ஓர் இளம்நண்பர் என்னிடம் ஒரு வினாவைக் கடிதத்தில் எழுப்பியிருந்தார். ‘அறிவுஜீவி என்ற சொல்லை அடிக்கடி விவாதங்களில் பார்க்கிறேன். சென்ற பலவருடங்களாக நானும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சமகாலச் செய்திகளை வாசிக்கிறேன். அரசியலைக் கவனிக்கிறேன். இலக்கியநூல்களை வாசிக்கிறேன்.. நான் என்னை ஓர் அறிவுஜீவியாகக் கொள்ளமுடியுமா?’
நான் அதற்குப்பதில் சொன்னேன். ‘’ஒருவர் தன்னை அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்வது அவரது விருப்பம். அந்த விருப்பம்தான் மெல்லமெல்ல அவரை அறிவுஜீவி ஆக்குகிறது’
’சரி, கேள்வியை மாற்றிக்கொள்கிறேன்.தமிழ்ச்சூழலில் ஒருவர் அறிவுஜீவி என்று கருதப்படவேண்டுமென்றால் அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்?’
எனக்கு அது சற்று இக்கட்டான வினாவாகப்பட்டது. ஏனென்றால் நான் இன்று நம் பொதுஅரங்கில் வந்து நின்றுபேசும் பலரை வெறும் அரசியல்வாதிகளாகவோ வெற்றுப்பேச்சாளர்களாகவோ மட்டும்தான் நினைக்கிறேன்..
‘என் நோக்கில் ஒரு குறைந்தபட்ச அளவுகோலைக்கொண்டிருக்கிறேன்; என்று அந்த நண்பருக்கு எழுதினேன். ‘அந்த அளவுகோல் உலகமெங்கும் வெவ்வேறு முறையில் செல்லுபடியாகக்கூடியதுதான்’
ஓர் அறிவுஜீவி வாழ்நாளெல்லாம் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் அவன் பேச ஆரம்பிக்கும்போது அறிந்திருக்கவேண்டிய சில உண்டு. உலகவரலாற்றின் ஒரு சுருக்கமான வரைபடம் அவன் மனதில் இருக்கவேண்டும். ஐரோப்பாவின் வரலாற்றுக்காலகட்டங்களைப்பற்றியோ சீனாவின் மீதான மங்கோலியர்களின் ஆதிக்கக் காலகட்டம் பற்றியோ அவன் ஒன்றுமறியாதவன் என்றால் அவன் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை
அந்த வரைபடத்தில் பொருத்திப்பார்க்குமளவுக்கு அவனுக்கு இந்தியவரலாறு தெரிந்திருக்கவேண்டும். ராஜராஜசோழன் பதினெட்டாம்நூற்றாண்டில் முற்றிலும் மறக்கப்பட்ட மன்னராக இருந்தார் என்பதையோ, தக்காண சுல்தான்கள் ஷியாக்கள் என்பது அவர்களுக்கும் முகலாயர்களுக்குமான பூசலுக்கான முதற்காரணம் என்பதையோ ஆச்சரியத்துடன் கேட்குமிடத்தில் ஒருவன் இருப்பானென்றல் அவன் அறிவுஜீவியாகவில்லை.
அந்த வரைபடத்தின் ஒரு பகுதியாக தமிழகவரலாற்றைத் துல்லியமாகவே அவனறிந்திருக்கவேண்டும். தமிழகவரலற்றின் பாதிப்பங்கு இன்னமும் எழுதப்படாமலேயே உள்ளது என்றும், சேரர்களைப்பற்றிச் சில பெயர்களுக்கு அப்பால் ஏதும் தெரியாது என்றும், களப்பிரர்களைப்பற்றிய சைவர்களின் ஊகங்களே இன்னும் வரலாறாக எழுதப்பட்டுள்ளன என்றும் அவனறிந்திராவிட்டால் அவனால் தமிழகம்பற்றி எதையும் சொல்லமுடியாது.
ஆனால் வரலாற்றை அவன் வெறும் தகவல்களின் வரிசையாக அறிந்திருப்பானென்றால் அதனால் எந்தப்பயனும் இல்லை. வரலாற்றில் இருந்து பண்பாடு கிளைத்து வளரும் விதத்தைப்புரிந்துகொள்வதற்கான தத்துவமுறைகளில் அவனுக்குப் பரிச்சயமிருக்கவேண்டும். இன்றையசூழலில் வரலாற்றை மதிப்பிடுவதற்கான மிகச்சிறந்த ஆய்வுமுறை என்பது மார்க்ஸியநோக்குதான். அதாவது முரணியக்க பொருள்முதல்வாத அணுகுமுறை,
நர்மதையும் கோதாவரியும் உருவாக்கிய வண்டல் படுகைகளின் விளைச்சலின் உபரி காரணமாகத்தான் அப்பகுதியில் மக்கள்தொகை செழித்தது என்றும், அந்த மக்கள்தொகையே சாதவாகனரில் தொடங்கும் மாபெரும் தென்னகப்பேரரசுகளாகியது என்றும், அவர்களே தென்னிந்தியா முழுக்க பரவி அரசுகளையும் பெரும் குடியேற்றங்களையும் உருவாக்கினர் என்றும் விளங்கிக்கொள்ள முடியாதென்றால் ஒருவனால் வரலாறின் எப்பகுதியையும் விளக்கமுடியாது.
அப்படி பண்பாட்டையும் வரலாற்றையும் ஒன்றாகச்சேர்த்துப் புரிந்துகொள்ளும் ஒருவனால்தான் சமகால சமூகச்சூழலை விளங்கிக்கொள்ளமுடியும். ராயலசீமாவிலிருந்து குடியேறிய தெலுங்கு மக்கள் தமிழகத்தின் வரண்டநிலங்களை நிரப்பியதனால் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப்பின் தமிழக மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்ததை, அதன் விளைவாக இங்குள்ள ஒட்டுமொத்த சாதிச்சமூக அமைப்பே மாறியதை அவனால் புரிந்துகொள்ளமுடிந்தால் தமிழகத்தின் சமூகச்சூழலை எல்லா தளங்களிலும் விளக்க முடியும்.
அந்தச் சமூகச்சூழலின் ஒரு பகுதியாக இங்கே உருவான பண்பாட்டு மாற்றங்களை அவன் புரிந்துகொண்டால் மட்டுமே அவன் அறிவுஜீவி. முப்பதுகளில் பெருந்திரளான மக்கள் மூடுண்ட சாதியமைப்பில் இருந்து வெளியேறி நகரங்களுக்கு வந்து சிறுகுடும்பங்களாக ஆனதற்கும் சமைத்துப்பார் என்ற நூல்வரிசையை எழுதிய எஸ்.மீனாட்சி அம்மாள் லட்சாதிபதியானதற்குமான தொடர்பை அதைக்கொண்டுதான் அவன் புரிந்துகொள்ளமுடியும்
அவ்வாறு சமூகப்பரிணாமத்தின் ஒரு பகுதியாக அரசியலைப்புரிந்துகொண்டால் 1920 வெள்ளையர்காலத்தில் மாகாணசபைகளுக்கான முதல்பொதுத்தேர்தல் இங்கே நடத்தப்பட்ட காலம் முதல் ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான ரூபாய்களை ஏன் வேட்பாளர்கள் செலவிட்டுவந்தார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.அதன்வழியாக அந்த அரசியல் இன்று பூதாகரமாக மாறியிருப்பதை அவன் விளங்கிக்கொள்வான்
இவ்வாறு வரலாற்றிலிருந்து அரசியல் வரை அனைத்தையும் இணைக்கும் ஒரு காரணகாரியத் தர்க்கம் ஒருவனிடம் இருக்குமென்றால் அவன் இலக்கியத்தில் அதன் மிகநுட்பமான வடிவத்தைக் கண்டுகொள்ளமுடியும். க.நா.சு, தி,ஜானகிராமன் நாவல்களில் மளிகைவியாபாரிகள் சட்டென்று கோடீஸ்வரர்களாக ஆகும் சித்திரம் ஏன் வருகிறது என்று அவன் கவனிப்பான்..
சிலந்தி தன் உடலில் இருந்து நூலை எடுத்து வெவ்வேறு முனைகளை இணைத்து இணைத்து வலைபின்னுவதுபோல வரலாறு ,பண்பாடு, அரசியல் ,சமூகவியல், இலக்கியம் என அனைத்துத் தளங்களில் இருந்தும் தன் அடிப்படைச்சிந்தனைகளை தொட்டெடுத்து இணைத்துப் பின்னிக்கொண்டே செல்லும் ஒரு செயல்பாடு ஒருவனுக்குள் இருக்குமென்றால் மட்டுமே அவனை அறிவுஜீவி என்று சொல்லமுடியும்
அதற்குமேல் அரசியலிலோ இலக்கியத்திலோ அறிவியலிலோ அவனுக்கென தனிப்பட்ட மேலதிகத் திறமைகள் இருக்கலாம். அத்துறைகளில் அவன் சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் ஒன்றுண்டு, ஒருவனின் தேர்ச்சி தன் துறைக்குள் மட்டுமே என்றால் அவன் ஒருபோதும் அறிவுஜீவி அல்ல.
அந்த சிந்தனை வலையை தன்னுள் கொண்ட ஒருவனின் எல்லா பேச்சுகளிலும் அதுவெளிப்படும். எந்தக்கருத்தையும் முன்வைக்கும்போதும் சரி எதிர்கொள்ளும்போதும் சரி ஒரு வரலாற்றுத்தர்க்கத்தை . பண்பாட்டு விளக்கத்தை அவன் முன்வைப்பான். எந்த ஒரு வினாவும் அவனுடைய சிந்தனைகளை விரித்துக்கொள்ளவே அவனுக்கு உதவும்.
ஆகவே ஓர் அறிவுஜீவி எந்நிலையிலும் புதியசிந்தனைகளை வரவேற்பவனாகவே இருப்பான். எந்தப்புதிய கருத்தும் ஏதோ ஒரு வாசலைத் திறக்கக்கூடியது என அவன் அறிந்திருப்பான். நேற்று அபத்தமாக, ஆபத்தானவையாக கருதப்பட்ட எத்தனையோ கருத்துக்கள் காலப்போக்கில் சிந்தனையின் பகுதியாக ஆகிவிட்டிருப்பதை அவன் அறிந்திருப்பான். புதியகருத்துக்களால் சீண்டப்படாதவனாகவும் அவற்றால் மிகையாக உற்சாகம் கொள்ளாதவனாகவும் இருப்பதே ஓர் அறிவுஜீவிக்கான முதல்தகுதி என்று சொல்லமுடியும்.
உணர்ச்சிவசப்படுவதும் சரி, உணர்ச்சிகளுடன் உரையாடுவதும் சரி, உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதும் சரி ஒருபோதும் அறிவுஜீவிகளின் வேலையாக இருக்கமுடியாது. அது வரலாறெங்கும் அரசியல்வாதிகளின் வேலையாகவே இருக்கிறது. அறிவுஜீவி சிந்தனையின் தொடக்கத்தை நிகழ்த்தக்கூடியவன் மட்டுமே. ஆகவே திட்டவட்டமாக தர்க்கத்தின் வழியையே அவன் தேர்ந்தெடுப்பான். தர்க்கம் ஒருபோதும் உணர்ச்சியின் மொழியில் அமைந்திருக்காது.
அனைத்துக்கும் மேலாக அறிவுஜீவியை பன்மையாக்கக்கூடியவன், கலைத்துக்கொண்டே இருக்கக்கூடியவன் என்று சொல்லலாம்.எந்த கேள்விக்கும் ஒற்றைப்படையான எளிய பதிலைச் சொல்ல அவனால் முடியாது.வரலாற்றையும் பண்பாட்டின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு அவன் பதில்சொல்வான் என்றால் அந்தப்பதில் ஒன்றிலிருந்து ஒன்றாக முளைத்து பலவற்றைத் தொட்டு விரிவதாகவே இருக்கும். ஆகவே குவிப்பதல்ல விரிப்பதே அறிவுஜீவியின் வேலை. கோஷங்களை உருவாக்குவதல்ல கோட்பாடுகளை நோக்கிக் கொண்டுசெல்வதே அவனுடைய சவால்.
அந்தப் பணியை ஏற்றுக்கொண்ட அறிவுஜீவி ஒருபோதும் மக்களுக்குப் பிரியமானவற்றைச் சொல்லக்கூடியவனாக இருக்கமாட்டான். ஏனென்றால் மக்கள் ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்தவற்றையும் அவர்கள் நம்புபவற்றையும் கேட்கவே பிரியப்படுகிறார்கள். புதியவற்றைச் சொல்வதனாலேயே அறிவுஜீவிகள் என்றும் மக்களின் நிம்மதியைக் குலைப்பவர்களாக, அவர்களைக் கொந்தளிப்படையச்செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்தியாவின் சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் அறிவுஜீவிகள் பத்துபேரை எடுத்துக்கொண்டால் நான் இப்படிப்பட்டியலிடுவேன். விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், அவனீந்திரநாத் தாகூர், காந்தி, அம்பேத்கர், எம்.என்.ராய், டி.டி.கோசாம்பி, ஜே.சி.குமரப்பா, தாராசங்கர் பானர்ஜி, சிவராம காரந்த். அவர்களைக் கற்றிராத ஒருவர் அறிவுஜீவி என்று இன்று சொல்லிக்கொள்ளமுடியாது.
[தி இந்துவில் வெளியான கட்டுரை ] Nov 12, 2013 ]
அவனீந்திரநாத் தாகூர்-நவீன ஓவியம்
அம்பேத்கரின் தம்மம்
காந்தியும் கிராமசுயராஜ்யமும் ஜே சி குமரப்பா
தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம்
சிவராமகாரந்தின் மண்ணும் மனிதரும்