வெள்ளையானை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

கவிமனம் என்பது கவிஞனின் அளவு கவிதை வாசகனின் உள்ளும் செயல்படுகிறது என்றே தோன்றும். வரலாற்றின் பக்கங்கள் நெடுக்க யாரோ ஒரு கவிதை வாசகன் அதில் எழுதப்படாத சொற்களுக்கு சாட்சியாக நின்று வந்திருக்கிறான், அவனிடம் அதை கடத்த சொற்கள் இல்லாவிட்டாலும் உணர சொற்கள் இருக்கின்றன. ஷெல்லியின் ஓட்டைப் படகிலேறி புயல் நோக்கி பயணித்த ஒருவனின் கதையாகவே முதன்மையாக தோன்றியது. தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது உயிர்கள் மடிந்து கிடக்கையில் தாங்கள் காப்பாற்ற முடியாத ஒரு குரலின் கெஞ்சலை கடந்து போராளிகள் தேவதைகளின் வழி நடக்க வாசகனோ அது சாத்தானின் குரல் என்று அறிந்தும் நரகத்தில் வாழவே தயாராக இருக்கிறான். இப்புதினம் நிறைய கடந்து சென்ற மாந்தர்களில் andrewவைதான் மனம் அவ்வளவு நெருக்கமாக உணர்கிறது ஏனோ தெரியவில்லை ஏய்டனைவிட, காத்தவராயானை விட அவனை அவ்வளவு நேசிக்கிறேன். கொள்கைகளில், தர்க்கங்களில் பெரும் நம்பிக்கை உடைய பல நண்பர்களின் செயல்களை காத்தவராயன் மூலமாக புதிதாகவே புரிந்துகொண்டேன் என்று சொல்லலாம், அதற்காக தங்களுக்கு நன்றி ஜெ. மற்றவற்றை பற்றி இன்னமும் ஒருமுறை படித்து விட்டு விரிவாக எழுதுகிறேன்

அன்புடன்,
லூஃசிபர் ஜே வயலட்.

அன்புள்ள லூசிஃபர்

ஆண்ட்ரூவைத்தான் நாம் ஆதர்சமாகக் கொள்ள முடியும். அவர்கள் வழியாகவே அறம் வாழ்கிறது. ஆனால் அவர்களைப்போன்ற மாமனிதர்கள் எப்போதாவது வருகிறார்கள். சாமானியர்கள் ஏய்டன்போல நிரந்தரமாக ஊசலாடிக்கொண்டிருக்கிறார்கள் இல்லையா?

ஜெ

திரு ஜெயமோகன் அவர்களுக்கு ,

வெள்ளை யானை படித்தாகிவிட்டது .அளந்து அளந்து , திருத்தி திருத்தி எழுதப்பட்ட சொற்கள் .
எய்டனின் , மூன்று முறை திருத்தப்பட்ட தகவலறிக்கை போல.

எய்டனின் தருக்கங்கள் ஒவுவொன்றிற்கும் , அதை விட வீரியமாய் துணை பாத்திரங்கள் (காத்தவராயன் , கருப்பன்,) மறு மொழி ஆற்றுகின்றனர் . 360 டிகிரி பார்வையை எய்டனுகும் வாசகனுக்கும் அளிக்கின்றன .

செங்கல்பட்டு வர்ணனைகள் , காட்சியை மட்டும் விவரித்து இருந்தால் இத்துணை வீரியம் வந்திருக்குமா என்று தெரியவில்லை , மாறாக எய்டனின் மனது மனித குமாரனிடமும், ஷெல்லி யிடமும் மன்றாடுகிறது , உள்ளம் உடைத்து அழும் தருணங்களில் எல்லாம் விசுவாசத்தையும் , வார்த்தைகளையும் போட்டு அப்பிக்கொள்கிறது .

இது ஆசிரியரின் , வாசகனின் தவிப்பு . இதை ரத்தமும் சதையுமாய் முதல் முறை , எழுதும் பொழுது கண்டிப்பாய் கடவுளின் மிக அருகாமையில் இருந்து இருப்பீர்கள் .

இன்று மனித அறம், உலகமயமாக்கப்பட்டு விட்டது . கிட்டதட்ட இதே நிகழ்வுகள் , மிக சமீபத்தில் , நம் அருகாமையில் , நம் ஈழ மக்களுக்கு நடந்தது . மிக சொற்பமாய் , மிக மொண்ணையாய் , மிக தாமதமாய் நமக்கு அற சீற்றம் உண்டானது. வாய்க்கரிசி அரசியலை வேடிக்கை பார்த்தே நமக்கு பழக்க பட்டு விட்டது .

நன்றி ,

சிவக்குமார்

அன்புள்ள சிவக்குமார்

எந்தக்காலத்திலும் வாழ்க்கைக்கான போட்டியே வரலாற்றைத்தீர்மானித்திருக்கிறது. ஒரு சகமனிதனின் மரணம்கூட நல்லவேளை நான் உயிருடனிருக்கிறேன் என்ற நிம்மதியையே மனிதனிடம் உருவாக்குகிறது. அதை வென்று தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அறம் என்பதற்காகவே இலக்கியமும் கலையும் ஆன்மீகமும் நிரந்தரமாகப் போரிடுகின்றன என்று நான் நினைக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெ,

1876-78 பஞ்சம் பற்றி ஒரு ஆங்கிலேய மனித நேயர் எழுத்தாளர் எழுதிய இந்த நூல் முழுமையாக ஆன்லைனில் உள்ளது :

https://archive.org/stream/faminecampaignin01digbuoft#page/n9/mode/2up

அவரை பற்றிய விக்கி சுட்டி :

http://en.wikipedia.org/wiki/William_Digby_(writer)
While working in India, he witnessed the Great Famine of 1876–78 and involved himself in relief works. He served as the Honorary Secretary of the Executive Committee of the Famine Relief Fund.[5] He opposed the laissez faire famine relief policies of the Famine Commissioner, Sir Richard Temple and argued for more Government aid in mitigating the effects of famine. In 1878 he wrote an extensive book about the famine titled The Famine Campaign in Southern India.Vol I and Vol II. For his contribution to the famine relief works, he was made a Companion of the Order of the Indian Empire (C.I.E) in 1878. The failure of the Government of India to provide effective famine relief made William Digby an outspoken critic of the British Government’s India policy.

அன்புடன்
அதியமான்

முந்தைய கட்டுரைதருண் தேஜ்பால்களும் பெண்களும்
அடுத்த கட்டுரைஇரண்டுவகை வரலாறுகள்