இரு நிகழ்ச்சிகள்….

7-11-2013 அன்று கமல்ஹாஸனுக்குப் பிறந்தநாள். அவர் புதியதாகக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் குடியேறியிருக்கும் இல்லத்தில் சிறப்பு அழைப்பாளர்களான நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.நான் சென்னையில் இருந்தேன் என்றாலும் ஒரு தயக்கம். எனக்கு பார்ட்டிகளில் ஈடுபாடில்லை. முக்கியமான காரணம் அவற்றில் எப்படி நடந்துகொள்வது என்று நாட்டுப்புறத்தானாகிய நான் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் நண்பர் தனா என்னுடன் அவரும் வருவதாகச் சொல்லி உற்சாகமாகக் கிளம்பியதனால் செல்லலாமென முடிவெடுத்தேன்.

மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகக் காரில் இரவு ஒன்பது மணிக்கு கமல் வீட்டுக்குச் சென்றேன். வாசலில் அவரே நின்று அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார். கட்டித்தழுவி வரவேற்றார். நான் நினைத்த அளவுக்குப் பெரிய கூட்டம் இல்லை என்றாலும் எங்குபார்த்தாலும் பிரபலங்கள் என்பது ஒரு திகைப்பை உருவாக்கியது.

தமிழ்த்திரையுலகில் எனக்கு முதலில் அறிமுகமான நண்பர் கமல்.2000 வாக்கில் விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு ஒருநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘நான் கமலஹாசன் பேசறேன்’ என்று அறிமுகம்செய்துகொண்டார் ‘உங்க தீவிர வாசகன்…’

எனக்கு அப்போது யாரோ மிமிக்ரிசெய்கிறார்கள் என்ற எண்ணம்தான் இருந்தது. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. அவரே அந்நாவலில் வாசித்த பல நுட்பமான இடங்களை விவரித்துப்பேசினார்

அதன்பின் இத்தனை நாட்களில் என்னுடைய அத்தனை படைப்புகளுக்கும் உடனடி வாசகராக அவரே இருந்திருக்கிறார். கொற்றவை அவரை பெரிதும் கவர்ந்தது. தொடர்ச்சியாகப் பலமுறை கூப்பிட்டு அதைப்பற்றி பேசினார். அதன்பின் இன்றையகாந்தி. கடைசியாக அறம். அவரைக் கவராத படைப்பைப்பற்றி அவர் பெரும்பாலும் வாயைத்திறப்பதில்லை

அவர் நட்சத்திரம் என்பதனாலேயே நான் அவரைப்பற்றி இன்றுவரை ஒரு வரிகூட எழுதியதில்லை. அவரை நேரில் சந்திப்பதையே கூடுமானவரை தள்ளிப்போட்டு வந்தேன். நேரில் சந்தித்த தருணங்கள் எல்லாமே உற்சாகமானவை. அவர் பேச்சினூடாகவே எனக்குப் பல எழுத்தாளர் பெயர்கள் – உதாரணமாக கர்ட் வேன்கட் -அறிமுகமாயின என்று சொன்னால் அவரைத்தெரிந்தவர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்.

விருந்தில் மதனைப் பார்த்தேன். சற்று உடல்நலம் குன்றியிருந்தவர் சிகிழ்ச்சைக்குப்பின் தேறி நன்றாகவே இருந்தார். செய்தியறிக்கைகள் காலப்போக்கில் இலக்கியமதிப்பு பெறுவதைப்பற்றி உற்சாகமாகப்பேசினார்.

எங்கும் தெரிந்த முகங்கள். ஹிந்து என்.ராம் முதலிய பல செய்தி ஊடக நட்சத்திரங்கள். பிரியதர்சன் முதலிய இயக்குநர்கள். விஜய் முதலிய நடிகர்கள். ஆண்ட்ரியா போன்ற நடிகைகள். அனைவரும் ஏதோ ஒருவகையில் கமலின் நெருக்கமான உள்வட்டத்தினர் என்று தெரிந்தது

என்னை அறிந்தவர்களிடம் மட்டும் பேசியபடி சுற்றிவந்தேன். கிரேஸி மோகனைச் சந்தித்தேன். ஏற்கனவே இன்றைய காந்தி வாசித்துவிட்டு என்னிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். கு.ஞானசம்பந்தத்தைச் சந்தித்தேன். அப்பால் முக்கியஸ்தர்கள் நடுவே உற்சாகத்தழுவல்கள், அன்புக்கூச்சல்கள், புகைப்பட மின்னல்கள்….

கமல் நடுவே என்னிடம் வந்து நின்று தீவிரமாக உரையாட ஆரம்பித்தார். ஏற்கனவே பேசி நிறுத்திய புள்ளியில் இருந்து பேச ஆரம்பிப்பது அவரது வழக்கம். இலக்கியமும் வரலாறும் சந்திக்கும் இடங்கள் அவருக்கு பிடித்தமானவை. இலக்கியத்திற்கு ஒரு வரலாற்றுக்காரணத்தைச் சொல்வதில் எப்போதுமெ ஒரு நுட்பமான பார்வை அவருக்குண்டு

வெள்ளையானை கிடைத்தது என்றார். நான் கொண்டு வர மறந்து விட்டிருந்தேன். ‘அதெல்லாம் மை காயறதுக்குள்ள இங்க வந்திரும்’ என்றார். ஐஸ்ஹவுஸின் போராட்டம் பற்றி ஏற்கனவே அவர் வாசித்து அறிந்தவற்றைச் சொல்ல ஆரம்பித்தார். ‘எங்க ஏரியால்ல?’

நெடுநேரம் என்னிடம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அதிமுக்கியமனிதர்கள் பின்பக்கம் அவருக்காகக் காத்திருந்தனர். அவரது உற்சாகத்தில் விரிசலை உண்டுபண்ணவும் முடியவில்லை. ஒரு தம்பதிகளைச் சந்திக்க அவர் திரும்பியபோது நான் மெல்ல நகர்ந்துவிட்டேன்.

இரா.முருகன் வந்தார். ‘எழுத்துருச் சண்டை போடுங்க போங்க’ என்று கமல் தன்னை அனுப்பியதாகச் சொன்னார். அவரது நாடக அரங்கேற்றம் பற்றியும் அரசூர் நாவல் வரிசையில் மூன்றாவது நாவல் வரப்போவது பற்றியும் பேசிக்கொண்டோம்.

சாப்பாட்டில் என்னென்னவோ இருந்தது. நான் காய்கறிகள், பழங்கள் மட்டுமே சாப்பிடக்கூடியவன். சூப்பில் போடவேண்டிய பச்சைக்காய்கறித்துருவல்கள் மட்டுமே இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டேன். சாப்ப்பிட்டபின் உள்ளே சென்று வந்திருந்தவர்களின் குடும்பத்துக் குழந்தைகளுடன் கமல் பாடி ஆடி குதூகலித்ததைப் பார்த்தேன். பன்னிரண்டு மணிக்குக் கிளம்பிவிட்டேன்

அத்தனை வெளிச்சத்திற்குள்ளூம் அவர் வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் இடத்தைக் கண்டுகொள்வது ஆச்சரியம்தான். சென்னையின் உச்சநிலைமனிதர்கள் சூழ்ந்த அந்த இடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சக எழுத்தாளரிடம் தெருமுனை டீக்கடையில் நின்று பேசிக்கொள்ளும் உணர்வே இருந்தது.

10-11-2013 அன்று மாலை சென்னை பிரசாத் அரங்கில் பவா செல்லத்துரையைப்பற்றி ஆர்.ஆர்.ஸ்ரீனிவாசன் -செந்தழல் ரவி எடுத்த ஆவணப்படம் ‘பவா என்றொரு கதைசொல்லி’ வெளியீடு. நான் சென்னையில் மேலுமொரு நாள் நீடிக்கநேர்ந்தமையால் அதில் கலந்துகொண்டேன்.

பவா வழக்கம்போல திருவண்ணாமலைச் சுற்றம் சூழ வந்திருந்தார். எங்கே பார்த்தாலும் திருவண்ணாமலைக்காரர்கள். பாதிப்பேரை சென்னையில் பொருத்திப்பார்க்க முடியவில்லை. ஒருமாதிரியாக திருவண்ணாமலைக்கு ‘செட்’ ஆனபோது வணக்கம் சார் என்று சொன்ன மனிதரை திருவண்ணாமலைக்காரராக எண்ணினேன். அவர் உண்மைத்தமிழன். முன்பு பார்த்தபோது கதர்சட்டைபோட்டு பெரியமனிதராகத் தெரிந்தவர் என் மகன் போடுவதுபோன்ற இறுக்கமான சட்டையில் ஜில்லென்று இருந்தார்.

‘ரொம்ப சின்ன சட்டைசார்…வாங்கிட்டேன்..என்ன பண்றது என்று தெரியலை’ என்றார். தயார் உடைகளை வாங்கும் சிக்கல் இதுதான். என் அளவு நாற்பது. ஆனால் நாற்பது என்று சொல்லி வாங்கினால் ஒவ்வொரு சட்டையும் ஒவ்வொரு அளவாக இருக்கும்.

அஜிதன் அவன் வேலைக்காக சென்னையில் எங்கோதான் தங்கியிருக்கிறான் என்று அருண்மொழி சொல்லியிருந்தாள். சென்னையில் அவனைச் சந்திக்க மகிழ்ச்சியாக இருந்தது. மணிஜியைச் சந்தித்தேன். ஏற்கனவே ஊடகத்துறையில் பணியாற்றும் அவர் மகள் எனக்கு அறிமுகம். அகநாழிகை பொன்வாசுதேவன் அவர்களையும் பார்த்தேன். அவர்கள் இணைந்து ஒரு புத்தக்கடை மற்றும் இலக்கிய அரங்கு ஆரம்பித்திருப்பதைச் சொன்னார்.

பாலு மகேந்திராவும் வண்ணநிலவனும் வந்திருந்தனர். அவர்களிடம் என் மகனை அறிமுகம்செய்து வைத்தேன். சென்னையின் எழுத்தாளர்களும் வாசகர்களும் ஏராளமாக வந்திருந்தனர் என்று தோன்றியது. பலரை சந்திக்கமுடியவில்லை. பாரதி மணியைப் பார்த்தேன். விழாமுடிந்து சந்திப்பதற்குள் காணவில்லை.

தமிழச்சி தங்கபாண்டியனை சந்தித்தேன். உடல்நலக்குறைவு இருந்ததாகச் செய்திகளில் வாசித்திருந்தேன். தேறிவிட்டிருந்தார் என்று தெரிந்தது. சிறுகதை எழுத்தாளர் சந்திராவை சந்தித்தேன். அவர் ஜனவரியில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகச் சொன்னார். வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். குட்டி ரேவதி வந்திருப்ப்பதை விழா முடிந்தபின் பார்த்தேன். சந்திக்கமுடியவில்லை.

ஆவணப்படம் திரையிடப்பட்டது. வழக்கமான ஆவணப்படங்களுக்குரிய சம்பிரதாயத்தன்மை இல்லாமல் இயல்பாக, அந்த இயல்புத்தன்மை மிகநுட்பமான ஒரு உத்தி — எடுக்கப்பட்ட படம். ஆவணப்படங்கள் எழுத்தாளனின் எழுத்துக்குள் பெரிதாகச் செல்லமுடியாது. அவ்வெழுத்தாளனின் உடல்மொழியை, பேச்சை, அவன் வாழும் சூழலை வெற்றிகரமாகச் சித்தரிப்பதே அவற்றின் சவால். ஆர்.ஆர்.சீனிவாசனும் செந்தழல் ரவியும் அதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

நான் பவாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். மேடையிலும் வெளியேயும் ஒரே மொழியில் ஒரே உடலசைவுகளுடன் பேசும் பவா. தன்னுடைய மண்ணில் கை வீசி அவர் நடக்கும் சுதந்திர நடை. தன் மக்கள் நடுவே அவர்கொள்ளும் சொந்த உணர்வு. அவரது பேச்சில் எப்போதுமுள்ள குழந்தைத்தனம்…

பவாவின் புனைவுகள் வழியாக வெளிப்படும் வேட்டவலம் ஜமீன் பற்றிய சித்தரிப்பு இந்த ஆவணப்படத்தின் முக்கியமான சிறப்பு. கைவிடப்பட்ட அந்த அரண்மனை, அதைச்சூழ்ந்த நிலப்பகுதியின் சரித்திரம் உறங்கும் தனிமை .ஆவணப்படம் மட்டுமே காட்டக்கூடிய ஒரு விஷயம் அது. பவாவின் இனிய குடும்பத்தை, குழந்தைகளை காட்டியிருக்கலாமென்பது என்னுடைய ஆசை.

ஆவணப்படம் முடிந்தபின்னர் ஒரு சிறிய கூட்டம். முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்றாலும் நானும் பேச்சாளனாகக் கலந்துகொண்டேன். ஆவணப்படத்தை பாலு மகேந்திரா வெளியிட்டார். வண்ணநிலவன் பெற்றுக்கொண்டார். எஸ்.ஏ.பெருமாள் [தீக்கதிரின் ஆசிரியர்] விழாவுக்கு தலைமைப்பேருரை ஆற்றினார். தமிழச்சி உலக இலக்கியக்குறிப்புகளுடன் பவாவின் கதைகளையும் பொருத்திக்காட்டி தொகுப்புரை வழங்கினார். விழாவை ஒருங்கிணைத்த தமிஸ் ஸ்டுடியோ அருண் நன்றியுரை சொன்னார்.

எல்லா உரைகளும் பவா என்ற மனிதனின் பிரியத்தைப்பற்றியவையாகவே இருந்தன. பிரியத்தைக் கொண்டாடக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகவே அது நடந்து முடிந்தது.

பவா செல்லத்துரை இணையதளம்

முந்தைய கட்டுரை’மனிதர்கள் நல்லவர்கள்’ தெளிவத்தை ஜோசப்
அடுத்த கட்டுரைஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…