குமரப்பா என்ற தமிழர்

திருவாளர் ஜெமோ,

இந்தியாவின் மிகச்சிறந்த 10 அறிவுஜீவிகள் என்ற பட்டியலிலே ஒரே ஒரு தமிழனைக்கூடச் சேர்க்காத உங்கள் மொழிக்காழ்ப்பு நன்றாகவே தெரிகிறது. தமிழனின் தலையெழுத்து இதுதான். தமிழன்மீது வெறுப்பைக் கொட்டக்கூடிய பதர்களைத்தான் நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஜெயகாந்தன் முன்னர் அப்படிச் செய்தார். இப்போது நீங்கள் செய்கிறீர்கள். மலையாளி நாயர் எம்ஜிஆர் தமிழை அழித்தார். நீங்கள் அழிக்க நினைக்கிறீர்கள். உங்களைப்போன்ற எத்தனை மூடர்கள் நினைத்தாலும் பெரியாரை மறைக்கமுடியாது. காந்தியாரும் அம்பேத்கருமே பெரியார்தான் இந்தியாவின் மிகப்பெரிய சிந்தனையாளர் என்று சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? பேரறிஞர் அண்ணாவை பேரறிஞர் என்று பட்டம்கொடுத்துப்பாராட்டியவர்கள் அமெரிக்க அறிஞர்கள் தெரியுமா? யோசித்து எழுதுங்கள்

சிவஞானம்

அன்புள்ள சிவஞானம்,

பெயரை வெறுமே சிவ என்று வைத்துக்கொள்ளலாமே. அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றால் வச என்றுகூட வைத்துக்கொள்ளலாம்.

ஜே.சி.குமரப்பா
தமிழர்தான். ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பா என்ற பெயர் கொண்டவர். லண்டனில் பொருளியலில் உயர்கல்வி கற்று இந்தியாவந்தவர் காந்தியைச் சந்தித்தபின் முதலாளித்துவப் பொருளியலுக்கும் கம்யூனிசப்பொருளியலுக்கும் மாற்றாக ஒரு பொருளியல் அமைப்பை உருவாக்குவதற்கான சிந்தனைகளை முன்வைத்தார்.

உலகப்புகழ்பெற்ற மாற்றுப்பொருளியல் முன்னோடியான இ.எஃப்.ஷுமாக்கர் குமரப்பாவின் மாணாக்கர். இந்நூற்றாண்டின் முக்கியமான சமூகவியலாளராக கருதப்படும் இவான் இலியிச் குமரப்பாவின் மாணாக்கர். இப்படி பலரைச் சொல்ல முடியும். மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டியில் காந்தி ஆசிரமம் ஒன்றை அமைத்திருந்தார். அவரது அவ்வமைப்பும் இன்றும் உள்ளது. குமரப்பா உண்மையிலேயே முன்னோடியான பேரறிஞர். பெயரையாவது தெரிந்துவைத்துக்கொள்வது நமக்கு கௌரவம்.

ஜே சி குமரப்பா ஒரு கட்டுரை- பி ஆர் மகாதேவன்


குமரப்பாவின் பொருளாதாரம் ஆண்டியப்பன்

குமரப்பா- தியோடர் பாஸ்கரன்


காந்தியின் சீடர்களின் செல்வம்

காந்தியின் கிராமசுயராஜ்யம்
காந்தியின் கிராமசுயராஜ்யம் 2

முந்தைய கட்டுரைஅறிவுஜீவி- விவாதம்
அடுத்த கட்டுரைஇராட்டை