மனக்குளத்தின் கொலைவெறிகள்

பெரும்புகழ்பெற்ற வசவு இணையதளம் நான் தவறாமல் வாசிக்கக்கூடிய ஒன்று. தமிழில் அசலான நகைச்சுவையை அளிக்கும் இணையதளங்களில் இதுவே முதன்மையானது.

அவர்களின் ஆழ்மன ஊடுருவல் கலை மிக நுட்பமானது. அனேகமாக நான் எழுதிய உற்றுநோக்கும் பறவை கதையில் வருவதற்கு நிகரானது. சமீபத்தில் அவர்கள் பவா செல்லத்துரை பற்றி எழுதியிருக்கும் இக்கட்டுரையில் என்னுடைய ஆழத்துக்குள் அவர்கள் ஊடுருவிச்செல்வதைக் கண்டபோது எங்கே மறுபக்கமாக வெளிவந்துவிடுவார்களோ என்றே அஞ்சினேன்.

‘பாலுமகேந்திராவை உள்ளுக்குள் கொலைவெறியோடு ஜெயமோகன் பார்த்துக் கொண்டிருந்தார்’ என்று எழுதியிருக்கிறார்கள். எனக்கே கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. என்னுடைய மனக்குளம் என்று அதைச் சொல்லியிருப்பது தவறு. அது குளமல்ல, கடலய்யா கடல்!