நேரு x பட்டேல் விவாதம்

தமிழ் ஊடகங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரும் விவாதத்தை பலரும் கவனித்திருக்கமாட்டார்கள். பாரதியஜனதா ‘நேருX படேல் என ஒரு இருமையை முன்வைத்தது. பட்டேல் தேசபக்தர், செயல்வீரர் என்றும் நேரு சுயபிம்பத்துக்காக நாட்டைக் கைவிட்டவர் என்றும் குடும்பநலன் மட்டும் கருதிய சொகுசுக்காரர் என்றும் சித்திரப்படுத்தியது. பதிலுக்கு நேரு மதச்சார்பற்றவர் என்றும் பட்டேல் மதவாதி என்றும் காங்கிரஸ்தரப்பு சொல்ல ஆரம்பித்தது.

இந்தப் பிரச்சாரப்போட்டியில் காங்கிரஸின் பெருந்தலைவர்களில் ஒருவரான பட்டேலை மதவெறிகொண்டவர் என்று கங்கிரஸே சித்தரிக்கும் அவலம் நிகழ்ந்துவிட்டது வருத்தமளிப்பது.பட்டேலின் எதிர்தரப்பாகச் செயல்பட்டவரான மௌலானா ஆசாத் எழுதி நெடுங்காலம் பூட்டிவைக்கப்பட்டிருந்த சுயசரிதையின் பகுதிகளை காங்கிரஸ் தந்திரமாக ஊடகங்களில் கசியவிட்டு காந்தி கொலையில்கூட பட்டேலுக்குப் பங்கிருக்கலாம் என்று காட்டமுயல்கிறது.

பட்டேல் ஒருபோதும் பொதுமேடையில் நேருவை மறுத்தவரல்ல. அவர்கால காங்கிரஸ்கட்சி அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இரு உதாரணங்களை சொல்லலாம். இரண்டுமே எம்.ஓ.மத்தாயின் சுயசரிதையில் உள்ளவை.

கிழக்குவங்காளத்தில் உள்ள சணல்ஆலைகளுக்கு இந்தியா நஷ்டஈடு பெறுவது சம்பந்தமாக நேருவிற்கும் பட்டேலுக்கும் கடுமையான கருத்துமுரண்பாடு வருகிறது. ஆனால் நேரு தன் தரப்பை மேடையில் அறிவித்துவிட்டார். பட்டேல் உடனே அதை ஏற்றுக்கொண்டு மேடையில் பேசினார்.பட்டேல் நேருவின் அந்த நிலைப்பாட்டை ரத்துசெய்யும் அதிகாரம் கொண்டிருந்தார். ஆனால் இந்தியாவின் பிரதமரின் சொல் பயனற்றுப்போவதை பட்டேல் விரும்பவில்லை.

அதேபோல ரஃபி அகமது கித்வாய் சில மும்பை தொழிலதிபர்களின் பின்பலத்துடன் நேருவை வீழ்த்தும் திட்டமொன்றுடன் பட்டேலை அணுகுகிறார். நேருமீது மனத்தாங்கலுடன் இருந்தபோதிலும் பட்டேல் அதை நிராகரிக்கிறார்.’நேரு பாப்புவால் நமக்கு சுட்டிக்காட்டப்பட்டவர்’ என்று சொல்கிறார்.

நேருவை நான் ’கடவுள்’ நம்பிக்கை அற்ற நவீன இந்துவின் முன்னுதாரண வடிவமாகவே காண்கிறேன். இந்துப்பண்பாட்டுக்கூறுகளிலும் விழுமியங்களிலும் நம்பிக்கை கொண்டவர். சமரசநோக்குள்ளவர். புதியவற்றை நோக்கி எப்போதும் திறந்திருந்தவர். அறிவியலுக்கும் நவீன ஜனநாயகப் பண்புகளுக்கும் எதிராக பழமைப்பிடிப்பை நிறுத்தாமல் மரபை உள்வாங்கிக்கொள்வதற்காக மட்டுமே பழைமையை கவனித்தவர். எனக்கு ஏற்புடைய இந்து காந்தியைவிட நேருவே. அவரை ’ஜனாப்’ நேருவாக முத்திரையிடுகிறது இந்துத்துவத் தரப்பு

இந்த விவாதம் இரு தலைவர்களையும் கீழிறக்குவதாக அல்லாமல் இரு வாழ்க்கைநோக்கு, இரு அரசியல்நோக்குகளை ஒப்பிட்டு ஆராய்வதாக அமையுமென்றால் இந்தியாவுக்கு நல்லது. பட்டேல் அணைத்துப்போகும் தன்மை அற்றவர், ஆனால் செயல்வீரர். அவரால் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு காந்தியமாதிரி கொண்ட அமைப்பை [அமுல்] உருவாக்கி நிலைநிறுத்திக்காட்டமுடிந்தது. நேரு சமரசவாதி, கனவுஜீவி. இரண்டில் எது மேல் என்ற தளத்தில் விவாதம் நிகழ்ந்தால் நல்லது.


கட்டுரைகள்


நேரு தரப்பு

இந்தியா என்பது எல்லோருக்குமானது என்பதுதான் அவருடைய முதல் செய்தி. இதன் அடிப்படையில்தான் தன் செயல்திட்டங்களை வகுத்தார். பிற நாடுகளுடன் கொள்ள வேண்டிய நட்புறவுகுறித்து அவருக்கு இருந்த கருத்துகளை இப்போது பார்க்கும்போது லட்சியவாதமாகத்தான் தோன்றும்

ஹிந்து தலையங்கம்

தலைவர்கள் மக்களோடு மக்களாக இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள், இருவர். ஒருவர் காந்தி. மற்றவர் நேரு. பஞ்சாபி எழுத்தாளர் துக்கல், ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதுகிறார். தில்லியின் கன்னாட்ப்ளேஸில் இருந்த முஸ்லிம்களின் கடைகளைக் கூட்டம் ஒன்று சூறையாடிக்கொண்டிருந்தது. திடீரென்று காரொன்றிலிருந்து நேரு இறங்கி, கூட்டத்துக்குள் புகுந்து, கண்ணில் பட்ட ஒருவரைக் கன்னத்தில் அறைந்தார். ‘‘என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும்’’ என்று இரைந்தார். கூட்டம் உடனே கலைந்துவிட்டது. அறை வாங்கியவர், ‘‘என்னைத்தான் நேரு அறைந்தார்” என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு திரிந்தாராம்.

பி.ஏ.கிருஷ்ணன் நேரு வசந்தத்தின் இளவரசன்

ஆசாதின் ஆரம்ப கால எழுத்துகளைப் படித்தால் ஒன்று தெளிவாகத் தெரியும்; அந்தக் காலத்து மதவாதிகளுக்குச் சாட்டையடி கொடுப்பதற்காக, குழப்பங்களும் நிச்சயமின்மைகளும் மிகுந்த ஒரு பிரதேசத்தில் அவர் நுழைந்திருக்கிறார். குர்ஆன், சுன்னா ஆகியவற்றின் உட்பொருளைப் புரிந்துகொள்ளாமல், ‘வேதநூல் விற்பன்னர்கள்’ அல்லது ‘மேலோட்டப் பொருள்காரர்கள்’ சொல்லுக்குச் சொல் பொருள் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்றதை ஆசாத் எதிர்த்தார்.

மௌலானா ஆசாத் பற்றிய கட்டுரை

நரேந்திர மோடி பேசிய பேச்சு, நேருவையும் படேலையும் ஒப்பிட்டுப் பரபரப்பாக விவாதம் நடக்கத் தூண்டியிருப்பதோடு மட்டுமல்லாமல், நவீனமும் ஒன்றுபட்டதும் மதச்சார்பற்றதுமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டு, இப்போது மக்கள் நினைவிலிருந்தே மறைந்துபோன இருவரைப் பற்றிப் பேசுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

ஹசன் சுரூர் கட்டுரை

காந்திஜி படேலுக்குச் சொல்லியனுப்பி, இந்தக் கொலைவெறியைத் தடுத்து நிறுத்த அவர் செய்துகொண்டிருப்பது என்னவென்று கேட்டார். காந்திஜிக்குக் கிடைக்கும் தகவல்கள் மிகையானவை என்று சொல்லி, அவருக்கு நம்பிக்கையை உண்டு பண்ண சர்தார் படேல் முயன்றார்.

ஆசாதின் சுயசரிதை

கடிதத்தை வாசித்ததுமே நேருவின் முகம் மாறுகிறது. கோபத்தில் சிவக்கிறார். கன்னியாஸ்திரிகளைக் கூட விட்டுவைக்காத ரஜாக்கர்களின் கொடுஞ்செயல் அவரது உறுதியான இதயத்தை அசைத்துவிட்டது. கைகளால் வேகமாக மேசை மீது குத்தியபடியே குரலுயர்த்தி சொன்னார்.

ஹைதராபாத் பிரிவினைபற்றிய கட்டுரை

என் தரப்பிலிருந்து நான் சொல்ல விரும்புவது இதுதான்: எல்லாவற்றுக்குப் பிறகும், இந்தியாவின் எதிர்காலத்தில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. உண்மையில், எனக்கு இந்த நம்பிக்கை இல்லாவிடில் ஊக்கமுடன் பாடுபடுவதற்கு என்னால் முடியாமல் போயிருக்கும். எனது நெடுநாள் கனவுகள் பல, சமீபத்திய நிகழ்வுகளால் சுக்குநூறாகச் சிதறிப்போயிருந்தாலும்கூட, அடிப்படை நோக்கமானது இன்னும் அப்படியே தான் இருக்கிறது; அது மாறுவதற்கும் வாய்ப்பில்லை.

நேருவின் உரை

பட்டேல் தரப்பு

நேருவுக்கு சர்வதேச அரசியல் தெரியும். வேறெந்தத் தலைவருக்கு அது தெரியும்? நேருவுக்கு அழகான ஆங்கிலம் பேச தெரியும். அயல்நாட்டு பத்திரிகையாளர்களுடன் அற்புதமான ஆங்கிலத்தில் உரையாடத் தெரியும். காஷ்மீர் பிரச்சனைக்கு கூட இந்திய ராணுவத்தை விட மௌண்ட்பேட்டன்களுடனான புரிதல் மூலமாக பிரச்சனையை தீர்த்துவிட முடியுமென்று நம்பிய அகிம்சா மூர்த்தி நம் வசந்த கால இளவரசன் என்கிறார்கள்.

அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை

ஜவஹர்லால் நேருவிடம் வெளிப்படுவது மனித நேயம் அல்ல. மதச்சார்பின்மை அல்ல. இங்கு வெளிப்படுவது அப்பட்டமான வெறுப்பு. இந்துக்கள் மீதான வெறுப்பு. தப்பிக்கும் யூதர்களை பிடித்து வதை முகாம்களில் அடைத்த நாசிகளின் வெறுப்புதான் துல்லியமாக நேருவிடமும் வெளிப்பட்டது

அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை

2009ல் லூதியானாவில் – கடலையே பார்த்திராத அந்த மக்கள் மத்தியில்- இலங்கையால் தமிழருக்கு ஏற்படும் பிரச்சனைகளை பேசினார் ஒரு அரசியல்வாதி. தமிழ்நாட்டை சேர்ந்தவரல்லர் அவர். அங்கு தமிழ் வாக்கு வங்கியும் இல்லை. ஆனாலும் அதை அவர் பேசினார். ஏனென்றால் தமிழனுக்கும் இதர இந்தியருக்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவின் மீதுதான் வலிமையான பாரதம் அமைய முடியும்.

ஈழத்தமிழர் பற்றி அரவிந்தன் நீலகண்டன்

முந்தைய கட்டுரைகோவை ஞானியின் இணையதளம்
அடுத்த கட்டுரைவாழ்தமிழ்- கடிதம்