தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு இந்த வருடத்திய விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு கண்டு மகிழ்ந்தேன். மலையகத்தைச் சார்ந்த, தகுதியுள்ள ஒரு மூத்த படைப்பாளிக்கு இந்த விருது வழங்கப்படுவது சாலப் பொருத்தமே. இந்தியர், இலங்கையர், மலேஷியர் என்ற வேறுபாடு காணாமல், உண்மையாக தமிழுக்கு அணி செய்யும் இலக்கியவாதிகளைக் கவுரவிக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்.

என்னால் இந்த விருது விழாக்களில் கலந்து கொள்ள இயலாமல் இருப்பது எனக்கு வருத்தமே. அதற்கும் ஒரு காலம் வராமலா போய்விடும்? :)

அன்புடன்,
நரேந்திரன்.

அன்புள்ள நண்பர் ஜெயமோகன் அவர்கட்கு

வணக்கம். நாம் நலமே.

தங்கள் செய்தி மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. எமது இனிய நண்பர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைப்பதையிட்டு இங்கு நாம் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றோம். தங்களது விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள். ஈழத்துப்படைப்பாளிகளை தாங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டிருப்பது எமக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

இந்திராபார்த்தசாரதி பற்றிய ஒரு கட்டுரை எழுதினேன். அவருடைய மின்னஞ்சலுக்கும் அனுப்பினேன். பார்த்தாரோ தெரியாது. பதிவுகள் இணையத்தளத்தில் இருக்கிறது. அவரது தொலைபேசி எண் தெரிந்தால் அறியத்தரவும். வீட்டில் நானும் மாலதியும் அடிக்கடி தங்களைப்பற்றியும் பேசிக்கொள்வோம். எமது அன்பை குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும்.

அன்புடன்
முருகபூபதி
அவுஸ்திரேலியா

*
அன்புள்ள ஜெயமோகனுக்கு,

வணக்கம். நலம்தானே.

உங்களுடைய வலைத்தளத்தை தொடர்ந்து படிப்பதன் மூலம் உங்களுடன் தினமும் நேரடியான தொடர்பு கிடைப்பது போன்ற உணர்வு. புறப்பாடு படித்தேன். உங்களுக்கு ஞாபகம் இருக்குமோ தெரியாது 2001ல் உங்களிடம் சுயசரிதையை எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கு ஒரு புன்சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது. மீதியை தொடர்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

தெளிவத்தை ஜோசப் அருமையான தேர்வு. அவரை ஒரேயொருமுறை சந்தித்திருக்கிறேன். அவருடைய விருது பற்றி முகப்புத்தகத்திலும் என்னுடைய தளத்தில் எழுதுவேன். இலங்கை எழுத்தாளர் ஒருவருக்கு விருது கொடுத்து எங்கள் எல்லோரையும் கௌரவித்துவிட்டீர்கள். தமிழில் எழுதுபவர்கள் எல்லாம் தமிழ் எழுத்தாளர்கள். அவர்கள் எந்த நாட்டிலிருந்து எழுதினால் என்ன?

என்றும் அன்புடனும் உங்கள் நினைவுகளுடனும்

அ.முத்துலிங்கம்


தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது – இந்து செய்தி


தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி

தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது டெலி மிர்ரர் செய்தி

முந்தைய கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.
அடுத்த கட்டுரைமங்கள்யான்