பதினைந்து நாள் இடைவெளிக்குப்பின் நாகர்கோயில் வந்தேன். ஒருநாளுக்கு 12 மணிநேரம் மின்வெட்டு. அறிவிக்கப்படாத மின்வெட்டு. அதாவது அரைமணிநேரத்துக்கு இரண்டுமணிநேரம் வீதம் மின்சாரம் இல்லை.
‘எவ்வளவுநாளாக இப்படி இருக்கிறது என்றேன்.
‘நவம்பர் முதல் இப்படித்தான்… உன் கண்ணில்தான் படுவதேயில்லை. நவம்பரில் ஐந்துமணிநேரம் மின்வெட்டு இருந்தது. நம் வீட்டு இன்வெர்ட்டர் வேலைசெய்வதனால் உனக்குத்தெரியவில்லை. 12 மணிநேர மின்வெட்டு என்றால் அது நின்றுவிடுகிறது. ஆகவே உனக்குத்தெரிகிறது’ என்றாள்
வெளியே விசாரித்தால் ‘ராத்திரி முழிச்சிருந்து 11 மணிக்குமேலே தண்ணிய ஏத்திடறது….அவ்வளவுதான். மழை இருக்கிறதனால ஃபேன் வேண்டியதில்லை…போகுது’ என்கிறார்கள்.
தமிழகத்தில் எதிர்க்கட்சி என ஒன்று இருந்தது என்றால் இந்தப்பிரச்சினையை பேசியிருப்பார்கள். அப்படி ஒரு குரலே கிடையாது.
உள்ளூர் திமுக காரரிடம் கேட்டேன். ‘மின்சாரம் இல்லேன்னு சொல்லி கூட்டம்போட்டா போலீஸ் கடுமையா நடவடிக்கை எடுக்கும்னு சொல்லி பயமுறுத்தறாங்க சார்….’என்றார் ‘அதோட இப்ப கூடங்குளம் வேலை செய்றதுன்னு நம்ம கட்சியும் சொல்லிட்டிருக்கு…கூடங்குளம் கரெண்டுன்னு ஒண்ணு வாறதில்லைன்னு மட்டுமல்ல….இங்க கன்யாகுமரிமாவட்டத்துக்கும் நெல்லைக்கும் உண்டான பொது மின்சாரத்தை எடுத்துத்தான் கூடங்குளம் மின்சாரம்னு சொல்லிட்டிருக்காங்க…அதையெல்லாம் வெளிய நாமளே சொல்லக்கூடாதுல்ல?’
என்னதான் செய்கிறார்கள்? கூடங்குளம் மின்சாரம் வந்துவிடும், வரும்போது மின்வெட்டே இருக்காது என்றெல்லாம் ஒருவருடமாக பிரச்சாரம் செய்தார்கள். மின்சாரம் வந்துவிட்டது என்கிறார்கள்.
மின்சாரம் என நாம் நினைப்பதும் அவர்கள் சொல்வதும் வேறுவேறாக இருக்குமோ?