கடலாழம் -கடிதம்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,

என் பெயர் டார்வின், நான் அரபிக்கடலோரம் உள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்தவன். நான் உங்கள் வலைத்தளத்தை கடந்த ஒரு வருடமாகப் படித்து வருகிறேன்.

உங்களுடைய ஊமைச்செந்நாய், மத்தகம் மற்றும் அறம் சிறுகதைகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளன.

தங்கள் வலைத்தளத்தில் வந்துள்ள புதியவர்களின் கதைகளைப் படித்தேன். எல்லாமே நன்றாக வந்துள்ளது சரியான தேர்வு. குறிப்பாக Christopher இன் கடல் ஆழம் சிறுகதை எங்கள் மீன்பிடி வாழ்கையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. கதை மிகவும் நன்றாக உள்ளது.

கதையில் பல விவரங்களை கொடுத்துள்ளார். எல்லா மீன்பிடி முறைகளையும் தன் கதைக்குள் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். எல்லாமே சிறிய அளவில் உள்ளன. என்னை பொறுத்தவரை ஒவ்வொரு மீன்பிடி முறைகளை பற்றி தனி தனி கதைகள் எழுதலாம்.

அன்புடன்
டார்வின்

அன்புள்ள டார்வின்,

நம்முடைய கடல்சார்வாழ்க்கை மிகக் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. வேறெந்த வாழ்க்கையிலும் இல்லாத அளவுக்கு நேரடியாகவே மரணத்துடன் போராடும் தொழில்வாழ்க்கை அது. ஆகவே அது புனைவுக்கு மிகச் சாதகமான உலகம். இன்னும்பல படைப்பாளிகள் வீச்சுடன் எழுதினால் மட்டுமே உண்மையில் அதைப்பற்றி ஏதேனும் எழுதப்பட்டதாகக் கருதப்படும்.

வழக்கம்போல அதைத் தென்னாட்டிலிருந்துதான் ஆரம்பிக்கவும் முடியும் )))

ஜெ

முந்தைய கட்டுரைஅம்மா – தெளிவத்தை ஜோசப்
அடுத்த கட்டுரைஇசையின் வரிகள்