சகோதரர்கள் இருவர் அக்கம்பக்கத்தில் வீடெடுத்துத் தத்தம் குடும்பத்துடன் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கிடையே இருந்த அறையில் சிலகாலம் நான் குடியிருந்தேன். இருவருக்கும் நாட்டுப்புறப் பாடல்களில் நல்ல பயிற்சியிருந்தது. ஏகப்பட்ட பாடல்களை மனப்பாடமாகச் சொல்வார்கள். இருவருக்கும் நல்ல குரலுமிருந்தது. அவர்களுடன் நெருங்கிப் பழக இதுவே காரணம். சாப்பாடெல்லாம் ஆனபிறகு மொட்டைமாடியில் எல்லாரும் சேருவோம். அவர்களுடைய பிள்ளைகளும் வருவார்கள். உடலைத் தழுவும் இதமான குளிர்க்காற்றில் நிலா வெளிச்சத்தில் அவர்கள் குரல் இனிமையாக ஒலிக்கும். ஒன்றிரண்டு மணிநேரங்கள் கூடப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் போலக் கரைந்துவிடும். உற்சாகத்தின் உச்சத்தில் சற்றே மிதமான போதையுடன் அவர்கள் பழைய கண்ணதாசன் பாடல்களைப் பாடத்தொடங்கினால் பசியெல்லாம் மறந்துபோகும். துாங்கப்போகும் வரை அப்பாடல்வரிகள் மீண்டும் மீண்டும் நெஞ்சில் மிதந்தபடி இருக்கும்.
பெரியவருக்கு மூன்று பிள்ளைகள். சின்னவருக்கு நான்கு பிள்ளைகள். கூடமும் சமையலறையும் மட்டும் கொண்ட அவர்கள் வசிப்பிடங்கள் அவர்களுக்குப் போதுமானதில்லை. வசதிகூடிய இடத்துக்குச் செல்வதால் அதிகரிக்கக்கூடிய முன்பணத்தையும் வாடகையையும் அவர்களால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. இங்கே ஒரு வீடு உள்ளதாம், முன்பணம் ஐம்பதாயிரம் கேட்கிறார்கள், அங்கே ஒரு வீடு உள்ளது நாற்பதாயிரம் கேட்கிறார்கள், தண்ணீர் வசதி இருக்கிறது. சின்னத் தோட்டம் கூட இருக்கிறது என்றெல்லாம் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். கடைசியில் நமக்குத் தலையெழுத்து இந்த ஒண்டுக்குடித்தனம்தான் விதிக்கப்பட்டது போலும் என்ற சிரித்துக்கொள்வார்கள்.
வீட்டுக்குச் சொந்தக்காரர் பிடிக்கும் சீட்டுகளுக்கு ஏலம் விடும் நாள். சீட்டுக்கட்டுபவன் என்கிற வகையில் நானும் நின்றிருந்தேன். பெரியவர் வந்திருந்தார். எழுபத்தைந்தாயிரம் ரூபாய் சீட்டு. கேள்விகள் தொடங்கின. ஐந்நுாறு ஆயிரம் என்று பத்தாயிரம் ரூபாய்வரை வேகவேகமாக வந்த கேள்விகள் பிறகு நிதானமடைந்தன. என் எல்லை ஏழாயிரம் என்ற முதலிலேயே வகுத்துக்கொண்டிருந்ததால் நான் மேற்கொண்டு கேட்காமல் கேட்பவர்களை வேடிக்கை பார்த்தேன். பெரிய சகோதரருக்கும் மற்றொரு வியாபாரிக்கும் இடையே போட்டியிருந்தது. தயங்கித் தயங்கி ஆயிரம் ஆயிரமாக மாற்றி மாற்றி அதிகரித்துக்கொண்டிருந்தார்கள்.
திடாரென புயல்போல சின்ன சகோதரர் அரங்குக்குள் நுழைந்தார். வந்த வேகத்தில் கேட்கப்பட்ட கேள்வியைவிட ஆயிரம் ரூபாய் கூட்டினார். பெரிய சகோதரர் தயக்கத்துடன் மேலுமொரு ஆயிரம் சேர்த்துச் சொன்னார். இப்போது அந்த வியாபாரி போட்டியிலிருந்து விலகிவிட்டார். இரண்டு சகோதரர்களுக்கிடையேதான் போட்டி என்பது தெளிவாகிவிட்டது. இருபதாயிரத்தைத் தொட்டுவிட்டது கேள்வி. ஆனாலும் விடாமல் இருவரும் தொடர்ந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் வன்மத்துடனும் எரிச்சலுடனும் பார்த்துக்கொண்டனர். சின்ன சகோதரரின் கண்களில் பொங்கிய நெருப்பைக் காண அஞ்சி பெரியவர் கேள்வியை நிறுத்திக்கொண்டார். இருபத்தோராயிரம் ரூபாய் தள்ளி சீட்டையெடுத்தார் சின்ன சகோதரர்.
அன்று இரவு மொட்டைமாடியில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம். ‘நீ எடுப்பதாகச் சொல்லியிருந்தால் நான் கேட்டே இருந்திருக்க மாட்டேனே ‘ என்பது பெரியவர் வாதம். ‘உங்களுக்குத் தேவை என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேனே ‘ என்பது சின்னவரின் வாதம். அரைமணிநேரப் பேச்சுக்குப் பிறகு பேச்சு நிதானகதியை அடைந்தது. அன்றைய இரவு ஒலிபரப்பான நேயர் விருப்பத்தில் இடம்பெற்ற பழைய பாடல்கள் இருவருடைய சூட்டையும் தணித்துவிட்டது. அடுத்த தெரு தள்ளி வாடகைக்கு ஒரு வீடு பார்த்துவிட்டு வந்ததாகவும் அதற்கு முன்பணம் தர கூடுதலாக ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்டதென்றும் அந்த விளம்பரப்பலகையைத் தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்ததென்றும் அதனால்தான் தொடக்கத்தில் சீட்டு எடுக்கிற திட்டமில்லை என்றாலும் பாதியில் ஓடோடி வந்து கேட்டதாகவும் சொன்னான்.
பெரியவர் வானத்தைப் பார்த்துச் சிரிசிரியென்று சிரித்தார். ‘அசடா அசடா ‘ என்று தம்பியைப் பார்த்துச் சொன்னார். தான் சீட்டெடுக்க நினைத்ததும் அதே காரணத்துக்குத்தான் என்று மெதுவாகச் சொன்னார். அருகில் நின்றிருந்த எனக்கும் சிரிப்பு வந்தது. எங்கோ வலுத்துவிடுமோ என்று அஞ்சியிருந்த மோதல் தவிர்ந்துபோனதில் நிம்மதியாக இருந்தது. ஒரு தேவையை முன்னிட்டுத் தன்னுடன் போட்டி போடுபவன் சகோதரனேயானாலும் தானே வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் வலிமை கொள்கிற தன்மை எனக்கு வியப்பாக இருந்தது. இதுதான் உயிர் வாழ்வதற்கான போராட்டத்தின் இயல்பு போலும் என்று எண்ணிக்கொண்டேன். கூடவே தெளிவத்தை ஜோசப் என்னும் இலங்கை எழுத்தாளர் எழுதிய ‘மீன்கள் ‘ என்னும் சிறுகதையையும் மனத்துக்குள் அசைபோட்டுக்கொண்டேன்.
காலமெல்லாம் ஒற்றையறைக்குள் ஆறேழு பிள்ளைகளுடன் குடித்தனம் செய்பவர்களின் அவஸ்தையைச் சொல்வதிலிருந்து தொடங்குகிறது கதை. இக்கட்டுகளின் உச்சமாக நடந்துவிட்ட சம்பவத்தையொட்டி எழுந்த பதற்றத்துடனும் குற்றஉணர்ச்சியுடனும் குளிரையும் பொருட்படுத்தாமல் அறையைவிட்டு வெளியேறுகிற கணவனுடைய தத்தளிப்பு கதையின் தொடக்கத்திலேயே நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது. கசப்பான ஞாபகம் அது. ஆனாலும் விலக்கித் தள்ளத்தள்ள அதுவே மனத்தில் நிறைகிறது.
நடந்தது இதுதான். இரவு பத்துமணிக்குமேல் வேலையிலிருந்து திரும்பியவன் மெதுவாகக் கதவைத் திறந்து மூடிவிட்டு இருளுடன் இருளாகக் கதவோரமாக ஒருநொடி நேரம் நின்று கண்களைப் பழக்கப்படுத்திக்கொள்கிறான். கம்பளிக்குள்ளும் சேலைக்குள்ளும் சுருட்டிக்கொண்டு உறங்கும் உருவங்கள் இருட்டில் லேசாகத் தெரியத்தொடங்குகின்றன. முகத்தை மூடிக்கொண்டு உறங்கும் உருவங்களிடையே உருவஅமைப்பை அடையாளமாகக்கொண்டு தன் மனைவி உறங்கும் இடத்தைக் கண்டறிகிறான். போதை, களைப்பு எல்லாம் சேர்ந்து அவனை வாட்டுகிறது. எழுப்பப்பட்ட உருவம் முகத்தைக் காட்டியதும் நெருப்பை மிதித்ததைப்போல ஆகிவிடுகிறது. அவனுடைய கணிப்பு தவறிவிடுகிறது. அது மனைவி அல்ல, மகள். அதே கணத்தில் தீப்பெட்டி உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாக எழுந்துவிடுகிறாள் மனைவி. அந்த வெளிச்சத்தில் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியில்லாமல் கிள்ளப்பட்ட கொழுந்தாய் தலைதொங்க வெளியேறுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. வீட்டுக்கு வெளியே நிற்கும்போதும் அவன் மனம் அமைதியடையவில்லை. ஒருக்களித்திருக்கும் கதவினுாடாக கோடாக நீளும் வெளிச்சத்திலிருந்து உள்ளே இன்னும் நிலைமை சீராகவில்லை என்பது புரகிறது. எந்த நொடியிலும் யாராவது ஒருவர் உள்ளேயிருந்து வெளிப்பட்டுத் தன்முன் வந்து நிற்கலாம் என்கிற பயத்தைத் தவிர்க்க முடியவில்ால. அவசரத்தில் அங்கிருந்து வெளியேறுகிறான்.
எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் அவன் குடியிருக்கும் வீடு. வீடு கூட அல்ல அது. ஓர் அறை. நான்கு சுவர் கொண்ட ஒரு சதுரம். ஆறு சதுரங்கள் கொண்ட அக்குடியிருப்பில் இருபதாண்டுகளுக்கு முன்னால் அவனுக்கு ஒதுக்கப்பட்ட இடம். குடிவந்த போது மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தார்கள். இப்பொழுது ஆறு பிள்ளைகள். வயதில் மூத்தவர்கள். மாற்று இடத்துக்காக அவனும் எத்தனையோ தடவை அலுவலகத்துக்குச்சென்று துரையிடம் காலில் விழாத குறையாகக் கெஞ்சியும் சண்டையிட்டும் பார்த்துவிட்டான். பெரிய கங்காணியின் பக்கம் கையைக் காட்டுவதைத் தவிர துரை வேறெதுவும் செய்யவில்லை. கங்காணியிடமும் கோரிக்கையை முன்வைத்தாயிற்று. ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. அவன் உருவம் அலுவலகத்தின் பக்கம் தென்பட்டாலேயே அது வீடுவேண்டிய கோரிக்கையுடன்தான் என்று எல்லாருக்கும் தெரியும் அளவுக்கு அவன் விடாமுயற்சி மேற்கொள்கிறான். ஆனாலும் எதிர்பார்த்த பயன் இல்லை. குடியிருப்பில் சற்றே அளவு கூடிய வீடுகள் காலியாகும் போதெல்லாம் அது வேறு யார்யாருக்கோ ஒதுக்கப்பட்டு விடுகிறது. அவன் கோரிக்கையைக் கவனிப்பார் இல்லை.
இடையில் அவனுக்கு இரவுக் காவல்வேலை ஒதுக்கப்படுகிறது. தற்காலிகமாக அவன் பிரச்சனையிலிருந்து தப்பிக்கிறான். கொஞ்ச காலம்தான். மறுபடியும் வேலைமுறை மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்தான் மேற்சொன்ன இக்கட்டில் அகப்பட்டுக்கொள்கிறான். தன் இயலாமையை மனத்துக்குள் நொந்தபடி நடந்துகொண்டே இருந்தவனுக்கு தோட்டத்தில் வேலைசெய்கிற பண்டா என்பவன் குடியிருப்பைக் காலிசெய்துவிட்டு சொந்தவீட்டுக்குச் செல்லும் செய்தி காதில் விழுகிறது. அக்குடியிருப்பு சற்றே அளவில் பெரியது. எப்படியாவது அவ்வீட்டைத் தனக்கு ஒதுக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் வேகவேகமாகக் கங்காணியிடம் சென்று மறுபடியும் கோரிக்கையை முன்வைக்கிறான்.
வீடுகள் காலியாகும்போதெல்லாம் அவனுக்குக் கிட்டாததற்குக் காரணம் பெரிய கங்காணியை மகிழ்ச்சிப்படுத்த ஒரு போத்தல் சாராயம் வாங்கித்தராமைதான் என்று மற்ற நண்பர்கள் அவனுக்கு எடுத்துரைக்கிறார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடக்கூடாது என்பதற்காக மனத்துக்குப் பிடிக்காவிட்டாலும் காரியம் சாதிப்பதற்காக சாராயம் வாங்கி வைத்துக்கொள்கிறான். வீடு ஒதுக்கப்படும் தினம் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்திவிடலாம் என்பது அவன் எண்ணம்.
இப்போதுதான் புதிய பிரச்சனை ஒன்று முளைக்கிறது. இவனைப்போலவே வீட்டின் தேவை உள்ள மற்றொரு தொழிலாளி ஒருவன் இதே கோரிக்கையோடு பெரிய கங்காணியைக்கண்டு பேசுகிறான். பேசச்செல்லும் அன்றே இரண்டு சாராயப்போத்தல்களோடு செல்கிறான். வீடு அவனுக்கு ஒதுக்கப்பட்டு விடுகிறது.
பண்டா குடிபெயரும் தினம். தாளில் சுற்றிய போத்தலோடு கங்காணியின் வீட்டுக்குச் சென்றவன் அங்கே அவருடன் மற்றொருவன் இருப்பதைக் கண்டு தயங்கி நிற்கிறான். அவனை வரவேற்கிற கங்காணி கையில் இருப்பது என்ன என்று கேட்கிறான். அவன் தயங்கத்தயங்க அதை இழுத்துப் பார்க்கிறான். சாராயப்போத்தல்களைப் பார்த்ததும் அவன் முகம் இருளடைகிறது. மற்றவர்கள் முன்னிலையில் லஞ்சம்தரத் துணிந்த அவன் மீது சீற்றமடைகிறான். வீட்டை ஒதுக்க லஞ்சம் கொடுக்கவந்தியாடா என்று அவனை அதட்டி மூச்சுவிடாமல் கத்துகிறான். வெலவெலத்துப்போய் நடுங்கும் கால்களுடன் வெளியே நடக்கிறான் அவன்.
கங்காணி, தொழிலாளி என இருமுனைகளைக் காட்டி வீட்டின் பிரச்சனை பேசப்பட்டிருந்தால் இது ஓர் எளிய சூத்திரத்தின்பாற்பட்ட கதையாக மாறியிருக்கும். மாறாக, ஒரு தொழிலாளிக்குக் கிடைக்கவிருந்த வீட்டைத் தனக்காக ஒதுக்கி வாங்கிக்கொள்பவன் மற்றொரு தொழிலாளி. இதன் பொருள் தொழிலாளிக்கு எதிரி தொழிலாளி என்பதல்ல. தொழிலாளியும் ஒரு மனிதன். விரும்பியோ விருப்பமில்லாமலோ மனித உயிர் தன் இருப்புக்காக எல்லாவிதமான காரியங்களையும் செய்யவேண்டியிருக்கிறது. தான் முன்னேற சக மனிதர்களையே கீழே நெட்டித் தள்ளுகிறது. ஏறத்தாழ தட்டிப்பறிப்பதற்குச் சமமான செயலையும் செய்யத் துாண்டுகிறது. பெரிய மீன் சின்ன மீனை உண்டுதான் உயிர்வாழ நேர்வதைப்போல ஒருவருடைய வாய்ப்பைப் பறித்தே மற்றொருவர் வாழும் நிலைமை உருவாகிவிடுகிறது. உயிரின் போராட்டம் அத்தகையது. இப்போராட்டத்தின் சிறுபொறியொன்றை இக்கதை கோடிட்டுக் காட்டுவதாலேயே முக்கியமான கதையாகிறது.
*
மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர் தெளிவத்தை ஜோசப். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப்போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம். வைகறை வெளியீடாக 1979 ஆம் ஆண்டில் வெளிவந்த நாமிருக்கும் நாடே என்னும் தொகுப்பில் மீன்கள் என்னும் இக்கதை இடம்பெற்றுள்ளது. காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல்.