கலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.

1) தங்கள் “ஆன்மாவைக் கூவி விற்றல் (16-Apr-2010)” கட்டுரையில் தாங்கள் கீழ்க்கண்டவற்றை குறிப்பிட்டு இருந்தீர்கள்.

‘தனிவாழ்க்கையில் இருந்தே எழுத்தாளன் தன் இலக்கியத்திற்கான தூண்டுதலை பெறுகிறான்’

‘ஆனால் தனிவாழ்க்கையில் விழுமியங்களில் ஒருவன் சமரசம் செய்துகொண்டால் அவனுள் எரியும் நெருப்பு ஒன்று அணைந்துவிடுகிறது. அதன்பின் அவன் சொற்களில் உண்மையின் சீற்றமும் தெளிவும் கைகூடாது. அவை ஒளியற்ற செயற்கை வெளிப்பாடுகளாகவே இருக்க முடியும்’.

‘உண்மையின் அனல் உள்ள எழுத்தாளன் உலகமே எதிர்த்தாலும், புறக்கணித்தாலும் தன் நெஞ்சறிந்தவற்றை துணிச்சலாக முன்வைப்பவனாகவே இருப்பான். ஒருபோதும் தன் கருத்துக்களை சூழலில் இருந்து பெறமாட்டான். தான் அறிந்த வாழ்விலிருந்தே பெறுவான். அதற்காக அன்னியமாகவும் அஞ்சமாட்டான்’.

2) தங்கள் பேட்டியில் (என் பேட்டி = 16-Feb-2013, http://www.youtube.com/watch?v=MIWNRoE-Klk), “நான் எழுதுவது என் கருத்து நிலை அல்ல. நான் நம்புவது வேறு, எழுதுவது வேறு” என்று சொல்லி இருந்தீர்கள்.

இந்த இரண்டு விஷயங்களும் சிறிது முரணாக இருப்பது போல தோன்றுகிறது. தாங்கள் இதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.

அன்புள்ள ராஜாராம்,

இதை பல கோணங்களில் திரும்பத்திரும்ப விளக்கியிருக்கிறேன்.

இப்படிச்சொல்கிறேன், நான் ஒருவிஷயத்தை நம்புகிறேன், அதைச் சொல்கிறேன். ஆகவே நான் நம்புவதையும் நான் சொல்வதையும் நான் என் வாழ்க்கையில் கடைப்பிடித்தாகவேண்டும். அதன் பெயரே நேர்மை என்பது. இந்தவிஷயம் என் பார்வையில் மிகமிக முக்கியமானது. ஒருவருடைய கருத்தை நான் மதிக்கவேண்டுமென்றால் அக்கருத்துக்கு குறைந்தபட்சம் அவர் நேர்மையாக இருக்கிறாரா என்றுதான் பார்ப்பேன்.

ஆனால் அவ்வாறு ஒன்றை நம்பி, சொல்லிவரக்கூடிய ஒருவரின் கனவில் அவர் நம்புவதும் சொல்வதும்தான் வரவேண்டும் என்று கூறமுடியுமா? அவரது கனவுகள் வேறுவகையில் இருந்தால் அவரை நேர்மையற்றவர் என்று சொல்லமுடியுமா? அந்தக்கனவை அவர் ஒளித்தாலோ திரித்தாலோ அக்குற்றச்சாட்டை நீங்கள் கூறலாம்.

நான் சொன்னவற்றில் நீங்கள் முரண்பாடாக கருதுவது இந்த விஷயத்தைத்தான்.

*

ஒருவரில் நிகழும் கனவு அவரை மீறியது. அவரில் அது நிகழ்கிறது. அது அவரது ஆழ்மனத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் அந்த ஆழ்மனம் அவருடையது மட்டுமல்ல. அது அவர் வாழும் பண்பாட்டுடன் பல்வேறு வகையில் இணைந்திருக்கிறது.அதை அந்த எழுத்தாளனே மேலோட்டமாகத்தான் உணர்ந்திருப்பான்

அவ்வாறு அவரில் ஒரு கனவு எழும்போது அக்கனவு ஏன் எழுகிறது, அதன் உள்ளடுக்குகள் என்ன என்று அவர் ஆராய்வதுதான் இயல்பானது. அக்கனவுக்கும் அவரது நம்பிக்கைகளுக்கும் இடையே முரண்பாடு இருந்தால் அது ஏன் என்று அவர் என்று அவர் புரிந்துகொள்ளமுயலலாம். அது எழுதியபின் செய்யும் ஒர் அறிவார்ந்தசெயல்பாடு.பெரும்பாலும் எழுத்தாளர்கள் அதையும் செய்வதில்லை.

இலக்கியப் புனைவெழுத்தை கருத்துக்களை ஒட்டி ‘உருவாக்கப்படும்’ ஒரு மொழிவெளிப்பாடு என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஆகவேதான் இந்தக்கேள்வி எழுகிறது. உண்மையான இலக்கியப்புனைவெழுத்து மொழியில் நிகழும் ஒரு கனவு. அதன் ஆசிரியனுக்கு அதன்மீது முழுக்கட்டுப்பாடு இல்லை. அவனுடைய கட்டுப்பாடென்பது அதன் வடிவக்கட்டமைப்பில் மட்டுமே. வடிவத்தைக்கூட தொடர்ந்த பழக்கம் காரணமாக தன்னைமீறி அமையும்படி அவன் அமைத்துக்கொண்டபிறகே நல்ல கலை உருவாகிறது. எழுத ஆரம்பித்தபின் அப்புனைவின் கனவுதான் அவனை இட்டுச்செல்கிறது.

ஓர் எழுத்தாளனின் கருத்துக்களுக்கு அவன் பொறுப்பேற்க முடியும், பொறுப்பேற்றாகவேண்டும். அவனுடைய புனைவுகளில் உள்ளவை அவன் வழியாக நிகழ்ந்தவை. அவற்றுக்கு அவன் முழுப்பொறுப்பேற்க முடியாது.அவை தன்னளவில் முழுமையானவை, சுதந்திரமானவை. பலசமயம் அந்த எழுத்தாளனேகூட நெடுநாள்கழித்துத்தான் அப்புனைவில் உள்ள பலவிஷயங்களை கண்டடைவான். தன்புனைவுகளில் உள்ள பாவம் மீதான ஈர்ப்பை வயதான காலத்தில்தான் தல்ஸ்தோய் கண்டடைந்தார். எல்லா எழுத்தாளர்களும் உணர்வதுதான் அது.

நான் சொல்லிவருவது இதையே. அதாவது ஒருவனின் கருத்துக்களுக்கும் நம்பிக்கைக்கும் அவனுடன் நேரடியான உறவுண்டு. அவனுடைய புனைவிலக்கியத்துக்கு அந்த நேரடியான உறவு இல்லை. அது அவனில் நிகழும் ஒரு கனவு

*

தமிழ்ச்சூழலில் இரண்டுவகை வாசிப்புகளே பிரபலமாக உள்ளன. ஒன்று, அரசியல் வாசிப்பு. ஒரு புனைவெழுத்தை ஒருவகை அரசியல்நடவடிக்கையாக மட்டுமே பார்ப்பது அது. திட்டமிட்டு உருவாக்ககப்படும் ஒரு கருத்தியல் கட்டமைப்பாக மட்டும் இலக்கியத்தை வாசிப்பது. அதாவது துண்டுப்பிரசுரங்கள் போல அரசியல் அறிக்கைகள் போன்ற ஒன்றாக.

இந்த வாசிப்பு இலக்கியத்தில் சில அரசியல் நிலைப்பாடுகளை கண்டடைந்து ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற முறைக்கு இட்டுச்செல்லும். மொட்டைவாசிப்பு என்று இதைச் சொல்லலாம். தமிழில் அதிகமாக நிகழ்வது இதுதான்.சிற்பத்தை சுத்தியலாகப் பயன்படுத்துவதுபோன்ற ஒருசெயல்பாடு இது.

அரசியல்செயல்பாட்டாளர்கள் கல்வித்துறையாளர்கள் என இருவகையினர் இவற்றில் உண்டு. முதல்வகையினர் முட்டாள்கள் இரண்டாம் வகையினர் அசடுகள் என்பதே வேறுபாடு.ஓர் இலக்கியப்படைப்பைக்கூட உண்மையில் வாசித்த அனுபவம் இல்லையென்றாலும் இலக்கியத்தின் உப்பக்கம் கண்டவர்களாக தங்களை எண்ணிக்கொள்வார்கள் என்பதனால் எந்தச்சக்தியாலும் இவர்களை மாற்றமுடியாது.

இன்னொருவாசிப்பு இலக்கியப்படைப்பு சில மரபான நற்கருத்துக்களை தேனில்முக்கி அளிக்கக்கூடியது என்ற நம்பிக்கை. இதுதான் ஆரம்பகட்ட வாசகர்களுக்கு வழக்கமானது. நம் கல்விக்கூடங்களில் கற்றுத்தரப்படுவது. ஒழுக்கம், மனிதாபிமானம், சமூகசீர்திருத்தம் போன்ற ஏற்கனவே அறிந்த கருத்துக்கள் சற்றுவேறுவகை உத்தியில்,நடையில் சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருந்தால் நல்ல இலக்கியம் என்பார்கள்.

இவர்களை முதிராவாசகர்கள் எனலாம். இவர்களில் ஒருசாரார் நேராக முதலில் சொன்ன வாசிப்புமுறைக்குள் சென்று விழுகிறார்கள். அவர்களை மீட்கமுடியாது. பிறரிடம் இலக்கியம்பற்றி பேசலாம். ஒரு திசைமாற்றத்தை உருவாக்கலாம்.

ஆகவேதான் கடந்த முக்கால்நூற்றாண்டாக, புதுமைப்பித்தன் காலம் முதல் இன்றுவரை, இலக்கியம் என்பது வேறு என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இலக்கியமென்பது மொழியில் நிகழும் ஒரு கனவு. காட்சிச்சித்தரிப்புகள், மொழிக்குறியீடுகள், பல்வேறு உத்திகள் வழியாக வாசகனின் கற்பனையைத் தூண்டி உண்மையான வாழ்க்கைக்கு நிகரான வாழ்க்கையை வாசகன் வாழச்செய்யும் ஒரு வழிமுறை. அதன்வழியாக வாசகன் தன் ஆழ்மனதுக்குள் செல்லவும் தன் கண்டடைதல்களை பெற்றுக்கொள்ளவும் இலக்கியம் வழிவகுக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது.

இலக்கியப்படைப்பை இலக்கியவாதியின் ‘அபிப்பிராயம்’ என்ற கோணத்தில் பார்ப்பது மிகமிகத் தட்டையான வாசிப்பையே உருவாக்கும். அது அப்படைப்பின் உள்ளடுக்குகளை வாசகர்கள் காணமுடியாமலாக்கும். தமிழ்ச்சூழலில் அரசியல் சார்ந்தும் இலக்கியக்கோட்பாடுகள் சார்ந்தும் மொண்ணை விமர்சனங்கள் எழுதும் ஆசாமிகள் தொடர்ச்சியாக இந்த மழுங்கடித்தலைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆகவேதான் தலைமுறைதலைமுறையாக இலக்கியவாதிகள் இந்த ஒற்றைப்படைநோக்கை நிராகரித்துப்பேசவேண்டியிருக்கிறது.

இதன் அடுத்தவினா ஒன்றுண்டு. சரி, இலக்கிய ஆக்கம் ஒரு புனைவெழுத்தாளனின் கனவு. அவனுடன் அதற்கு நேரடியான உறவில்லை. அவன் அதன் நிமித்தகாரணம் மட்டுமே. அப்படியென்றால் அதனுடன் சம்பந்தமே இல்லாத ஒரு தனிவாழ்க்கையை அவன் ஏன் வாழக்கூடாது? நவீன எழுத்தை உருவாக்குபவன் ஏன் பழைமைவாதியாக இருக்கக் கூடாது? முற்போக்கு எழுத்தை உருவாக்குபவன் ஏன் பிற்போக்காளனாக இருக்கக்கூடாது? தனிவாழ்க்கையில் ஒழுக்கமோ அறமோ இல்லாதவன் மேலான புனைவிலக்கியவாதியாக ஏன் இருக்கக் கூடாது?

இருக்கலாம் என்றே நான் எப்போதும் பதில் சொல்லிவந்திருக்கிறேன். ஒரு கலைப்படைப்புக்கு கலைஞனின் தனிப்பட்ட ஆளுமை ஒருபோதும் சாதகமாகவோ பாதகமாகவோ எந்த அம்சத்தையும் சேர்ப்பதில்லை. அப்பட்டமாக ஃபாசிசத்தை ஆதரித்த மாபெரும் படைப்பாளிகள் உண்டு. நான் மதிக்கும் பல ஐரோப்பிய இலக்கியமேதைகளின் தனிப்பட்டஒழுக்கம் மிகத் தரம்தாழ்ந்தது. அவர்களின் படைப்புகளின் கலையழகு குறைத்துமதிப்பிடப்பட்டதில்லை. காலத்தில் அவை ஒளிமங்கியதுமில்லை.

எழுத்தாளனின் அரசியல்நிலைப்பாடோ, தனிப்பட்ட ஒழுக்கமோ அவனுடைய இலக்கியப்படைப்புகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் அல்ல. அப்படைப்புகளைப் புரிந்துகொள்ள ஒரு வரலாற்றுப்பின்புலம் என்றவகையில் மட்டும் அந்த எழுத்தாளனின் தனிவாழ்க்கையை நாம் ஆராயலாம், அவ்வளவுதான்.

ஆனால், கருத்துக்களுடனான உறவு என்பது நேரடியானது என்பதனால் அவற்றை அவனுடைய தனிவாழ்க்கையுடன் தொடர்புபடுத்தித்தான் பார்க்கவேண்டும். இல்லையேல் அக்கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. வெறும் பொதுப்பிம்ப உற்பத்திமட்டும்தான் அது.

இதற்கு அப்பால் நான் அந்தரங்கமாக உணரும் ஒன்றுண்டு, தனிவாழ்க்கையில் நேர்மையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காத எழுத்தாளர்கள் காலப்போக்கில் எங்கோ வாழ்க்கையுடனான தன் உறவில் பொய்மையை, பாவனையை மேற்கொள்ள ஆரம்பிக்கிறான். ஒழுக்கத்திலும் நேர்மையிலும் பிறழ்ந்த அனைவரிடமும் அந்த போலித்தனம் வந்து குடியேறியிருப்பதைக் கானலாம்.

எழுத்தாளனுடைய தத்தளிப்புகளும் அலைச்சல்களும் அவனிடமிருந்து நல்ல படைப்புகள் உருவாக காரணமாக அமைந்திருக்கும். தனிவாழ்க்கைதான் புனைவுகளுக்கான தூண்டுதல். அங்கே அவன் போலியாகச் செயல்பட ஆரம்பித்தால் அந்த தூண்டுதல் வலுவிழக்கிறது. அவனுடைய படைப்பூக்கம் அழிகிறது. தான் உருவாக்கிய படைப்புகளிடமிருந்தேகூட அவன் தள்ளிச்சென்றுகொண்டே இருப்பான். ஒருகாலகட்டத்தில் அவன் அவனுடைய எழுத்துக்களுடன் தொடர்பற்ற சத்தற்ற மனிதனாக இருப்பான்

நான் முன்னுதாரணமாகக் கொள்ளும் பெரும்படைப்பாளிகள் பெரும்படைப்புகளை உருவாக்கியவர்கள், அந்தப்படைப்புகள் உருவாக்கும் அறத்தை தங்கள் வாழ்க்கையால் பின்தொடர்ந்தவர்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு-மகாபாரதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 2