சிகிழ்ச்சை சரியா?

அன்பின் ஜெயமோகன்,

“சிகிழ்ச்சை” என்று நீங்கள் எழுதியது முதன்முதல் கண்ணில் பட்டபொழுது அச்சுப்பிழை போலும் என்று எண்ணிக்கொண்டேன். உங்கள் எழுத்துகளில் அதனை மீண்டும் கண்டபொழுது அச்சுப்பிழை அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். அப்புறம் “சிகிழ்ச்சை”யின் தோற்றுவாயை, அதன் சொற்பிறப்பியலை அறியத் தலைப்பட்டேன். தமிழ்நாட்டு, ஈழநாட்டு அகராதிகள், கலைச்சொற்கோவைகள் எவற்றிலும் அது இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. “சிகிழ்” என்று கூட ஒரு (வேர்ச்) சொல் அவற்றில் பயிலப்படுவதாகத் தெரியவில்லை. “சிகிச்சை” அல்லது “சிகிற்சை” என்றே அவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. நீங்கள் “சிகிழ்ச்சை” என்றே தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். அதன் சொற்பிறப்பியலை அறியத்தரவும்.

மணி வேலுப்பிள்ளை

அன்புள்ள மணிவேலுப்பிள்ளை அவர்களுக்கு,

சிகிழ்ச்சை அல்லது அல்லது சிகிட்சை அல்லது சிகிற்சை அல்லது சிகிச்சைக்கு தமிழில் வேர்ச்சொல் தேடிச்செல்லமுடியாது. ஏனென்றால் அது சம்ஸ்கிருதச் சொல். [சப்த தாராவலியின் படி அதற்கு சம்ஸ்ருதத்தில் வேர் இல்லை.பிராகிருதச் சொல்லாக இருக்கலாம்] அதற்குச் சரியான உச்சரிப்பு என்பது சிகிழ்ச்சா. அதை தமிழில் அப்படியே எழுதியவர்கள் சிகித்சை, சிகித்ஸை என்று எழுதியிருக்கிறார்கள்.

அந்த உச்சரிப்பு தமிழுக்கு ஒவ்வாதது என்று கொண்டு அதையே சிகிட்சை என்றும் சிகிற்சை என்றும் மாற்றினார்கள். த் ஒலியை ட் மற்றும் ற் ஆக மாற்றும் இரு மரபுகள் தமிழ் சொல்லாக்கத்தில் உண்டு. கடைசியில் சிகிச்சை என்று ஆக்கிக்கொண்டார்கள். இந்த எல்லா உச்சரிப்புமுறைகளும் இப்போது தமிழில் புழங்குகின்றன.

தமிழில் திசைச்சொல் உருவாக்குவதற்கான இலக்கண அனுமதி உள்ளது.ஓர் அன்னியமொழிச்சொல்லை தேவை என்றால் தமிழில் அப்படியே கையாளலாம். ஒரே நிபந்தனை அதன் உச்சரிப்புமுறை தமிழுடைய எழுத்து மற்றும் உச்சரிப்புமுறைக்குள் இயைந்து அமைய வேண்டும். அப்படித்தான் நாம் முகம், சினிமா போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம்.

அப்படி அமையாத சொற்களை தமிழ் உச்சரிப்புமுறைக்குள் கொண்டு வந்து எழுதுகிறோம். கம்பராமாயணத்தில் அப்படி நூற்றுக்கணக்கான சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழ் வடிவில் உள்ளன. அதற்கு பல முறைகள் நடைமுறையில் இருந்து உருவாகிவந்தன. இதில் பலவகையான போக்குகள் உள்ளன. திட்டவட்டமான விதிகள் இல்லை. செவிக்கு ஒலிப்பதையே அளவுகோலாகக் கொண்டுள்ளனர். த் என்ற ஒலி ற் என்றும் ட் என்றும் மாற்றப்பட்டிருப்பதைக் காணலாம். தத்பரம் – தற்பரம். ஷ ஒலி ட என்றும் ச என்றும் மாற்றப்பட்டுள்ளது. வேஷம்-வேடம். கோஷம்-கோசம்.

குமரிமாவட்டத்தின் பலநூறாண்டுகளாக நீடித்துவரும் மரபான தமிழ்க்கல்விமுறையில் சம்ஸ்கிருதச்சொற்கள் தமிழின் உச்சரிப்பு மற்றும் எழுத்துமுறைக்கு உவப்பானமுறையில் இருந்தால் அப்படியே பயன்படுத்தும் வழக்கமே உள்ளது. ஆகவே சிகிழ்ச்சை என தமிழில் எழுதலாம். சம்ஸ்கிருத உச்சரிப்பு அப்படியே வருகிறது. தமிழுக்கும் அன்னியமாக இல்லை. மகிழ்ச்சி போன்ற ஒரு சொல்லாகவே உள்ளது. நீங்கள் குமரிமாவட்டத்தில் நூறண்டுகளுக்கும் மேலாகவே சிகிழ்ச்சை என்று விளம்பரங்கள், பெயர்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

நான் அந்த மரபில் வந்தவன். ஆகவே என் ஆசிரியர்களின் சொற்படி அவ்வாறு எழுதுகிறேன்.அந்த மரபும் இங்கே நீடிக்கட்டுமே என்ற எண்ணமே காரணம். இப்படி ஏராளமான சொற்களுக்கு நான் வேறு உச்சரிப்புமுறையை கையாள்வதை தமிழறிந்தவர்கள் உணரலாம்.

சம்ஸ்கிருதச் சொற்களை எழுதுவதில் இதேபோல யாழ்ப்பாண மரபு ஒன்று உள்ளது. விடயம் என நீங்கள் எழுதுவீர்கள். தமிகத்தில் அவ்வாறு எழுதமாட்டார்கள். யாராவது உங்களிடம் வந்து தினத்தந்தி மரபுதான் சரி, நீங்கள் எழுதுவது பிழை என்று சொன்னால் ‘இது யாழ்ப்பாண மரபு. இத்தகைய பேதங்களே மொழியின் அழகு’ என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். இதேபோல தஞ்சை மரபு ஒன்று உண்டு. கடலங்குடி நடேச சாஸ்திரி பல சம்ஸ்கிருதச்சொற்களை புதியவகையில் எழுதியிருப்பதைக் கவனித்திருக்கிறேன்.

நான் ஒரு சொல்லைக் கையாள்வதில் என்னளவில் ஒரு காரணம் இருக்கும் என்றாலும் சொற்களை வைத்துக்கொண்டு இலக்கணச்சண்டை போடுவதில் ஈடுபாடற்றவன்.தமிழில் பொதுவாக கருத்துலக விவாதத்துக்கான அறிவுத்தகுதி இல்லாதவர்கள், வெறுமே அரைகுறைவாசிப்பு மற்றும் செவிப்பழக்கம் கொண்டு செய்யும் வெட்டிவேலை அது என நினைப்பவன்.

பொதுவாக இதைச்செய்பவர்கள் சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பத் தமிழ்ப்பாடத்துக்காக யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் போன்றவர்களும் இங்கே பின்னத்தூரார் முதலியவர்களும் உருவாக்கிய எளிய உரைநடை இலக்கணத்தையும், மொழித்தரப்படுத்தலையும் ‘ஆன்றோர் தொன்று தொட்டு உருவாக்கியளித்த’ நெறிகள் என அசட்டுத்தனமாக நம்பி வாதாடுவதே வழக்கம். அதன்பின் மொழியில் நிகழ்ந்த மாற்றங்களும் வளர்ச்சியும் அவர்கள் அறியாதவை.அவர்களிடம் பேசுவது மூடத்தனத்துடன் முட்டிக்கொள்வது.

இன்று உருவாகும் பொதுமரபு செய்தித்தாள்களை அடிப்படையாகக் கொண்டது, தமிழறிஞர்கள் அல்ல செய்தியெழுதும் நபர்களே இன்று நம் மொழியை உருவாக்குகிறார்கள்.எளிமையாக சிகிச்சை என்ற சொல்லில் அவர்கள் நிலைகொள்கிறார்கள்.

அதை வாசித்துவிட்டு நான் எழுதுவது பிழை என்று சிலர் அவ்வப்போது எனக்கு கடிதங்கள் எழுதுவதுண்டு. இத்தகைய விஷயங்களை நான் ஒருவரிடம் விவாதிக்கவேண்டுமென்றால் அவர் தமிழ்ச்சொற்களின் மூலம் அறிந்தவராக, தமிழ் எழுத்து மற்றும் உச்சரிப்புமுறைகளும் இலக்கணமும் சென்ற காலங்களில் எப்படியெல்லாம் மாறிவந்தன என்று அறிந்தவராக, அதிலுள்ள பல்வேறு போக்குகளைப்பற்றிய புரிதல் கொண்டவராக இருக்கவேண்டும் என நினைத்தேன். தமிழாய்வாளரும் மொழிபெயர்ப்பாளருமான உங்கள் வினா ஒரு வாய்ப்பு. நன்றி

ஜெ

பிகு தமிழில் வேறு யாரெல்லாம் சிகிழ்ச்சை என்ற சொல்லைக் கையாள்கிறார்கள் என்று பார்த்தேன். நிறைய. உதாரணமாக இந்தத் தளம்.

முந்தைய கட்டுரைவாழ்தமிழ்- கடிதம்
அடுத்த கட்டுரைஅம்மா – தெளிவத்தை ஜோசப்