புனத்தில் குஞ்ஞப்துல்லா மழவில்மனோராமா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைத்தான் கேரளத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இக்காவையும் அவரது எழுத்துக்களையும் தெரிந்தவர்களுக்கு அதில் பரபரப்பாக ஏதுமில்லை. பொதுவாசகர்கள், ரசிகர்கள்தான் கொப்பளிக்கிறார்கள்.
இக்கா அந்தப்பேட்டியில் அத்தனை ஒழுக்கமதிப்பீடுகளையும் தூக்கி கடாசுகிறார். இஸ்லாம் மதம் உட்பட அனைத்து கட்டுப்பாடுகளையும் கிழித்து வீசுகிறார். இப்போது 12 30க்கு மழவில் மனோரமாவில் மீண்டும் ஒளிபாப்பாகவிருக்கிறது அந்தப்பேட்டி.
சிலவருடம் முன்பு இக்காவிடம் பேசினேன். ‘டேய், நான் வீடில்லாமல் இருக்கிறேன்’ என்றார்.
என்ன நடந்தது என்றேன்.
‘அந்த மகாபாவி காந்தியின் சுயசரிதையை வாசித்தேன். அதேமாதிரி ஒன்றை நானும் எழுதினேன்’
‘கெடுத்தீர்களே இக்கா….கைப்பிரதியை என்ன செய்தீர்கள்?’
‘பிரசுரிக்கக் கொடுத்துவிட்டேன்’
‘அய்யய்யோ’ என்று கதறிவிட்டேன்
‘புத்தகம் போனவாரம் வெளிவந்துவிட்டது. என்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டார்கள்’
புனத்தில் எப்போதுமே கேரளக்கலாச்சாரம் என்ற கட்டுச்சோற்றுக்குள் வைத்துக்கட்டப்பட்ட பெருச்சாளி.