அன்புள்ள ஜெயமோகன்
பாவலர் விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
ஜக்கி வாசுதேவ் கட்டுரை படித்தேன். ஓஷோ , ஜே.கே போன்ற ஆன்மீக வழிகாட்டிகள் போல இன்று ஜக்கி , ஸ்ரீ ஸ்ரீ போன்றவர்கள் ஏராளமான பக்தர்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
நீங்கள் எழுதியிருக்கும் ஆன்மீகக் கட்டுரைக்கு நான் எழுதியிருக்கும் இக்கடிதம் எவ்வகையில் தொடர்புடையது எனும் கேள்வி எழலாம். அனைத்து உயிரினங்களையும் ஒன்றாக பாவித்து அன்பு செலுத்துவது ஆன்மீகவாதிக்கு உவப்புடையதே என்பது எனது தாழ்மையான கருத்து.
பூண்டியில் ஜக்கி ஆசிரமம் அமைந்திருக்கும் இடம் மிக அற்புதமான வனப் பிரதேசம். சிறிது தொலைவுக்கப்பால் சிறுவாணி அடிவாரத்தில் கிறித்துவ மத போதகர் தினகரனின் காருண்யா கல்லூரி வளாகம் , சின்மயா சர்வதேச பள்ளி மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்கள் உள்ளன. இதுபோலவே மேட்டுப்பாளயம் சாலையில் காரமடை தாண்டி கல்லாரில் ரஜனியின் குருவான சச்சிதானதாவின் இடம் மற்றும் பள்ளி உள்ளது. இவை அனத்துக்கும் ஒரு ஒற்றுமை உன்டு. இந்த இடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வனவிலங்குகளின் வழித்தடங்களாக காலங் காலங்காலமாக இருந்துவரும் வனப்பகுதியின் மிக முக்கியமான மலையடிவாரப் பகுதிகளாகும். விலங்குகளுக்கு சொந்தமான இடங்கள் – ஆனால் வன விலங்குகளுக்கு அரசிடம் நிலப்பட்டா பட்டா வாங்க முடியுமா என்ன ?
இதைப்பற்றீய இயற்கை ஆர்வலர்களின் சலசலப்புகள் கிடப்பில் போடப்ப்பட்டு, இந்த இடங்களில் மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கான வழிக்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. காட்டு யானைகளும் இடமாற்ற நேரங்களிலும், உணவு மற்றும் குடி நீர் தேடியும் வேறு வழி தேடி பக்கத்து கிராமங்கள் வழியாக செல்ல அல்லது ரயில் பாதை வழியாக செல்ல முயன்று பெரும் தொல்லைகளுக்கு ஆளாகின்றன. புகைவண்டியில் அடிபட்டு சாவது மனிதர்களால் கொடூரமாக விரட்டப்பட்டு தாக்கப்படுவது போன்ற தொல்லைகளுக்கு ஆளாகின்றன.
இந்த வளாகஙளில் போடப்பட்டிருக்கும் ஒளி மிகு சோடியம் வேப்பர் விளக்குகள் வனப்பிரதேசத்தின் இரவின் இருளின் தன்மையை முற்றிலும் மாசு படுத்துகின்றன.
வனங்களில் அமைதியும் மிக முக்கியம். ஆனால் அமைதிகாக்கவேண்டிய இந்த வனப்பகுதிக்குள் வருடம் ஒருமுறை சிவராத்திரியன்று நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் அந்தக் காட்டுப் பகுதியில் எத்தனை வாட்ஸ் சக்தியில் ஒலிபரப்படுகின்றன என்பதும் அன்றைய ஒலி, ஒளி pollution தவிர , லட்சக்கணக்கான பக்தர்கள் , வாகனங்கள் வருவதால் ஏற்படும் சூழல் மற்றும் அமைதி பாதிப்பு எந்த அளவு அப்பகுதியில் தவிர்க்கப் படவேண்டிய ஒன்று என்பதும் சம்பந்தப்பட்டோர் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
எப்பேர்பட்ட கேள்விகளுக்கும் இவர்களிடம் முன்னெச்சிரிக்கையாகத் தயாரிக்கப்பட்ட பதில்கள் உண்டு. பேசிப் பயனில்லை.
ஆனைகட்டி பகுதிக்கு அவ்வப்போது தொலைநோக்கியுடன் வானை நோக்குவதற்கு நண்பருடன் செல்லுவது வழக்கம். இங்கு தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமம் உள்ளது. ஆனால் காட்டினுள் இல்லாமல் பொது சாலையோரமாக இருக்கிறது. சலிம் அலி ஆய்வு வளாகமும் இருக்கிறது. Light pollutin அற்ற இந்த இடத்தில் தொலை நோக்கியில் வானத்தை பார்ப்பது கோவை வாசியான என்போன்றோருக்கு அரிதாகக் கிடைகும் அநுபவம். இங்கும் இரவுகள் மாசு படுத்தப்படாமல் இன்னும் எத்தனை காலம் இருக்கும் என்பது கேள்விக்குறியே. ஆனால் தற்போது ஆசிரமத்தால் இங்கு ஏதும் பெர்ய பாதிப்பில்லை என்பது முக்கியம்.
ஜே.கே மற்றும் ஓஷோ ஆசிரமங்கள் சென்னையிலும் பூனேயிலும் ஊரினுள் உள்ளன.
இங்கோ வனப்பகுதி ஆன்மீகம், கல்வி மற்றும் தனியார் சம்பந்தப்பட்ட பெரு வளாகஙளால் வளைத்துப்போடப்பட்டுள்ளது.
ஜக்கியைப் பொருத்தவரையில், அந்த இடத்தில் , காட்டுக்குள் குடிசை போட்டு ஆசிரமம் ஆரம்பித்தவர். நிச்சயமாக அங்குள்ள அனைத்து உயிரினங்களையும் ஏறக்குறைய நேரில் அறிந்தவரக இருப்பார் என நம்புகிறேன்.கட்டாயம் அனைத்து உயிரினஙளையும் நேசிப்பவராகவும் அவற்றிற்குண்டான மரியாதை அளிப்பவராகவும் இருப்பார். அவர் இதையெல்லாம் நினைப்பதுண்டா – தெரியவில்லை !
அன்புடன்
ஆனந்த்
Anand Sigamany <[email protected]>