ஜூவியின் பதினாறாம் பக்கம்.

நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பி ஜூனியர் விகடன் ஒன்றின் பதினாறாம் பக்கத்தில் உங்களைப்பற்றிய கிசுகிசு உள்ளதே கவனித்தீர்களா என்று கேட்டார். நான் ஜூனியர் விகடனை விரும்பிப் படிப்பவன். தமிழக ஊடக தளத்தில் கிராமங்களைக் கவனிக்கும் ஒரே இதழ் அதுதான். அதற்குக் காரணம் அதன் மாணவ இதழாளர்கள் என்ற அமைப்பு. பொதுவாக ரவிக்குமார் . ஜென்ராம் எழுதும் கட்டுரைகளும் பிடிக்கும். ஆனால் ஒருமாதமாக கடும் எழுதுவேலை. கவிதையரங்கு என்பது ஒருமாதிரி சக்தியை உறிஞ்சி துப்பிவிடுகிறது.  ஜூனியர் விகடன் படிக்கவில்லை. இருந்தாலும் இந்தக் கிசுகிசுவை படித்தேன்.

விஷயம் இதுதான். ‘வித்யா கர்வத்துடன் பெரிய ஆட்களை வம்புக்கிழுக்கும்’ எழுத்தாளர் விருது கிடைத்ததும் தன் இணைய இதழில் வெளியிட்ட விருது அழைப்பிதழில் சின்னச் சின்ன ஆட்களையெல்லாம் அவர்கள் என்று சொல்லி காக்கா பிடிப்பதில் ஜெயம் கண்டிருக்கிறாராம்.

பாவலர் விருது பெற்றமைக்கான விழாவுக்கான என் அழைப்பிதழ் அந்த அமைப்பால் வெளியிடப்பட்ட அழைப்பிதழின் நேர்நகல் என்பதை எவருமே உணரலாம். அதை படமாக வெளியிட இந்த இணையதளத்தின் அமைப்பில் இடமில்லை என்பதனால் எழுத்தாக வெளியிட்டோம். மேலும் நான் எப்போதும் எவரையுமே மரியாதை தவறி குறிப்பிடுவதில்லை– விமரிசனம் ஒரு மதிப்பீடு சார்ந்து மட்டுமே.

இதழ்கள் வெளியிடும் கிசுகிசுக்களை நானும் கவனித்து வருபவன் தான். நமது சமூகம் மறைமுக அடக்குமுறை கொண்டது. ஆகவே செய்திகள் பலமுறை வடிகட்டப்படுகின்றன. செய்திகளுக்கு இடையேயான இடைவெளிகளை கிசுகிசுக்கள் நிரப்புகின்றன. ஆனால் நான் திரைத்துறைக்குள் சென்றபின் இந்த கிசுகிசுக்களுக்கும் உண்மைக்குமான தூரம் என்னை பிரமிக்கச் செய்தது. சினிமா பற்றிஎதையும் எழுதலாம். யாருமே கேட்கமாட்டார்கள்.

உதாரணமாக ‘நான் கடவுள்’ படம் பற்றி இருபதுக்கும் மேலான கிசுகிசுக்கள், துணுக்குச் செய்திகள் வந்தன. அவை அனைத்துமே முற்றிலும் பொய்கள். சில பொய்களுக்கு உள்நோக்கம் உண்டு. படம் தொடங்கி ஆறுமாதமாகியும் திரைக்கதை எழுதப்படவில்லை என்பது அத்தகையது. உண்மையில் பல மாதம் முன்னரே திரைக்கதை எழுதப்பட்டு பல பிரதிகள் எடுக்கபப்ட்டு அனைவர் கையிலும் அளிக்கப்பட்ட பாலா படம் இது ஒன்றுதான். மற்ற கிசுகிசுக்கள் சும்மா ஏதாவது போடவேண்டுமே என்பதற்காக போடப்பட்டவை.[படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஒரு பத்துநாள் சென்னையில் விடுபட்ட துணுக்குகளை எடுத்தால் நேராக பின் தயாரிப்புவேலைகள் தொடங்கும். படத்தொகுப்பு ஏற்கனவே முக்காற்பங்கு முடிந்துவிட்டது]

இப்போது தெரிகிறது, இருவகையான செய்திகள் திரையுலகம் பற்றி உள்ளன. ஒன்று விளம்பரத்துக்காக திரைத்துறையாலேயே கொடுக்கப்படுபவை. கதாநாயகி படப்பிடிப்பில் விபத்துக்கு ஆளானார்,[முந்நூறு பேர் சூழ இருந்தும்] கதாநாயகன் ஓடிபோய் காப்பாற்றினார் என்பது போன்ற செய்திகள். இன்னொன்று காதில் விழும் துணுக்குகள். கிசுகிசுக்களில் மிகப்பெரும்பகுதி போகிற போக்கில் டெஸ்கில் உட்கார்ந்து எழுதப்படுவன. சினிமாக்காரர்கள் அவற்றை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.

நடிகை பேட்டிகளில் என்ன வருகிறதென அந்த நடிகைகள் கடைசி வரை தெரிந்து கொள்வதில்லை. இவற்றை எழுதும் பல இதழாளர்கள் சீரிய இலக்கிய வாசிப்பும் அபூர்வமான மொழிப்பயிற்சியும் உடையவர்கள் என்பது எனக்கு எப்போதுமே வருத்தம் அளிப்பது. ஒரு கட்டத்தில் கவிஞர் சுகுமாரன்கூட இவற்றை எழுதியிருக்கிறார். அப்போது அவர் கவிதைகள் எழுத முடியவில்லை. இத்தகைய எழுத்துக்கள் ஒருவரின் மொழியாளுமையை மெல்லமெல்ல அழித்துவிடும்.

கிசுகிசுக்கள் பொய்யா என்பது பற்றி எவருக்குமே ஆர்வமில்லை. ஒரு கிசுகிசு அடுத்தது வரும்போது மறைந்து விடுகிறது. மக்கள் இடைவிடாது பிரபலங்களைப்பற்றி நினைக்கச் செய்கின்றன இவை. இன்னும் ஒன்று, சினிமாவில் உள்ளவர்களுக்குத்தெரியும் இது, உண்மையான வம்புகள் அபாயகரமான செய்திகள் வெளியே வராமலிருக்கவும் இவை பயன்படுகின்றன.

பொதுவாக இலக்கியவாதிகளைப் பற்றி கிசுகிசுக்கள் குறைவு. தினமலரில் சாரு நிவேதிதா கிசுகிசுக்கள் எழுதிவருகிறார்.அம்பலம், திண்ணை எல்லாமே அவரது புனைவுகள். ‘தெறம’ ‘டிஸ்கஷன்’ போன்ற சொல்லாட்சிகளும் நடிகர்கள் நடிகைகள் பற்றிய அடைமொழிகளும் அவரது கண்டுபிடிப்பே. அதை அவரே தன் ‘ராஸ லீலா’ நாவலில் சொல்லியும் இருக்கிறார். என் நோக்கில் தமிழின் மிகச்சிறந்த கிசுகிசு எழுத்தாளர் அவரே. அவரது நாவல்களே கிசுகிசுப்பாக பேசுபவைதான். தினமலரில் அம்பலம் பகுதியில் அவ்வப்போது எழுத்தாளர்களைப்பற்றி ஏதாவது வரும். அதிகமும் என்னைப்பற்றித்தான். சாருவுக்கு என் மீது ஒரு ரகசிய மோகம். ஆனால் எழுத்தாளர்களைப்பற்றி என்ன எழுத? மேலும் தினமலர் வாசகர்களுக்கு எழுத்தாளர்களைப்பற்றி ஒன்றும் தெரியாது.

இப்போது சினிமாக்காரனாகிவிட்டமையால் நல்ல கிசுகிசுக்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் நண்பர்கள். ஜெ எழுத்தாளர்  ஆர் நடிகையுடன் சுற்றுவது சம்பந்தமாக ஏதாவது வந்தால் தயவுசெய்து நம்புங்கள்.

கடைசியாக நானும் ஒரு கிசுகிசு சொல்லிவிடுகிறேன். ‘ஆ’ வில் தொடங்கி ‘யா’வில் முடியும் நடிகர் இரண்டரை வருடமாக வளர்த்த தாடி,தலைமுடியை எடுத்துவிட்டார். கண்ணாடியில் பார்த்து ‘ அநியாயமா சின்னபையனா இருக்கானே ‘ என்று தன்னைப்பற்றி எண்ணி  ·பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

 பழைய கட்டுரைகள்

http://jeyamohan.in/?p=393
http://jeyamohan.in/?p=396

முந்தைய கட்டுரைஊட்டி-கவிதையரங்கு
அடுத்த கட்டுரைஊட்டி கவிதையரங்கம்:பி.ராமன்