[ 1]
மலையாள எழுத்தாளர் எஸ்.கெ.பொற்றேக்காட்டின் முதன்மையான நாவல்களில் ஒன்று விஷக்கன்னி. தமிழிலும் வந்துள்ளது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட்டம் கூட்டமாக கேரள மலைப்பகுதிகளுக்கு குடியேறி காடழித்து நாடாக்கிய மக்களின் துயரங்களைச் சொல்லும் நாவல் அது. விஷக்கன்னி என்பது மேற்குமலைக்காடுதான். முதல்பார்வைக்கு பேரழகி. அணுக அணுக விஷம் கொட்டுபவள். அன்னை, ஆனால் கொலைவெறிகொண்டவள்.
விஷக்கன்னியின் மைந்தர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? இன்று கேரளமலைப்பகுதிகளின் ஆரம்பகால குடியேறிகளில் ஏழைகள் அனேகமாக கிடையாது. நிலத்தின் விலை அவர்களை செல்வந்தர்களாக ஆக்கியிருக்கிறது. சென்ற நூற்றாண்டில் அங்கு மலேரியாவில் செத்தவர்கள், உலகை அறியும் முன்னரே வயிற்றுப்போக்கில் இறந்த குழந்தைகள், வெள்ளத்திலும் மலையிடிவிலும் அழிந்தவர்கள் அனைவரும் இன்று அவர்களின் தலைமுறையினருக்கு உணவாக, உடையாக, கதகதப்பான வீடாக மாறியிருக்கிறார்கள். ஒருவகையில் அதிலொரு இயற்கைநியாயம் இருக்கத்தான் செய்கிறது
இதுவல்ல இலங்கையிலும்,மலேசியாவிலும் மற்றும் பல அன்னியர் தோட்டங்களில் மரணமடைந்த தமிழ்மக்களின் விதி. அவர்களும் விஷகன்னியின் பலிகள். அவர்களின் பலி வீணாகியது. அவர்களுடைய தலைமுறைகளும் அதே இருளுக்குள் பிறந்துவிழுந்து வாழ விதிக்கப்பட்டார்கள். வரலாற்றின் மிகப்பெரிய சோகமே வீண்பலிகள்தான். நாம் எங்கோ ஓர் அந்தரவெளியில் துயரம் மிக்க கண்கள் கொண்ட அந்த முன்னோரைக் காணநேர்ந்தால் சொல்லிழந்து திகைத்துவிடுவோம்.
அன்னிய மண்ணில் அர்த்தமில்லாது அழியும் தலைமுறைகளின் உழைப்பை,கண்ணீரை, எதிர்பார்ப்பை, கனவைச் சொல்லக்கூடிய சிறிய நாவல் தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல்.நம்மிடமிருந்து விலகிச்சென்ற ஒரு தலைமுறையினரின் கதை. நாம் நம் குருதியால் அறிந்துகொள்ளவேண்டிய மக்களின் வாழ்க்கை
[ 2 ]
குடைநிழல் பல்வேறு சிந்தனைகளை எழுப்பும் தலைப்பு. தொல்காப்பியத்தின் இலக்கணப்படி புறத்தில் பாடாண் திணைக்குள் வரும் துறைகளில் ஒன்று குடைமங்கலம். அரசனின் வெண்கொற்றக்குடை அளிக்கும் பாதுகாப்பையும், வளத்தையும் புலவர்கள் பாடி ஏத்துவது. ‘நடை மிகுந்து ஏத்திய குடைநிழல் மரபு’ என்று தொல்காப்பியம் சொல்கிறது. உணர்ச்சிமீதூற மன்னனின் செங்கோல்திறத்தை வாழ்த்துவது.
அரசாட்சியை தண்குடைநிழலாக உருவகித்து வாழ்ந்து வந்த ஈராயிரம் வருடப் பண்பாடுள்ள ஒரு சமூகத்தின் பார்வையில் சொல்லப்படும் அரசியல்நாவலின் தலைப்பு குடைநிழல் என்றிருப்பது அளிக்கும் கற்பனைச் சாத்தியங்கள் ஏராளமானவை. அந்த தலைப்பே அத்தனை ஏக்கங்களையும் விமர்சனங்களையும் சொல்லிவிட்டது என்று தோன்றுகிறது.
தெளிவத்தை ஜோசப்பின் கதைகள் காட்டும் வாழ்க்கையின் இரண்டாவது கட்டம் என குடைநிழல் நாவலைச் சொல்லலாம். அவரது ஆரம்பகாலக் கதைகள் அனைத்தும் தேயிலைத்தோட்டக் கூலிகளாக வாழச்சென்ற மக்கள் அங்கே உழைத்து அழிவதன் சித்திரங்களை அளிப்பவை. வெளியே ஓர் உலகம் உண்டென்றே அறியாதவர்கள். வெள்ளை எஜமான், கீழே கிளாக்கன் என்னும் குமாஸ்தா, கீழே கங்காணி என்னும் மேஸ்திரி அதற்கும் கீழே வாழும் வாழ்க்கையில் மீட்பு என்பது கங்காணியின் மெல்லிய கருணை மட்டுமே.
இந்த வாழ்க்கையில் இருந்து எழுபதுகளில் மெல்ல மெல்ல சிலர் வெளியேற முடிந்தது. பள்ளியிறுதி வரை படித்தவர்கள் சிறிய வேலைகளில் அமர்ந்து கொழும்பு போன்ற நகரங்களுக்கு வந்தனர். அங்கே மலையகத் தமிழ்மக்களின் மிகச்சிறிய சமூகம் ஒன்று உருவாகியது. அவர்கள் அன்றைய இலங்கையின் அரசியல், பொருளியல் பேராதிக்கங்களுக்கு எதிராக போராடி தங்கள் வாழ்க்கையைத் தேடிக்கொள்ளவேண்டியிருந்தது. குடைநிழல் அந்த வாழ்க்கைப்பின்னணி கொண்ட நாவல்
இப்படிச் சொல்லலாம். தோட்டத்துவாழ்க்கை என்பது முட்டைக்குள் இருப்பது. அதன் இறுக்கத்தில் மூச்சுத்திணறி முரண்டுவதன் உயிர்வேதனை அக்கதைகளில் உள்ளது.முட்டையோட்டை உடைத்து வெட்டவெளிக்கு வந்து வாழ்க்கையை தேடிக்கொள்வதன் இன்னும் பெரிய வதையை குடைநிழல் காட்டுகிறது.
கடலாமைகளின் வாழ்க்கையைப்பற்றி அட்டன்பரோவின் ஆவணப்படம் ஒன்றை நினைவுகூர்கிறேன். கடலாமைகள் நூற்றுக்கணக்கில் பொரித்து கடலுக்கு ஓடுகின்றன. மனிதர்கள் நான்கே எட்டில் கடந்துவிடக்கூடிய தூரம். ஆனால் மேலே நூற்றுக்கணக்கான பறவைகள். பல்லாயிரம் ஆமைக்குஞ்சுகள் கிளம்புகின்றன. மிகச்சிலவே கடலைச் சென்று சேர்கின்றன. அவை சென்று கடலை அடைந்ததும் தெரிந்துகொள்கின்றன, கடலுக்குள் அவற்றை எதிர்பார்த்து பல்லாயிரம் மீன்கள் காத்து நின்றிருப்பதை. அலகுகளுக்கும் வாய்க்கும் சிக்காமல் தப்பி அவற்றில் விரல்விட்டு எண்ணத்தக்க சில மட்டுமே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றன
ஒட்டுமொத்தமாக இது ஆதிக்கத்தின் சித்திரத்தை எடுத்துக்காட்டக்கூடிய நாவல். தோட்டக்காடுகளில் உள்ள முதலாளித்துவ ஆதிக்கம். பிழைக்கவந்த இடத்திலுள்ள சிங்களப்பேரினவாத அரசாங்கத்தின் ஆதிக்கம். கூடவே அந்த அரசுடன் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் ஈழத்தமிழர்களின் இனவாதத்தின் ஆதிக்கம். மலையகத்தமிழர்களுக்கு இவையெல்லாமே ஆதிக்கங்கள்தான். ஆமைக்குஞ்சுகளிடம் பறவைகளா மீன்களா எவை உங்களுக்கு பிடிக்காதவை என்று கேட்கமுடியுமா என்ன? ஆமைக்குஞ்சுகள் மீன்களை தங்கள் இனமாகக் காணவும்கூடும், ஒரே கடலில் நீந்தக்கூடியவை என்பதனால்.
நாம் கட்டி உருவாக்க நினைக்கும் எளிமையான எதிரீடுகள், அவற்றின் விளைவான கோட்பாடுகளுக்கு எதிராகவே எப்போதும் எந்த இலக்கியப்படைப்பும் நிலைகொள்கிறது. ‘சாம்பல்நிறப்பகுதி’ எனப்படும் நடுப்பகுதியையே அவை கவனத்தில் கொள்கின்றன. கோஷங்களுக்குப் பதிலாக ஐயங்களை, மறுப்புகளையே அவை முன்வைக்கின்றன. குடைநிழல் நாவலை ஒரு முக்கியமான கலைப்படைப்பாக ஆக்குவது கலைஞனுக்கே உரிய இந்தச் சுதந்திர நோக்குதான்
இலங்கையின் இனப்பிரச்சினை உச்சம் கொள்ள ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவல் இது. இத்தகைய பூசல்களின் காலகட்டம் என்பது எப்போதுமே இருமைகள் உச்சகட்டமாகப் புனையப்படும் வரலாற்றுத்தருணமாக அமையும். அவர்கள் நாங்கள் என்ற அடையாளம். நீ எங்கே நிற்கிறாய் என்ற வினா. அந்த ஈரடித்தலுக்குள் நுழையாமல் மிக எளிய தனிமனிதனாக மட்டுமே நின்றுகொண்டு வரலாற்றை எதிர்கொள்கிறார் தெளிவத்தை. அவ்வரலாற்றின் ஓர் அலை அடித்து ஓய்ந்தபின்னரும் தன் கேள்விகள் மழுங்காமல் அப்படியே நின்றிருக்கிறது குடைநிழல்.
குடைநிழல் ஆதிக்கத்தின் கதை என்றேன். இந்நாவலில் மிகையே இல்லாமல் சித்தரிக்கப்பட்டிருக்கும் அரசுவன்முறை ஆதிக்கத்தை நாவலின் அனைத்துப்பக்கங்களிலும் காட்டிக்கொண்டே இருக்கிறது. கூடவே யாழ்ப்பாணத்தமிழர்களின் மேட்டிமைநோக்கும் ஒதுக்கும்பார்வையும் ஆதிக்கமும் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கும் அப்பால் சென்று இந்த மலையகத்தமிழர்களுக்குள்ளேயே இருக்கக்கூடிய ஆதிக்கங்களைச் சொல்லும் நாவல் குடும்பத்துக்குள் புகுந்து ஆண்களின் வல்லாதிக்கக் களமாக அவை நிகழ்வதைச் சுட்டிக்காட்டுகிறது. மலையகத்தமிழ்ப்பெண் கடைசியாக அனைத்து ஆதிக்கங்களின் சுமையையும் ஏற்று நிற்கிறாள். கோபுரம் தாங்கி சப்பி நிற்கும் ஆமைச்சிலைகளை நம் கோயில்களில் காணலாம், அதைப்போல.
இந்நாவலின் ஆசிரியரும் சரி அவர் குரலாக ஒலிக்கும் மையக்கதாபாத்திரமும் சரி புரட்சியாளர்கள் அல்ல. சிந்தனையாளர்களும் அல்ல. வெறும் எளிய மனிதர்கள். ஆனால் நீதியுணர்ச்சியுடன் உரிமைவேட்கையுடன் ஆதிக்கத்துக்கு எதிராக நிலைகொள்ளும் எளிய மனிதனின் உறுதியை நாவலெங்கும் காணமுடிகிறது. நாவலை நான் முதன்மையான படைப்பாகக் கருதுவது இதனால்தான்
[ 3 ]
குடைநிழலின் தொடக்கமே உத்வேகத்துடன் உள்ளது. நள்ளிரவில் நகரின் அனைத்துக் கதவுகளும் தட்டப்படுகின்றன. அது ஒரு பூகம்பம் என மறுநாள் செய்திகள் சொல்கின்றன. கதைசொல்லியின் வீட்டுக்கதவைத் தட்டி உள்ளே நுழைபவர்கள் காவலர்கள். புலிகளுக்கான தேடுதல்வேட்டை. அவர்களுக்கு எல்லாத் தமிழர்களும் புலிகள்தான். அவர்களுக்கு எந்தவிதமான சட்டபூர்வப் பாதுகாப்பும் இல்லை.அந்த சோதனையின் அவமதிப்பு அச்சம் வழியாக ஆரம்பமாகும் நாவல் அக்காலகட்டத்தின் பீதிபடிந்த சித்திரத்தை மிக வெற்றிகரமாக உருவாக்கிவிடுகிறது.
மீன்விரும்பிகளான கதைசொல்லியின் குடும்பத்தில் குழந்தைகள் மீன்சாப்பிடுவதை நிறுத்திவிட்டன. காரணம் கொன்று கடலில் எறியப்பட்ட சடலங்களை அம்மீன்கள் உண்ணும் என்பதே. தன் மக்களை தானே உண்ணுவதுதான் அம்மீன்களை உண்ணுவது என ஆழ்மனம் தயங்குகிறது. அந்தச்சூழலின் மனக்கொந்தளிப்பை ஒரு வாசகன் இந்தத் தகவல் வழியாகவே சென்று சேர்ந்துவிடமுடியும். மீன்வாங்கிக் கழுவும்போது குடலில் இருந்து பிதுங்கிவருவது ஒரு மனித விரல்..தெளிவத்தையின் குடைநிழலின் அழகியலே இந்த மிதமான பயங்கரச்சித்தரிப்புதான்
இந்நாவலின் அழகியலே இதன் நேரடியான யதார்த்தவாதம் சார்ந்ததுதான். ஒரு டீக்கடையில் பெரியவர் தன் வாழ்க்கையைப்பேசுவதைக்கேட்பதுபோல. கற்பனை இல்லை. கொள்கைகளின் திரிபுகள் இல்லை. எது நிகழ்கிறதோ அது அப்படியே பதிவாகும் அந்த அப்பட்டத்தன்மையின் அயரவைக்கும் தீவிரமே இதைக் கலையாக்குகிறது. ஆம், கலைஞனின் தேர்வு இந்த சித்தரிப்புக்குள் உண்டு . ஆனால் அங்கே கலைஞன் தன்னை சாமானியனில் சாமானியனாக மட்டுமே முன்வைக்கிறான்
அந்த யதார்த்தவாதம் உருவாக்கும் சித்திரங்கள் நாவலில் வந்தபடியே உள்ளன. கதவின் கொண்டியைத் தூக்குவதற்காக இரும்புக்கம்பியைக் கையில் எடுத்துக்கொண்டு கதவைத்திறந்த குற்றத்துக்காக தீவிரவாத முத்திரைபெறுவதும் சரி, நல்ல தமிழ்ப்பள்ளி இல்லை என்பதற்காக பையனை சிங்களப்பள்ளியில் சேர்த்து அவன் துட்டகைமுனு உலகின் சிறந்த மாமன்னன் என நினைக்க நேர்வதும் சரி நிஜவாழ்க்கையில் இயல்பாக நிகழும் அங்கதத் தருணங்கள்.மறுபக்கம் தமிழ்ப்பள்ளியில் பிள்ளையை அனுப்பினால் தமிழ்ப்பெருமையை மட்டுமே கற்றுக்கொண்டு வந்து நிற்பது அங்கதத்தின் உச்சம்.
யாழ்ப்பாணத்தானாகவும் சிங்களனாகவும் மாறிவிடமுயலும் மலையகத்தமிழனின் அவலம் ஒரு கணம் வரலாற்றை நினைத்தே புன்னகைசெய்யவைக்கிறது. எதையும் உரக்கச் சொல்லாமல், அழுத்தாமல் மிதமாக எளிமையாகச் சொல்லிச்செல்லும் இந்தக்கலை தெளிவத்தையை அசோகமித்திரனுக்கு அண்மையானவராக ஆக்குகிறது.
பிள்ளையை நல்ல பள்ளியில் சேர்ப்பதற்காக ஒரு வீடுதேடுவது யதார்த்தமாகப் பல பக்கங்களுக்குச் சொல்லப்படுகிறது. அதனூடாகவே அடையாளப்பிரச்சினையும் அரசுடனான மோதலும் சிங்களர்களுடனான உறவின் மோசடிகளும் எல்ல்லாம் வெளிப்படுகின்றன. கூடவே அது ஓரு குடைநிழல் தேடலென்பதும் நம்மை வந்தடைகிறது. ஒரு நல்ல வாசகன் இலங்கை இனப்பிரச்சினையின் எல்லா உள்ளோட்டங்களையும் இதில் சிறிய குறிப்புகளாக வாசிக்க முடியும் [’நீங்கள் தமிழா?’ ’இல்லை முஸ்லீம்’ ]
இத்தனை அடக்குமுறைக்கு அப்பாலும் சாமானியன் கண்டடையும் அதிகாரம் ஒன்றுண்டு. அதைச் சுட்டிக்காட்டி முடிகிறது நாவல். “குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊரும் இவர்களுக்கு நடை மெலிந்து நலிவுறும் எங்கள் நிலை எங்கே தெரியப் போகிறது. அதனால்தான் சொல்கின்றோம் குடையைப் பிடுங்க வேண்டும் என்று
~குடையை மட்டுமல்ல குஞ்சரத்தையும் சேர்த்துஎன்கிறது மனம்”
[எழுத்து பிரசுரமாக வெளிவரவிருக்கும் தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் நாவலுக்கான முன்னுரை]