விரிவெளி

மனிதன் புனைகதைகளை உருவாக்க ஆரம்பித்த காலம்முதலே புறவுலகை மாற்ற ஆரம்பித்திருக்கிறான். நான் இப்படிக் கற்பனைசெய்துகொள்வேன். கருப்பைக்குள் வளரும் கரு கருப்பையைப்பெரிதாக்குவதுபோல. மனித அகம் முடிவற்றது. அதன் சாத்தியங்கள் எண்ணற்றவை. ஆனால் வெளியே உள்ள உலகின் விதிகளுக்கேற்ப மட்டுமே அது தன்னை நிகழ்த்தியாகவேண்டியிருக்கிறது. இயற்பியல் விதிகளாலான உலகம். காரணகாரிய உறவின் சங்கிலியால் கட்டப்பட்ட உலகம். ஆதிசங்கரரின் உவமையை சொல்லப்போனால் நீர் வயலின் வடிவம் வழியாகவே தன்னை முன்வைக்கமுடிகிறது.

புனைகதைகள் வழியாக அந்த எல்லையைத் தாண்டமுயல்கிறான் மனிதன். அதற்காகவே தேவதைக்கதைகள், மாயக்கதைகள், பேய்க்கதைகள் என எழுதிக்கொண்டிருக்கிறான். ஒட்டுமொத்தமாக அவற்றை எல்லாம் மிகுபுனைவு என்றே சொல்லிவிடலாம். என் இளமையில் நான் புறவுலகின் எல்லையை மீறாத ஒரு கதையை ரசித்ததே இல்லை. நாலடி உயரத்துக்கு மண்ணிலிருந்து எம்பமுடியாவிட்டால் அவனெல்லாம் என்ன கதாநாயகன் என்ற எண்ணம்தான்

அறிவியல்புனைகதைகளை நான் அந்தப்பட்டியலிலேதான் வைக்கிறேன். அவை அடிப்படையில் மிகைபுனைவுகளே.. ஏதோ ஒருவகையில் புறவய யதார்த்ததை மீறுவதற்கான மனித மனதின் யத்தனங்கள் அவை. அவற்றுக்கான அறிவியல் சாத்தியக்கூறுகளைக் கண்டடைகின்றன. அந்த அறிவியல்சாத்தியக்கூறு என்பது தர்க்கமனதை நம்பவைப்பதற்கான ஒரு முகாந்திரம் மட்டுமே. ஒரு கட்டுரையில் ஆர்தர் சி கிளெர்க் அறிவியல்புனைவின் அடிப்படையே அறிவியலை நம்பகமாக்ச் சொல்லுதல்தான் என்று சொல்கிறார்.

தொழில்நுட்பத்தை கதையில் பயன்படுத்துவதை, விவரிப்பதை நான் அறிவியல்புனைகதை என நம்பவில்லை. அறிவியல்சார்ந்த ஒரு ஊகம் அறிவியல்கதையின் ஆதாரமாக இருக்கவேண்டும். அந்த ஊகம் நிரூபணம் நோக்கிச் செல்லாமல் புனைகதை நோக்கி வந்திருக்கவேண்டும். அவ்வளவுதான். நான் விரும்பும் அறிவியல்புனைகதைகள் அவ்வகைப்பட்டவை. சில வருடங்களுக்கு முன் திண்ணை இணைய இதழ் அறிவியல்புனைகதைப்போட்டி ஒன்றை அறிவித்தபோது அதன் முன்னோடியாக நான் எழுதிய 12 கதைகள் இவை.

இக்கதைகளின் பொது அம்சம் எனக்கு ஓரளவு ஈடுபாடும் சிறுவயதிலேயே அறிமுகமும் உள்ள சில அறிவியல்தளங்களை மட்டுமே நான் கையிலெடுத்திருக்கிறேன் என்பதுதான். அவை தியானம், ஆயுர்வேதம் முதலிய இந்திய அறிவியலின் சில முகங்கள். அவற்றினூடாக நான் வெறுமே ஒரு வேடிக்கையை அல்லது பரபரப்பை உத்தேசிக்கவில்லை. என்னுடைய பிற கதைகளில் என்னென்ன தேடல்களும் கண்டடைதல்களும் உள்ளனவோ அவையே இவற்றிலும் உள்ளன. என் அகம் தன்னை நிகழ்த்திக்கொள்ள ஒரு கற்பனை புறவுலகை உருவாக்கிக்கொள்ள அறிவியலின் தர்க்கம் கைகொடுத்திருக்கிறது அவ்வளவுதான்

சுவாரசியமான பல கதைகள் இதில் உள்ளன. வாசகர்களுக்கு அவர்களின் அகம் முற்றிலும் புதிய புற யதார்த்தத்தில் நிகழ்வதற்கான வாய்ப்பை இப்புனைவுலகம் அளிக்குமென நான் நினைக்கிறேன். இதன் புதிய பதிப்பை வெளியிடும் நற்றிணை பதிப்பகத்துக்கு நன்றி

ஜெ

[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் விசும்பு மறுபதிப்புக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைகுடைநிழல் தந்தமமதை
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்-கடிதம்