தமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும்

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=REvikRsEqws

ஜெ

இந்த வீடியோவில் கண்ணதாசன் தமிழை ஆங்கில லிபியில் எழுதுவதைப்பற்றி நக்கலடிக்கிறார். அந்தக்காலத்திலேயே இந்த சர்ச்சை இருந்திருக்கிறது போல

அருண்

அன்புள்ள அருண்,

இந்தியமொழிகளை ஆங்கில லிபியில் [ரோமன் லிபி அல்ல. ரோமன்லிபியின் ஒரு வடிவம் ஆங்கில லிபி. ஆங்கிலத்தில் இல்லாத பல குறியடையாளங்கள் கொண்டது ரோமன் லிபி. ] எழுதுவதைப்பற்றிய பேச்சு 1915 முதல் இருந்துவந்துள்ளது. ஏராளமான முன்னோடிச் சிந்தனையாளர்கள் அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதைப்பற்றி பின்பு.

நம்பூதிரி ஜோக். நம்பூதிரி ஆங்கிலம் படிக்கச்சென்று திரும்பிவிட்டார். ‘என்ன பாஷை , ஒண்ணும் சுகமில்லை. சி ஏ டீன்னு எழுதணும். கேட்னு வாசிக்கணும். அர்த்தம் பூனை. மலையாளத்திலே பூனைன்னு எழுதலாம். பூனைன்னே வாசிக்கலாம். அர்த்தமும் பூனைதான்’ என்றாராம்

இந்த தரத்தில் நம்மைப்பற்றி நாமே புகழ்ந்து பேசுவதெல்லாம் இங்கே எப்போதுமுள்ளதுதான். மேடையில் கைதட்டல் கிடைக்கும்.

இதற்கு நேர் எதிர்தரப்பு உண்டு. தமிழில் போதிய எழுத்துக்கள் இல்லை என்பார்கள்.காக்காய்,கானம் இரண்டுக்கும் ஒரே காய். தீ ,தீபம் இரண்டுக்கும் ஒரே தீ. ஆகவே புதிய எழுத்துக்கள் தேவை என்று விதவிதமாகச் சோதனைகள் செய்து பார்த்திருக்கிறார்கள். இந்தியும் சம்ஸ்கிருதமும் இதன்காரணமாக தமிழைவிட மேலானவை என்று சொல்பவர்கள் உண்டு.

இரண்டுக்குமே ஒரே பதில்தான். எந்தமொழியையும் பேசுவதுபோல எழுதிவிடமுடியாது. அந்தமொழிக்காரர்களுக்கு அப்படி தோன்றும். வெளியே இருந்து வருபவர்கள் படும்பாடு வேடிக்கையாக இருக்கும்.

எழுத்துக்களும் வரிகளும் எல்லாம் அடையாளங்கள் மட்டுமே. இந்த அடையாளத்துக்கு இந்த ஒலி இந்த ஒலிக்கு இன்னின்ன பொருள் என மொழியைக் கற்கும்போது நமக்குச் சொல்லித்தரப்படுகிறது.நம் மூளையில் அது படிகிறது. அதனைக்கொண்டுதான் அந்த மொழியை நாம் வாசிக்கிறோம்.

இதை எழுதும்போது 1910 வாக்கில் நடந்த சில விவாதங்களை வாசிக்கிறென். அரபு எண்கள் [அதாவது நாம் இப்போது பயன்படுத்துபவை] அறிமுகப்படுத்தப்பட்ட காலம். அந்தச் சீர்திருத்தம் தமிழை அழிக்கும் என சைவப்பிள்ளைகள் எம்பிக்குதிக்கிறார்கள். கண்ணீர் மல்குகிறார்கள். 1960 வரைக்கும்கூட பிடிவாதமாக தமிழ் எண்களில் பக்க எண்களைப்போட்டு புத்தகங்களை அச்சிட்டிருக்கிறார்கள். சில ஆதீன நூல்களில் 1980களில்கூட தமிழ் எண்கள்தான்.

தமிழார்வலரான சிலர் இன்றும்கூட கார்களுக்கு தமிழ் எண்களை கூடுதலாக எழுதிவைத்திருக்கிறார்கள். உதாரணம் செந்தமிழன் சீமான்

ஜெ

முந்தைய கட்டுரைநாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்
அடுத்த கட்டுரைமண்ணும் ஞானமும்