அன்புள்ள ஜெ,
பெரியாரை நீங்கள் ஈவேரா என்று எழுதுவதற்கான விளக்கத்தை எழுதியிருந்தீர்கள். அது எனக்கு நிறைவளிப்பதாக இல்லை. ஒரு வீம்பாகவே அதை நான் நினைக்கிறேன். என்னதான் சொன்னாலும் இன்னொருவரின் பெயரை நீங்கள் பிழைதிருத்தக்கூடாதென்று படுகிறது
அருணாச்சலம்
அன்புள்ள அருணாச்சலம்,
என் விளக்கத்தை எழுதிவிட்டேன்.
இரு விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறேன். கவியோகி சுத்தானந்தபாரதியாரின் சுயசரிதை ‘சோதனையும் சாதனையும்’ [சுத்தானந்த நூலகம் திருவான்மியூர் வெளியீடு] .ஈவேரா அவர்களின் நெருக்கமான நண்பர் அவர். அந்நூலின் 248 ஆம் பக்கம் 55 ஆவது அத்தியாயம் ‘பெரியார் நட்புக்கு உரியார்’. அதில் இவ்வாறு எழுதுகிறார்.
‘நாயக்கர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் வேங்கட்டப்ப நாய்க்கரும் சின்னத்தாயாரம்மாளும் கதவில்லாக்குடிலில் கஷ்டஜீவனம் செய்தனர். கூலிவேலை கல்லுடைத்தல் தட்டுக்கடை செங்கல்வண்டி துவரை உடைத்தல் முதலிய வேலைகளைச் செய்து மண்டிக்கடை வைத்து படிப்படியாகப் பணக்காரரானார்… இரண்டுபுதல்வர் பிறந்தனர். ஒருவர் ஈ.வே.கிருஷ்ணசாமி, மற்றவர் நமது ஈ.வே.ராமசாமி….’
நான் ஏன் ஈவேரா என எழுத ஆரம்பித்தேன் என்று நானே யோசித்துக்கொண்டிருந்தேன். என்னிடம் இருக்கும் பழைய நூல்களில் அதற்காக தேடிப் பார்த்தேன். அக்காலத்தைய தமிழறிஞர்கள் பெரும்பாலும் ஈ.வே.ராமசாமி என்றும் அவரது தந்தை வேங்கட்டப்பநாயக்கர் என்றும்தான் எழுதியிருக்கிறார்கள். [தங்கள் பெயரையே மயிலை சீனி வேங்கடசாமி என்றுதான் எழுதியிருக்கிறார்கள்] நான் எழுதியது அவர்களின் எழுத்துமுறையை அறியாமலேயே பின்பற்றியதுதான்.
இரண்டாவது விஷயம் இந்த விக்கிப்பீடியா குறிப்பைப்பாருங்கள். தன்பெயரை எப்போதுமே வ.வெ.சு.ஐயர் என்றுதான் அவர் எழுதியிருக்கிறார். வரகனேரி வெங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்பதுதான் அவரது பெயர். [அவர் எழுதியமுறை வ.வெ.ஸுப்ரஹ்மண்ய ஐயர்]
அவரது தந்தைபெயரை வேங்கடேசன் என்று மாற்றவும், ஐயரை விட்டுவிட்டு அவர் பெயரை வ.வே.சுப்ரமணியம் என்று எழுதவும் தயக்கமில்லை நமக்கு. அதை எந்த சுயமரியாதையாளரும் சுட்டிக்காட்டி ஒருவரின் பெயரை இன்னொருவர் எப்படி மாற்றி எழுதலாமென கேட்பதுமில்லை.நானே குழம்பியிருக்கிறேன். வ.வே.சு.அய்யர் என்றுதான் மாற்றி எழுதியிருக்கிறேன்…
சரி, இதில் ஏதாவது பொதுவிதி உள்ளதா என்றால் இல்லை ஈ.வே.ரா பற்றிய விக்கிபீடியா குறிப்பு தெளிவாக வெங்கட்ட நாயக்கர் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதாவது தெலுங்கு உச்சரிப்பில் ஈவேராவின் தந்தை பெயரை மட்டும் எழுதவேண்டும். பிறர் தந்தைபெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு மாற்றிக்கொள்ளலாம்
இதுதானா தமிழியம் அல்லது பெரியாரியம்?
ஜெ