வாசிப்பின் நிழலில் – ராஜகோபாலன்

குறைந்த பட்சமாக ஒரு பில்லியன் ஆண்டுகளை கடந்திருக்குமாம் இன்று நம் கையில் கிடைக்கும் வைரம். அப்படித்தான் ஆகிவிட்டது தெளிவத்தையின் படைப்புகளை நான் கண்டடைந்து வாசிப்பதற்கு. வெட்கமாக இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். தெளிவத்தையின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும் முயன்று தேடி வாசித்ததில்லை.

ஆனால் 2013 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதுக்கு அவர் தேர்வான பின் அவரது படைப்புகளில் ஒன்றையாவது வாசிக்காமல் அவரைச் சந்திப்பது இழுக்கு என்பதால் அவரது படைப்புகளைத் தேட ஆரம்பித்தேன். நண்பர் ‘எழுத்து அலெக்ஸ்’ தெளிவத்தை ஜோசப்பின் ‘குடை நிழல் ‘ பிரதியை அனுப்பி வைத்தார். பிறகு எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் பல சிறுகதைகள் வாசிக்கக் கிடைத்தன.

ஒரு எழுத்தாளரை தொகுத்துப் புரிந்து கொள்ளலாம், பகுத்துப் புரிந்து கொள்ளலாம், வகுத்துப் புரிந்து கொள்ளலாம் ; முக்கியமாக ரசித்தும் புரிந்து கொள்ளலாம். தெளிவத்தை அவர்களின் குடை நிழல் மற்றும் அவரது சிறுகதைகள் பலவற்றையும் வாசித்ததன் அடிப்படையில் ஒரு வாசகனாக எனது வாசிப்பனுபவத்தை முன் வைக்கிறேன்.

நமது சம கால தமிழிலக்கியத்தில் தெ .ஜோ வின் இடம் மிக அருமையான ஒன்று. எளிய கூறுமுறை, குறைவான சித்தரிப்பு மொழி, இறுக்கமும் , கூர்மையும் குறைந்த கட்டமைப்பு, “அதுல பாருங்க” என்று ஆரம்பிக்கும் வி.கே. ராமசாமி போன்ற ஒரு மொழி நடை, மின்னல் வெட்டின் காட்சி தோற்றங்களை நினைவுப்படுத்தும் விவரணைகள், பாசாங்கு -போதனை- பிரச்சாரம் ஏதுமற்ற ஆனால் மானுட உணர்வு கொள்ள வைக்கும் வாசிப்பு அனுபவம் – இப்படி தெ .ஜோ. வின் படைப்புகளுக்கு ஒரு பொது வடிவம் கொடுக்கலாம். அவரை வாசித்த பலரும் ஏற்றுக் கொண்ட , முன்பே கூறிய இந்த அவதானிப்புகளை அவரது படைப்புகளின் புது வாசகனும் வெகு விரைவிலேயே உணர முடியும் என்பது அவரது படைப்புகளின் சிறப்பு.

தமிழில் பெயர் பெற்ற படைப்பாளிகள் பலர் தங்களது படைப்பூக்கத்தை தாங்களாகவே சித்தரித்துக் கொண்ட அவர்களது சொந்த உலகத்துக்குள்ளே இருந்துதான் படைப்புகளாக மொழி மாற்றம் செய்து வாசிக்கத் தந்திருக்கிறார்கள். “திருநவேலி” எல்லைக்குள்ளாகவே மொத்த மானுட உணர்வுகளின் மேல், கீழ் கலவைகளைக் காட்டிய புதுமைப் பித்தன், அக்ரஹார வீட்டின் அறைகளிலும் , கதை நாயகியின் முகத்திலும், அம்பாள் கோயிலின் கர்ப்பக்ருகங்களிலுமே தனது மொத்த படைப்புலகையும் எழுதித் தீர்த்த லா.ச.ரா. , காவிரிக் கரையோர அக்ரகாரங்கள் , கும்பகோணத்தின் வீதிகள் வழியே மட்டுமே மனிதனின் ஆதி இச்சை அவனை புரட்டி எடுக்கும் வீரியத்தை சொன்ன தி. ஜானகிராமன் , சொல்லித் தீராத உலகப் பொதுமையான மனித உணர்வுகள் அனைத்தையும் கரிசல் மை மட்டுமே கொண்டு இன்னும் எழுதித் தீராத கி.ராஜநாராயணன் , நாஞ்சில் மண்ணின் , உணவின் மணம் வராவிட்டால் மூச்சடைத்து உயிர் துடிக்கும் நாஞ்சில் நாடனின் கதை நாயகர்கள், திருநெல்வேலி ரத வீதி வளவு வீடுகள் , தாம்பரம் ரயிலடி புறநகர் ஒண்டு குடித்தனங்கள் இரண்டுக்கும் பொதுவாய் வாழ்ந்து பொருளாதார சிக்கல்கள் வழியே மட்டும் மானுட உணர்வுகளைக் காட்சிப்படுத்த முயன்ற வண்ணநிலவன் – இப்படி இன்னும் இருபது படைப்பாளிகளையாவது சுட்ட முடியும்.

அவ்வாறே தெ .ஜோ. வின் படைப்புலகை காணப் புகுந்தால் கதைக்களங்கள் மிகப் பெரும்பான்மையும் மலைத் தோட்டங்கள். படைப்புகளின் நிகழ்விடங்கள் என்று கவனித்தோமானால் வீடுகள். அதுவும் அதிக பட்சமாக இரண்டு அறைகளைக் கொண்ட லயம் (லயன் ) வீடுகள். கதை மாந்தர்கள் என்று பார்த்தால் கீழ் நடுத்தர, நடு நடுத்தர (!), மேல் நடுத்தர வர்க்க குடும்ப உறுப்பினர்களே. இவர்களுக்குள் நடக்கும், இவர்களுக்கு நடக்கும் சம்பவங்களே தெ .ஜோ. வின் படைப்புகளின் மையம். அதே நேரம் கதை வாசகனில் நிகழும் அற்புதத்தை தெ .ஜோ. ஒரு மேதைக்கேயுரிய எளிமையில் செய்து முடிக்கிறார். இது எப்படி சாத்தியமாகிறது ?

நெல்லை டவுன் பகுதிகளில் வளவு என்றும், நெல்லை ஜங்ஷன் பகுதிகளில் (இரண்டுக்கும் ரெண்டே கிலோமீட்டர்தான் தூரம்) காம்பவுண்டு என்றும் அழைக்கப்படும் இரட்டை /ஒற்றை அரை வீடுகளின் தொகுதிக்குள் நடக்கும் வாழ்க்கை திருநெல்வேலியைச் சேர்ந்தவன் என்னும் முறையில் எனக்கு சுய அனுபவமே. போதாதற்கு இந்த வளவு/காம்பவுண்டு வாழ்க்கையினை வரி வரியாக நெல்லையைச் சேர்ந்த “வ” வரிசை எழுத்தாளர்கள் தொடக்கி இன்றைய “சு” வரிசை நெல்லை எழுத்தாளர்கள் வரை எழுதித் தள்ளிவிட்டார்கள். தெ .ஜோ. பேசும் லயம் வீட்டு வாழ்க்கை எப்படி வளவு வீட்டு வாழ்க்கைகளிலிருந்து மாறுபட்ட ஒன்று ?

இதுவரை வாசித்த வளவு கதைகள் பெரும்பான்மையும் பொருளாதாரச் சுமையில் நசுங்கி சாகும் மெல்லுணர்வுகளையும், இணை சேர முடியாத “ஆண் பப்பாளி காதல்களையும்” , மாதம் முழுதும் உழைப்பவனுக்கு ஒரு நாள் மட்டும் ஆசுவாசம் தரும் சம்பள நாள் போல எப்போதாவது வரும் மனித உணர்வுகளின் நெருக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன. தெ .ஜோ. வின் லயம் வீட்டுக் கதைகள் அவ்வகை வீட்டின் வாழ்க்கை முறை சிக்கல்களை முன் வைப்பவை அல்ல.மாறாக அதன் வழியே அப்படி வாழ நேர்ந்தோரின் மானுட அவலம்தான் முன் வைக்கப்படுகிறது. அவரது எந்தக் கதைகளிலும் லயம் வீட்டைப் பற்றிய விரிவான சித்தரிப்புகளோ, கண் முன்னே காட்சியாய் விரிக்க முயற்சிக்கும் வர்ணனைகளோ இல்லை என்பது வியப்பான அம்சம்.

ஆனால் வாசிப்பவருக்கு லயம் வீட்டின் நெருக்கடி எப்படி உருவாகிறது? தெ .ஜோ. ஒவ்வொரு முறையும் அந்த நெருக்கடியை கதாபாத்திரங்களின் மனதிலிருந்து நாம் அறியத் தருகிறார். “மீன்கள்” கதையில் மகளை மனைவி என்று நினைத்து விட்ட அதிர்ச்சியை நாம் வாசிக்கும் போதே அந்த வீட்டின் போதாமையும், அதனால் அக்குடும்பம் படும் வேதனைகளும் நம் மனதில் புகுந்து விடுகின்றன. அவற்றை விளங்கிக் கொள்ள மேலதிகமாக நமக்கு விவரணைகளோ, காட்சி சித்தரிப்புகளோ, நுண்மான் நுழை புல கவின் மொழியோ தேவைப்படுவதில்லை. மன உணர்வுகளை சொல்வதன் வழியே வாழ்க்கை சூழலை வாசகன் உணரக் கொடுக்கும் நுட்பம் தெ .ஜோ. வின் கைமணம் என அவரது படைப்புகளில் தெரிகிறது.

எப்போதுமே கதைகளில் பாதியைத்தான் தெ .ஜோ. மொழியில் எழுதுகிறார். மீதியை வாசகனின் மனதில் படைப்பை வாசிக்கும் கணம் அவனே எழுதி நிரப்பிக் கொள்ளும் உவகையை தருகிறார். கூரையின் பொத்தலை சரி செய்ய முயற்சித்து கூரை மொத்தமும் விழுந்ததைச் சொல்லும்போது அதுவரை அந்தக் கூரை இருந்த “லட்சணம்”, அதில் வாழ்ந்தோரின் அவல நிலை, இனி மேல் அவர்கள் படப் போகும் சிரமம் இத்தனையும் நமது மனதில் சட்டென நுழையும் இடத்தில்தான் தெ .ஜோ. வின் படைப்புத் திறன் சிலாகிக்கப்பட வேண்டிய ஒன்று.

தெ.ஜோ. வின் எளிமையான கதை சொல்லும் விதத்தின் முன்னோடி அல்லது சம காலத்தவர் என்று நாம் அசோகமித்திரனைச் சொல்லலாம். குறைவான சித்தரிப்புகள், ஒரு வாக்கியத்திலேயே ஒரு தலைமுறை வாழ்க்கையை உணர்த்திவிடும் எளிமையின் வலிமை, மிகக் குறைவான அல்லது விவரனைகளே தேவையற்ற கதை நிகழ் சூழல் என்று இருவருக்குமான ஒற்றுமைகள் நிறையவே உண்டு. ஆனால் அசோகமித்திரனின் படைப்புகளில் கூடும் கச்சிதத் தன்மையும், சரியான அளவில் அமையும் கதைக் கட்டுமானமும் தெ .ஜோ. வின் படைப்புகளில் காணக் கிடைப்பதில்லை. சமயங்களில் சில படைப்புகள் கடைசியிலும், முதலிலும் பத்து பக்கங்களை இழந்த புத்தகம் போல இருக்கின்ற உணர்வு வருவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும் தெ .ஜோ. தரும் வாசிப்பனுபவத்தால் வாசகன் அந்த இடங்களை உணர்ந்து விட முடியும் என்பதால் இந்த விஷயம் பெரிதாக பேசப்பட வேண்டியதில்லை.

இன்றைக்கு தமிழ் கூறும் இலக்கிய நல்லுலகில் மிகுந்த கவனத்துடனும், அரசியல் சார்பு சரிநிலை உணர்வுடனும் உச்சரிக்கப்பட வேண்டிய சொல்லாகி விட்டது “இலங்கை”. ஏதாவது ஒரு தரப்பை சார்ந்து நிற்க வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டு விட்டது “இலங்கை” என்ற சொல்லாடலை பாவிப்போருக்கு. படைப்பாளிக்கு சமநிலை என்ற ஒன்று உண்டா என்றால் எனக்குத் தெரிய அது புகைக்கு நடுவே இருக்கும் சாம்பல் பூத்த கங்கு. அற விழுமியங்களின் சார்பில்தான் படைப்பாளி நிற்க முடியும். அந்த சமநிலை ஏதோ ஒரு தரப்புக்கு ஆதரவாகவே முடியும். ஆனால் அந்தத் தரப்பும் தவறிழைத்தால் படைப்பாளி அந்தத் தவறையும் சுட்டத்தான் செய்வார். அப்படி செய்யாமல் போகும்போது படைப்பு வெறும் பிரசாரம் , போதனை எனும் அளவில் நின்று விடுகிறது. விழுமியங்களின் அடிப்படையில் நிற்கும்போது அந்த படைப்பாளி எல்லா தரப்புகளிலிருந்தும் விமர்சிக்கப்படும் நிலை உருவாகும். அவ்விமர்சனங்களே அவரது சமநிலைக்கான சான்று. எந்த அமைப்புக்கும் ஒரு படைப்பாளியை கையாளுவது என்பது எண்ணைய் கைகளால் கண்ணாடிப் பாத்திரம் ஏந்தி நடனமாடுவது போலத்தான் .

தெ.ஜோ. இவ்வகைப் படைப்பாளி என்பது அவரது படைப்புகளில் துலக்கம். குடைநிழல் படைப்பில் மகனை பள்ளியில் சேர்க்க அலையும் தகப்பனின் மனப் புலம்பல்களூடே சட்டென திறக்கிறது படைப்பின் சமநிலை தரிசனம் – ” தமிழ் பாடசாலைகளில் தமிழர் பெருமைகளும் சிங்கள மீடியத்தில் சிங்களவர் பெருமைகளுமே முன்வைக்கப்படும் போது , மாணவர்கள் மனதில் பதிய வைக்கும்போது தமிழ்-சிங்கள ஐக்கியம் எப்படி வரும்- எங்கிருந்து வரும். ………………………….
……………….பல்லின மக்கள் வாழுகின்ற நமது நாட்டில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் கூர்மை பெறுவதற்கான முக்கியக் காரணியாக அமைகிறது கல்வி…………….”

ஒரு படைப்பாளியாக தெ.ஜோ.வை எந்தத் தரப்பு என்று இப்போது சொல்வது ? படைப்பின் அந்தரங்க சுத்தி வாசிப்பவனுக்கு புரியும்போது சார்பு நிலைகள் உதிர்ந்து விடும் என நம்புகிறேன் நான். தெ.ஜோ. வை வாசிக்கும் தோறும் அந்த எண்ணம் வலுப்படுகிறது. உள்ளபடியே யார் தரப்பாக தெ.ஜோ.வைப் புரிந்து கொள்ள முடியும்? ஒரு புறம் ஆயுதம் ஏந்திய அதிகார வர்க்கம், மறுபுறம் ஆயுதம் தரித்த தன்னினக் குழுவினரின் அழுத்தம் , இவை ஏதுமற்ற நிலையிலும் பொருளாதாரப் போராட்டம் காத்திருக்கும் எதிர்காலம் – இவை அனைத்திற்கும் மத்தியிலே ஒரு சராசரியான குடும்ப வாழ்க்கையையாவது வாழ்ந்து தீர்க்க இடையறாது அல்லல் தாங்கும் ஒரு வர்க்கம் “இலங்கையில்” உண்டு. இரு தரப்பாருக்கு மத்தியிலே உதைபந்தாய் சீரழியும் இந்தத் தரப்பை தெ.ஜோ.வை விட வேறெந்த இலங்கைப் படைப்பாளியும் இத்தனை கூர்மையாய் முன்வைத்ததில்லை.

வயோதிகத்தின் அனுபவங்களால் கனிந்த ஒரு பார்வையே தெ.ஜோ.வின் படைப்புகளில் உணர முடிவது. எந்த நிறமுமின்றி நிகழ்வுகளை வரையும் கைகள் , ஒரு கனிந்த முதியவரின் விவேகமும், கருணையும் கொண்ட கண்களையே கொண்டிருக்கின்றன. அதிகார வர்க்கம் அல்லல் செய்யும் விதத்தை, அந்த அமைப்பை தனது துரோகத்துக்கு துணையாக்கிக் கொண்ட இனவாதச் சிறுமையை, அதனால் சிதறுண்டு போகும் குடும்ப அமைப்பை “குடை நிழலில்” நம் முன்னே வைக்கும் அதே தெ.ஜோ. தான் முதுமையின் கனிவால், தாய்மையின் உணர்வால் , குழந்தையின் மனத்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய “மழலை” யையும் நமக்குத் தருவது. ஒவ்வொரு வீதியின் ஏதாவது ஒரு வீட்டில் மாதம் ஒரு முறையாவது நடக்கும் இந்த நிகழ்வை தெ.ஜோ. நமக்குத் தரும்போது மனித வாழ்வின் சுவையான ருசி மிக்க ஒன்றைச் சுவைக்கும் அனுபவம் கிடைக்கிறது. கதையின் முடிவில் குழந்தை மட்டுமா தாத்தாவின் முகத்தைத் தேடுகிறது? வாசிக்கும் நாமும்தான்.

ஒரு பொதுவான கருத்தாகத்தான் தெ.ஜோ. சித்தரிப்புகளில் அதிகம் மொழியாடுவதில்லை எனலாம்.ஆனால் நுண் தகவல்கள், நுட்பமான விஷயங்களை அவர் கதைகளில் தூவிச் செல்லும் பாங்கு வாசிப்பை வெகு சுவாரசியமாக்குபவை. எங்கே விளைந்திருக்கும் காளான் வருவலுக்கான பொருத்தமான ருசி கொண்டிருக்கும், திப்பிலி மரத்தின் கள் தரும் போதை, வவ்வாலை வேட்டையாடும் விதம், அதை தயாரிக்கும் முறை- இவை போன்ற பல நுண் தகவல்கள் வாசகனை படைப்பினுள் இழுத்து அமிழ்த்தத் தவறுவதில்லை.

தெ.ஜோ.வின் எழுத்துக்களின் ஆகப் பெரிய சிறப்பாக நான் கருதுவது அவர் ஒரு காட்சியை சொல்லும் விதத்திலேயே ஒரு பெரிய பின்புலத்தை வாசகனுக்கு உணர்த்திவிடுவதைத்தான். அறைக்குள்ளிருந்து சாவித் துவாரம் வழியே பரந்த தோட்டத்தைப் பார்ப்பது போல. குடை நிழல் படைப்பில் ஒரு இடம். கணவனின் தவறான நடத்தைகள் காரணமாக புழுங்கி , ஒதுங்கி நிற்கும் மனைவி, குழந்தைகளால் மட்டுமே இணைக்கப்பட்டு மெல்லிய நூல் சரடாய் அவர்களுக்கிடையேயான உறவு, மனைவி எனும் உறவின் மூலம் பெண்ணின் மீது பூட்டப்பட்ட மரபின் சாரம், கணவனது தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும் எல்லையின் விளிம்பில் நின்று தவிக்கும் பெண்மனம், இது எதனையும் கண்டு கொள்ளாமல் தன சுகம் ஒன்றே பிரதானமாய் கொண்டு வாழும் ஆண் – இத்தனையயும் ஒரு காட்சியை மட்டும் விவரிப்பதன் மூலம் வாசகனுக்கு உணர்த்தி விட முடியுமா?

தெ.ஜோ.வின் வரிகளை அப்படியே பார்ப்போம் – “உள்ளிருக்கும் சிமினி விளக்கின் வெளிச்சம் வாலோடி வழியாக கோடாக எட்டிப் பார்க்கும் குசுனி வாசலை. குசுனி வாசலில் என்னையும் தங்கையையும் மடியில் போட்டுக் கொண்டு குந்தியிருக்கும் அம்மாவை , உள்ளறையில் இருக்கும் அப்பாவுடன் பிணைத்து வைப்பதாகத் தன்னை ஏமாற்றிக் கொள்கிறது அவ் வெளிச்சக் கோடு. ”

இந்தக் காட்சியை தன் அகக்கண்ணில் காண முடிந்த வாசகனுக்கு உணர முடிவது அந்த கணவன் , மனைவி உறவு நிலை நிற்கும் மலை விளிம்பு.

காட்சிப்படுத்துவதன் உச்சபட்ச சாத்தியத்தை தெ.ஜோ. வின் பல படைப்புகளிலும் காணமுடிகிறது. ஒரு போராட்டத்தை வன்முறையால் அரசு எப்படி எதிர்கொண்டது என்பதை வாசகனுக்குச் சொல்ல அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் நான்கைந்து வரிகளே. போராட்டம் தீவிரமடைந்த காலங்களில் இளைஞர்களின் பிணங்கள் கால்வாசி, அரைவாசி எரிந்தவை நிறைய காணக்கிடைப்பதை, எஞ்சியவை நீர்நிலைகளில் வீசப்பட்டதை மூன்று வரிகளில் சொல்லி விட்டு போராட்டத்தை அரசு எதிர்கொண்ட விதம் இது என்ற சிறு வரியில் மொத்த அரசு அடக்குமுறையை காட்டி விடுகிறார்.

தெ.ஜோ. வின் கதாபாத்திரங்களும் பெருமளவு சாமானியர்களே. அவரது நாவல்களிலும் கூட அவர் முயன்று கதாபாத்திரங்களை சராசரிக்கு மேம்பட்டவர்களாக சித்தரிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது கதைமாந்தர்களின் பெயர்களிலும் கூட நாம் நின்று கவனிக்கும்படியான ஒரு பெயரினையும் பயன்படுத்தினாரில்லை. ஒரு எளிமையான ஆரம்பத்திலிருந்து நேரடியாக வாசகனை கதை சூழலுக்கு இழுத்து விடும் தெ.ஜோ. அதன் பின் வாசகனது கவனத்தை நிகழ்வுகளிலும், சம்பவங்களிலுமே தக்க வைத்துக் கொள்கிறார். தெ.ஜோ. வின் படைப்புகளில் மையம் என்பது நிகழ்வுகளும், அது வாசகனில் உருவாக்கும் கேள்விகளுமே. ஒரு பிச்சைக்காரனின் கையில் முழு ரூபாய் தாளினை சகித்துக் கொள்ளவே முடியாத சூழலை தெ.ஜோ. சொல்லி முடிக்கும்போது அவன் மீது அசூயை கொண்டு விரட்டியவரில் நாமும் ஒருவர்தானோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆனால் கதை நாயகன் அந்த சூழ்நிலையில் வெகு சராசரியாய் விக்கித்துதான் நிற்கிறான். இந்த கதாபாத்திரம்தான் தெ.ஜோ.வின் மொத்த படைப்புகளிலும் தலை காட்டும் பொதுவான கதை நாயக மாந்தர்.

குடை நிழலில் கதவைத் திறக்க இரும்பு கம்பியை எடுத்து வந்த காரணத்தால் போராளியாகப் பார்க்கப்படுவதன் அவலத்தையும், கொட்டடியில் அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் சலவை ஆடைகளை அணிந்தவுடன் ஆசுவாசம் அடையும் நிலையையும்தான் நாம் கதைநாயகனில் காண்கிறோம். தமது சராசரியையும், இயல்பையும் மீறிய ஒன்று தங்களுக்கு நடக்கும்போது தம் கையறு நிலையை எண்ணி விக்கித்து நிற்கும் தருணங்கள் அவரது படைப்புகளில் மீண்டும், மீண்டும் வருகின்றன. அதற்கான காரணத்தை எண்ணி மறுகும் இடத்தை தெ.ஜோ. வாசகனுக்குத் தந்து நகர்ந்து விடுகிறார் .

நண்பர்களே! என் வாசிப்பின் அனுபவத்தில் தெ.ஜோ. அவர்களை தொகுத்திருக்கிறேன். அது என் வாசிப்பின் எல்லைக்குட்பட்டதே. எழுதப்பட்ட சூழலை நான் உணர்ந்தே எழுத முடிந்திருக்கிறது. ஆனால் அதே சூழலில் வாழ நேர்ந்தோர், அதைக் காண முடிந்தோர் இதனினும் சிறப்பாக தெ.ஜோ.வை நமக்கு விளக்க முடியும்.
நாற்றங்காலில் வளரும் நெல்லின் நாற்றுகள் வயலின் பல மூலைகளுக்குமாய் பிரித்துதான் நடப்படுகின்றன. வாழுங்காலம் முழுவதும் நெல் பயிர் தனது நாற்றங்கால் சகோதரனைக் காண முடியாவிட்டாலும் அறுவடைக் காலத்தில் அவற்றின் நெல்மணிகள் ஒரே அம்பாரத்தில் ஒன்றையொன்று உணர்ந்துகொள்கின்றன.
உலகின் பல பாகங்களிலும் சிதறி வாழுமாறு விதிக்கப்பட்ட ஒரு இனம் தான் வாழுங்காலம் முழுதும் அல்லாமல் எக்காலமும் தன் நாற்றங்காலுக்கு திரும்ப முடியாமல்தான் இருக்கிறது. ஆனால் தெ.ஜோ. போன்ற படைப்பாளிகளின் நெல்மணிகள் மூலம்தான் நாற்றங்காலிலேயே வளர்ந்த நாம் நமது சகோதரரை உணரமுடிகிறது. அதிலும் தெ.ஜோ. வின் படைப்புகள் விதைநெல் கதிர்கள்.

விஷ்ணுபுரம் விருது பெற்றமைக்கு தெ.ஜோ. அவர்களுக்கு வாழ்த்துகளும், அவரது படைப்புகளுக்காக அவருக்கு அன்பு நிறைந்த நன்றியும்.
,

முந்தைய கட்டுரைதடுமாறும் அறம்: வெள்ளை யானை
அடுத்த கட்டுரைதனிப்பட்ட கடிதங்கள்