நீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய்- வெள்ளையானை

ஆசிரியருக்கு,

கடந்த பத்தாண்டுகளில் நான் உலகில் கண்ட மேலான நடத்தை என்பது ஆஸ்ட்ரேலியா பாராளுமன்றம் தமது முன்னோர்கள் பூர்வகுடிகளுக்கு இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்டதுதான். வெள்ளை யானை நாவலும் அதை செய்யத்தான் மன்றாடுகிறது. முன்பிருந்த சக இந்தியர்களிடமும் , ஆங்கிலேயர்களிடமும் ஒரு படைப்பாளியாக இந்நாவல் மூலம் ஒரு சமூக மனசாட்சியாக மன்னிப்புக் கூறியிருக்கிறீர்கள் , அதைப் படித்ததனால் நானும் ஒரு சிறு கடமையை ஆற்றியதாக உணர்கிறேன்.

கடந்த 5 நாட்கள் நான் வெள்ளையானை உடனேயே வாழ்தேன் , சாலையில் பயணிக்கும் போதும் , பணியின் போதும் , உறங்கும்போதும் . ஒருவகையில் இது என்னை “புறப்பாட்டில்” இருந்து மீட்டிருக்கிறது. எய்த அம்பு போலச் செல்லும் ஓட்டம் , கண்ணால் காண்பது போல உணரச் செய்யும் உவமைகளும் படிமங்களும் , மனிதர்களின் மன உலகமும் , நீதி உணர்வையும் மானுட சமூகத்தையும் அங்கீகரிக்கும் குரலும் என இவை இந்நாவலை அதன் 400 பக்கங்ககளை விட பெரிதாக்குகிறது.

முதலில் எய்டன் கப்பலில் பயணிக்கும் போதே , அந்த நீலக் கடலை முதலில் காண்பது [கம்பளிப் போர்வையில் கண்ணாடித் துருவல் போல மழைத் துளி] என நாவல் துல்லியம் பெறுகிறது. இதில் உள்ள காட்சிச் சித்தரிப்பு அபாரம் . குறிப்பாக அந்த ஐஸ் ஹவுசை முதலில் பார்க்கும் போது சன்னல் வழி ஒளி வழிவது , பனியில் பரவுவது என , ஒரு நேரடிக் காட்சி அனுபவம்.இது போன்ற சிறுசிறு கண்ணிகளாக கோர்த்து அதன் உச்சியில் ஒரு பட்டயம் இந்த பஞ்ச சித்தரிப்பு .

எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு , நாம் சிற்பங்கள் நிறைந்த ஒரு கோயிலைக் காணப் போகும் போது , பல சிற்பங்களுக்கிடையில் பேரழகுடன் உள்ள ஒரு சிற்பத்தை பார்க்கும் போது, பிற சிற்பங்களைப் பார்த்த மனம் அயற்சியுடன் இருக்கும் ஆகவே அந்தப் பேரழகான சிற்பத்தை அதன் உச்ச அளவில் ரசிக்க முடியாது . ஆகவே இந்தப் பெரும் சிற்பத்தை மட்டும் தனியே பார்த்தபின் திரும்பியிருந்தால் இன்னமும் சிறப்பான அனுபவமாக இருக்குமோ என. அதே போலத்தான் ஓவியங்களின் வரிசையும் , இயற்கையில் பூக்களின் வரிசையும் , புல்வெளிகளுக்கு இடையில் உள்ள காடும்.

இது ஒரு சந்தேகம் தான் . இப்போது விலகியது அது . ஆம் , நமது கண் நுட்பங்களுக்கு பழகுகிறது , அவை மெல்ல மெல்ல அதற்கான மனநிலையில் நம்மை ஆழ்த்துகிறது ஆகவே அந்தப் பெரிய அனுபவம் இன்னும் பெரிதாகுகிறது. போதை ஏறுகிறது . இது தனி தரிசனத்தை விட சற்று செறிவானது. சிறு சிறு பொருட்களின் , ஆனுபவத்தின் சித்தரிப்புகளின் பின்பு வருவதனால் (பீடன் வண்டி, குதிரைகள், மரினா, பங்கா, மரப் பொருட்கள் ) அந்தப் பஞ்ச சித்தரிப்பு பேருருவம் கொண்ட பேயாகிறது. குறிப்பாக அந்தப் பெண் விசிறி எறியும் குழந்தை. இது போன்ற தாய்மையை இது போன்ற மீட்பில்லா நெருக்கடியில் மட்டுமே நாம் காண முடியும், ஆனால் எப்போதும் மனிதனுக்குள் அதன் சாத்தியம் உறைந்து உறங்குகிறது.

இதன் படிமங்களும், உவமைகளும் மன ஓட்டங்களும் இந்நாவலை உயிருடன் நம்மிடம் உரையாடச் செய்கிறது. மெரினாவின் அலைகள், வெப்பம் மற்றும் எய்டன் ட்யூகைக் கண்ட பின் திரும்பும் போது அக்கதவை அவனை வெளியேற்றிய சிவந்த குதம் என்பது போல என . ஐஸ் ஹவ்சில் பேரம் நடக்கும் போது எண்ணங்களை முட்டிமோதும் பன்றிக்குட்டிகளாக, எய்டன் தாக்குதல் ஆணை சைகை செய்தபின் மனதை இருபாதியாக ஆக்கி இரண்டும் இன்னொன்றைப் பார்துக்கொண்டிருப்பது என.

இந்நாவலின் இரண்டு உச்சங்கள் என்றால் ஒன்று அந்த ஐஸ் ஹவுஸ் வேலை நிறுத்தம் உருவாகும் நிகழ்வு , இரண்டாவது காத்தவராயன் ஐஸ் ஹவுஸ் தடியடியில் குதிரைகளும் முரஹரி ஐயங்காரையும் ஒரு விஷ்ணு கோயில் உயிர்ப்பித்து வந்ததாகக் கண்டதை சொல்லுவது, பின் பௌத்தனாவது. போர்க்களத்தில் ஒருவவன் அணிசேர்வதினால் அடையும் போதையை தொழிலாளர்கள் அறிமுகம் செய்து கொள்கிறார்கள் அது சித்தாந்தம் , தன்மானம் , உரிமை என பிற எதைவிடவும் வலுவானது. அதுவே ஒரு போராட்டத்தின் இயக்க சக்தி , மேலும் ஒருமுறை ருசி கண்டால் போதும், பின்பு தானாக சக்தி பெறும். தடியடியை நம் கண்முன்னே கண்டாலும், காத்தவராயன் சொல்லும் வரை அதை அவ்வாறு என்னால் காண இயலவில்லை. ஒரு உயர்ந்த படைப்பு அங்கு தான் வெற்றி பெறுகிறது. காட்டுவது , பின் நாம் காணாததைக் காட்டுவது.

இந்நாவலின் ஓட்டத்தில் அப்படியானால் இதற்கு என்ன , இதற்கு என்ன என சில சமயங்களில் பத்திகளைத் தாவியும் படித்து, பின் மீண்டு வந்து மீளப் படித்தேன். எய்டன் பார்மரிடம் இறுதியாகப் பேசும்போது, அப்படி என்றால் முதலில் அவன் பார்மரை மிதித்தது ஏன் என மனதிற்குள் கேள்வி எழுந்த போது, கேள்வி எழும் அதே கணத்தில் எய்டன் சொல்கிறான் “உங்களிடம் எனக்கொரு அடி பாக்கி இருக்கிறது அதை எப்போது வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் ”

நீதியுணர்வு கொண்ட எய்டன் தடியடியை வாய்மொழி ஆணையாக சொல்லாமல் “சைகை” செய்தது எப்படி எனக் கேள்வி எழுந்தது. அவனில் இயல்பாக ஊறியிருக்கும் ஷெல்லிக்கும், அதுகாறும் அவனை ஒரு உலோகமாக்கிய பிரிட்டிஷ் நிர்வாக சக்திக்கும் இடையே நிகழும் போராட்டம் .சரியாக அங்கு விழுந்தது அந்த “சைகை”, இது கூர்மையான ஒரு படைப்பம்சம். அந்நேரத்தில் அயர்லாந்தில் அவன் பயிற்சிக்குப் பின் விடுப்பில் இறுதியாக வீட்டுக்குத் திரும்பும்போது அன்னியமாக அவனும் பிறரும் உணர்ந்ததை நினைவூட்டியது. ஷெல்லியை அவனுள் இருக்கும் அகங்காரமும், பிரிட்டிஷ் பயிற்சியும் சூட்சுமமாக வென்றது.

எய்டன் இயேசுவின் ரத்தத்தை பனிக்கட்டியில் தேக்கி மதுவில் கலந்து இறுதியில் குடிப்பதன் மூலம் தனது நீதிஉஉணர்வை சற்று ஆற்றுப் படுத்துகிறான், வாசகன் சஞ்சலத்துடன் எஞ்சி நிற்கிறான்.

நீதியுணர்வு ஒரு ஆட்கொல்லி நோய்.

கிருஷ்ணன் .

முந்தைய கட்டுரைடெம்ப்ளேட்டுகள்
அடுத்த கட்டுரைகனிதல்