காந்திய மருத்துவம்

அன்புள்ள ஜெ,

காந்தியைப் பற்றி எழுதும்போது நீங்கள் காந்தியின் மருத்துவச் சோதனைகளைப் பற்றி எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். உங்களுக்கு மாற்று மருத்துவத்தில் ஆர்வம் உண்டு என்பதனால் இந்த எதிர்பார்ப்பு. காந்தியின் மருத்துவக்கோட்பாடுகள் எந்த அளவுக்கு இயற்கை மருத்துவத்துடன் ஒத்துப்போகின்றன? அவரை ஒரு முன்னோடி என்று சொல்ல முடியுமா? நான் இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டவன். குறிப்பாக நீர் மருத்துவத்தை நான் வெற்றிகரமாக செய்து என்னுடைய நெடுநாள் ஆஸ்துமாவை குணப்படுத்திக்கொண்டேன்.

ராஜாராமன் அனந்தராமன்

அன்புள்ள ராஜாராமன்,

காந்தியின் மருத்துவச் சோதனைகள் மேல் எனக்கு தனிப்பட்டமுறையில் ஈடுபாடுண்டு. ‘அறிவுஜீவி என்பவன் கண்டிப்பாக தன் உடலை கூர்ந்து அவதானிப்பவனாக இருப்பான்’ என்றார் காந்தி. தேசத்தை கூர்ந்து கவனித்த அளவுக்கே தன் மலக்குடலையும் கூர்ந்து கவனித்தார் என்பதே நான் காந்தியிடம் கண்ட சிறப்பு.

சுந்தர ராமசாமியின் நண்பரான டாக்டர்.பத்மநாபன் என்னிடம் காந்தியின் இயற்கை மருத்துவ ஆர்வத்துக்கு இந்தியாவில் வேர் இல்லை, அது முழுக்க முழுக்க மேலைநாட்டில்  உருவான கருத்து என்று ஒருமுறை சொன்னார். அது கிட்டத்தட்ட உண்மை. அதாவது காந்தியின் வைஷ்ணவ மரபில் மருத்துவம்சார்ந்த சில நம்பிக்கைகளும் ஆசாரங்களும் இருந்தன. ஆனால் இயற்கை மருத்துவத்துக்கான கருதுகோள்களை, தர்க்கங்களை காந்தி மேலைநாட்டில் இருந்தே எடுத்துக்கொண்டார்.

காந்தி லண்டனில் இருந்த காலத்தை புரிந்துகொண்டால்தான் அவரை நாம் புரிந்துகொள்ள முடியும். அது தொழிற்புரட்சியின் பொற்காலம். தொழில்நுட்பம் மீது பெரும் மோகம் உருவாகி உலக அறிவுஜீவிகளை எல்லாம ஆட்கொண்ட காலம். அதே சமயம் அதுதான் தொழில்நுட்பத்துக்கு எதிரான ஐயங்கள் உருவான காலம். ஒரு நூறாண்டுக்கு முன்னர் உருவான ஐரோப்பிய இயற்கைவாதம் அதன் உச்சகட்ட தீவிரத்துடன் பல அறிவுத்துறைகளில் படர்ந்தேறிய காலம். காந்தியில் இக்காலகட்டத்தின் முரணியக்கம் எப்போதும் செயல்பட்டது

ஐரோப்பிய இயற்கைவாதம் இயற்கையை மானுடனை ஆளும் மகாவல்லமையாக உருவகித்தது. மனிதன் அதன் சிறு துளியே ஒழிய அவன் அதன் எஜமானன் அல்ல. இயற்கை கடவுளின் இடத்தில் வைக்கப்பட்டது. இயற்கைக்கு மனிதனைப்பற்றிய திட்டங்கள் உண்டு. மனிதனை அது வழிநடத்துகிறது. ஆகவே இயற்கைக்கு ஒத்திசைந்து வாழ்தலே மிகச்சிறந்த வாழ்க்கை. இயற்கையில் மனிதன் உணர்ந்தாகவேண்டிய எல்லா ஞானங்களும் உறைகின்றன. இவையெல்லாம்தான் இயற்கைவாதத்தின் கொள்கைகள். பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ரூஸோ, வால்டேர், ரஸ்கின்,எமர்சன், தோரோ  போன்ற அறிஞர்கள் நவீன காலகட்டத்திற்குரிய ஒரு சிந்தனையாக இயற்கைவாதத்தை வளர்த்தெடுத்தார்கள்.

View Full Size Image

லூயிஸ் குஷ்னே

இந்த இயற்கைவாதத்தில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான மருத்துவ அணுகுமுறையே இயற்கைமருத்துவம் எனலாம். ஜெர்மனியில்தான் இயற்கைமருத்துவம் பிறந்தது. ·பாதர் செபாஸ்டியன் நீப் டாக்டர் பெஞ்சமின் லஸ்ட்[ Dr Benjamin Lus ]லூயிஸ் குஷ்னே ஆகியோரை  [Louis Kuhne 1835-1901] இயற்கைமருத்துவத்தின் முன்னோடிகளாகச் சொல்வது வழக்கம். இதன் முதல் சித்தாந்தி என்று  லூயிஸ் குஷ்னெ கருதப்படுகிறார். அவரது குணப்படுத்தல் குறித்த புதிய அறிவியல் [Neo Naturopathy: The New Science Of Healing Or The Doctrine Of Unity Of Diseases] என்ற நூல் ஒரு புதிய வழிமுறையை முன்வைத்தது.

இந்நூலை இன்று வாசித்தால் ஒரு புது மதத்தை நிறுவும் நூல் போன்று தீவிரமான நம்பிக்கையை முன்வைப்பது இது என்ற எண்ணம் ஏற்படுகிறது. இயற்கை என்ற தெய்வத்திடம் சரணடைதல் என்பதையே ஒரு சிகிழ்ச்சைமுறையாகக் கொண்டது என்று சொல்லலாம். ஒரு மதத்தை தழுவிக்கொண்டவர் தன் மனமாற்றத்தயும் உய்வையும் சொல்வதைப்போல இந்நூலின் முகப்புக்கட்டுரையில் குஷ்னே தனக்கு எப்படி குடல் புற்றுநோய் வந்தது எவ்வாறு அதிலிருந்து இயற்கை மருத்துவம் மூலம் வெளியே வந்தேன் என்று சொல்கிறார். ஏன் ஏசுவால் மரணத்தில் இருந்து மீட்கபப்ட்ட லாசரஸ¤டன் தன்னை ஒப்பிடுகிறார்.

குஷ்னேயின் இயற்கை மருத்துவ வழிகளை மேலும் முன்னெடுத்தவர் என்று ஜெர்மானிய அறிஞர் அடால்ப் ஜஸ்ட் [ Adolph Just 1838-1936]  சொல்லப்படுகிறார். ,   அவரது புகழ்பெற்ற நூல் ‘இயற்கைக்குத் திரும்புதல்’ [Return to Nature] காந்தி இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை மிக விரும்பி மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறார். இவ்விரு நூல்களின் மொழியாக்கங்களும் மலையாளத்தில் கிடைக்கின்றன. தமிழில் அடால்ப் ஜஸ்டின் இயற்கைக்குத் திரும்புதல் நூலின் ஒரு மொழியாக்கம் வந்துள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஜெர்மானிய இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இவை.

1. இயற்கையின் ஒரு பகுதிதான் மனிதன். ஆகவே இயற்கையோடு இணைந்த நிலையே மனிதனின் இயல்பான ஆரோக்கியமான நிலை. நோய் என்பது அந்த இயல்பானநிலையில் இருந்து வழுவுதல்

2. இயற்கையில் இருந்து விலகியதனால் வரும் நோயை இயற்கைக்குத் திரும்புதல் வழியாகவே தீர்க்க முடியும்

3. நோய் என்பது மனித உடலில் கழிவுகள் தேங்குவதனால் உருவாவது. கழிவுகள் என்பவை இயர்கையுடன் ஒவ்வாத பொருட்கள். அவற்றை வெளியேற்றுவதே சிகிழ்ச்சை

4 மனித உடல் ஐந்து அடிப்படைப்பூதங்களால் ஆனது. மனித உடலின் நோய்கலை அந்த பருப்பொருட்களை வைத்தே குணப்படுத்த முடியும்.

காந்தியின் மருத்துவக் கொள்கைகள் இந்த மரபைச் சார்ந்தவை. காந்தி இந்த மரபில் இருந்து பெற்றுக்கொண்ட கொள்கைகளை தனக்கே உரிய முறையில் தன் உடலில் பரிசோதனைசெய்து பார்த்தார்.

காந்தியின் மருத்துவச் சோதனைகள் பெரும்பாலும் உணவு-கழிவு ஆகியவற்றைச் சார்ந்தவையாக இருப்பதைக் காணலாம். உள்ளே செல்லும் உணவை கண்கானித்துக்கொண்டே இருந்தார். காந்தியின் உணவு குறித்த கொள்கைகள் சில அவரது எழுத்துக்கள் வழியாக தெரிகின்றன

1.மிகக்குறைந்த உணவே மனிதனுக்குப் போதுமானது. போதுமான உணவுக்கு மேல் உண்ணக்கூடாது

2 ருசி என்பது ஒரு மனபழக்கம்தான். ஆகவே ருசிக்காக உண்ணக்கூடாது. நல்ல உணவில் ருசியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்

3 இயற்கையில் இருந்து வரும் உணவே நல்ல உணவு. அவை பழங்கள் காய்கறிகள் தேன் பால் முதலியன. ரசாயன உணவுகள் விஷம்.

4 மாமிச உணவு மனிதனுக்கு தேவையற்றது. பிற உயிர்களைக் கொல்வதனால் அது கருணை இல்லாத உணவும்கூட

5 .பட்டினி என்பது மனித உடலுக்கு இயறகை விதித்த ஒரு நெறி. ஆகவே பட்டினி விரதம் உடலின் சமநிலையை நிலைநாட்ட உதவியானது.

இவற்றை வாழ்க்கையில் செயல்படுத்திப்பார்த்த காந்தி தன் சோதனைகளின் விளைவுகளை பதிவும்செய்தார். உணவிற்கும் உடலுக்குமான உறவு என்பது மலத்தில் தெரியும் என்று எண்ணினார்.

ஆனால் காந்தியின் சோதனைகளில் கொஞ்சம் ஒவ்வாததாக இரு விஷயங்கள் உள்ளன. உப்புநீரால் எனிமா கொடுத்துக்கொள்வதை காந்தி பரிந்துரைக்கிறார். அது மிகவும் இயற்கையானது என்று அவர் நினைத்தார். அதை குஷ்னே பரிந்துரைக்கிறார் என்பதே காரணம். அது இயற்கையானதல்ல என்பதையும் அது மனிதனுக்குச் செயற்கையான ஒரு வழக்கத்தை அளிக்கிறது என்பதையும் காந்தி கருத்தில் கொள்ளவில்லை.

காய்ச்சல் இருக்கும்போது மலம் இறுகிவிடக்கூடும். அப்போது உடற்கழிவை வெளியேற்றியாகவேண்டிய நிலையில் எனிமா கொடுப்பது உதவலாம். பலசூழல்களி,குறிப்பாக முதுமையில், குடற்சிக்கல்களினாலும் எனிமா தேவைப்படலாம். ஆனால் காந்தி அனேகமாக தனக்கு தினமும் எனிமா கொடுத்துக்கொண்டார். காந்திய சிகிழ்ச்சையின் மிகத்தவறான வழிமுறை இது என நான் நினைக்கிறேன்.

இரண்டாவதாக, பால். மனிதன் இன்னொரு மிருகத்தின் பாலை உண்பதென்பதும் இயற்கைக்கு மாறானதே. இன்றைய இயற்கை உணவுநிபுணர்கள் அதை ஒத்துக்கொள்வதில்லை. பாலில் குட்டிகள் விரைவாக வளர்வதற்கு தேவையான அதிகளவுச் சத்துக்கள் உள்ளன. அவை வளர்ந்த மனிதனுக்குத் தேவையில்லை என்பதுடன் தீங்கானவையும்கூட

ஆனால் காந்தி ஆட்டுப்பாலை பெரிதும் விரும்பி அருந்தியதுடன் அதை சாத்வீக உணவாக தொடர்ந்து பரிந்துரை செய்கிறார். தேவையான புரோட்டீனுக்கு பால் இன்றியமையாதது என அவர் நினைத்தார். அவரது ஓய்வில்லாத சுறுசுறுப்பால்தான் அவர் அந்தப்பாலை செரித்துக்கொண்டார். எளிமையான சாதாரண வாழ்க்கையை அவர் வாழ்ந்திருந்தால அந்தப்பால் அவரது அடிவயிற்றை பருக்கசெய்து நோயை விளைவிக்க ஆரம்பித்திருக்கும். இதுவும் காந்திய சிகிழ்ச்சையின் தவறான அம்சம்.

இயற்கைப்பொருட்களைக் கொண்டு சிகிழ்ச்சை அளிப்பதை காந்தி நம்பி செயற்படுத்திப் பார்த்தார். நீர்ச்சிகிழ்ச்சை, மண்சிகிழ்ச்சை ஆகிய இரண்டும் அவருக்கு பலசமயம் கைகொடுத்திருக்கின்றன. இதமான வெப்பம் கொண்ட நீரை அதிகளவில் உள்ளே செலுத்துவதன் வழியாக கழிவுகளை வெளியேற்றுதல். நீரில் குளிப்பதன் வழியாக உடலின் சமநிலையை பேணுதல் ஈரப்போர்வையை போர்த்திக்கொண்டு உடல்வெப்பத்தை தணித்தல் போன்றவற்றை அவர் செய்து பார்த்திருக்கிறார். அதேபோல உடலில் களிமண்ணைப் பொத்திக்கொண்டு செய்யும் மண்சிகிழ்சையையும் அவர் செய்து நோக்கியிருக்கிறார்.

காந்தியின் சிகிழ்ச்சைமுறை அவர் செய்து பார்த்த சோதனைகளைச் சார்ந்த சில கருத்துக்களே ஒழிய அது ஒரு தனியான மருத்துவ நோக்கு அல்ல. அவர் பரவலாகப் பிறருக்கு அச்சிகிழ்ச்சையைச் செய்து பார்க்கவில்லை. ஒட்டுமொத்தமாக ஒரு நோக்கை உருவாக்கிக்கொள்ளும் அளவுக்கு அவரிடம் தரவுகள் இல்லை

காந்தியின் உலகப்பார்வை இயற்கையை ஒட்டிய ஒரு வாழ்க்கையை கற்பனை செய்வது. அந்த பார்வைக்கு உகந்த முறையில் ஒரு மருத்துவத்துக்காக அவர் முயன்றார். அவரது முறைகளை பின்னர் காந்தியர்கள் பெரிய அளவில் முன்னெடுக்கவில்லை.

காந்தியின் முறை இயற்கை சிகிழ்சைதான். இயற்கை சிகிழ்ச்சை என்பது உண்மையில் நோய்குணமாக்கல் அல்ல. நோயைத்தவிர்த்தல். நோயில்லாத வாழ்க்கையை நடைமுறையாக்கிக் கொள்ளுதல். அதைத்தான் காந்தியும் சொல்கிறார்.

காந்தியின் சிகிழ்ச்சை முறை என்பது விஷமொறுத்தல் மட்டுமே என்று சொல்லவேண்டும். [Detoxication] மேலைநாட்டு இயற்கைச்சிகிழ்ச்சைமுறையில் இது அலோபதியில் இருந்து கடன்பெற்றது. அவர்கள் பழைய ரசவாதிகளிடம் இருந்து பெற்றார்கள். உடலில் தேங்கிய விஷத்தைக் களைய நரம்புகளைவெட்டி ரத்தத்தை பெருகவிடுதல் அவர்களின் வழி. அதையே கொஞ்சம் சாந்தமான முறையில் இயற்கைவாதிகள் செய்தார்கள். அதன் அடிபப்டை எப்படியோ காந்திமனதில் ஏறிவிட்டது. அதையே செய்துகோண்டிருந்தார்

கழிவகற்றல் என்பது மிகமுக்கியமான ஒரு நோய்தீர்ப்புமுறையே. ஆனால் அதுவே எல்லாம் அல்ல. காந்தி அதை ஆழமாக நம்பினார். நீர் சிகிழ்ச்சை மண்சிகிழ்ச்சைமூலம் எல்லா உடல்விஷங்களையும் அகற்றி உடலைத் தூய்மை செய்துவிடலாம் என்று எப்போதும் செய்துகொண்டிருந்தார். என்ன விசித்திரம் என்றால் அது அவருக்குச் சரியாகவே வேலைசெய்தது. ஆகவே அதை விதியாக ஆக்கினார்.

அலோபதி நுண்ணுயிர்கள்– உடலின் எதிர்ப்பு என்ற இருமை சார்ந்து சிகிழ்ச்சையை வரையறை செய்கிறது. ஆயுர்வேதம் வாதபித்தகபம் என்னும் மூன்று நிலைகளின் சமநிலையாக மும்மை சார்ந்து சிகிழ்ச்சையை வரையறை செய்கிறது. இவை முரணியக்கம் கொண்டவை ஆதலினால் மிகவும் சிக்கலாக வளரும் தன்மை கொண்டவை. நவீன இயற்கைச்சிகிழ்ச்சையும் இன்று உடலுக்கும் வெளியே உள்ள இயற்கைக்குமான உரையாடலாக சிகிழ்சையை உருவகித்துக்கொள்கிறது. காந்தியின் முறை மிக ஆரம்பகட்டத்திலேயே நின்றுவிட்ட ஒன்று.

அத்துடன்  காந்தி இயற்கை சிகிழ்ச்சையின் அடிப்படையாகக் கருதப்படும் சில விஷயங்களை கருத்தில் கொள்ளவில்லை. ஒன்று மனம். அமைதியான மனம் என்பது நோயற்ற வாழ்க்கையின் அடிப்படையான தேவை. அதற்கான மனநிலைகளை உருவாக்கிக் கொள்வதும் மனப்பயிற்சிகள் மூலம் மனதை சீராக்குவதும் இயற்கை சிகிழ்ச்சையின் அடிப்படை.

காந்தி இயற்கைசிகிழ்ச்சையில் சமைக்காத உணவுக்குள்ள இடத்தை புரிந்துகொள்ளவில்லை. கூடுமானவரை சமைக்காத உணவு அல்லது முற்றிலும் சமைக்காத உணவு என்பது இயற்கை உணவும் இயற்கை சிகிழ்ச்சையும் பிரிக்க முடியாதவை. உப்பு, சீனி, வேகவைத்த மாவுப்பொருள் ஆகிய மூன்றும் மூன்று வெள்ளை அரக்கர்கள் என்றே இயற்கை உணவு கூறும். தூயநீரே மனிதனுக்கு ஆகச்சிறந்த பானம். காந்தி சமைத்த உணவை அதிகம் உண்டிருக்கிறார்.

தேன் கூட இயற்கை உணவில் தவறான ஒன்றே. அது இயற்கையில் வேறு நோக்கத்துக்காக உருவாக்கபப்ட்ட ஒன்று. அந்த அளவுக்கு செறிவூட்டப்பட்ட ஒன்று மனிதனுக்கு தேவையில்லாதது. ஆனால் காந்தி தேனை விரும்பி உண்டிருக்கிறார்

ஆனாலும் இயற்கை உணவை இன்று உலகமெங்கும் கைகொள்பவர்களுக்கு காந்தி ஒரு முக்கியமான முன்னுதாரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பல துறைகளில் காந்தி முக்கியமான தொடக்கங்களை உருவாக்கியிருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை இயற்கை மருத்துவத்தை தொடங்கி வைத்தவர் அவரே

ஜெ

குஷ்னே யின் நூல் முழுமையாக
ஜஸ்டின் நூல் முழுமையாக

காந்தி கடிதங்கள்

காந்தியும் இந்தியும்

காந்தியும் சாதியும்

முந்தைய கட்டுரைகுமார் 60 கடிதங்கள்
அடுத்த கட்டுரைமிஷனரிவரலாறு, மதம், கடிதங்கள்