ஆசிரியருக்கு,
வெள்ளையானை பற்றி நிறைய சொல்லலாம். ஒரு காட்சியை மட்டுமாவது சொல்கிறேன். பகல் முழுக்க சாப்பிடச்செல்லாமல் மிதமான வெயிலில் ஒளிவிடும் கடலையே ஏய்டன் பார்த்துக்கொண்டிருக்கும் சம்பவம் நுட்பமானது. “Roll on, Thou deep and dark blue ocean! Roll ! Ten thousand fleets sweep over thee in vain” என்ற பைரனின் வரிகளை நினைவு கூர்ந்து குறிப்பாக ”in vain” என்று திரும்ப சொல்லிப்பார்த்துக்கொள்வது. நாவலின் ஆரம்பத்திலேயே வரும் இக்காட்சி எய்டனின் ஆளுமையை துல்லியமாக வரைந்து காட்டுகிறது. எய்டனின் பணிவும், கோபமும் வீரமும் நீதியுணர்வும் இங்கிருந்துதான் வருகிறது. நாவலில் முன்பகுதியிலேயே இது வருவது அவனின் குணாதிசயத்தை முழுக்க புரிந்துகொள்ள உதவுகிறது.
நீங்கள் ஏற்கனவே சொன்ன வரிகள்தான். இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் தான் ஒரு எளிய தூசு என்று அறியக்கிடைக்கும் அனுபவம் அதுவரை கைகூடாத பணிவையும் நிதானத்தையும் ஏற்படுத்துகிறது. அதே சமயம் இவ்வளவு பெரிய பிரண்மாண்டத்தின் ஒரு பகுதியே நான் என்ற உணர்வு நிமிர்வையும் ஆணவமான தைரியத்தையும் தருகிறது. இதற்கு பைரனின் கவிதைகளையோ ஷெல்லியையோ குவாண்டம் பிஸிக்ஸோ படிக்க வேண்டியதில்லை. படிப்பறிவில்லாத ஆனால் இயற்கையை நெருக்கமாக உணரும் அந்தரங்கமான வாய்ப்பு கிடைக்கப்பெற்ற எளிய கிராமத்து விவசாயிகள் சிலரை கூர்மையாக கவனித்தாலே கூடப்போதும். இதைப்போன்ற அந்தரங்கமான ஒரு நுண்ணிய புரிதலை அவர்கள் அடைந்திருப்பதைக்காணலாம்.
பிரபஞ்சத்தின் தோற்றத்தைப்பற்றி உரையாடிக்கொண்டிருக்கையில் இதைப்பற்றி ஒரு நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். முற்போக்கு என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் என் விஞ்ஞான நண்பர் இதை கேலிசெய்து ஒரு நீண்ட கட்டுரையே எழுதிவிட்டார். அதாவது ’இயற்கை எவ்வளவு பிரம்மாண்டமானது’ என்று நினைத்து வியப்பவர்கள் அறிவியலை சரியாகப் படிக்காதவர்கள் என்று நிறுவி!
”By the deep sea, and music in its roar: I love not man the less, but Nature more” என்று பைரன் சொன்னது பம்மாத்தோ உளறலோ முட்டாள்தனமோ அல்ல. உணர்ந்துபார்க்க வாய்ப்பு கிட்டாதவர்கள் அப்படிச்சொல்லக்கூடும். கிரிஸ் மெக்காண்ட்லஸ் பற்றியும் இப்படித்தான் சொல்லவேண்டும். மாபெரும் இயற்கையின் முன் தான் ஒரு சிறு அற்பத்துளி மட்டும்தான் என்று உணரும் தருணம் வாழ்வின் மிக முக்கியமான நிமிடம். உண்மையான அறிதலின் ஆரம்பம். கடவுள் நம்பிக்கை சார்ந்ததோ சாமியையோ பற்றியதல்ல. நான் சொல்வது முற்றிலும் வேறானது என்பதை வலியுறுத்துவதற்காக அறிவியலிலும் இலக்கியத்திலும் நெடுங்கால தேடல் கொண்டவன் அதே சமயம் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்ற உண்மையையும் குறிப்பிட வேண்டும்.
இரண்டாவதாக. ஒரு நாட்டுக்கு சுற்றுலாப்பயணியாக போவதும் குடியேறியாக நிரந்தரமாக வாழச்செல்வதும் ஒன்றல்ல. சுற்றுலா செல்கையில் தான் ஒரு அந்நியன் என்ற நிதர்சனத்தில் ஆழ்மனம் அந்நிய வாழ்க்கையை எப்போதும் விலக்கியே வைத்துப்பார்க்கிறது. இங்க இப்படி இருக்கு ஆனா எங்க ஊர்ல அப்படி இருக்கும் என்று ‘self-referential’ ஆக அடிக்கடி ஒப்பிட்டுப்பார்த்து தன்னை சூழலில் இருந்து முற்றிலுமாக விலக்கி வைத்துக்கொள்கிறது. குடியேறிகள் அயல் ஊரை தன் ஊராக ஏற்றுக்கொள்ள முயன்றாலும் அது மேல்மனதின் அளவில்தான். ஆழ்மனம் நெடிதும் அயலூரை அயல் சமூகத்தை சொந்த ஊருடன் சமூகத்துடன் ஒப்பிட்டு ஒவ்வொரு கோணத்திலும் தொடர்ந்து விசாரணை செய்தபடியேதான் இருக்கிறது. ஏதோ ஒரு சமயத்தில் குழப்பத்திற்கும் தத்தளிப்புக்கு ஆட்படுத்துகிறது. முதல் குடியேறிகள் எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. வெளிநாட்டில் நாற்பது வருடம் வாழ்ந்து விட்டவர் கூட ஏதோ ஒரு நொடியில் தத்தளித்து நிற்பதை கவனித்திருக்கிறேன். பெரிய மரத்தைப்போல வளர்ந்துவிட்ட மனிதன் பிடுங்கிக்கொண்டுபோய் இன்னொரு அயலான மண்ணில் வேரூன்றிக்கொள்வது எளிதா என்ன.
அயர்லாந்தின் அரச குடும்பத்தில் பிறந்து தீவனமில்லாமல் மாடுகள் சாகும் பஞ்சம் நிறைந்த ஊரை விட்டு அயர்லாந்தை ஆளும் இங்கிலாந்தின் சிப்பாயாக ஆனவன். அதன் காரணமாகவே அப்பாவுக்கு தன் சொந்த குடும்பத்துக்கும் நாட்டுக்கும் துரோகம் இழைத்தவனாக உணர்ந்தபடியேதான் இருக்கிறான். இங்கிலாந்தின் சிப்பாயாக பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் செல்கிறான். அவன் நாடு எது? சொந்த மண்ணான அயர்லாந்தா சார்ந்திருக்கும் இங்கிலாந்தா அல்லது கண்முன் உயிருடன் விரிந்து அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவா? தான் ஒரு பயணியா குடியேறியா என்பதை எய்டனாலும் அறியமுடிவதில்லை.
இந்த தத்தளிப்பின் உக்கிரம்தான் எய்டனை தன்னை மானுடத்தின் ஒரு துளியாக உணரவைக்கிறது, அவனின் மனிதநேயத்தை பூதாகரமாக்குகிறது. இன்னும் உரக்க அவனை நீதியை நோக்கி அலற வைக்கிறது. இங்கிலாந்தின் சிப்பாய்கள் இந்தியாவிலும் பர்மாவிலும் ஆப்ரிக்காவிலும் வேலை செய்கிறார்கள். எல்லாருக்கும் ஒரே சீருடைதான். ஆனால் அவர்கள் வேறானவர்கள். மேலும் எய்டன் தன் படிப்பால் தன்னையே வேறாக்கிக்கொண்டவன். இதுதான் எய்டனை மெக்கன்ஸியிடமிருந்தும் ஏன் ஆன்ரூவிடமிருந்தும் வேறாக்குகிறது.
இங்கிலாந்தின் காலனியாதிக்க கால வாழ்க்கை பற்றி உலக மொழிகளில் வெளிவந்த முக்கியமான ஒரு படைப்பு என்று வெள்ளையானை நாவலை தைரியமாகச் சொல்வேன்.
நன்றி,
வேணு