இரு பொருட்கள்

வணக்கம்

உங்கள் தளத்தில் வினவைப் பற்றி பார்த்துவிட்டு, பின் வினவில் பவா செல்லதுரை பற்றிய பதிவை படித்துவிட்டு, அவர் யார் என்று இணையத்தில் தேடி பின் அவரது வலைதளத்திற்கு சென்று, அவரது பதிவுகளை ஆதியோடந்தமாக பார்த்து அதில் சுரத்குமாரை பற்றி படித்தபின்பு, அவரை பற்றி இணையத்தில் தேட அதில் நீங்கள் அவரை பற்றிய எழுதிய பதிவும் வந்து என்னை புறப்பட்ட இடத்திற்கே திரும்ப கொண்டு வந்தது.

உங்களது அந்த பதிவைப் படித்தபின்பு வழக்கம் போல் குழப்பம்.

” தான் கனிந்தவர்கள் பிறருக்கு அக்கனிவை எப்பொருள் வழியாகவும் கொடுக்க முடியும்” இது சுரத்குமார் ஆப்பிள் உங்களுக்கு கொடுத்ததை பற்றியது

“ஒரு குரு அடைந்துள்ள ஆற்றல் என்பது அவரது ஞானமாகவே இருக்கமுடியும். அந்த ஞானம் அவரது அகத்தில் ஒரு நுண்ணுணர்வாக இருக்கும். அவர் சென்ற ஒரு மன ஆழம் அது. அவர் அடைந்த ஒரு பார்வை அது. அதை எப்படி பாசிமணிகளில் ஏற்றி அவர் வினியோகம் செய்ய முடியும்?” இது நித்யானந்தா-ரஞ்சிதா பரபரப்பில் எழுதப்பட்ட பதிவிலிருந்து.

மொழிக்கு ஒரு limitation இருக்கிறது என்பது எனக்குப் புரிகிறது. அதிலும் ஒருவர் அடைந்த மன உணர்வுகளை எழுத்தில் கொண்டுவருவது என்பது சற்று சிரமமானது. பிறவியிலேயே கண்ணில்லாத ஒருவனுக்கு வர்ணத்தை பற்றி எப்படி மொழியின் மூலம் விளங்க வைக்க முடியும்?

அதனால் இந்த ஆப்பிள் Vs. பாசிமணி குழப்பதை போக்க உங்கள் உதவியை எதிர்பார்க்கும்,

GSMஸ்வாமி

அன்புள்ள ஸ்வாமி,

வெள்ளையானையில் ஓர் இடம் வருகிறது. பட்டினியில்செத்துக்கொண்டிருக்கும் தலித்குடியிருப்புக்குச் செல்கிறான் ஏய்டன் என்ற வெள்ளையன். அவன் அங்கிருந்து கிளம்புகையில் ஒரு மூதாட்டி ஒரு நுங்கை அவனுக்குக் கொடுக்கிறாள். ‘எங்கள் புண்ணியம்’ என்கிறாள். அந்த நுங்கு வழியாக ஏய்டன் அடையவேண்டிய அனைத்தையும் அடைந்துவிட்டான்

பிரசாதம் என்பது அதுதான். நம் மரபில் நெடுங்காலமாகவே அந்தக் கருத்து இருந்துவருகிறதல்லவா? ஒருபொருள் சொல்லப்படாத எவ்வளவோ விஷயங்களின் குறியீடாக அமைய முடியும். அத்தனை உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் அது நமக்கு உணர்த்தமுடியும். கயையின் ஒரு போதிமர இலை ஒருவனை மெய்ஞானம்நோக்கிக் கொண்டு செல்லமுடியும்.

ஆனால் ஒருவர் அடைந்த ‘யோகசித்தி’யை ஒரு பொருளில் அடக்கி அதை வினியோகிக்க முடியாது. அதற்கும் இதற்கும் பெரும் வேறுபாடுண்டு. அப்படிச் செய்யமுடியும் என்றால் மந்திரித்த தகடுகள், ஊதி மந்திரமேற்றப்பட்ட தண்ணீர், தாயத்துக்கள் எல்லாவற்றையும் நம்பவேண்டியிருக்கும். நான் அதையெல்லாம் ஏற்பவனல்ல

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். நான் வைக்கம் முகமது பஷீரை பார்க்கச்சென்றேன், என் இருபத்திரண்டு வயதில். நான் கிளம்பும்போது அவர் அன்புடன் என்னை ஆசீர்வதித்து ஒரு பென்சில் தந்தார். நான் அவரது பேரன்பை அதில் உணர்ந்தேன். அது என்னை அவரிடம் நெருங்கச்செய்தது. பஷீரின் மொத்தப்படைப்புகளும் அளித்த அனுபவத்துக்கும் அவரது ஆளுமை அளித்த அனுபவத்துக்கும் அது என்னுள் ஒரு குறியீடாக அமைந்தது.

ஆனால் பஷீர் எட்டாண்டுக்காலம் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்து அடைந்த அனுபவஞானத்தை அந்தப்பென்சிலில் அடக்கி என்னிடம் கொடுக்கமுடியுமா? அதை வாங்கியதும் நானும் இந்தியாவில் அலைந்து திரிந்து பெறவேண்டிய ஞானத்தைப் பெற்றுக்கொள்ளமுடியுமா?

இந்தவேறுபாடுதான்

ஜெ

முந்தைய கட்டுரைவிழா
அடுத்த கட்டுரைஇளங்கனவின் வண்ணங்களில்…