தெளிவத்தையின் குடைநிழல் -கடிதம்

நாவல் ஒரே அமர்வில் படிக்க முடிந்தது. ஒரு த்ரில்லர் கதைக்குரிய விறுவிறுப்பு இருந்தது. ஒரு நடுத்தர வர்க்க குடும்ப தலைவர் ஒருவரை திடீரென்று ஒரு நாள் இலங்கை போலீசார் வந்து கைது செய்கின்றார்கள்.அதில் தொடங்கும் கதை மலையக தமிழர் வாழ்கை, இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பற்ற நிலை, பேதங்களை வளர்ப்பதில் தமிழ் மற்றும் சிங்கள கல்வியின் பங்கு , என்று பல தளங்களை தொட்டு செல்கிறது.

போலீசார் குடும்பத் தலைவரை கைது செய்வது என்பதை செய்தியாய் படிக்கும் போது அது ஒரு சராசரி நிகழ்வு மட்டுமே ஆனால் நாவலில் அதை அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை. அப்பா கைது செய்து செல்ல படுவதை குழந்தைகளிடம் இருந்து மறைக்க நினைக்கும் அம்மா, தன கருவறைக்கே திரும்ப கொண்டு செல்ல முடியாதா என்று ஏங்கும் தாய், கணவன் அன்றி வேறு எதையும் அறியாத, எந்நேரமும் வெடித்து அழ தயாராய் மனைவி என்ற காட்சி சித்திரம் படிப்பவரை உறைய வைக்கிறது.

சிங்கள பள்ளியில் படிக்கும் தமிழ் குழந்தைகள் சிந்தனைகளிலும் சிங்களர்களையே போலி செய்கிறார்கள். தமிழ் அடையாளத்தில் இருந்து விலகி நிற்கிறார்கள். மேற்கில் படிக்கும் இந்திய குழந்தைகள் சில இந்திய அடையாளத்தில் இருந்து விலகி நிற்க நினைப்பது போல. ஒரு விதத்தில் அது ஒரு வாழ்தல் உத்தி தான்.

ஒரு சிங்களவர் தனிப்பட்ட விரோதத்திற்காக ஒரு தமிழரை சர்வ சாதாரணமாக கைது செய்ய வைத்து அவர் வாழ்கையை அழித்து விட முடியும் என்பது போன்ற ஒரு சித்திரம் நாவலில் உருவாகி வருகிறது. படித்த,நடுத்தரவர்க்க மனிதருக்கே இது தான் கதி எனும் போது கீழ் நிலையில் இருப்பவர்களுக்கு உள்ள பாதுகாப்பின்மை அச்சுறுத்துகிறது.

இடையே அங்கங்கே நன்மையின் தீற்றுகள் தென்படவே செய்கின்றன. கதை சொல்லியின் வீட்டுகாரர், சிறையில் சந்திக்கும் அந்த காவலர் என்று.

கதை சொல்லியின் அப்பா மற்றும் அம்மா வரும் காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன. ஒரு சுயநல தந்தையிடம் இருந்து போராடி குழந்தைகளை மீட்டு வளர்க்கிறாள் தாய். ஆனால் அந்த குழந்தை படித்து, வளர்ந்து ஒரு இடத்தை அடைந்த பின் சர்வ சாதரணமாக சிறையில் அடைக்கப்பட்டு எஞ்சிய வாழ்நாளை இழக்க கூடிய ஒரு அபத்தம் தொந்தரவு செய்கிறது.

நாவலின் முடிவு வலிந்து உருவாக்க பட்டது போல் உள்ளது. திடீரென்று ஒரு அரசியில் கனவோடு நாவல் முடிகிறது. ஆனால் அந்த முடிவிற்கு முன்னரே, இனவாத அரசியலில் ஒரு சாதரணன் பலியாவதின் கொடூரத்தை காட்டியதிலேயே இந்த நாவல் வெற்றி பெற்று விட்டது.

அன்புடன்
பிரபு

முந்தைய கட்டுரைஇந்தியச் சமூகத்தின் அறம் எது? -இமையம்
அடுத்த கட்டுரைடெம்ப்ளேட்டுகள்