பி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்

last - Copy

 

மொழி பெயர்ப்பு: ஜெயமோகன், நிர்மால்யா

(பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை)

1. கனம்

இல்லாதவற்றின் எடையெல்லாம்
உள்ளவை சுமக்க வேண்டும் என்று
ஓர் அறிவிப்பு
இவ்வழி சென்றது

அத்துடன்
பகல் முதல் அந்திவரை நீண்ட
இந்த இருப்பில்
இல்லாத வேலையின் கனத்தை
நான் அறியத் தொடங்கினேன்

இல்லாத துயரத்தின் கனம்
நீண்டு நிமிர்ந்து நிற்கும் போதுள்ள
இந்தக் கூனல்.

அடிக்களத்திற்கு கட்டிச் செல்லப் படும்
கதிர் குலைகள் போன்றது
இல்லாத காதலின் கனம்

இல்லாத சுதந்தரத்தின் கனமே
இந்த அலைச்சல்
இப்போது அருகிலெங்கும் இல்லாத
மரணத்தின் கனம்தான்
மச்சின் உத்தரத்தில் உள்ள
கொக்கி நோக்கி நகரும்
என் சபலப் பார்வை

இல்லாத தூக்கத்தின் கனம்
இந்தக் கொடுங்கனவு

அதற்குள்
சொற்களின் கனத்தால்
உதடுகள் தளர்ந்து விட்டிருந்தன
கனம் மட்டுமே இருந்தது

இல்லாதவற்றின் கனமெல்லாம்
உள்ளவை சுமக்க வேண்டும் என்று
ஓர் அறிவிப்பு
இவ்வழி சென்றது

உடைந்து விழுந்த சுமைதாங்கி
அதைக் கேட்டு
இல்லாத கவனத்தின் கனத்தை
காற்றின் மீது ஏற்றி வைத்தது.

2. அன்னை

என்
குடத்தில்
நிறைய
நதிக்கு
ஒரு புன்னகையே
போதும்.

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம்Feb 4, 2001