எழுத்துரு விவாதம் ஏன்?

தமிழ் எழுத்துரு பற்றிய விவாதங்களில் பெரும்பாலும் எல்லாக் குரல்களும் ஒலித்துவிட்டன என்று நினைக்கிறேன். இனி இந்த விவாதத்தை நான் ஏன் எழுப்பினேன், இதன் சாராம்சம் என்ன என்று எதை நினைக்கிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன்.

[ஏற்கனவே அக்கட்டுரை வெளியான அன்று பிரசுரிக்கப்பட்ட எதிர்வினைக்குறிப்பிலேயே இதைக் கோடிகாட்டியிருந்தேன். என்னை வாசிப்பவர்களுக்கு இவ்விவாதத்தை நான் ஏன் முன்வைக்கிறேன் என்பது தெளிவாகவே தெரிந்திருக்கும். தமிழை உடனே ஆங்கில எழுத்துக்களில் எழுத ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லுமளவுக்கோ, உலகமொழிகள் எல்லாம் தனித்தன்மையை உதறிவிடவேண்டும் என்று ஒற்றைப்படையாக வாதிடுமளவுக்கோ நான் அடிமுட்டாளல்ல என்றாவது என் எழுத்துக்களை வாசிப்பவர்கள் ஊகிக்க முடியும்]


பகுத்தறிவும் கருத்துச் சுதந்திரமும்…

சிலமாதங்களுக்கு முன்பு லடாக் பயணத்தில் rationality என்ற சொல்லுக்கான இந்தியமொழிச் சொற்கள் என்னென்ன என்று பேசிக்கொண்டோம். நானறிந்து தமிழல்லாத எந்த மொழியிலும் அதற்கான மிகச்சரியான சொல் கிடையாது! ‘பகுத்தறிவு’ என்பது மிகமிகச் சரியான சொல்லாக்கம்.

பதினெட்டாம் நூற்றாண்டில்தான் அச்சொல்லுக்கான இன்றைய வரையறை ஐரோப்பியமொழிகளில் உருவாகி வந்தது. ‘புறவயமான காரணகாரிய தர்க்கத்தை மட்டும் எல்லா சிந்தனைகளுக்கும் அடிப்படையாகப் பயன்படுத்துவது’ என்று அதை வரையறை செய்யலாம்.

அன்றைய ஐரோப்பா மத நிறுவனங்களின் பிடியில் இருந்தது. அவை காரணகாரியத் தர்க்கத்தை பெரும்பாவமாக முன்வைத்தன. உணர்ச்சிகரமான கண்மூடித்தனமான முழுமையான நம்பிக்கையே ஆன்மீகம் என விளக்கின. ஆகவே பகுத்தறிவு வாதம் அங்கே பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. கிட்டத்தட்ட ஒருநூற்றாண்டு தேவைப்பட்டது, பகுத்தறிவு அங்கே பொதுமக்கள் மனத்தில் நிலைநாட்டப்படுவதற்கு.

பகுத்தறிவு என்பதை ஒற்றைச் சொல்லில் விளக்குகிறோம். ஆனால் அது ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பல கருதுகோள்களில் ஒன்று. தனிமனிதன்- சுதந்திரசிந்தனை- ஜனநாயகம் போன்ற பல அடிப்படைகளுடன் பிரிக்கமுடியாதபடி கலந்தது அது.,

கண்மூடித்தனமான, உணர்ச்சிகரமான நம்பிக்கைகள் மக்கள் தங்களை பெருந்திரளாக உணரும்போது உருவாகக்கூடியவை.. அந்தப்பெருந்திரள் உணர்ச்சிகள் பற்பல நூற்றாண்டுகளாக இருந்து வரக்கூடிய பழங்குடி அடையாளங்கள் சார்ந்தவை. அந்த அடையாளங்களை நிலப்பிரபுத்துவகாலகட்ட அதிகார அமைப்புகள் மேலும் வலுவாக நிறுவியிருக்கும்.

பழங்குடிமனமும் சரி, நிலப்பிரபுத்துவ மனமும் சரி, தன்னை ஒரு பெருந்திரளின் சிறிய துளியாக மட்டுமே உணர்கின்றன. அந்த திரள் அடையாளத்தை உதறி மனிதன் தன்னை தனிமனிதனாக உணர ஆரம்பித்ததே நவீன காலகட்டத்தின் பிறப்புக்கு அடிகோலியது. ‘நான், என் சிந்தனை, என் தரப்பு’ என ஒருவன் சொல்ல ஆரம்பிக்கையில் அவன் தன்னைச்சூழ்ந்துள்ள பெருந்திரளின் உணர்ச்சிகளில் இருந்து வெளியே சென்றுவிடுகிறான். மனிதகுல வரலாற்றில் அது ஒரு பெரிய தொடக்கம்.

அவ்வாறு தனித்துச் சிந்திக்க ஆரம்பிக்கும் மனிதனை அவனுடைய சூழலில் உள்ள பெருந்திரள்மனப்பான்மை ஒடுக்குகிறது. அவனுடைய தனிச்சிந்தனையை அது அத்துமீறல் என்று முத்திரையிட்டு தண்டிக்கிறது. அவன் சூழலின் ஒட்டுமொத்த சிந்தனையை மீறி சுயமாக சிந்திப்பதற்காக போராடுகிறான். அதைத்தான் நாம் சிந்தனைச்சுதந்திரம் என்கிறோம். நெடிய போராட்டம் வழியாக அதை அடைந்தது ஐரோப்பா.

தனிமனிதன் உருவான பின்னரே ஜனநாயகம் பிறந்தது. ஆட்சியதிகாரத்தில் ஒவ்வொருவரும் பங்குகொள்வதையே நாம் ஜனநாயகம் என்கிறோம். மக்கள் கூட்டங்கள் தலைமைகளின் கீழ் திரண்டு பேரம்பேசி அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்வதற்குப்பெயரல்ல ஜனநாயகம். அது எல்லா காலத்திலும் இருந்ததுதான். மக்கள் ஒவ்வொரு தருணத்திலும் தனிமனிதர்களாகவே செயல்பட்டு அதிகாரத்தில் பங்கேற்கும்போதே ஜனநாயகம் பிறக்கிறது.

அந்த ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பது பகுத்தறிவு. ஒரு மனிதன் தன்னுடைய சொந்த அறிதல்கள் மற்றும் அனுபவங்களைக்கொண்டு புறவயமாகச் சிந்தித்து நிதானமாக சரிதவறுகள் பற்றிய முடிவுகளை எடுப்பதையே பகுத்தறிவு என்கிறோம்,

ஆகவே பகுத்தறிவின் நேர் எதிர்தரப்பு என்பது ‘நம்பிக்கை’தான். காரணகாரியமற்ற நம்பிக்கை, உணர்ச்சிகரமான ஈடுபாடு இரண்டும் பெருந்திரள் மனநிலையால் உருவாக்கி அளிக்கப்படுபவை. அவற்றை எதிர்த்து உதறி முன்னால்செல்லக்கூடிய தனிமனிதனின் தர்க்கபூர்வ சிந்தனையே பகுத்தறிவு என்பது.

இந்தியாவில் நவீன ஜனநாயகப் பண்புகளை முன்வைத்த முன்னோடிச் சிந்தனையாளர்கள் அனைவருமே ’தனிமனிதன் – சுதந்திர சிந்தனை– ஜனநாயகம் – பகுத்தறிவு’ என்னும் அடிப்படைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருப்பதைக் காணலாம். மதச்சீர்திருத்தவாதியும் ஆன்மீக ஞானியுமான நாராயணகுருவும்கூட அதையே சொல்கிறர்

ஆனால் நான் பார்த்தவரையில் நேரடியாகவே பகுத்தறிவு என்ற அடிப்படையை தீவிரமாக முன்வைத்தவர் ஈவேரா அவர்கள். தன் வாழ்நாளெல்லாம் திரும்பத்திரும்ப அதை அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவாதத்துக்குப்பின் அவரது எழுத்துக்களை மீண்டும் வாசித்துப்பார்த்தபோது அத்தனை உரைகளையும் அவர் தனிமனித சிந்தனையை நோக்கியே முன்வைத்திருப்பதை கவனித்தேன். திரும்பத்திரும்ப ‘நான் சொல்கிறேன் என்று நம்பாதே. நீயே சுயபுத்தியைக்கொண்டு யோசித்துப்பார்’ என்றுதான் அவர் சொல்கிறார்.

பகுத்தறிவு என்ற சொல் இங்கே அவரால் நிலைநாட்டப்பட்டது. பின்னர் அது ஓர் அரசியலியக்கமாக மாறியது. இன்றும் தமிழகத்தில் மிக அதிகமாக புழங்கும் சொற்களில் ஒன்று அது.

ஆனால் நாம் பகுத்தறிவுள்ள சமூகம்தானா? இங்கே பகுத்தறிவு இருக்கிறது என்றால் பிற மூன்றும் இருக்கும். தனிமனிதஉணர்வு இங்கே ஓங்கியிருக்கும். சிந்தனைச் சுதந்திரம் இருக்கும். உண்மையான ஜனநாயகம் இருக்கும்.

இந்தியாவில் எங்கும் அவை இல்லை என்பதே என் மனப்பதிவு. கல்விஅறிவுள்ள மாநிலங்களும் கல்வியறிவற்ற மாநிலங்களும் எல்லாம் இதில் சரிசமம்தான்.

காரணம் இந்தியாவில் தனிமனிதசிந்தனை- பகுத்தறிவு- ஜனநாயகம் ஆகியவற்றுக்கான பெரும் அறிவியக்கம் என ஏதும் நிகழவில்லை. ஐரோப்பாவில் நிகழ்ந்த அறிவியக்கத்தின் உதிரி எதிர்வினைகள் நிகழ்ந்து ஆங்காங்கே தேங்கி மறைந்தன, அவ்வளவுதான். ஆகவே நம் மக்களின் சிந்தனையில் எந்த அடிப்படை மாற்றமும் நிகழவில்லை.

சுதந்திரப்போராட்ட காலத்தில்தான் நாம் நவீனயுகத்துக்குள் காலடி எடுத்துவைக்கிறோம். ஆரம்பத்தில் தேசிய இயக்கம் தனிமனித சிந்தனையையும் ஜனநாயகத்தையும் முன்வைப்பதாகவே இருந்தது. ஆனால் மிக விரைவிலேயே அது பெருந்திரள்மனப்பான்மையைக் கொண்டு இன்னும் வலுவான அமைப்பாக ஆகமுடியும் என்பதைக் கண்டுகொண்டது. ‘மகாத்மா காந்திகீ ஜே’ என எப்போது காங்கிரஸ் கோஷமிட ஆரம்பித்ததோ அப்போதே அங்கே நவீன ஜனநாயகப்பண்புகள் அழிந்தன. திரள்மனப்பான்மை மேலோங்கியது.

சுதந்திரத்துக்குப்பின் நம் அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களை தனிமனிதர்களாகச் சிந்திக்கவைப்பதற்கு பதிலாக திரளாகக் கோஷமிட வைப்பதே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான எளியவழி என்று கண்டுகொண்டன. மூன்று தலைமுறைகள் அந்த மனநிலையிலேயே பிறந்து வளர்ந்தன. ஆம், பதினெட்டாம்நூற்றாண்டு ஐரோப்பாவில் நிகழ்ந்த சிந்தனைமாற்றம் இன்னும் இங்கே நிகழவில்லை.

இங்கே நுகர்வுத்தளத்தில் மட்டுமே நாம் முதலாளித்துவ சமூகத்தில் வாழ்கிறோம். மற்ற மனநிலைகள் எல்லாமே நிலப்பிரபுத்துவம் சார்ந்தவை. நம்முடைய குடும்பம், நாம் வேலைபார்க்கும் அலுவலகச்சூழல், நம்முடைய மதநம்பிக்கை, நாம் கொண்டிருக்கும் அரசியல் எல்லாமே நிலப்பிரபுத்துவக்காலத்தையவை. எந்தவிதமான காரண காரிய தர்க்கத்துக்கும் அங்கே இடமில்லை. வெறும் நம்பிக்கை, உணர்ச்சிகரமான பற்று ஆகியவற்றால்தான் நாம் செயல்படுகிறோம். இது நான் எப்போதுமே சொல்லிவரக்கூடிய கருத்து.


பகுத்தறிவும் தமிழகமும்…

அப்படியென்றால் ஈவேராவின் பகுத்தறிவுப்பிரச்சாரம் இங்கே என்னவாயிற்று? நாராயணகுருவும் காந்தியும் என்னவானார்களோ அதேதான் அவருக்கும் நிகழ்ந்தது. காந்தி மகாத்மாவாக ஆனார். நாராயணகுருவுக்கு கோயில்கள் கட்டப்பட்டன.

ஈவேரா ‘தந்தை’ ‘பெரியார்’ என்று இரண்டு பட்டங்களால் அடையாளம் காணப்பட்டார். நாம் பல்லாயிரம் வருடங்களாக மூதாதை வழிபாடும் மூத்தார் வழிபாடும் கொண்டிருக்கும் சமூகம். ஒருவரை தந்தை என்றும் பெரியவர் என்றும் சொல்லி தெய்வத்தின் இடத்துக்குக் கொண்டுசென்றுவிட்டால் அதன்பின் அவர் எதைச் சொன்னாலும் பொருட்படுத்தவேண்டியதில்லை. ‘அவரெல்லாம் பெரியவர், நாம சின்னவங்க…நம்மால அதெல்லாம் முடியுமா?’ என்று சொல்லி நகர்ந்துவிடலாம்.

வாழ்நாளெல்லாம் ஈவேரா அவர்கள் சொல்லிவந்த பகுத்தறிவு பற்றிய அறிவுறுத்தல்கள் அப்படித்தான் ‘தெய்வத்தின்குரல்’ ஆக மாறி மறைந்தன. ஈவேரா இந்திய சமூகத்தின் பெருந்திரள் மனநிலையைத்தான் மிகப்பெரிய பலவீனமாகக் கண்டார். ஆகவே எல்லா நம்பிக்கைகளையும் அவர் அடித்து நொறுக்க முயன்றார். எவையெல்லாம் புனிதமானவை, கேள்விக்கு அப்பாற்பட்டவை என்று கருதப்படுகின்றனவோ அவற்றை எல்லாம் விமர்சித்து கிண்டல்செய்து நிராகரிக்கிறார். மதம், இனம், மொழி, சாதி, கடவுள், ஆசாரங்கள் , பண்பாடு, பழம்பெருமைகள் எல்லாவற்றையும்.

தமிழ்ச்சமூகம் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டிருந்தால் கறாரான சுயவிமர்சனம் நோக்கிச் சென்றிருக்கும். தன்னுடைய நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் எல்லாம் கிழித்து பரிசோதனைமேசைமேல் போட்டு ஆராய்ந்திருக்கும். அது சிறிய அளவில்கூட இங்கே நிகழவில்லை. நேர்மாறாக அவர்சொன்னவை எல்லாம் அவரது மகத்துவத்தின் இயல்புகளாக மட்டுமே கருதினர் நம் மக்கள்.

இந்தியாவில் இன்னும் பகுத்தறிவு- தனிமனிதசிந்தனை –ஜனநாயகத்துக்கான இயக்கம் தொடங்கப்படவேயில்லை என்று நான் சொன்னபோது மிகக்கடுமையாக எதிர்த்தனர் நண்பர்கள். மதம் அரசியல் தளங்களில் இங்கே பகுத்தறிவு சார்ந்த விமர்சனங்களுக்கு இடமிருக்கிறது என்றார்கள். குறிப்பாக ஈரோடுகிருஷ்ணன் இந்நிலைபாட்டை தீவிரமாக முன்வைத்தார்

தமிழகத்தில் பகுத்தறிவுவாதம் என்ற பேரில் நிகழ்வது மேல்மட்டத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திவந்த சில நம்பிக்கைகளை விமர்சிப்பது மட்டும்தான். அரசியல்தளத்தில் அந்த மேல்மட்ட ஆதிக்கம் இங்குள்ள பெரும்பான்மையினரால் இன்று தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஆகவே அதை விமர்சிப்பது எளிது. அதாவது தன் எதிரியின் நம்பிக்கைகளை விமர்சிப்பதைத்தான் இங்கே பகுத்தறிவு என்கிறார்கள். உண்மையான பகுத்தறிவு என்பது தன் சொந்த நம்பிக்கைகள் விமர்சிக்கப்படும்போது அதை ஒரு சமூகம் அனுமதிக்கிறதா என்பதில்தான் உள்ளது என்று நான் வாதிட்டேன்

இன்று தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்தலைவரைப்பற்றியும் விமர்சனபூர்வமாக ஒரு நூலை எழுதிவிடமுடியாது. பகுத்தறிவுபேசிய ஈவேரா அவர்களைப்பற்றிக்கூட. அந்த விமர்சனத்துக்கு பதில் வராது, உணர்ச்சிக்கொந்தளிப்பான எதிர்வினைகளும், மிரட்டலும் மட்டுமே வரும். சாதியத்தலைவர்களைப்பற்றி பேசவே முடியாது, சாதியவாதிகள் தங்கள் சாதிக்கென உருவாக்கும் பொய்வரலாறுகளைப்பற்றி ஓர் வரலாற்றாசிரியன் கருத்து தெரிவிக்கமுடியாது. கற்பு பற்றி தன் சொந்தக்கருத்தை ஒரு நடிகை சொன்னபோது தமிழகம் எப்படி எதிர்வினையாற்றியது என நாம் கண்டோம். என்னுடைய அனுபவங்களெல்லாமே கசப்பானவை. ஓர் எளிய வரலாற்றுக்குறிப்பைச் சொன்னதற்காக நான் தெருத்தெருவாக வசைபாடப்பட்டேன்.

facebook_-924307089


எழுத்துரு விவாதம் ஏன்?

லடாக் பயணத்தில் அந்தவிவாதத்தின் முடிவில்தான் நான் சொன்னதைச் சோதித்துத்தான் பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் வந்தது. தமிழக அரசியலின் ‘புனிதபசுவாக’ போற்றப்படுவது மொழி. மொழிக்காக எவரும் எதுவும் செய்வதில்லை என்றாலும் மொழியை சென்ற ஐம்பதாண்டுக்காலமாக எந்த மதக்கொள்கையைவிடவும் தீவிரமான உணர்ச்சிகர நம்பிக்கையாக ஆக்கியிருக்கிறார்கள். கடவுளை வழிபடுவது பிற்போக்கு மொழியை வழிபடுவது முற்போக்கு என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.பகுத்தறிவை முன்வைத்த ஈவேரா அவர்களின் வழிவழ்ந்தவர்கள் உருவாக்கிய தீவிரநம்பிக்கை அது,

அது பற்றிய ஒரு கருத்தை முன்வைத்து எதிர்வினைகளை பார்ப்போம் என முடிவுசெய்தேன். இங்கே முற்போக்கினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள், எத்தனைபேர் பகுத்தறிவுடன் பேசுகிறார்கள் என்று கணக்கிடுவோம் என்பதே நோக்கம். அவர்களின் உணர்ச்சிகர நம்பிக்கையைச் சீண்டக்கூடிய கருத்தாக இருக்கவேண்டும்.

அதேசமயம் அந்தக்கருத்து ஈவேரா அவர்கள் கூறியவற்றைப்போல ஒற்றைப்படையான ஒரு மறுப்போ நிராகரிப்போ ஆக இருக்கக்கூடாது. இருபக்கமும் பேச இடமிருக்கவேண்டும். பகுத்தறிவுநோக்கில் ஆராயும் ஒருவர் அந்தக்கருத்தின் வரலாற்றையும் அதன் எதிர்காலச் சாத்தியங்களையும் ஆராய வாய்ப்பிருக்கவேண்டும். ஆகவேதான் ஆங்கில எழுத்துரு விவகாரத்தை எடுத்துக்கொண்டேன்.

இந்தக்கருத்து புதியது அல்ல. ஏற்கனவே தொடர்ச்சியாக பல்வேறு அறிஞர்களால் அறிவுத்தளத்தில் முன்வைக்கப்படுவதுதான். உலகத்தமிழ்மாநாடுகளில் இது ஆய்வுக்கட்டுரைகளாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நிகழ்ந்துள்ளது. பலதளங்களில் இது சோதிக்கப்பட்டுள்ளது. இன்று உலகளாவிய பொதுமொழிக்கான தேடல் தொழில்நுட்பத்துறையில் நிகழ்ந்து வருகிறது.

உண்மையில் இன்று மொழிக்கல்வி மிகச்சிக்கலான ஓர் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிகளைக்கொண்டு அதைப்புரிந்துகொள்ளமுடியாது. அக்கட்டுரையில் நான் அதைப்பற்றிச் சொல்லியிருக்கும் விஷயங்கள் முழுக்கமுழுக்க உண்மை. தமிழில் மட்டுமல்ல , எழுத்தும் வாசிப்பும் பேரியக்கங்களாக இருந்த வங்காளம், உருது,மலையாளத்திலும்கூட அந்த நிலைதான். இளையதலைமுறை அம்மொழிகளில் வாசிப்பதில்லை. இந்தியமொழிகள் எல்லாமே சிறுபான்மையினரின் இலக்கியத்துக்கும், அன்றாடப்பேச்சுக்கும் மட்டுமே உரியவையாக ஆகிவருகின்றன, அவற்றில் அறிவியக்கம் நிகழாமலாகிவருகிறது.

அதற்கான தீர்வாக ஏற்கனவே அறிஞர்களால் பேசப்பட்டுவரும் பலவிஷயங்களில் ஒன்றை சுட்டிக்காட்டி அக்கட்டுரையை எழுதினேன். கட்டுரையில் அதுதான் ஒரே வழி என்று சொல்லவில்லை. அதைப்பற்றி யோசித்தாலென்ன, விவாதிக்கலாமே என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன்.சர்வதேசப்பொது எழுத்துருவில் தமிழ் என்ற விஷயம் வரும்காலத்தில் விவாதித்தேயாகவேண்டிய விஷயம். எவரும் அதற்கு எதிராக கண்களை மூடிக்கொள்ளமுடியாது. அந்த விவாதம் தொடங்கவேண்டுமென்றே நான் ஆசைப்பட்டேன். அது நிகழ்ந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

உண்மையில் இந்த விவாதத்தின் மையம் இப்படி ஒரு கருத்தை முன்வைக்கும்போது அது எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்று பார்ப்பதுதான். எதிர்வினையாக வெளிவருவது வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பு.இந்த அளவுக்கு தமிழ்ப்பற்று உண்மையில் இங்கே இருந்தால் ஏன் இங்கே நூலகங்கள் ஈயடிக்கின்றன? ஏன் நூல்கள் தேங்கிக்கிடக்கின்றன? நம் மாணவர்களில் சொந்தமாக தமிழில் ஒரு பத்தி எழுதத்தெரிந்தவர்கள் ஒருசதவீதம்கூட இருக்கமாட்டார்கள் என்ற உண்மை ஏன் எவருக்குமே ஒரு பொருட்டாகத்தெரிவதில்லை?

இங்கே சொல்லப்படும் எதிர்வினைகளைப்பாருங்கள். மொழியின் எழுத்துருவை மாற்றக்கூடாது, மாற்றினால் தமிழ் அழியும், ஏனென்றால் அது முன்னோர் வகுத்தது, அதில்தான் திருவள்ளுவர் எழுதினார் [திருவள்ளுவர் பிராமி எழுத்துருவில் எழுதியிருப்பார்] மொழி என்பது தாய்போல– இதெல்லாம்தான் சொல்லப்பட்டன. இதைத்தான் எல்லா மதநம்பிக்கையாளர்களும் சொல்கிறார்கள்.

இதில் எங்கே இருக்கிறது பகுத்தறிவு?இந்த கொந்தளிப்பு, வசை நிறைந்த எதிர்வினைகளுக்கும் மதம் சார்ந்தும் சாதி சார்ந்தும் வரும் எதிர்வினைகளுக்கும் என்ன வேறுபாடு? எல்லாமே வெறும் உணர்ச்சிகள் மட்டும்தானே? ஒரு கோயில்சடங்கை மாற்றியமைக்கையில் கொந்தளிக்கும் பக்தனும், சாதியாசாரம் மீறப்படுகையில் அரிவாள் தூக்கும் கிராமவாசியும் இதே மனநிலையில்தானே இருக்கிறார்கள்? இதற்கு எதிராகத்தானே ஈவேரா பகுத்தறிவை முன்வைத்தார்?

எழுத்துரு விவாதத்தின் சரியான தரப்புகள்..

என் கருத்துக்கு பகுத்தறிவு சார்ந்த எதிர்வினை இரண்டு தரப்பில் இருந்து மட்டுமே வரும் என்று நான் வாதிட்டேன். ஒன்று, உண்மையான மார்க்ஸிஸ்டுகளின் சிறிய அறிவுத்தளம். இன்னொன்று சிற்றிதழ்கள் சார்ந்த அதைவிடச்சிறிய அறிவுத்தளம். மொத்த எதிர்வினையில் பத்துசதவீதத்துக்குள் அவர்கள் அடங்குவார்கள். மற்றவர்கள் பெருந்திரள் எதிர்வினைகளை மட்டுமே செய்வார்கள் என்றேன்.

நான் எண்ணியதே நடந்தது. எதிர்வினைகளில் சிலரே தர்க்கபூர்வமாக எழுதினர். இந்தியமொழிகளுக்கு ஆங்கில எழுத்துருவைப் பயன்படுத்துவதைப்பற்றிய பேச்சு 1920 கள் முதலே இருந்துவருவதைச் சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அனைத்துமொழிகளுக்கும் தேவநாகரி எழுத்துருவைப் பயன்படுத்துவது பற்றியும் இங்கே பேசப்பட்டுள்ளது. அதற்கு எதிராகவும் ஆங்கில எழுத்துருவை பயன்படுத்துவதைப்பற்றி பேசியிருக்கிறார்கள்.

வா.செ. குழந்தைசாமி உள்ளிட்ட பலமுன்னோடி அறிஞர்கள் இந்த ஆலோசனையை குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி எழுதியிருந்தனர் சிலர். ராணுவத்தில் இந்தியை ஆங்கில எழுத்துருவில் எழுதும் முயற்சி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. அது இன்னும் ஓரளவு புழக்கத்தில் உள்ளது என்று சுட்டிக்காட்டி இம்முயற்சி தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றனர்.

இதைத்தவிர இந்தியமொழிகளுக்காக ஒரு பொது எழுத்துருவை உருவாக்கும் முயற்சிகள் நிகழ்ந்தன சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாரதி என்ற பொது எழுத்துரு இன்னும் சோதனைத்தளத்தில் உள்ளது என்று செந்தில்குமார் தேவன் ஐஐடியில் இருந்து எழுதினார்

மொழியியலாளர் நா.கணேசன் . ‘ஜெயமோகன் ஓர் இன்றியமையாத விவாதத்துக்கு வழிகோலியிருக்கிறார்’ என்று சொல்லி ‘ஏற்கெனவே, தமிழ் உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளையும் ரோமன் எழுத்துமுறையில் எழுதும் ISO 15919 முறை இருக்கிறது. மாநிலங்களுக்கிடையில் தகவல் பரிமாற்றத்துக்கு ரோமன் எழுத்துமுறையைக் கையாளலாம். ISO 15919 வினோத் ராஜனின் அக்ஷரமுகம் பயன்படுத்தி ஆண்டிராய்ட், ஐபோன் போன்றவற்றுக்கு அளிக்கவேண்டும். அப்போது தமிழ் லிபி வலைப்பக்கங்களை, மின்மடல்களை, குறுஞ்செய்திகளை ரோமன் லிபியில் படிக்கலாம். கணிமுனைவர்கள் இந்த Apps செய்து அளிப்பது மிக எளிது. ஆசிய மொழிகள் அனைத்துக்குமே Digraphia என்னும் பொதுமுறை வந்த்துவிட்டது’ என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தியாவின் எல்லா மொழிகளும் தொடர்ந்து எழுத்துருக்களை மாற்றிக்கொண்டேதான் உள்ளன. மலையாள எழுத்துக்கள் அச்சுக்காக முப்பதுகளில் மாற்றப்பட்டன. கணிப்பொறிக்காக தொண்ணூறுகளில் மாற்றப்பட்டன. அம்மாற்றங்கள் மிக எளிதாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஏன் தமிழகத்திலேயே உலகளாவிய அரபு எண்கள் நூறாண்டுகளுக்கு முன்புதான் அறிமுகம்செய்யப்பட்டன. தமிழ் எண்கள் இன்று பொதுப்புழக்கத்தில் இல்லை. இன்னும்கூட தங்கள் சொந்த மொழு எண்களை மராட்டியத்திலும் குஜராத்திலும் கிராமப்புறங்களில் அவர்கள் பயன்படுத்துவதைக் காணலாம். உலகிலிருந்து துண்டிக்கப்பட்டவர்களாக அவர்கள் வாழ்வதுபோலத் தோன்றும். எழுத்துரு மாற்றம் மொழியை ஒருபோதும் மாற்றுவதில்லை. மொழியின் உள்ளடக்கமே மொழி.

இவ்வாறு மொழியின் எழுத்துருவம் மாறும்போது மொழிக்குரிய தனித்த உச்சரிப்புமுறை அழியக்கூடும். மொழியின் இலக்கியங்களில் பெரும்பகுதி அன்னியமாகக்கூடும். மேலும் அப்படி ஒரு உலகப்பொதுமை வரலாற்றில் நிகழ இடமளிக்கக்கூடாது. அது வல்லாதிக்கமாகவே இருக்கும்— இது சிலருடைய கருத்தாக இருந்தது.

— இவ்வாறு சாதகபாதகங்களைக் கணக்கில் கொண்டு பேசப்படும் ஒரு விரிவான விவாதத்தையே பகுத்தறிவுசார்ந்தது என்று சொல்லமுடியும். அவ்வகை எதிர்வினைகள் மிகமிகக்குறைவாகவே வந்தன. பெரும்பாலும் என்னுடைய வாசகர்வட்டத்துக்குள் அவை நிகழ்தது எனக்கு பெருமிதமளிக்கிறது


எழுத்துரு பற்றி என் கருத்து என்ன?

சரி, நான் என்ன நினைக்கிறேன்? என் கருத்துக்களை நான் முன்வைக்கும் முறையை அறிந்தவர்கள் ஒருபோதும் ஒற்றைப்படையாக நான் ஒன்றைச் சொல்வதில்லை என்பதை கவனித்திருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் நேர்நிலை –எதிர்மறை கருத்துக்களை தொகுத்துச்சொல்லி அதன் சாரமாக என் தரப்பைச் சொல்வதே வழக்கம்.

ஆங்கில [ரோமன்] எழுத்துருக்களில் ஆசிய மொழிகளை எழுதுவதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. மக்கள் ஒரே எழுத்துருவைக் கற்றால்போதுமானது என்பது ஒன்று. ரோமன் எழுத்துரு இன்னும் அரைநூற்றாண்டில் உலகளாவிய எழுத்துருவாக இருக்கக்கூடும் என்ற வரலாற்றுச்சாத்தியத்தைப்பார்க்கையில் அது முக்கியமான ஒரு விஷயம். தமிழ்மக்கள் உலகளாவிய பொதுப்போக்கில் இணைவதுடன் தமிழையும் தக்கவைத்துக்கொள்ள அது உதவும்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதைநோக்கித்தான் உலகம்செல்கிறதோ, அடுத்த நூறாண்டுகளில் அதுவே யதார்த்தமாக இருக்குமோ என்ற எண்ணம் என்னிடம் உள்ளது. இன்று தகவல்தொடர்பு என்பதே உலகளாவிய உரையாடல் என்றாகிவருகிறது. நமக்குள்பேசிக்கொள்ளும் மொழி நம்முடைய அந்தரங்க வீட்டுமொழியாக மட்டுமே சுருங்கும்போது சர்வதேச மொழி அல்லது மொழிகள் நம் தொழிலிலும் கல்வியிலும் ஆதிக்கம்செலுத்துவதைத் தவிர்க்கவே முடியாதென்று தோன்றுகிறது.

ஆகவே பல தளங்களில் பொது எழுத்துருவுக்கான முயற்சிகள் இன்று நிகழ்கின்றன. அந்த இடத்தை ஆங்கிலத்தின் எழுத்துருவே அடைந்தும் வருகிறது. இன்று உண்மையிலேயே வணிகத்தளத்தில் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதுவது நடந்துவருகிறது.

அப்படி மாற்றம் நிகழும்போது நான் எழுதுவது உட்பட இன்று பல உலகமொழிகளில் இருக்கும் இலக்கியங்கள் முழுக்க வெறும் வரலாற்றுச்சேகரிப்பாக மாறி ஆராய்ச்சிப்பொருளாக மட்டும் எஞ்சக்கூடும் என்றும் மிகச்சில பக்கங்களே உலகளாவிய அறிவியக்கம் நிகழும் மொழிகளுக்குச் சென்று அடுத்தடுத்த தலைமுறையினரின் கவனத்தில் நீடிக்கும் என்றும் அஞ்சுகிறேன்.

காரணம், சென்ற ஐம்பதாண்டுகளில் உலகின்போக்கை கவனித்தால் சீராக உலகப்பொதுமை ஒன்று உருவாகிக்கொண்டிருப்பதையே காண்கிறோம். தனித்தன்மைகள் அடையாளம் காணப்பட்டு தொகுக்கப்பட்டு ஆராய்ச்சித்தகவல்களாக மட்டும் சேமிக்கப்படுகின்றன ,அவ்வளவுதான்.

இச்சூழலில் எல்லா தனித்தன்மைகளும் வாழவேண்டும் என்றும், இல்லையேல் அறிவியக்கம் நீடிக்கும் – இலக்கியம் அழியும் என்றும்தான் ஐயப்படுகிறேன். இதன் எதிர்மறை விளைவுகளை கணக்கில் கொண்டு பார்க்கிறேன். வேகமாக தனித்தன்மைகள் கைவிடப்படுகின்றன. அவற்றை ‘பாதுகாக்கும்’ முயற்சிகள்தான் நிகழ்கின்றனவே ஒழிய ‘வாழ்வாக நீடிக்கச் செய்வது’ பற்றிய விவாதங்களே இல்லை

இது அதீதக் கற்பனையாக இருக்கலாம். ஆனால் சென்ற அரை நூற்றாண்டுக்குள் உலகமெங்கும் நாட்டார்கலைகள் அழிந்துவிட்டன என்பதை நாம் கவனிக்கவேண்டும். நம் தந்தையின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத அம்சமாக இருந்த நாட்டார்கலைகளில் பெரும்பகுதி இன்று இல்லை. அவை ‘ஆவண’ப்படுத்தப்படுகின்றன. சடங்குகளாக மட்டும் நடத்தப்படுகின்றன. இன்றைய கலைகள் எவையும் வட்டாரத்தன்மை கொண்டவை அல்ல. அவை உலகளாவியவை மட்டுமே.

எழுத்தாளனாக இந்தக் கவலையை தொடர்ந்து நூற்றுக்கணக்கான முறை முன்வைத்திருக்கிறேன். பண்பாட்டின் நுண்ணிய வேற்றுமைகள் அழிந்தால் கலையிலக்கியம் பெரிய சரிவைச் சந்திக்கும். பொதுமைக்கு எதிராக தனித்தன்மை அதேயளவுக்கு வலிமையுடன் முன்வைக்கப்படவேண்டும்.

இவ்வாறு இரு தரப்பையும் பார்க்கையில் தமிழ் எழுத்துரு மட்டுமல்ல எல்லா எழுத்துருக்களும் நீடிக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். அதற்கான வழி என்பது மொழியையோ எழுத்துருவையோ கட்டாயப்படுத்துவது அல்ல. உணர்ச்சிகரமான வெற்றுக் கோஷங்களும் அல்ல. எந்த நவீனத்தொழில்நுட்பம் இந்தச் சிக்கலை உருவாக்குகிறதோ அதையே இதற்கு எதிராக துணைகொள்வதுதான். இதை இந்த தளத்திலேயே முன்னரும் எழுதியிருக்கிறேன். இதைப்பற்றிய பொதுவிவாதம் வேண்டும் என்றே விரும்புகிறேன்.

ஆங்கில எழுத்துருவில், அல்லது இனிவரப்போகும் பொதுஎழுத்துருவில் தமிழ் எழுதப்படுவது எப்படியும் நிகழ்ந்தே தீரும்.அதன் விளைவுகளை நாம் யோசிக்கவேண்டும். அதில் தமிழ் எழுதப்பட்டு பெருவாரியாக வாசிக்கப்படுமென்றால் தமிழ் நடைமுறைத்தளத்தில் வாழவே செய்யும்.கூடவே மொழியின் பல தனித்தன்மைகள் அழியும். ஆகவே அந்த எழுத்துரு ஒரு தனித்த போக்காக நிகழும்போது இன்றைய எழுத்துருவும் நீடிப்பதற்கு என்னசெய்யலாம் என்பதைப்பற்றி பேசியே ஆகவேண்டும். இதுவே இன்று என் எண்ணம்

இவ்விவாதம் இன்று உருவாகிவரும் சூழலை கவனிப்பதற்கும் அதை வெல்வதற்கான வழிகளை ஆராயவும் உதவினால் நல்லது. அதற்குத்தேவை சமநிலையான, பகுத்தறிவுசார்ந்த அணுகுமுறை.


சீண்டுவது பற்றி…

இத்தகைய விவாதங்களைப்பற்றி பொதுவாகவே ஒரு புகார் சொல்லப்படுகிறது. இதிலுள்ள சீண்டும் அம்சம், கவன ஈர்ப்பு அம்சம் பற்றி. இதைப்பற்றி நான் மீண்டும் மீண்டும் பதில்சொல்லியிருக்கிறேன். இப்போது மீண்டும்.

உலக இலக்கிய வரலற்றில் தன் சமகாலச் சிந்தனைச் சூழலை சீண்டாத, விவாதத்துக்கு இழுக்காத முக்கியமான படைப்பாளிகள் அனேகமாக எவரும் கிடையாது. இலக்கியப்படைப்பாளிகள் அதனூடாக எப்போதுமே சர்ச்சைக்கு காரணமாகிறார்கள். தல்ஸ்தோய் முதல் லோஸா வரை, புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரை இதுதான் வரலாறு. இதில் சிறைசென்றவர்கள் உண்டு- டி.எச்.லாரன்ஸ் போல. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் உண்டு- லூகி பிரண்டல்லோ போல.

சமகாலத்தின் சிந்தனை வரட்சியை, அறவீழ்ச்சியை, போலி ஒழுக்கத்தை சுட்டிக்காட்டுவது எப்போதுமே எழுத்தாளனின் கடமை. உண்மையில் அது பற்றிய கவலைகளும் ஒவ்வாமைகளுமே அவனை எழுதச்செய்கின்றன. அவ்வாறன்றி சமகாலத்தின் பொதுமக்களின் உணர்ச்சிகளுடனும் சிந்தனைகளுடனும் தானும் இணைந்திருக்கக்கூடிய எழுத்தாளன் எதையும் உருப்படியாக எழுத முடியாது.

ஆகவேதான் சமூக- பண்பாட்டு விமர்சனம் இல்லாமல் நவீனஇலக்கியம் இருக்கமுடியாது என்று சொல்லப்படுகிறது. அந்த விமர்சனம் சமகாலச்சமூகத்தை தொந்தரவு செய்யும். அமைதியிழக்கச் செய்யும். பிரச்சினைகளுக்கு உள்ளாக்கும். அதற்கான எதிர்வினையை சமூகம் அளிக்கும். வசைபாடும், நகையாடும். ஆனால் அதனூடாகவே எழுத்தாளன் சமூகத்திடம் பேசுகிறான். ஆகவே என்னைப்பொறுத்தவரை இது என் பணி. இதை நான் செய்யாமலிருக்கமுடியாது.

எழுத்தாளர்கள் சர்ச்சையை உருவாக்கக் கூடாது, சமகாலத்தை விமர்சிக்கக்கூடாது, கருத்துக்களை முன்வைக்கக்கூடாது என்று சொல்லக்கூடியவர்கள் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாத ஒருவகை பாமரர்கள். அவர்களின் எண்ணிக்கைக்கு இங்கே குறைவே இல்லை. அவர்கள் மனதில் எழுத்தாளனுக்கு இடமே இல்லை. அவன் அவர்கள் நோக்கில் ஒருவகை கேளிக்கையாளன் மட்டுமே. ஆகவே தங்கள் சிந்தனைத்தேக்கத்தைச் சுட்டிக்காட்டுகையில் திகைப்பும் எரிச்சலும் கொள்கிறார்கள்.

சென்ற இருதினங்களில் எனக்கு ஓர் எழுத்தாளன் எப்படி இருக்கவேண்டும் என்ற உபதேசங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் வந்தன. இக்கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களைப்பார்த்தால் அதிலுள்ள எரிச்சலும் வசையும் பொதுவாகவே எழுத்தாளர் என்ற ஆளுமைக்கே எதிரானவை என்பதை எவரும் காணமுடியும். எழுத்தாளர்கள் சமூகத்தின் நல்லெண்ணத்தை ஈட்டவேண்டியவர்கள் என்ற தோரணையே நம்மவர்களிடம் எப்போதும் உள்ளது.

இன்னொரு குரல் இது விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது என்பது. இதைச்சொல்பவர்களை கூர்ந்து கவனியுங்கள், இவர்களுக்கும் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது. இலக்கியம் ஒருவகையான ‘ஷோ பிஸினஸ்’ என்றுதான் அறிந்து வைத்திருக்கிறார்கள். விளம்பரம் என்பது அங்கே இருந்து இவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் வார்த்தை. இவர்கள் உள்ளூர ஏங்குவது, இவர்கள் செயல்படுவது அந்த விளம்பரத்துக்காக மட்டுமே.

தமிழக இலக்கியச் சூழலில் அத்தகைய ‘விளம்பரத்தின்’ பலன் என ஏதுமில்லை. அதனால் பணம் என ஏதும் கிடைக்கப்போவதில்லை. புகழுக்குப்பதில் வசைகளும் எக்காளங்களும் மிரட்டல்களுமே கிடைக்கும். அது இவர்களுக்கும் நன்றாகவே தெரியும், ஆகவேதான் இவர்கள் ஒருபோதும் இந்த வழியைத் தேர்வுசெய்வதில்லை. சமகாலச் சமூகத்தின் பொதுமனநிலைகளுக்கு எதிராக நின்று பேசுவதற்கு அதற்கான திடசிந்தனையும் ஆன்மவல்லமையும் தேவை.

அப்படி ஓர் ஆளுமையை தனக்கென உருவாக்கிக் கொண்டவர்களை மட்டுமே அச்சமூகம் கவனிக்கும். அவன் கருத்து மட்டுமே விவாதங்களை எழுப்பும் உண்மையில் இந்த எதிர்வினைகள் எல்லாமே அதைச் சொல்பவனின் மீதுள்ள உள்ளார்ந்த மதிப்பின் மறுபக்கங்கள்தான். அவன் குரல் கவனிக்கப்படுகிறதென்றே அதற்குப்பொருள். இந்தக் கவனத்தை வெறும் விளம்பரம் என்பவர்கள் கவனத்தைக் கவர்வதற்கான என்னென்ன அந்தர்பல்டிகளெல்லாம் அடிக்கிறார்கள் என்று கவனியுங்கள், அதை இச்சமூகம் எப்படி சாதாரணமாகக் கடந்து செல்கிறதென்பதை அறிவீர்கள்.

எனக்கு ஏதாவது இச்சமூகத்திடம் சொல்வதற்கிருப்பது வரை, நான் இச்சமூகத்தை கவனிக்கச்செய்து நான் சொல்வதை முன்வைத்தபடியேதான் இருப்பேன். அது விவாதங்களை உருவாக்கியபடியேதான் இருக்கும். எந்த எதிர்வினையும் இல்லாமல்போவதே எழுத்தாளனின் தோல்வி.

இது விளம்பரத்துக்கான உத்தி என்றால் தல்ஸ்தோய் சமகால ஒழுக்கச்சூழலை கடுமையாக விமர்சித்ததும் இருட்டின் வெற்றி போன்ற நாடகத்தை எழுதியதும் அதன் எதிர்வினைகளும் எல்லாமே வெறும் விளம்பரங்களே. டி.எச்.லாரன்ஸின் கட்டுரைகளும் விவாதங்களும் வெறும் பரபரப்புதேடல்களே.உல்க இலக்கியத்தின் அத்தனை முன்னோடிகளும் விளம்பரத்துக்கான ‘ஸ்டண்ட்’ அடித்தவர்களே.

நான் முன்னோடிகளாகக் கொள்ளும் அத்தனை சிந்தனையாளர்களும் இதைசெய்தவர்களே. செய்துகொண்டிருப்பவர்களே.இப்போதுகூட பால் சகரியா கேரளச் சமூகத்தில் உருவாக்கும் நேரடியான பாதிப்பை என்னால் உருவாக்கமுடியவில்லை என்றே உணர்கிறேன்.

இலக்கியவரலாற்றை அறியாத, இலக்கியவாதியின் பணியை உணரமுடியாத பாமரர்களின் பிதற்றலை நான் கணக்கில் கொள்ளவில்லை. இலக்கியத்திற்குள் நுழையவிருக்கும் வாசகர்கள், எழுதப்போகும் படைப்பாளிகளுக்காகவே இதை எழுதுகிறேன்.நீங்கள் காண்பது இணையமெங்கும் அச்சு ஊடகமெங்கும் விரவிக்கிடக்கும் வசைகளை. ஆனால் என்றும் எப்போதும் நல்ல இலக்கியவாதி அவ்வாறான எதிர்வினைகள் வழியாகவேதான் செயல்பட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எழுத்தாளர் என்றால் அந்த வசைகளுக்காக முயலுங்கள்.


நாமிருக்கும் இடம்…

எதிர்வினைகள் நான் எதிர்பார்த்தவகையிலேயே இருந்தன என்றேன். நான் இந்தியாவில் தனிமனிதசிந்தனை- பகுத்தறிவு- ஜனநாயகம் உருவாகவே இல்லை என்று சொல்லிவருவதற்கான அழுத்தமான ஆதாரங்கள் இந்த எதிர்வினைகள். இனி எவருமே அப்படி இல்லை என என்னிடம் விவாதிக்கமுடியாது

ஆனால் இது எனக்கு அச்சத்தையும் ஆழமான வருத்ததையுமே அளிக்கிறது. மத்தியகாலகட்டத்தில் மதவாதிகளை எதிர்கொண்ட பகுத்தறிவாளனின் தனிமையை உணரமுடிகிறது என்னால்.

நாம் இன்னும் பதினெட்டாம்நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த சிந்தனைமாற்றங்களைக்கூட அடையாத சமூகமாகவே உள்ளோம். இன்னும் கருத்துக்களை புறவயமாக யோசிக்க, தர்க்கபூர்வமாக விவாதிக்க, நிதானமாக எல்லா தரப்புக்களையும் பரிசீலிக்க நாம் பழகவில்லை. இன்னும் சிந்தனையில் தனிமனிதனுக்குள்ள உரிமையை நாம் புரிந்துகொள்ளவில்லை. எந்த ஒரு கருத்தும் தயக்கமில்லாமல் முன்வைக்கப்படும் சூழலை உருவாக்காமல் சிந்தனையை வளர்க்க முடியாது என்று நாம் கற்கவில்லை. ஆம், நாம் பகுத்தறிவை நோக்கிய முதல் காலடியைக்கூட எடுத்து வைக்கவில்லை.

அதை நமக்கு நாமே பொட்டிலறைந்தாற்போல தெளிவுபடுத்தவே அக்கட்டுரை எழுதப்பட்டது.இப்போது அது தெளிவாகிவிட்டது. நாம் இங்கிருந்துதான் மேலே சிந்திக்க ஆரம்பிக்கவேண்டும்.


முந்தைய கட்டுரைகள்


அரசியல் – விவாதங்கள்
ஏன் விவாதிக்கிறேன்
முந்தைய கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 3
அடுத்த கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4