தருண் தேஜ்பால்களும் பெண்களும்

அன்பின் ஜெமோகன் சார்,

கற்பித்த குருகுலங்கள், பண்பாடுகள், அறிவுரைகள் அனைத்தும் செயலற்று போய் விட்டதாகவே பல நேரங்களில் நான் எண்ணுகிறேன். ஆம், தனிமையில் இருக்கும் அதுவும் தன் அதிகாரத்தின் கீழ் இருக்கும் ‘பெண்’ என்பவளை நாம் நினைத்தவாறு செயல் படுத்திக்கொள்ளலாம் என்ற மனபோக்கு நம்மை விட்டு நீங்கும் வரை..

சமூகத்தில், அதிகாரத்தில் மிகைத்து இருப்போர் அனைவரும் பெண் என்ற பட்சத்தில் தன் நிலை மறந்து விடுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை

தானே. அரசியல் காரணங்களுக்காக மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்த தருண் தேஜ்பால் – ன் பாலியல் செய்தி என்னை மிகவும் கொதிப்படையச் செய்தது.

இனி அதில் வரும் உண்மை செய்தியில் கூட நமக்கு தருண் தேஜ்பால்-ன் இந்த முகம் வருவதைத் தவிர்க்க முடியாதே ! எல்லா ஆண்களிடமும் இந்த எண்ணம் அல்லது இந்த அச்சம் இல்லாமல் பழக முடியுமா ?! வருகிற வாழ்க்கைச் சூழலில் இதை விட்டும் நாம் விரண்டு ஓட முடியாதே! சரி, நமது குழந்தைகளிடம் எப்படி இவர்களை அடையாளப்படுத்துவது ?!

-ஜெயவர்த்தனி

அன்புள்ள ஜெயவர்த்தனி,

சமகாலச் செய்திகளுக்கு எதிர்வினையாற்றவேண்டியதில்லை என்பதனால் தருண் தேஜ்பால் விஷயத்தின் நுண் விவரங்களை விவாதிக்காமல் தவிர்க்கிறேன். நான் பேசவிரும்புவது இந்த விஷயத்தின் பொதுவான மனநிலை பற்றி

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நான் சில தொழிற்சங்கத்தோழர்களுடன் மங்களூரில் இருந்த ஓய்வுபெற்ற தொழிற்சங்க ஊழியர் ஒருவரைச் சந்திக்க சென்றேன். அவர் ஓர் ஆங்கில இந்தியப்பெண்மணி. அப்போது எண்பது வயது தாண்டியிருந்தது. தொலைபேசித்துறை ஆங்கில ஆட்சிக்காலத்தில் உருவானபோதே ‘டெலிபோன் ஆபரேட்டர்’ வேலைக்குச் சேர்ந்தவர். பழைய மாக்னெட்டோ பிபிஎக்ஸ் தொலைபேசி இணைப்பகத்தின் வேடிக்கைகளை நிறையச் சொன்னார்.

நாங்கள் பேச்சு வாக்கில் தொழிற்சங்கத்திற்கு அவர் ஈர்க்கப்பட்டதைப்பற்றிக் கேட்டபோது சாதாரணமாக ‘அதிகாரிகளுடன் படுக்கப்போவதை தவிர்ப்பதற்கு தொழிற்சங்கம் பாதுகாப்பு தந்தது….பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க முடிந்தது’ என்றார் .அன்று அடைந்த அதிர்ச்சி சாதாரணமல்ல

டெலிஃபோன் ஆபரேட்டர், நர்ஸ், டைப்பிஸ்ட் போன்ற வேலைகள் கிட்டத்தட்ட பாலியல்தொழில் போலவே கருதப்பட்ட காலம் ஒன்றிருந்தது. எண்பதுகளின் குமுதம்- ஆனந்தவிகடன் ஜோக்குகளைப் பார்த்தால்கூட திரும்பத்திரும்ப இவர்கள் பாலியல் கருவிகளாக மட்டுமே சித்தரிக்கப்பட்டிருப்பது தெரியும்.

’கால்மேலெ கால்போட்டுண்டிருந்தேன். வேலைய விட்டுத் தூக்கிட்டாங்க ‘.

‘இதெல்லாம் ஒரு தப்பா? இதுக்கா   வேலைய விட்டு தூக்குவாங்க?’

‘டைப்பிஸ்ட் கால் மேல் என் கால் இருந்ததுதான் தப்பாம்’

-எண்பதுகளில் வந்த ஒரு குமுதம் ஜோக். இதில் டைப்பிஸ்ட் என்பது பெண் ஊழியர் என்றும், அவர் பாலியல்ரீதியாக பயன்படுத்தப்படவேண்டியவர் என்றும் உங்களுக்குப்புரிந்தால்தான் நீங்கள் சிரிக்கமுடியும்.

அந்த ’புரிதலை’ உருவாக்கத்தேவையான சமூகமனநிலை அன்றிருந்தது காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஒருமுறை வேலைக்குப்போகும் பெண்கள் விபச்சாரிகளாக ஆகிவிடுவார்கள் என்று கருத்துச்சொல்ல வாசந்தி அதற்கு கடும் எதிர்வினையாற்றியிருந்தார். ஆச்சரியமாக நான் சந்தித்த பலரும் வாசந்தி சங்கராச்சாரியாரை அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று கருத்துச்சொன்னார்கள்.

நானேகூட ஆனந்தவிகடன் போடும் ‘நர்ஸ்’ ’டைப்பிஸ்ட்’ ஜோக்குகளுக்குச் சிரிப்பவனாகவே இருந்தேன். பின்னர் வேலைக்குச் சென்று , தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு, வேலைக்குச் செல்லும் பெண்களிடம் அது எந்த வகையான மனப்புண்ணை உருவாக்குகிறது என்று கண்டபின்னரே அதைப்பற்றிய வெட்கமும் கூச்சமும் கொண்டவன் ஆனேன். அக்காலத்தில் நான் விகடன், குமுதம் ஆசிரியர்களுக்கு இதைப்பற்றி தொடர்ந்து கடிதங்கள் எழுதியிருக்கிறேன். இன்றுகூட விகடன் ‘வேலைக்காரி’ ஜோக்குகளை அவ்வப்போது போட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

வெறும் இருபத்தைந்துவருடம் முன்பிருந்த மனநிலை அது என்றால் மேலும் ஐம்பதுவருடம் முன்பு எப்படி இருந்திருக்கும்? அன்று டெலிஃபோன் ஆபரேட்டர், டைப்பிஸ்ட்,நர்ஸ் வேலைகளுக்கு ஆங்கில இந்தியர்கள் தவிர பிறர் அதிகமாக வருவதில்லை. பெண்கள் வேலைக்குச் செல்வதே அரிது, சென்றாலும் ஆசிரியர் வேலைக்கு மட்டும்தான். நர்ஸ், டெலிஃபோன் ஆபரேட்டர், போன்ற வேலைகளில் இரவில் பணியாற்றவேண்டும் என்பது ஒரு சிக்கல். அதைவிட உயர் அதிகாரம் கொண்டவர்களுடன் நேரடியாக பழகிப் பணியாற்றவேண்டும் என்பது இன்னும் பெரிய சிக்கல்

அவ்வாறு தன் அதிகாரத்துக்குக் கீழே இருக்கும் ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக தன்னுடைய உடைமை என்றுதான் ஆண்கள் நினைத்தார்கள். அவளைத் தங்கள் விருப்பப்படி பயன்படுத்திக்கொண்டார்கள். ஆரம்பகாலத்தில் மேற்குறிப்பிட்ட பணிகளைச் செய்தவர்கள் பெரும்பாலும் பாலியல் அடிமைகளாகவே இருக்கநேர்ந்தது.

அந்த மூத்த தோழர் தன் அனுபவங்களைச் சொன்னார். அவரது பின்புலம் கட்டுப்பெட்டித்தனமானது அல்ல. ஓரளவு பாலியல்சுதந்திரம் அந்த சமூகத்தில் அன்று இருந்தது. ஆனால் தொலைபேசி ஊழியராக அவர் அடைந்த அவமதிப்புகள், வன்முறைகள் சாதாரணமானவை அல்ல. நடுத்தெருவில் நிற்கும் பாலியல்தொழிலாளிக்கு மட்டுமே நிகழ்பவை அவை. அவர் முப்பத்தைந்து வயதுவரை திருமணம் செய்து கொள்ள உயரதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதன்பின்பு கூட அவர் தன் கணவரிடம் உடலுறவுகொள்ளக்கூடாது என ஓர் உயரதிகாரி மிரட்டியிருக்கிறார்!

ஒருவகையில் அது ஆணின் உயிரியல் இயல்பு. அத்தனை மிருகங்களும் அப்படித்தான் இருக்கின்றன. அட்டன்பரோவின் life ஆவணப்படத்தில் நூற்றுக்கணக்கான பெண் நீர்யானைகளுடன் ஒரு ஏரியில் வாழும் ஒற்றை ஆண்யானையை காட்டுகிறார். ஆண்மிருகத்தின் வலிமை என்பது பெண் மீதான ஆதிக்கமே.

ஆண்களின் முக்கியமான போதை அதிகாரம். ஆண்களில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் ஓர் அதிகாரத்திற்குப்பின்னால் ஓடிக்கொண்டிருப்பவர்கள். அதிகாரம் என்பதுதான் சமூகத்தில் ஆணுக்கான இடத்தை தீர்மானிக்கிறது. கூடவே ஆணைப்பொறுத்தவரை அதிகாரம் என்பது பெண்கள் மீதான ஆதிக்கம். மேலும் மேலும் பெண்கள் என்பதே ஆணின் காமத்தின் இயல்பு. ’விதவிதமான, ஏராளமான பெண்கள்’ என்பதே ஆணின் சாதாரணமான பகற்கனவு. மன்னர்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். மாவீரர்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். செல்வந்தர்களும் புகழ்மிக்கவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

எந்தத் தளத்திலானாலும் முதன்மை ஆண் [Alpha Male] என்பவன் பெண்கள் மீதான பாலியல்ஆதிக்கத்தை விரும்பக்கூடியவனாகவே இருக்கிறான்.அவள் எந்தப்பெண் என்பது முக்கியமல்ல. அவள் அழகோ அறிவோ நிலையோகூட முக்கியமல்ல. தனிப்பட்ட நெறிகளால் அதை வென்றவர்கள், கட்டுப்படுத்திக்கொள்ளக்கூடியவர்கள் பலர் உண்டு. ஆனால் ஒருபோதும் அந்த ஆணதிகாரத்தின் தயவுக்கு பெண்கள் விடப்படக்கூடாது. அப்படி விடப்பட்டால் அவர்களின் தன்னுரிமை, தன்மானம் அனைத்தும் பாதிக்கப்படும்.

அந்த உயிரியல் இயல்புக்கு எதிராக நிற்கக்கூடியது ஜனநாயகத்தின் அதிகாரம். அதாவது ஒன்றுதிரள்வதன் அதிகாரம், சமூகப்பொதுக்கருத்தின் அதிகாரம். ஆணின் அதிகாரத்தைவிட அதிகமாக அந்த அதிகாரம் இருக்கும்போது மட்டுமே ஆண் பெண்மீது பாலியல் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கமுடியும். அவ்வாறு ஒரு ஜனநாயக அதிகாரம் இருக்கவேண்டும் என்பது மட்டும் அல்ல ,அதன் இருப்பு தொடர்ந்து அதிகாரத்தைக் கையாளும் ஆண்களுக்குக் காட்டப்பட்டுக்கொண்டும் இருக்கவேண்டும்.

அதைத்தான் இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் செய்தது.இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் வரலாற்றில் ஆரம்பகாலப்போராட்டங்களில் பெரும்பாலானவை பெண் உடல்கள் மீது அதிகாரத்தைக் கையாளும் ஆண்கள் கொண்டிருந்த ஆதிக்கத்துக்கு எதிரானவை என்று சொன்னால் இன்றைய தலைமுறைப் பெண்கள் ஆச்சரியப்படலாம். தொழிற்சங்க நடவடிக்கை என்பதே பெண்களைப்பாதுகாப்பதாக ஒருகாலத்தில் தொலைபேசித்துறையில் இருந்தது.

தொழில்நிலையங்களிலும் வீடுகளிலும் பணியாற்றும் பெண்களை ஆதிக்கம்செலுத்தும் ஆண்கள் கருவுறச்செய்து கைவிடுவதற்கு எதிராக இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி அதன் ஆரம்பவருடங்களில் ’கர்ப்பசத்யாக்ரகம்’ என்ற போராட்டத்தை நடத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொழிற்சங்கத்தோழர்கள் ஆதிக்கம் செலுத்திய ஆணின் வீட்டு வாசலில் சத்யாக்ரகம் செய்யும் போராட்டம் அது. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பெருந்தலைவரான ஏ.கே.கோபாலன் அவரது வாழ்க்கையில் நூறுக்கும் மேற்பட்ட கர்ப்பசத்யாக்ரகங்களை நடத்தியிருக்கிறார்.

[ஏ.கே.கோபாலன்]

இன்று தொழிற்சங்கம் வலுவாக உள்ள துறைகளில் ஆண் அதிகாரிகளின் பாலியல் மேலாதிக்கம் அனேகமாகச் சாத்தியமில்லை. ஆனாலும்கூட அதற்குள் அவர்கள் சாத்தியமான எல்லா வழிகளிலும் முயன்றுகொண்டேதான் இருக்கிறார்கள். நானே பத்துக்கும் மேற்பட்ட நிகழ்வுகளைக் கண்டிருக்கிறேன். பிரச்சினை என வந்தால் தொழிற்சங்கம் ‘டவுசரை கழட்டி’விடும் என்று தெரிந்தும்கூட இதை ஏன் செய்கிறார்கள் என நான் வியந்தது உண்டு.அது ஆணெனும் மிருகத்தின் இயல்பு, அவ்வளவுதான்.

இன்று தொழிற்சங்க இயக்கம் வலுவாக இல்லாத துறைகளில் ஆணின் பாலியல் வல்லாதிக்கம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. தொழிற்சங்கம் உருவாகாத உதிரித்தொழிலாளர்களின் உலகில் இது மிகமிகச் சாதாரணம். அதேபோல தொழிற்சங்கம் அனுமதிக்கப்படாத சீருடைத்தொழில்களில் இது அன்றாட நிகழ்வு. புதியதாக உருவாகி வந்திருக்கும் சேவைத்துறைகளில் தொழிற்சங்க அமைப்புக்கான இடமே இல்லை. அங்கும் இந்த வல்லாதிக்கம் நீடிக்கிறது.

ஒரு தொழிலில் ஓர் ஊழியரின் தனித்தகுதியை மேலே உள்ள ஒருவர் மதிப்பீடு செய்யவேண்டும் என்றும், அந்த ஊழியரின் தொழில் எதிர்காலமே அந்த மதிப்பீட்டைச் சார்ந்தே உள்ளது என்றும் சூழல் இருக்கும் என்றால்; அவ்வாறு மேலே இருப்பவர் ஆணாகவும் ஊழியர் பெண்ணாகவும் இருந்தால்; பாலியல் அத்துமீறல் அனேகமாக தவிர்க்கவே முடியாது. சமீபகாலமாக மிக அதிகமாக நிகழும் பாலியல் அத்துமீறல்கள் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் பெண்கள்மீது பேராசிரிய வழிகாட்டிகள் முன்னெடுப்பவை என்பதைக் கேள்விப்படுகிறேன்

பெண்கள் எங்கே குரல் எழுப்பமுன்வருகிறார்களோ அங்கு மட்டுமே சிறிய அளவிலேனும் மாற்றம் நிகழ்கிறது. ஆனால் சற்றேனும் சமூகப்பின்புல வலிமையும் கல்வியறிவின் வலிமையும் கொண்ட பெண்கள் மட்டுமே எதிர்க்குரல் எழுப்பமுடியும்.

நான் அறிந்தவரை இதழியல், ஃபேஷன், சினிமா போன்ற துறைகளில் ஆணின் பாலியல் வல்லாதிக்கம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு. இதற்கான காரணம் வெளிப்படையானது. இங்கே ‘நட்சத்திர வெளிச்சம்’ கொண்ட முதன்மை ஆண்கள் அதிகம். அவர்களுடன் மோதி வெல்வது எளியவிஷயமே அல்ல.

‘மாட்டேன்’ என எந்தப்பெண்ணும் சொல்லமுடியாத இடத்தில் இருப்பவர்கள் இத்துறைகளில் பலர் உண்டு. ‘ஆல்பா மேல்’கள். இதழியல்துறையில் தருண் தேஜ்பால் அப்படிப்பட்ட ஒருவர். அவரைப்பற்றி ஒன்றரை வருடம் முன்னரே இப்படி நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று இப்போது சொன்னால் இப்போது அவதூறாகவே கொள்வார்கள். ஆனால் நீங்கள் கொண்டாடும் பல ஊடக நட்சத்திரங்களைப்பற்றி, ஊடக உரிமையாளர்களைப்பற்றி தொடர்ந்து இதைக் கேள்விப்படுகிறேன்.

அவர்களைப்பொறுத்தவரை அவர்களுக்குக் கீழே வரும் ஒரு பெண்ணுடல் அவர்களின் உடைமை. அதை அவர்கள் அடைந்தாகவேண்டும். இல்லையேல் அது அவர்களின் தோல்வி. அதை இன்னொருவர் அடைவது பெரிய இழிவு. அந்தப்பெண் தன் உடலை அளிக்க மறுப்பதேகூட ஒருவகை அவமதிப்பாகவே அவர்களால் கொள்ளப்படும்.

மிகத்தெளிவான விஷயம் இது. இதை அந்த ஆணின் தரப்பில் இருந்து மழுப்புவதற்கு பல்வேறு வாதங்கள் சொல்லப்படும். ஆச்சரியமென்னவென்றால் இப்போது தருண் தேஜ்பால் பற்றிச் சொல்லப்படுவதைத்தான் இருபத்தைந்தாண்டுகளாக வல்லுறவுக்கு முனையும் அத்தனை அதிகாரிகளின் தரப்பிலிருந்தும் சொல்லிவருகிறார்கள். கிட்டத்தட்ட அதே சொற்கள்.நானே பலமுறை கேட்டவை. அவற்றை இவ்வாறு சுருக்கலாம்

முதலில் வரும் வாதங்கள்:

1. இது ஏன் ஒரு சதியாக இருக்கக்கூடாது? அவர் மிக வெற்றிகரமானவர். ஆகவே எதிரிகள் அதிகம்

2. அந்தப்பெண் அவரிடம் காரியம் சாதிக்கமுயன்று நடக்காமல்போனதனால் பொய்யாகக் குற்றம்சாட்டுகிறார்

ஆனால் அனேகமாக இவ்விஷயங்களில் ஓர் அடிப்படை ஆதாரம் வலுவாக இல்லாமல் பெண்கள் குற்றம்சாட்டுவதில்லை. ஏனென்றால் அவர்களுக்குத்தெரியும், வலுவான ஒருவரை ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டமுடியாது என்று.

அதைவிட ஆச்சரியமென்னவென்றால் முதன்மை ஆண்கள் மிக மிக அலட்சியமாக தனக்கெதிரான ஏராளமான ஆதாரங்களை விட்டுவைத்தபடித்தான் அதைச் செய்வார்கள் என்பது. தன்னை ஒருபெண் மறுக்கமுடியும் என்பதையே அவர்களால் நம்பமுடியாது. தொடர்ந்து பெண்கள் மீது அடைந்த ஆதிக்கம் காரணமாக மிதமிஞ்சிய தன்னம்பிக்கையுடன் அதில் ஈடுபடுவார்கள்.ஆகவே வெளிப்படையாகவும் அசட்டுத்தனமாகவும் அதைச் செய்திருப்பார்கள்.

விமானத்தில், லிஃப்டில், மேடையில் பெண் உடலில் கைவைக்கும் ஒரு மேலாதிக்கஆண் அந்தப்பெண் எதிர்க்கக்கூடும் என்பதையே நினைத்துப்பார்த்திருப்பதில்லை என்பது அவர்களிடம் பேசினால் தெரியும். ‘என்னது, என்னை ஒரு பெண் மறுப்பதா?’ என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும்.

அதைவிடவும் ஆச்சரியம் மாட்டிக்கொண்டபிறகும்கூட அவர்கள் தன்னம்பிக்கையுடனும் தெனாவெட்டாகவும் இருப்பது. ஆதாரங்கள் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டு தனக்கெதிராக சிக்கல் வலுவாக எழும் என்பது அவர்களுக்கு உறைக்கவே கொஞ்சம் நாளாகும்.

அவ்வாறு அவர்கள் தெளிவாக அகப்பட்டபிறகு வரும் வாதங்கள் கீழ்க்கண்டவை. இவையும் எப்போதும் சொற்களும் வரிசையும்கூட மாறுபடுவதே இல்லை.

1. அவர் மிகமிகத் திறமையானவர். சாதனையாளர். இந்த பெண் விஷயத்தால் அவரது திறமை சமூகத்திற்குக் கிடைக்காமல் ஆகிவிடக்கூடாது

2. அவர் சமூகமுக்கியத்துவம் உடையவர். அவர் இப்படிச் செய்யவேண்டுமென்றால் அவருக்கு ஆசைகாட்டப்பட்டிருக்கவேண்டும். வலுவான தூண்டுதல் இருந்திருக்கவேண்டும்

3. இதன்மூலம் அவரது எதிரிகள் பயனடைய அனுமதிக்கக் கூடாது.

4. அவரது குடும்பத்தின் மனநிலையை நாம் பார்க்கவேண்டும். என்னதான் இருந்தாலும் அவர் ஓர் அன்பான குடும்பத்தலைவர்.

இந்தவிஷயத்தில் பெரும்பாலும் குழுமனப்பான்மையே மேலாதிக்கம் செலுத்துகிறது. தருண் தேஜ்பாலை முக்கியமான இதழாளர்கள் ஆதரித்து நிற்பது மிகமிக இயல்பானது.மாட்டிக்கொண்ட ஓர் அரசதிகாரியை நிராகரித்துப்பேசிய இன்னொரு அதிகாரியை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆதரிக்கும் அதிகாரி ஒழுக்கமானவராகக் கூட இருப்பார்.

இன்னும் ஆச்சரியமென்னவென்றால் அந்த அதிகாரியின் அதே வட்டத்தில் உள்ள பெண் அதிகாரிகளிலும் கணிசமானவர்கள் அந்த ஆதிக்க ஆணைத்தான் ஆதரிப்பார்கள். சொல்லப்போனால் அந்தப்பெண்கள் அப்போது தங்களுக்கு வரும் முக்கியத்துவத்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று அந்த ஆதிக்க ஆணுக்கு வக்காலத்து வாங்குவார்கள்.ஷோமா சௌதுரி தருண் தேஜ்பால் மீது தனக்குக் கைவரும் அதிகாரத்துக்காக உள்ளூர குதூகலித்து அந்த வாய்ப்பைக் கொண்டாடியிருப்பார்.

[ஷோமா சௌதுரி]

இந்தமாதிரி தருணங்களில் எப்போதுமே சமூகத்தை நோக்கி முன்வைக்கப்படும் வாதகதிகள் சில உண்டு. அவை எப்போதும் அந்தப்பெண்ணின் ஆளுமையைச் சிறுமைசெய்வதாகவெ இருக்கும். அவற்றை இவ்வாறு தொகுக்கலாம்


1. அந்தத் துறையில் இதெல்லாம் சகஜம். இந்தப்பெண் அதைப் பெரிதுபடுத்துகிறாள்.

அந்தத்துறை அப்படியிப்படி என்றுதான் தெரியுமே, அப்படியென்றால் ஏன் அங்கே வேலைக்குச் செல்லவேண்டும்? ஒரு துறையின் வேலையின் இயல்பு தெரிந்துதானே செல்கிறார்கள், அப்படியென்றால் அவர்கள் அதற்குக் கட்டுப்பட்டவர்கள்தானே? இந்தப்பெண்ணும் அப்படியெல்லாம் இருந்தவள், இருப்பவளாகத்தான் இருக்கவேண்டும். இப்போது ஏதோ காரணத்துக்காக இப்படிச் சொல்கிறாள்- இது திரும்பத்திரும்பச் சொல்லப்படும் வாதம்

இருபதாண்டுகளுக்குமுன்பு நர்சுகள், டைப்பிஸ்டுகளைப்பற்றி இப்படித்தான் சொல்லப்பட்டது. அதற்கு முன் டெலபோன் ஆபரேட்டர்களைப்பற்றிச் சொல்லப்பட்டது. வீட்டைவிட்டு வேலைக்குப்போகும் அத்தனை பெண்களைப்பற்றியும் அப்படிச் சொல்லப்பட்டது. அந்த பழைமைவாத மனநிலையை நோக்கி இந்த வாதம் ஆண்களால் முன்வைக்கப்படுகிறது.

எந்த தளத்தினாலும் வேலைக்குச் செல்லவும் தன் திறமையையும் உழைப்பையும் மட்டும் கொண்டு மேலே செல்லவும் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. இந்தத்துறை இப்படித்தான் என்று சொல்வது போல பெண்ணை அவமதிக்கும், சிறுமைசெய்யும் பழைமைவாத அணுகுமுறை வேறில்லை. ஆனால் தங்களுக்கென வரும்போது நம் முற்போக்காளர்களும் அதைச் சொல்லத் தயங்குவதில்லை


2. அந்தப்பெண்ணின் சம்மதத்துடன்தான் அது நடந்தது

பாலியல் அத்துமீறலில் எப்போதும் இது சொல்லப்படுகிறது .குரூரமான பாலியல் வல்லுறவுக்குற்றவாளிகள்கூட எப்போதும் இதைத்தான் சொல்கிறார்கள். நம்முடைய ஆணாதிக்கச் சமூகம் பெண்ணை பாலியல்கருவியாக மட்டும் பார்க்கிறது. பெண் பெண்ணுடலுடன் இருப்பதே பாலுறவுக்கான அழைப்புதான் என நம்புகிறார்கள் இவர்கள். ஆண் பெண் மீது நிகழ்த்தும் எல்லா அத்துமீறல்களுக்கும் பெண்ணையே பொறுப்பாக்குகிறார்கள். அந்த மனநிலையை நோக்கி இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது.

பெண்ணை ஆசைகாட்டியோ ஏமாற்றியோ மிரட்டியோ பாலியல்ஆதிக்கம் செலுத்தினால்கூட அது குற்றம்தான் என்பதே சட்டம். இந்திய சமூகத்தில் ஒருபெண் ஓர் ஆண்மீது பாலியல் வல்லாதிக்கத்துக்கு குற்றம்சாட்டுவது எளிதல்ல. அவள் அவமதிக்கப்படுவாள், பொதுவெளியில் வசைபாடப்படுவாள், தொழிலில் பெரும் பின்னடைவு ஏற்படும். மண உறவும் பாதிக்கப்படலாம். இத்தனையும் அறிந்திருந்தும் அந்தப்பெண் புகார் கொடுக்கிறாள் என்றால் அது அவளுக்கு சாதாரண விஷயம் அல்ல என்பதனால்தான்.

3. அந்தப்பெண்ணுக்குப் பின்னால் நிற்பவர்கள் யார் யார்?

எப்போதுமே பாலியல்குற்றச்சாட்டை தொழில்சதியாக, அரசியல் சதியாக திரிப்பது ஒரு மிகச்சிறந்த வழி. பெரும்பாலும் குடும்பப்பின்புலமோ, சங்கப்பின்புலமோ, அரசியல்பின்புலமோ கொண்ட பெண் தான் புகார்செய்யத்துணிகிறாள். அவளுக்கு அவர்களின் பின்புலம் இருக்கும். அந்தப்பின்புலத்தை முன்னால் கொண்டுவந்து நிறுத்தி, அவர்களுக்கு அரசியல் அல்லது சாதி அல்லது வேறு சமூகச் சாயங்கள் பூசுவதன்மூலம் குற்றவாளிகள் பெரும்பாலும் தப்பித்துக்கொள்கிறார்கள்

தொழிற்சங்க அனுபவம் கொண்டவர்கள் அறிவார்கள், பெரும்பாலும் இவ்வாறு மாட்டிக்கொண்டவர்கள் சாதியைத்தான் கையில் எடுத்துக்கொள்வார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணும் அதே சாதியைச் சேர்ந்தவர் என்றால் மட்டுமே ஏதேனும் நடவடிக்கை எடுக்கமுடியும். இல்லாவிட்டால் பிரச்சினையை சாதிப்பூசலாக எளிதில் சித்தரித்துவிடுவார்கள்.

4. இதேநிலை ஓர் ஏழைப்பெண்ணுக்கு வந்திருந்தால் ஊடகங்கள் இப்படி செய்தியாக்கியிருக்குமா?

பாலியல் அத்துமீறல் பிரச்சினையை சாதி, மத,அரசியல் பிரச்சினையாக திசைதிருப்பும் உத்தியைப்போன்ற ஒன்றுதான் இந்த திடீர் சோஷலிசக்குரல். இந்த ஆசாமிகள் எந்த ஏழைப்பெண்ணின் கௌரவத்துக்காக தெருவில் இறங்கியிருக்கிறார்கள் என்பதுதான் அடுத்த வினாவாக இருக்கவேண்டும்

எந்த ஒரு பிரச்சினையிலும் பணமோ செல்வாக்கோ உடையவர்கள்தான் முன்னின்று நடத்தமுடியும். அவர்கள் உருவாக்கும் விளைவை ஓர் ஏழை உருவாக்க முடியாது. ஆனால் பணக்காரப்பெண் ஒருத்தி உருவாக்கும் பொது விழிப்புணர்ச்சியின் பயன் ஏழைப்பெண்களுக்கும் கிடைக்கக்கூடியதுதான். எவர் எதன்பொருட்டு இத்தகைய விஷயங்களை ஊடகங்களுக்கு முன் நிறுத்தினாலும் அது நல்லதுதான்

*

இத்தகைய செய்திகள் வரும்போதெல்லாம் ‘ஆனால்’கள் கிளம்பிவருவதைப்பார்க்கலாம். ’அந்த ஆள் செய்தது தவறுதான், ஆனால்…’ என ஆரம்பிப்பார்கள். இந்த ஆனால்களுக்கு நம் சூழலில் ஒரே அர்த்தம்தான். சம்பந்தப்பட்டவர் அந்த ஆண் வல்லாதிக்கத்தை நியாயப்படுத்த விரும்புகிறார். ஆனால் அவர் தன்னை நியாயவானாகவோ முற்போக்காளனாகவோ காட்டிக்கொள்ள விரும்புகிறார். ஆகவே ஒரு ஆனாலை முதலில் போட்டு வைக்கிறார்

நம்முடைய இணைய இளைஞர்களில் கணிசமானவர்கள் இயல்பிலேயே தருண் தேஜ்பால் போன்றவர்களை ஆதரிப்பவர்கள் என்பதற்கு நம் சமூக ஊடகங்களில் அவர்கள் எழுதும் மொழியும் அவர்களின் மனநிலைகளுமே சான்று. அவர்களின் பகற்கனவில் அவர்கள் தருண் தேஜ்பால் போன்ற ஓர் ஆல்ஃபா மேல் ஆக தங்களைக் கற்பனைசெய்துகொள்பவர்கள். அறவுணர்ச்சியைவிட இயல்பான மிருகவுணர்ச்சியைக் கொண்டாடுபவர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு பாடகி இணையவெளியில் ஆபாசமாக வசைபாடப்பட்டு அவமதிக்கப்பட்டபோது அப்படிச் செய்த ஆசாமிகளுக்கு ஆதரவாகவே இணையவெளியில் பெரும் இளைஞர்பட்டாளம் பொங்கி எழுந்தது. அவரை ஆதரித்து இயக்கமே நடத்தினார்கள். அந்தப்பெண் திமிர்பிடித்தவள் இனவாதி என்றெல்லாம் அதை நியாயப்படுத்தினர்.

நம் சமூகத்தின் பொதுமனநிலையை அப்படியே பிரதிபலிப்பவர்கள் இவர்கள். அதற்கு எதிராக சென்ற ஐம்பதாண்டுகளில் உருவான எந்த அரசியல்- கருத்தியல் இயக்கங்களின் தொடர்பும் இல்லாமல், அதற்கு இன்றியமையாத அடிப்படை வாசிப்பு இல்லாமல், கதாநாயகியை பின்னால் சென்று கிண்டலடிக்கும் கதாநாயகர்களைக்கொண்ட வணிகசினிமாவை மட்டுமே அறிந்து வளர்ந்த தலைமுறையினர்.

இந்த பெரும்பான்மைக்கு உள்ளிருந்துதான் எழுந்தாகவேண்டியிருக்கிறது அடிப்படை அறத்தின், சமூகப்பொறுப்பின் குரல்.

*

இத்தனைக்குப் பிறகும் பெரும்பாலும் சட்டம் அந்த ஆணை சும்மாவிடத்தான் செய்யும். இந்தியாவில் அப்பட்டமான பாலியல் வல்லுறவுகளேகூட பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை. பாலியல்சீண்டல்களை நீதிபதிகள் பெரிதாக நினைப்பதேயில்லை. நீதிபதிகளே அதில் ஈடுபட்டுவருவதை நாம் காண்கிறோம். அந்த ஆண் செய்திமுன் நிறுத்தப்படுகிறான் என்பதைத் தவிர பிற தண்டனையே அவனுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. கொஞ்சநாள் கழித்து தியாகியின் புன்னகையுடன் அவன் மீண்டும் பொதுவெளிக்கு வருவான்

ஆனாலும் வேறு வழியில்லை. இவ்வாறு வெளிவரும் சில செய்திகள்தான் ஓரளவேனும் ஆணின் ஆதிக்கமனநிலைக்கு எதிர்தரப்பாக திகழ்கின்றன. பல்லாயிரம் அத்துமீறல்களில் ஒன்றுதான் புகாராகிறது. பிற அத்துமீறல்கள் வெறுமே மௌனக்குமுறல்களாக அமைந்துவிடுகின்றன. புகார்களிலும் ஆயிரத்தில் ஒன்றே செய்தியாகிறது, எஞ்சியவை உள்ளேயே பேசித்தீர்க்கப்படுகின்றன. இந்தச்செய்திகள் உருவாக்கும் ஓர் எச்சரிக்கை மட்டுமே இன்று பெண்ணுக்கு பொதுவெளியில் ஓரளவேனும் பாதுகாப்பை அளிக்கிறது.

இன்று எல்லாத்துறைகளிலும் தொழிற்சங்கங்கள் வலிமையிழந்து வருகின்றன என்பதே நடைமுறை உண்மை. அங்கெல்லாம் மீண்டும் ஆண்களின் பாலியல் ஆதிக்கமனநிலை ஓங்கிவருவதும் கண்கூடு. இந்நிலையில் ஊடகங்கள் மூலம் வெளிவரும்செய்திகளை ஒட்டி உருவாகும் வலுவான பொதுச்சமூகக் கண்டனமே பெண்களை பாதுகாக்கக்கூடிய சக்தியாகும். அதை நம்பியே அவர்கள் வெவ்வேறு துறைகளில் இறங்கி வெற்றிகொள்ளமுடியும்.

இன்று தருண்பால் போன்றவர்களுக்கு எதிராக எழும் தார்மீகக்கோபம் என்பது பெண்களுக்கு எதிரான ஆதிக்கங்களை தடுக்கும் ஒரு ஜனநாயகசக்தி. இவ்வாறு ஒருநூற்றாண்டாக இந்தியச் சமூகத்தில் நிகழ்ந்த ஜனநாயகபோராட்டங்கள், கருத்துப்போராட்ட்ங்களின் விளைவாக மெல்லமெல்ல உருவாக்கி எடுக்கப்பட்ட ஒரு சிறிய வெளியில்தான் பெண்கள் கல்விகற்கமுடிந்தது, வேலைக்குச்செல்லமுடிந்தது, பொருளியல் உரிமைகளைப்பெற முடிந்தது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். பெண்கள் இன்று அனுபவிக்கும் சற்றேனும் தன்மானம் மிக்க வாழ்க்கை, சுதந்திரம் அனைத்துமே அவ்வாறு உருவானவைதான்.

வெவ்வேறு மொட்டை நியாயங்களுக்காக இந்தப் பொதுக்கண்டனங்களை மழுங்கடிக்க பலர் முயல்வதை காண்கிறேன். இவர்களில் கணிசமானவர்கள் தருண்தேஜ்பாலின் அந்த லிஃப்டில் இருந்திருந்தால் அவர் செய்ததை தாங்களும் தவறாது செய்திருக்கக்கூடிய பச்சை அயோக்கியர்கள். எஞ்சியவர்கள் தங்கள் தரப்பு என்றால், தங்களில் ஒருவர் என்றால் நாத்திறம்பும் சந்தர்ப்பவாதிகள். அரசியலுக்காக எதையும் எப்படியும் திருப்பும் போலிகள்.

இவர்களின் குரல்களைத் தாண்டி இவ்விஷயங்களைப் பார்க்கவும் ஒரு கணமேனும் பொதுச்சமூகக் கண்டனத்தின் முனை மழுங்கிவிடாமல் கவனிக்கவும் நமக்குத் தெளிவிருக்கவேண்டும். நாளை நமது பெண்குழந்தைகள் இந்தப்பொதுவெளியில்தான் தங்கள் வாய்ப்புகளுக்காக இறங்கிச்செல்லவேண்டியிருக்கும் என்பதை நாமே நமக்குச் சொல்லிக்கொள்வோம்

ஜெ


தமிழில் இவ்விஷயம் பற்றி எழுதப்பட்ட மிக நேர்மையான கட்டுரைகளில் ஒன்று

முந்தைய கட்டுரைபுறப்பாடு கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெள்ளையானை- கடிதங்கள்