தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 3

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.தெளிவத்தை ஜோசப் ஐயாவை கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க விழா அழைப்பிதழை வத்தளையில் அவரின் வீட்டுக்குச்சென்று கொடுத்தபோது சந்தித்திருக்கிறேன்.ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அது இனிய நினைவாக இன்றும் உள்ளது.பத்திரிகைகளில் வந்த அவரது சிறுகதைகளைத்தவிர அவரின் வேறு நூல்களை வாங்கி வாசித்ததில்லை.கடல் கடந்து அவரின் திறமை அங்கீகரிக்கப்படும் இந்தத்தருணத்தில் ஐயாவின் நூல்களை வாங்கி வாசிக்கவேண்டும் என்று உறுதிகொள்கிறேன்.விஷ்ணுபுரம் விருது அவரின் எழுத்துகளை மேலும் பலருக்கு அறிமுகப்படுத்தி மேலும் மேலும் எழுதுவதற்கான உற்சாகத்தை வழங்கப்போகிறது.

சிவேந்திரன்

*

தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருதை அளிக்கத் தீர்மானித்திருப்பதையிட்டு என்னுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.

அவர் ரொம்பத் தகுதியானவர். எளிய மனிதர். எப்போதும் கொழும்புத் தெருக்களில், பஸ்ஸில், இலக்கியக் கூட்டங்களில் மிகச் சாதாரணமாகவே திரிவார்.

தொடர்ந்து இயங்கியவர்.

எல்லாத் தரப்பினருடனும் சமநிலையில் உறவுகளைப் பேணும் இயல்பைக் கொண்டவர்.

அண்மையில் கடுமையான சுகவீனமுற்றிருக்கிறார். ஆனால், முதுமையிலும் தொடர்ந்தும் இயங்கும் விதம் ஆச்சரியமூட்டுவது.

இந்த விருது தெளிவத்தைக்கு மட்டுமல்ல நமக்குமான கௌரவம். உங்களுக்கும் விஷ்ணுபுரம் விருதுக்குழுவுக்கும் என் வணக்கமும் நன்றியும்.

மிக எளிய மனிதர் மட்டுமல்ல பிறரையும் மதிக்கும் ஒருவர்.

இந்த விருது வழங்கப்படும் வேளையில் சில வேளை நானும் அங்கே வரக்கூடும். முடிந்தால் மகிழ்ச்சியே.

அன்புடன்,

கருணாகரன்
யாழ்ப்பாணம்

முந்தைய கட்டுரை’மீன்கள்’ தெளிவத்தை ஜோசப்
அடுத்த கட்டுரைஎழுத்துரு விவாதம் ஏன்?