எழுத்துருக்கள்-எதிர்வினைகள்

த ஹிந்து கட்டுரை

[இந்த எதிர்வினைக்கு ஒரு சிறப்பு உள்ளது. இதை ஒருவாரம் முன்பு மூலக்கட்டுரையை எழுதி முடித்ததுமே எழுதிவிட்டேன். ஏனென்றால் என்னென்ன எதிர்வினைகள் வரும் என எனக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த தரத்துக்கு அப்பால் சென்று எவரேனும் மாற்றுக்கருத்துக்களைத் தெரிவித்திருந்தால் எனக்குத் தெரியப்படுத்தலாம்]

தமிழ் எழுத்துருக்களை ஏன் ஆங்கிலத்திலேயே எழுதக்கூடாது என்று ஒரு யோசனை எழுதியிருந்தேன். ஏனென்றால் இரண்டு லிபிக்களைக் கற்றுக்கொள்வது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மிகுந்தசுமையாகவே உள்ளது. அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதனால் வெறுமே தேர்வுக்காக மட்டும் எழுத்துக்களைத் தெரிந்துகொண்டு உடனே மறந்துவிடுகிறார்கள்.இதுதான் இன்றைய யதார்த்தம். என் எதிர்வினை இந்த யதார்த்ததை எப்படி எதிர்கொள்வது என்பதைப்பற்றி மட்டுமே.

இத்தகைய ஒரு கருத்து உடனடியாக ‘தமிழை அழிக்கச் சதி’ என்ற கூச்சல் மூலமே எதிர்கொள்ளப்படும். வரலாற்றையோ இன்றைய சூழலையோ தொழில்நுட்ப உலகின் எதிர்காலம்நோக்கிய போக்கையோ சற்றும் கவனிக்காமல் ‘உலகிலேயே சிறந்த’ மொழியாகிய தமிழை ‘அன்னியசக்திகள்’ அழிக்கமுயல்கிறார்கள் என்ற ஒரு பாவனையிலேயே நம் மொழிவெறியர்கள் காலம்தள்ளுகிறார்கள்.

அவர்களைப்பொறுத்தவரை மொழிக்காக எதையுமே செய்யவேண்டியதில்லை. மொழி முறையாகக் கற்றுக்கொடுக்கப்படாவிட்டால் பிரச்சினை இல்லை. மொழியில் இலக்கியங்களோ சிந்தனைகளோ வராமல் போனாலும் பிரச்சினை இல்லை.மொழியை ‘எதிரிகளிடமிருந்து’ பாதுகாக்க முடிந்தவரை எல்லா இடத்திலும் கடுமையாக வசைபாடி கொந்தளித்தாலே போதும்.

பெரும்பான்மையினராக உள்ள அவர்களை சீண்டும் என தெரிந்தே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அவர்களை நான் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழிக்கு உண்மையிலேயே பெரும்பங்களிப்பாற்றிய எழுத்தாளன் நான். என் இடத்தையும் பங்களிப்பையும் புரிந்துகொள்ளுமளவுக்கு இவர்களுக்குத் தமிழ்ப்பயிற்சி இல்லை என்பதுமட்டுமே உண்மை.

இரண்டாவதுதரப்பு, தனக்கு ஒவ்வாத அல்லது புரியாத எந்த ஒரு தரப்பைக் கேள்விப்பட்டாலும் உடனடியாகப் பொங்கி கொந்தளித்து கொப்பளிக்கும் கூட்டம். கருத்து என்றாலே அது மிகையுணர்ச்சிக் கருத்தாகத்தான் இருக்கமுடியும் என்றும், விவாதம் என்றாலே வசையாக மட்டுமே இருக்கமுடியும் என்றும் நம்பக்கூடியவர்கள்.

இன்னொரு சாரார் தங்களுக்கு ஒவ்வாத எதையும் நக்கலும் கிண்டலுமாக வெளிப்படுத்துபவர்கள். அந்த நக்கலையும் கிண்டலையும் கவனித்தால் அதற்குள் உள்ளது ஆழமான தாழ்வுணர்ச்சி என்று தெரியும். எந்த தளத்திலும் தன்னை ஆழமாக நிரூபித்துக்கொள்ள முடியாதவர்கள் ‘இருந்தாலும் நான் ஒஸ்தி…’ என்ற பாவனையை மேற்கொண்டு இவற்றை வெளிப்படுத்துவார்கள். சொல்லும்படி ஒரு கட்டுரையை ஒரு குறிப்பை எழுதி அவர்களுக்கே அவர்கள்மேல் நம்பிக்கை வந்துவிட்டால் அவர்கள் தீவிரமாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.அவர்கள் மீது ஆழமான அனுதாபம் மட்டுமே எனக்குள்ளது.

ஆக இதுவே தமிழகத்தின் பொதுமனநிலை. நேற்று வையாபுரிப்பிள்ளை அந்த மனநிலையாலேயே எதிர்கொள்ளப்பட்டார். ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி என அம்மனநிலையால் கீழ்த்தரமாக வசைபாடப்பட்டவர்களின் பட்டியல்தான் தமிழிலேயே சிறந்த அறிஞர்களின் பட்டியல். எனக்கு வசைபுதிது அல்ல.

எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படுவதற்கான குறைந்தபட்ச வாய்ப்பு சூழலில் இருக்கவேண்டும். ‘ஏன் இப்படி யோசிக்கக் கூடாது?’ என்று கேட்பதற்கான உரிமையும் வாய்ப்பும் மறுக்கப்படக்கூடிய சூழலில் எந்தப் புதுச்சிந்தனையும் எழாது.ஒரு புதிய கருத்து விசித்திரமாக அல்லது தவறாக தெரிகிறது என்ற ஒரே காரணத்துக்காக அதன்மீது எரிச்சலும் கோபமும் கொண்டு அதைச் சொல்பவர் மீது பாயும் ஒரு சூழல் சிந்தனைத்தரம் கொண்டவர்களால் ஆனது அல்ல. வெறும் பழங்குடிக் கும்பலுணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியது அது.

ஆச்சரியமென்னவென்றால் இந்த பழங்குடிக் கும்பலுணர்ச்சிக்கு எதிராகத் தமிழில் தொடர்ச்சியாகப் பேசிவந்தவர் ஈ.வெ.ரா அவர்கள். இந்த உணர்ச்சியைச் சீண்டி, கண்டிப்பதற்காகவே அவர்கள் பல கருத்துக்களைச் சொல்லிவந்ததுண்டு. இந்தக் கருத்துக்கு நிகரான ஏராளமான கருத்துக்களை அவர் சொல்லியிருக்கிறார்.

நம் பழங்குடிக்கும்பல்மனநிலை அக்கருத்துக்களைச் சொல்லும் உரிமை அவருக்கு மட்டும் உண்டு, ஏனென்றால் அவர் ‘தந்தை’ என உருவகித்துக்கொண்டு அதேபோன்ற கருத்துக்களுக்கு எதிராக அதேவகை கோபங்களை இன்னும்கொஞ்சம் வளர்த்துக்கொண்டது. கொதித்துக்கொந்தளிப்பவகளைப்பாருங்கள் பெரும்பாலானவர்கள் பெரியாரியர் என தன்னைச் சொல்லிக்கொள்பவர்களாகவே இருப்பார்கள்.

இக்கருத்தை எதிர்கொள்பவர்கள் இதை முழுமையாகப் புறக்கணிக்கலாம், முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று நிராகரிக்கலாம், இக்கருத்தின் மீதான விமர்சனங்களை முன்வைக்கலாம். அப்படிப்பட்ட கடும் எதிர்விமர்சனங்கள் வழியாகவே இத்தகைய கருத்துக்களைப் பரிசீலிக்கவேண்டும், ஆகவே கண்டிப்பாக எதிர்விமர்சனங்கள் வரவேண்டும் என்று நானே அக்கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை இது ஒரு சாத்தியக்கூறு பற்றிய யோசனை மட்டுமே. கண்ணெதிரே தமிழ்க்கல்வி அனேகமாக வழக்கொழிந்துவருவதைக் காண்கிறேன். சமீபத்தில் பல பொறியியல்கல்லூரிகளுக்குச் செல்லும்போது அங்குள்ள மாணவர்கள் தமிழ்ச்செய்தித்தாள்களைக்கூட வாசிப்பதில்லை என்பதை கவனித்திருக்கிறேன். குமுதம் என்ற இதழை ஒரு கல்லூரி வகுப்பறையில் ஒருவர் கூட கேள்விப்பட்டதேயில்லை என்று அறிந்த அதிர்ச்சியை நான் ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் அவர்களனைவருமே தமிழ்பேசக்கூடியவர்கள்

இதுதான் நம்மைச்சூழ்ந்துள்ள உண்மையான யதார்த்தம். இதை காணாமல் தவிர்ப்பதில் பொருளில்லை. இது ஒரு தேசியப்பொதுப்போக்கு. இந்தியா முழுக்க இதேநிலைதான் உள்ளது. இதற்கு எதிராகச் சட்டம்போடுவதோ பிள்ளைகளுக்கு வலுக்கட்டாயமாக ஆனா ஆவன்னா கற்றுத்தருவதோ பயனற்றது. அதை புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பத்துவருடம்முன்னரே செயல்படுத்திப்பார்த்து தோற்றிருப்பார்கள். அதுவே இன்று தமிழகப் பெருநகர்களில் நடக்கிறது. நாளை தமிழகம் முழுக்க இதுவே நிலைமையாக இருக்கும்

ஐம்பதாண்டுக்காலம் கழித்து ஒருவேளை தமிழ் மிகச்சிறுபான்மையினர் மட்டுமே வாசித்து-எழுதும் ஒரு மொழியாக நீடிக்கும். பேச்சு மொழி என்றுமிருக்கும். அதில் இலக்கியங்களை வாசிக்க ஆளிருக்கமாட்டார்ள். இன்று பல செவ்வியல் மொழிகளுக்கு இருக்கக்கூடியதுபோன்ற ஆர்வம்கொண்ட மிகச்சிறிய வட்டத்தினர் மட்டுமே தமிழை தீவிரமாக வாசிப்பார்கள். இதுதான் நான் உண்மையிலேயே வருமென அஞ்சக்கூடிய சூழல்.

இதற்கு எதிராகச் செய்யக்கூடுவது என்று தோன்றக்கூடிய ஒரு வழி நான் சொல்வது.சாத்தியமான பல வழிகளில் ஒன்று. நாளைய தொழில்நுட்பம் எதைச் சாதிக்குமென எனக்குத் தெரியாது. ஆனால் உலகமெங்கும் பலமொழிகளுக்கு அடிப்படையான பொது எழுத்துரு ஆங்கிலமாக மாற வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன். அந்த எழுத்துருவை வேறெந்த எழுத்துருவிலும் மாற்றிவாசிக்க தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கும். தமிழை பிராமியிலோ வட்டெழுத்திலோகூட வாசிக்கமுடியும். ஆகவே எப்படியும் கற்றுக்கொண்டே ஆகபோகிற ஆங்கில எழுத்துருக்கள் வழியாகவே தமிழை வாசிக்க- எழுதக் கற்றுக்கொள்வது சுலபமான வழியாக இருக்கும்.

ஒருவேளை இது வெறும் ஊகமாக இருக்கலாம். மிகையான அச்சமாக இருக்கலாம். இந்த மாற்று வழி நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் ஏன் இப்படி யோசிக்கக் கூடாது என்பது மட்டுமே என் கேள்வி. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அத்திசைநோக்கிச் செல்கிறோம்

வழக்கம்போல தொண்ணூறுசதவீதம்பேருக்கும் நான் என்ன சொல்கிறேன் என்று புரியாது. வரவிருக்கும் உடனடி எதிர்வினை என்பது ‘அப்டீன்னா நீ எதுக்கு தமிழிலே எழுதறே? அப்டியே இங்கிலீஷ் எழுத்துக்களிலே எழுதவேண்டியதுதானே? நீ எழுத ஆரம்பிச்சுப்பாரு…’.

நண்பர்களே, நான் இப்போது ஆங்கில எழுத்துருக்களில் எழுதுவதைப்பற்றிச் சொல்லவில்லை. இப்போதுள்ள வாசகர்கள் ஆங்கில எழுத்துரு வழியாக எளிதாக வாசிப்பார்கள் என்றும் சொல்லவில்லை. ஆங்கில எழுத்துருக்கள் வழியாக தமிழ் இளமையிலேயே பள்ளிகளில் பயிலப்பட்டால் அவர்களுக்கு பின்னாளில் தமிழ் வாசிக்க எளிதாக இருக்குமே என்றுதான் சொல்கிறேன்.

இரண்டாவது எதிர்வினை, எனக்கு வாசகர்கள் இல்லாததனால் நிறைய வாசகர்களை பெறுவதற்காக இதைச் சொல்கிறேன் என்பது. தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக அதிகமாக வாசகர்களைப் பெற்ற மிகச்சில இலக்கியவாதிகளில் ஒருவன் நான் என்பதை அவர்களுக்கு கொஞ்சம் வாசிப்பு இருந்தால் தெரிந்துகொள்ளலாம். வாசிக்காதவர்களிடம் அதைச் சொல்லிப்புரியவைக்க கடினம்.

ஆனால் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட வணிகப்படைப்பாளிகள்கூட தமிழகத்தில் 5 சதவீதம்பேரால் மட்டுமே அறியப்பட்டவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்வாசிப்பு இப்போதே மிகமிகச்சிறுபான்மையினரால் மட்டுமே செய்யப்படுகிறது. நான் பேசுவது இதன் எதிர்காலம் பற்றி.

ஆங்கில எழுத்துரு அன்னிய மொழியாலானது என்பது இன்னொரு பேச்சு. நான் மொழியில் அல்லது இலக்கியத்தில் அப்படி அன்னியம் என ஒன்றிருப்பதாக ஏற்கவில்லை. இன்று நாம் தமிழில் எழுதும் எழுத்துக்களே ஐரோப்பிய மொழியை அடிப்படையாகக் கொண்டு பலமுறை சீர்திருத்தப்பட்டவை. நம் உரைநடை இலக்கணமே ஆங்கிலத்தை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. இதோ இந்த உரைநடையின் அமைப்பே ஆங்கிலத்தைப்போன்றதுதான்

கடைசியாக, இப்படி எழுத்துருவை மாற்றுவது நடைமுறைச் சாத்தியமா என்பது. தெரியவில்லை. ஆனால் எல்லாமே சாத்தியமானதுதான் என்றுதான் தோன்றுகிறது.

*

ஒரு பண்பாட்டுச்சூழல் தன்னுடைய அடிப்படை மனநிலைகளை, நம்பிக்கைகளைப் பற்றி தொடர்ந்து புறவயமாக ஆராய்ந்துகொண்டே இருக்கவேண்டுமென்றே நான் நினைக்கிறேன். ஈவிரக்கமில்லாத சுயஅலசலாக அது அமையவேண்டும். இல்லாவிட்டால் அச்சூழல் தேங்கும்.

வேறு எவரைவிடவும் நான் மரபின் மீது ஆர்வம் கொண்டவன். மரபில் ஆழமான தொடர்ந்த பயிற்சியும் கொண்டவன். அதேசமயம் மரபுகளை எப்போதும் தர்க்கபூர்வமாக உடைத்து ஆராயவும் மறுபரிசீலனை செய்யவும் முயல்பவன். எல்லா மரபையும். எதையும் வெறுமே மூட நம்பிக்கையாக ,உணர்வுபூர்வமான ஏற்பாக மட்டும் வைத்துக்கொள்ளலாகாது என நினைப்பவன்.

இந்த விவாதமும் அதற்காகவே. இதில் ஈடுபடுபவர்களில் மிகமிகச்சிறுபான்மையினர் அதை உணரக்கூடும். இன்னும் சிலர் இவ்விவாதம் முடிந்தபின் ஒட்டுமொத்தமாக யோசிகையில் உணரக்கூடும். அவர்களுக்காகவே இது எழுதப்படுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைபுகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன் [தொடர்ச்சி]
அடுத்த கட்டுரைதெளிவத்தை ஜோசப்-இணையத்தில்…