உலகம் பார்க்கும் சாளரம்

பூனை அசுவாரஸ்யமாய் அடியெடுத்து வைப்பது போல எந்த ஆரவாரமும் இல்லாமல் மந்தமாக சில நிகழ்வுகள் நிகந்துவிடுகின்றன. பின்னர் கொஞ்சமும் எதிர்பார்த்திராத விதமாய் அதன் விளைவுகள் பெருகி வரும் போது, தொடக்க நிகழ்வு அழுத்தமான தடம் ஆகிறது.

கேரளாவில் கூலி வேலை செய்யும் ஏழ்மையான நிலையில் இருக்கும் ஒரு பெண், சுண்ணாம்புக் காரை உதிர்ந்த சிறிய குடிலில், தலைமுடியை கவனமில்லாமல் கொண்டையாகக் கட்டி குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு சாதாரணமாக பாடிய ஒரு பாடல் யூட்யூப் பாடல் இன்று அவரை ஒரு பின்னணிப்பாடகி ஆக்கியிருக்கிறது.

அடூரைச் சேர்ந்த சந்த்ரலேகா என்னும் பெண், ‘ராஜஹம்ஸமே…’ என்னும் பாடலை சமையலறையில் பாடிக்கொண்டிருக்கும் போது, வீட்டிற்கு வந்த அவர்களது உறவினர் ஒருவர் அதைக் கேட்டு ஒளிப்பதிவு செய்து யூட்யூபில் வலையேற்றியிருக்கிறார். இது ஒருவருடத்திற்கு முன்பு நடந்தது. எப்போதும் போல திறமை எங்கிருக்கும் என்று யாருக்குத் தெரியும்? எந்தப் இசைப்பயிற்சியும் இல்லாமல், அழகான அந்த மெல்லிசையை சிறப்பாகப் பாடியிருக்கிறார். மிக அருமையான அவர் குரல் மக்களை இழுத்தது. இன்று பல லட்சக்கணக்கானவர்கள் அந்த படத்துண்டைக் கண்டிருக்கிறார்கள். ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் ‘லைக்’ செய்யபட்டு பரவலாகப் பகிரப்பட்ட அந்த ஒளிப்படத்துண்டு, அவரது வாழ்க்கையில் ஒளியேற்றியிருக்கிறது.
http://www.youtube.com/watch?v=XXFn7abBQCE

டிவி, பத்திரிகைகளில் பேட்டி, முதல் பின்னணிப்பாடகி வாய்ப்பு, அடுத்து ஸ்ரயா கோஷல் பாடுவதாக இருந்த பாடல் வாய்ப்பு, தமிழில் பாடுவதற்கு வாய்ப்பு என பொழுது விடிவது போல பரபரவென அவர் வாழ்க்கை பிரகாசமாகிவிட்டது. அந்த சந்தோஷம், அதனால் வரும் தெளிவு அவர் முகத்தில் தெரிகிறது. கிராமத்து கூச்சத்துடன் அனைத்தையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்கிறார். இப்பொழுது அடூர் சந்த்ரலேகா என யூட்யூபில் பயங்கரப் பிரபலம்.

இதே மாதிரி முன்னமொருமுறை நடந்த சம்பவம் நண்பர் ராமச்சந்திர சர்மா சொன்னது ஞாபகம் வருகிறது. ராஜஸ்தானில் பிக்கானிர் பகுதியில் எளிமையான ஒரு குடிசையில் கிராமத்துக்காரர் ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கபீரின் பாடலைப்பாட, அதை ஒரு பெண்மணி வீடியோவாகப் படிவு செய்து பகிர, அந்தக் கிராமத்துக்காரரின் திறமை உலகம் முழுவதும் தெரிய வந்தது. அவர் தான் மிர் முக்தியார் அலி என்னும் சூஃபி பாடகர். இன்று அவர் தொலைக்காட்சிகளில் கபீர் பஜன், உபன்யாசம், சினிமாவில் பின்னணி, வெளிநாடுகளில் கச்சேரி என பிரபலம். தலைமுறை தலைமுறயாக எந்தவித பிராபல்யமும் இல்லாமல் சூஃபி பாடல்களைப் பாடி வரும் குடும்பத்திற்கு இன்று இவர் வழியாக ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறது, அதன் மூலமாக அந்த இசைப் பாரம்பரியத்திற்கும்.
http://www.youtube.com/watch?v=jZFJVoEtaPU

திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பது மண்ணடியில் காத்திருக்கும் விதைக்கு மழை கிடைத்தது போன்றது. உயிர்ப்புடன் துளிர்த்து வளரும்.

பிரகாஷ் சங்கரன்

முந்தைய கட்டுரை’இருப்பியல்’ – தெளிவத்தை ஜோசப்
அடுத்த கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 5