விக்கிபீடியா,தமிழ்டிக்ட்

தமிழ் விக்கி இணையம்

 

அன்புள்ள ஜெயமோகன்

சமீபத்தில் ஒரு நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவன் நீங்கள் விக்கிபீடியாவில் ‘சுட்டு’த்தான் கட்டுரைகளை எழுதுகிறீர்கள் என்றான். ஆதாரமாக அவன் சில கட்டுரைகளை விக்கிபீடியாவில் இருந்து எடுத்துக் காட்டினான். தமிழ் விக்கிபீடியாவில் நீங்கள் எழுதிய கட்டுரை அப்படியே வரிவரியாக இருந்தது. நீங்கள் விக்கிபீடியாவில் இருந்து கட் பேஸ்ட் செய்கிறீர்களா?

சண்முகம்

அன்புள்ள சண்முகம்,

என்ன மதுரைப்பக்கம் விசித்திரமான ஐயங்கள்?

விக்கிபீடியா தமிழில் விரிவாக உருவாகவேண்டிய ஓர் அமைப்பு. திறந்த நிலை கலைக்களஞ்சியம் அது. எவர் வேண்டுமானாலும் அதில் தகவல்களைப் போடலாம். இதன் விளைவாக மானுட ஞானம் ஒரு புள்ளியில் தொகுக்கப்படுகிறது. ஆங்கில விக்கிபீடியா உலகின் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் கலைக்களஞ்சியம்

பொது ஞானத்தை மதித்து அதில் சொந்தக்கருத்துக்களை திணிக்காதவரை விக்கி ஒரு மாபெரும் சேவையாக அமையக்கூடும். எந்த பொது அமைப்பையும் ‘கைப்பற்றி’ சீரழிக்கும் நமது தீவிர இடதுசாரிகளும் பெரியாரியர்களும் கைவைக்கும்வரை தமிழிலும் அப்படி நீடிக்கலாம்.

விக்கியில் இப்போதுள்ளவற்றில் பலநூறு கட்டுரைகள் நான் எழுதியவை. இலக்கியம் குறித்தவை. பெரும்பாலும் முன்னர் எழுதிய கட்டுரைகளை கலைக்களஞ்சியக் கட்டுரைகளாக, அபிப்பிராயங்களை நீக்கி தகவல்களை மட்டுமே வைத்து, மாற்றுருவம்செய்தவை. மிச்சம் அசல்

நீங்களும் விக்கிக்கு பங்களிப்பாற்றலாம். விக்கி ஆங்கில கலைக்களஞ்சியத்தை தமிழாக்கம் செய்து சேர்க்கலாம்

ஜெ

அன்புள்ள ஜெ

நான் அமெரிக்காவில் வாழ்கிறேன். கீழக்கண்ட சொற்களுக்கு தமிழில் என்ன பொருள்? அதை அறிய ஏதேனும் இணைய தளம் உள்ளதா?
1)Grocery
2)Recharge
3)Calling Card
4) T Shirt
5)Clip
6) Cereals
7) Ice Cream
8) Milk Shake

 

ஆனந்த் வைத்தியநாதீஸ்வரன்
அன்புள்ள ஆனந்த்

நீங்கள் சொன்ன சொற்களை தமிழில் அறிய ஆகச்சிறந்த இணையதளம் இது

http://www.tamildict.com/english.php

எளிமையான முறையில் இலவசமாக ஆங்கிலச் சொற்களின் தமிழாக்கத்தை இதில் காணலாம். ஆனால் இன்னமும் ஏராளமான தமிழ்க் கலைச்சொற்கள் இதில் இல்லை. விக்கிபீடியா போலவே இதுவும் ஒரு சிறந்த பொது இணைய தளம்

நீங்களும் அகராதிகளில் படித்த சொற்களை அதி உள்ளீடு செய்யலாம். நானும் செய்துவருகிறேன். மொழிபெயர்ப்பாளர்களுக்கு மிக உதவக்கூடியது

ஜெ

முந்தைய கட்டுரைசம்ஸ்கிருதம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தி கடிதங்கள்