபான்கள், அவர்கள் முக்கிய குறிக்கோள் தமிழிலிருந்து கிரந்த எழுத்துகளை களைய வேண்டும், வடமொழி மூல மொழிகள், ஆங்கிலம் மூல மொழிகள் முதலியவற்றை களைந்து `தூய தமிழ்` வார்த்தைகளை போட வேண்டும்.  இந்த அகங்காரமுள்ள `எனக்குத்தான் தமிழ் தெரியும், மற்றவர்களுக்கு தமிழ் தெரியாது` என்ற மனப்பான்மை பல எழுத்தாளர்களை விரட்டி அடிக்கின்றது. இதுதான் தமிழ்விக்கி நிர்வாகத்தினரின் குறியே தவிற நடைமுறை தமிழில், எல்லோருக்கும் தெரிந்த தமிழில் அறிவை வளர்ப்பது, அவர்கள் குறிக்கோள் அல்ல. அதனால்தான் நமக்கு தெரிந்த விஷயங்கள்/ஆட்களை பற்றி கூட ஆங்கில விக்கி கட்டுரைகளில் இருப்பதில் பத்து பங்கு கூட தமிழ் விக்கி கட்டுரைகளில் இல்லை.

ஒருவர் தன் கட்டுரையில் கிரந்தம் இல்லாது எழுதினாலும் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் மற்றவரக்ள் கட்டுரையில், இப்படி அடிக்கடி திணிப்பு நடத்துவது, எழுத்தாளர்களை வெறுப்பூட்டுவது.  நான் சில நீள கட்டுரைகள் எழுதி, திணிப்பு கொள்கைகளுக்கு எதிராக வாதாடி எழுதுவதை நிறுத்திக் கொண்டுள்ளேன்.

சில விக்கி கொள்கைகளுக்கு எதிரான , தமிழ்விகி நிர்வாகத்தினரின், திணிப்பு கொள்கைகள்:

1. கிரந்த எழுத்துகளை அழித்து, வேறு பிரயோகங்களை வைப்பது.  உதாரணங்கள்: இஸ்லாம் > இசுலாம். ; ஷட்ஜம் > சட்ஜம்; டென்னிஸ், டென்னிசு; மஹிந்த ராஜபக்ஷ > மகிந்த இராசபட்ச . இதைப்போல் ஆயிரக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. நீங்கள் ஸ்ரீலங்கா அரசு தளத்தில் சென்று பார்த்தால், ராஜபக்ஷ `மஹிந்த ராஜபக்ஷ` என்றுதான் தமிழில் கையெத்து வைத்துள்ளார்.   தமிழ் விக்கி நிர்வாகத்தினர் கொள்கை `முடிந்த வரை கிரந்தங்களை களையவேண்டும்` – இது விக்கி கொள்கைகளுக்கு புறம்பானது மற்றும் அல்ல, எழுத்தாளர்களை அவமதிப்பது ஆகும், படிக்கின்றவர்களை விரட்டி அடிப்பது ஆகும்.

2. அதே மனப்பான்மை மற்ற மொழி மூலங்களை அழித்து, `தூய தமிழ்` சொல் போடுவது. உதாரணங்கள் – நாத்திகம் > இறைமறுப்பு ; ரகசிய ஷரத்துகள் > மறைமுக உட்கூறுகள் ; ஆட்சேபணை > எதிர்மொழி.; சோவியத் யூனியன் > சோவியத் ஒன்றியம்;

3. ஆள், ஊர் பெயர்களிலும் இதே கிரந்த அழிப்பு திணிப்பு. ஆள் பெயர்களை ஆதாரபூர்வ ஆவணங்களிலும், அவர் எப்படி எழுதுகிறாரோ அப்படியே எழுதுவதுதான் விக்கி கொள்கை, ஆனால் தனித்தமிழ் தலிபான்கள் அதையும் மீறுகின்றனர். உதாரணமாக ஸ்பெயின் என்ற நாட்டு பெயரை நீங்கள் எந்த தமிழ் ஊடகத்திலும் பார்க்கலாம், ஆனால் தலிபான் இதை இசுப்பானியா என்றுதான் திணிக்கின்றனர். சஹாரா என்பது சகாராவாக திணிப்பாகின்றது. இது ஏன் திணிப்பு , சஹாரா என்று பல இலக்கிய, ஊடக எழுத்தாளர்கள் எழுதுகின்றனர் , அதனால் அது தற்கால தமிழ், ஒருவர் சஹாரா என்று எழுதினால், அதை மற்றொருவர், `கிரந்த கிளைப்பு` என்ற நோக்கில் மாற்றுவது , திணிப்பில்லாமல் வேரென்ன?

4. நபர்களின் சொந்த , அதிகாரபூர்வமான பெயர்களை , பெயர் பிடக்கத்தால் மாற்றுவது. உதாரணங்கள் இ. பத்மநாப ஐயர் > இ. பத்மநாபன்;  வ. வே. சு. ஐயர், > வ. வே. சுப்பிரமணியம். ஏன்? ஜாதிப்பெயர்களை களைய வேண்டுமாம் !!!

5. கிரந்தம் மேல் உள்ள காழ்ப்பில், தமிழில் அறியப்படாத எழுத்துகளை கிரந்த இடங்களில் உபயோகப்படுத்துவது.
ஒரு நிர்வாகி, கிரந்தத்திற்கு மாற்றாக புது எழுத்துகளை தயாரித்துள்ளார். அதனால் யாருக்கும் புரியாவிட்டாலும் பரவாயில்லை, கிரந்தம் ஒழிக என்ற மனப்பான்மையில் திணிப்பு வேலை நடக்கின்றது.

6. எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தைகளை களைவது, அதற்கு பதில் `தூய தமிழ்` வார்த்தைகளை பயன்படுத்துவது.  உதாரணங்கள் – ஆராய்ச்சி > ஆய்வு ; ரொட்டி > வெதுப்பி; யுத்தங்கள் > போர்கள் ; டோஸ்ட்மாஸ்டர் க்ளப் > டோஸ்ட்மாஸ்டர் பன்னாட்டுச் சங்கம்.

7. தற்கால நடைமுறை தமிழில் ரஷ்யா, ராகவன், ரொட்டி, லக்‌ஷுமணன் என்று எழுதுகிறோம்.  வார்த்தை முதலில் இ(ரா), உ(ரொ) போன்ற இலக்கணவிதிகள் எப்பொழுதோ தேய்ந்து விட்டன. அதனால் தேய்ந்த வழக்குகளை மற்றவர்களை மீது திணிப்பது சரி இல்லை.

தமிழ் விக்கிபீடியாவில் நடக்கும் கோல்மால்களை இன்னும் பல தலைப்புகளில் சொல்லலாம். இதற்கெல்லாம் ஆயிரக்கணக்கான உதாரணங்கள் உள்ளன

இந்த தனித்தமிழ் தலிபான்கள் விக்கியை தங்களுக்கு மட்டும் சொந்தமான உடமையைப் போல் பாவிக்கின்றனர்.
இதனல் வரும் விளைவுகள்
1. விக்கி கொள்கைகளுக்கு எதிரானது
2. எழுத்தாளர்களை அவமதிப்பது
3. படிப்பவர்களை குழப்பி அடிப்பது
4. அதனால் எழுதுபவர்களும், படிப்பவர்களும் ஒதுங்கி நிற்பர்.

 

ஆங்கில விக்கியில் 3000000 மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன; தமிழில் 20,000 கூட இல்லை. மொத்தமாக , ஆங்கிலம் வளர்கின்றது, தமிழ் தேய்கிறது . இதற்கு தனித்தமிழ் தலிபான்களுக்கு நன்றி சொல்லவும்.

மதிப்புடன்

வன்பாக்கம் விஜயரகவன்

நீங்கள் சொல்லும் தரப்பை புரிந்துகொள்கிறேன். தமிழ்போன்று ஒன்றுக்குமேற்பட்ட பண்பாட்டு நோக்குகள் இருக்கும் ஒரு மொழியில் நாம் சில நெறிகளை கடைப்பிடித்தேயாகவேண்டியிருக்கிறது. இங்கே ஒரு பொதுவெளியை அடிபப்டைவாத நோக்குடன் சிதைப்பது ஆரோக்கியகரமானதல்ல.

ஆனால் தமிழ்ச்சூழலின் வரலாற்றை வைத்துப்பார்க்கையில் நான் எங்கும் அதை எதிர்பார்க்கிறேன். அந்த அடிப்படைவாதம் அல்லாமல் வேறு சிந்தனைக்கே இடமில்லாதபடி எல்லா சூழலையும் சீரழித்திருக்கிறார்கள்.தமிழின் வேரு பல அமைப்புகளைப்போல இவர்களால் விக்கியும் பக்கவாதம் வந்து செயலிழக்கும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்து வந்தது.

 

இத்தகைய கொள்கைகளை ஒருவர் தன் சொந்த எழுத்தில் வைத்துக்கொள்வாரென்றால் அதில் எந்த பிழையும் இல்லை. அது அவரது சுதந்திரம் என்பதுடன் அது பண்பாட்டுச்சூழலில் ஒரு முக்கியமான தரப்பும்கூட.

 

நான் தனித் தமிழ்வாதத்தை என்றுமே ஆதரிப்பவன். நானே தூய தமிழில் எழுதும் நோக்குடன் நூற்றுக்கணக்கான கலைச்சொற்களை உருவாக்கியிருக்கிறேன். இவர்கள் திருத்தி எடுத்துவைக்கும் பல தூயதமிழ்ச்சொற்கள் நான் உருவாக்கியவை. ஆனால் பிறர் கட்டுரைகளில் கையை வைப்பதும் பொதுமொழிக்குள் மொழி வெளிக்குள் ஆக்ரமிப்பதும் முறையானதல்ல என்றே சொல்வேன்.

 

அது ஒருவகையான அடிப்படைவாதம். அந்த அடிப்படைவாதம் ஒரு பண்பாட்டின் பலநூறு இயல்பான உள்ளோட்டங்களைக் கணக்கில்கொள்ளாமல் அதை இயந்திரத்தனமாக அடக்கி ஆள முயல்கிறது. ஆகவே மொழியின் இயல்பான வளர்ச்சியைத் தடுத்து அதை அழியச்செய்யும். இந்தவகையானவர்களின் ஒரே கருத்துப் பங்களிப்பென்பது இந்த மொழித்திருத்தம் மட்டுமாக இருப்பதை எங்கும் கானலாம். கருத்துத்தளத்தில் இலக்கியப்புனைவுத்தளத்தில் சிறிய பங்களிப்பைக்கூட அளிக்கமுடியாத பழமைவாதிகளக இவர்கள் இறுகிப்போயிருப்பதைக் காணலாம்

 

இவர்கள் இந்த விஷயத்தில்காட்டும் கவனத்திலும், பிடிவாதத்திலும், ஏன் உழைப்பிலும் ஒரு சிறுபகுதியை சிந்தனைகளை தமிழில் கொன்டுவர பயன்படுத்தினால் தமிழ் இத்தனைபரிதாபகரமாக இருக்காது. ஒருவேளை இபப்டி சோம்பி தேங்கி இருந்தால்தான் அடிப்படைவாதத்தின் கட்டுக்குள் வைக்கமுடியுமென எண்ணுகிறார்களோ என்னவோ

என்ன செய்வது? மத்தியக்கிழக்கு மதவாதத்தின் நோயில் ஸ்தம்பித்திருப்பதுபோல நாம் தமிழ்வாதத்தின் பிடியில் உறைந்திருக்கிறோம்

ஜெ

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Sep 28, 2009

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 56
அடுத்த கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 2