இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கடந்த 8 மாதங்களுக்குமுன் தற்செயலாக உங்கள் நவீன தமிழிலக்கியம் ஓர் அறிமுகம் என்ற நூலை வாசித்தேன். அதிலிருந்த ஒரு ஈர்ப்பு என்னை மேலும் வாசிக்க தூண்டியது. அதன் பின் உங்கள் இணையதளத்தில் இருக்கும் ஏராளமான கட்டுரைகளை வாசித்துள்ளேன். குறுநாவல்கள், பின்தொடரும் நிழலின் குரல், காடு, இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், விஷ்ணுபுரம், இன்றைய காந்தி என என் கனவும் உலகமும் கண்முன்னே விரிந்து செல்கின்றன. என் 25 வருட வாழ்க்கையின் அலுப்பிலிருந்து மீண்டு புதிதாக பிறந்த தருணங்கள். என்னை உடைத்து சிதறடித்த தருணங்கள். பின்னர் திரும்பி பார்க்கையில் தெரிகிறது உங்கள் பனிமனிதனை தினமணி சிறுவர் மணியில் என் குழந்தை பருவத்தில் வாசித்திருக்கிறேன் என்பது. நிறைய உங்களுக்கு எழுதவேண்டும் என்று தோன்றியிருக்கிறது ஆனாலும் என்னால் எழுத இயலவில்லை. வெள்ளை யானையை வாசிக்க வேண்டும்.

வணக்கத்துடன்
விஷ்ணுபிரகாஷ்

அன்புள்ள விஷ்ணுபிரகாஷ்

வாசகர்களில் பலருக்கு என்னுடைய பெயர் அறிமுகமாவதற்கு முன்னரே என்னுடைய எழுத்துவகையை அறிமுகம் செய்வதாக பனிமனிதன் இருந்திருக்கிறது. பனிமனிதன் கனவும் தத்துவசிந்தனையும் கதையொழுங்கும் கொண்ட படைப்பு. அவை மூன்றும்தான் என்னுடைய எழுத்தின் தனித்தன்மைகள் என நான் நினைக்கிறேன்

வெள்ளையானையை வாசித்துவிட்டு எழுதுங்கள்

ஜெ

அன்புள்ள, ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் நேரத்தை விழுங்கப் போகும் இந்த மின்னஞ்சலை அனுப்புவதற்கு மிகுந்த தயக்கம் அடைகிறேன், எனினும் தங்களை என்னுடைய மானசீக குருவாக நினைத்து இதை அனுப்புகிறேன்.

என்னை பற்றி:

விஸ்வநாதன், வயது 40, பெற்றோர் இல்லை, பாட்டி மற்றும் தாய் மாமாவின் பாதுகாப்பில் வளர்ந்தவன், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னுடைய இளம் பிராயத்தில் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சாண்டில்யன் போன்றோரின் நாவல்களை வாசித்ததோடு சரி. என்னுடைய இலக்கிய ரசனை மிகவும் சுமார்தான், 90 களுக்கு பிறகு வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போய் விட்டது. அனேகமாக தினசரி மற்றும் வார இதழ்களை நுனி புல் மேய்வதோடு சரி, கூர்ந்த வாசிப்பு ஏதும் இல்லை

அதை நினைத்து இப்போது மிகவும் வருத்தபடுகிறேன். வாசிப்பு ஒரு மனிதனை எந்த அளவு பக்குவப்படுத்தும், ஆற்றுப்படுத்தும் என்பதை இப்போது உணர முடிகிறது. சமீபத்தில் நான் சந்தித்த எதிர்பாராத துயரம் என்னை மிகவும் பாதித்துவிட்டது, அதில் இருந்து மீள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். என் மன அழுத்தத்திற்கான எந்த வடிகாலும் இல்லாத நிலையில் அடிக்கடி தோன்றும் தற்கொலை எண்ணத்துடன் சமர் புரிவதே பெரும் கடினமாக உள்ளது. ஏனோ எனக்கு அதில் உடன்பாடும், துணிச்சலும் இல்லை. எனக்கு அதிகம் நண்பர்கள் வட்டமும் இல்லை, இருக்கும் ஓரிரு நண்பர்களுடன் எப்போதும் என் பிரச்சனை பற்றி மட்டுமே பேச தயக்கம். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் கணிப்பொறி பொறியாளராக இரவு ஷிப்டில் வேலை செய்கிறேன். அப்போது மீண்டும் வாசிக்கும் எண்ணத்துடன் சில நாத்திக இணையதள பக்கங்களை வாசிக்க ஆரம்பித்து. இருந்த கொஞ்ச நஞ்ச இறை நம்பிக்கையையும் இழந்து விட்ட உணர்வு. இத்தனைக்கும் 2 வருடமாக சைவ சித்தாந்த வகுப்புக்கு சென்று வரும் மாணவன் . அந்த நூல்களை முறையாக வாசித்ததும் இல்லை, மேலும் இறைவனைப் பற்றிய குழப்பம், எது இறை என்கிற தெளிவின்மை, பொதுவாகவே கேள்வி கேட்க கூச்சப்படுதல், எல்லாம் சேர்ந்து இந்த நிலை. அப்போது உங்கள் வலை பக்கத்தை வாசிக்க ஆரம்பித்தேன், அதில் கேள்வி பதில் பகுதியில் வரும்

ஆன்மீகம் தேவையா?

ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்

உணவும் விதியும்

எச்சிலில் புரள்வது என்னும் சடங்கு

கடவுள்நம்பிக்கை உண்டா?

கலாச்சார இந்து

கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?

தியானம்

பௌத்தமும் அகிம்சையும்,

போன்றவற்றில் வாசகர்களின் ஆன்மிகம் சம்பந்தமான கேள்விகளுக்கு தங்களின் பதில்கள் என்னுடைய பெருமளவு மனக் குழப்பத்தை தீர்ப்பதாக உள்ளது. மேலும் தினமும் தங்கள் வலைப்பக்கத்தை தவறாமல் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.குகைகளின் வழியே பயண கட்டுரையில் தங்களுடன் இன்னோவா காரில் நானும் பயணம் செய்த உணர்வு. மேலும் அருகர்களின் பாதை, சமணம் பற்றி அறிய பெரிதும் உதவியது

இப்போது என்னை மிகவும் ஆற்றுப்படுத்துபவை தங்களின் அனுபவம் மற்றும் உணர்வோடு கூடிய எழுத்துக்களே, தினமும் உங்களை வலைப்பக்கத்தில் பார்த்து பின் வாசிக்க ஆரம்பித்தவுடன், என் மனதில் நிறைய நம்பிக்கை. என்னோடு என்னுடைய குரு இருப்பதை போன்ற உணர்வு. மேலும் இந்த மாத சம்பளம் வந்தவுடன் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் வாங்க முடிவு செய்துள்ளேன், மேலும் தங்களின் வாசகனாக நினைப்பதில் பெருமை கொள்கிறேன். தங்களின் நட்பு வட்டத்திற்குள் வந்துவிட பெரிதும் ஆசை, ஆனால் அதற்கான எந்த தகுதியும் எனக்கு இருக்கிறதா என தெரியவில்லை. இந்த மின்னஞ்சலையே மிகுந்த தயக்கத்துடன் அனுப்புகிறேன்.தமிழில் கொஞ்சம் சிரமப்பட்டுதான் தட்டச்சு செய்தேன்.

அன்புடன்,

விஸ்வநாதன்.

அன்புள்ள விஸ்வநாதன்

உங்கள் கடிதத்தில் உள்ள தயக்கத்துக்கு எந்தக் காரணமும் இல்லை. இன்று சராசரித் தமிழ் வாசகன் பொதுவாக வாசிக்கக் கிடைக்கும் வணிக எழுத்துக்கள், அதன்பிறகு அரசியல் நோக்குடன் கூடிய சில எழுத்துக்கள் ஆகியவற்றின் வழியாக மெதுவாகவே தீவிர இலக்கியத்துக்குள்ளும் சிந்தனைக்குள்ளும் நுழைகிறான். சொல்லப்போனால் நாஞ்சில்நாடன் ஒருமுறை பேச்சில் சொன்னதுபோல நிந்தனை வழியாகவே சிந்தனைக்குள் நுழைகிறான்.

என்னுடைய எழுத்து அடிப்படையில் அவநம்பிக்கையை உருவாக்காதென்பதே நான் உணர்ந்துகொண்டது. எதிர்மறைத்தன்மைகொண்ட புனைவுகளில்கூட அடிப்படையான வாழ்க்கைத்தரிசனம் சாந்த நேர்நிலைநோக்கு இருக்கும். இயற்கை அளிக்கும் ஆறுதலும் இருக்கும். அவை நான் என் வாழ்க்கைவழியாக, என் அலைச்சல் வழியாகக் கண்டுகொண்டவை. அவையே சிந்தனைகளாகவோ புனைவுகளாகவோ உள்ளன.

பெரும்பாலான சமயங்களில் இத்தகைய வாசக அனுபவத்தின் அடுத்தபடி என்பது நேர்ச்சந்திப்பு ஆக, அதன்பின் தனிப்பட்ட நட்பாக மாறுகிறது. உங்களுக்கான நண்பர்களை இங்கே கண்டுகொள்ளலாம். வருக

ஜெ

முந்தைய கட்டுரைஇரண்டுவகை வரலாறுகள்
அடுத்த கட்டுரைஅறமெனும் சாவி