‘பயணம்’ – தெளிவத்தை ஜோசப்

தபாலாபீஸ் மணிக்கூடு ஒரு முறை அடித்து ஓய்ந்தது. மணி ஒன்று உச்சிப் பொழுது.

தரையின் சூடு கண்ணுக்குப் பட்டும் படாமலும் மின்னி மேலேறிக் கொண்டிருந்தது.

உஷ்ணத்துக்கே உரிதான தூசி மயமான ஒரு ஜிகினாச் சூழ்நிலை அந்தத் தபாலாபீஸ் சந்தியில் நிறைந்திருந்தது. முன்பெல்லாம் பொட்டலாகக் கிடந்த அந்த இடத்தில் இப்போது மூலைக்கொன்றாய் பஸ் ஸ்டாண்டுகள். தகரக் கூரையும் கூரைக்கடியில் பிதுங்கும் கியூவுமாய், ‘கொழும்பு’ பஸ் ஸ்டாண்டிலிருந்து ‘குட்டியாக்கொலை’ ஸ்டாண்ட் வரை அதற்குள் தான் எங்காவது ஒரு மூலையில் இருக்கும். மொத்தத்தில் அதுதான் பதுளையின் செண்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்.

பஸ் ஸ்டாண்டில் நாம் பார்க்கும் முகங்கள் எல்லாமே சூட்டுக்கல்லில் கிடக்கும் ரொட்டி போலத்தான் இருக்கின்றன. காய்ந்து கருகிப்போய்!

‘சீனாக்கொலை’ பஸ் ஸ்டாண்டிலும் க்யூ வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆலிஎலை போகும் ஒருவரும் அதற்குள் திணிந்து கொண்டிருக்கிறார்.

கண்டக்டர் தன்னை ஏற்றிக் கொள்ளமாட்;டார் என்பது அவருக்கே தெரிந்திருக்கலாம். பதினெட்டு இருபது மைல் என்று பயணம் செய்பவர்கள் போட்டி போட்டுக் கொண்டு நிற்கையில் இந்த மூன்று மைல் காரருக்காகவா இடம் கொடுக்க போகிறது!

கியூவின் முதல் ஏழெட்டு ஆட்களும் சிங்களவர்கள். அதுவும் நடுத்தர வயதுக்கும் கொஞ்சம் மேற்பட்ட பெண்மணிகள். பெண்மைக்குரித்தான மென்மையும் கூச்சமும் கழன்று விட்ட வயது.

வெற்றிலை மெல்லலும் துப்பலும் சளசளப்புமாக யாரையும் லட்சியம் பண்ணாத தன்மையுடன் அவர்கள் நிற்கின்றனர். பிந்தி வரும் அவர்களுக்கு வேண்டியவர்கள் அவர்களுடன் கொஞ்ச நேரம் பேசிச் சிரித்து விட்டு கம்பிக்குள்ளாக நுழைந்து அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்ளுகின்றனர். அப்படியே நுழைந்து நுழைந்து முன்வரி சைக்குள் மட்டுமே மூன்று வரிசை ஆட்கள் திமுதிமுக்கிறார்கள்.

ஒவ்வொரு வரிசைக்குள்ளும் மும்மூன்று வரிசையாக இரண்டரை வரிசைகள் இறுக்கிக்கிடக்கின்றன.

குட்டிச் சாக்குகள்;, பிரம்புக்கூடைகள், பிள்ளைகள், பெண்கள், ஆண்கள், அத்தனையும் ஒன்றுடன் ஒன்று நசுங்கி நைகின்றன.

“இந்தாப்பா ஒரு வார்லி போத்தல் குடு சுருக்குனா…..”

அதற்காகவே காத்திருந்தவன் போல் ‘டஸ்’ என்று மூடியை அடித்து ஒரு பிளாஸ்டிக் கிளாசை போத்தலில் மாட்டி நீட்டுகின்றான் பார்லிப் பையன்.

கிளாசை நிரப்பி தன்னிடம் நின்று கொண்டிருந்த வயதான தாய்க்குக் கொடுத்தான் வாலிபன்.

நாலு வாய் குடித்தவள் உதட்டைக் கோணிக் கொண்டாள். கிளாசை திருப்பி நீட்டிவிட்டு நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். தலை நோவு தாங்க முடியவில்லை.

மீதி இருந்த பார்லியில் ஏழெட்டுப் பத்து வாய்கள் நனைந்து கொண்டன.

வெளியே காற்றாட நிற்பவர்களே கருகித் தீயும்போது இதற்குள் அமுங்கிக் கிடப்பவர்கள் பாடு எப்படி இருக்கும்.

ஒருவர் மூச்சு மற்றவரை அனலாய்த் தீய்க்கிறது கழுத்தைச் சுற்றி வியர்வை கச கசக்கிறது. உடலின் வியர்வையில் சட்டை பிசு பிசுவென்று ஒட்டிக்கொள்ளுகிறது. கம்கட்டு ஊறி ஒரு அசௌகரியத்தை உண்டு பண்னுகிறது. ஆண்கள்தான் மார்பை திறந்து விட்டு காற்றூதிக் கொள்ளுகிறன்றனர். பெண்கள்…..? ஆக ஒவ்வொரு வினாடியும் ஊசி முனையில் நிற்பது போன்ற துடிதுடிப்புத்தான்.

ஹாலிஎலைக்காரர் நம்பிக்கை இழந்து நைசாக நழுவப் பார்க்கின்றார். வெளியேறுவது சிம்ம சொப்பனமாகின்றது.

நெருக்கல்கள், கால்மிதியல்கள், முறைத்தல்கள், அசட்டுச்சிரிப்புக்கள், அத்தனைக்கும் மத்தியில் வீல் என்று கத்துகிறது ஒரு இரண்டு வயதுப் பிஞ்சு.

ஆனானப்பட்டவர்களே வெதும்பிச் சோரும்போது இந்தப் பச்சைச்சிசு என்ன செய்யும் துவண்டு சாய்கிறது. காற்றோட்டமாக இருக்கட்டும் என்று இடுப்பில் இருந்ததைத் தூக்கி தோளில் கிடத்துகின்றாள் பெற்றவள். கழுத்தில் கிடக்கும் அழுக்கேறிய நூல் கயிற்றின் பெரியமுடிச்சை சுவைக்கிறது சிசு.

“கயித்தை சுவையாதே ஆத்தா என்ற வாறு குழந்தையைத் தோள்மாற்றிக்கொண்டதுடன் கயிற்றையும் ரவிக்கைக்குள் தள்ளி மறைகின்றாள்.

தாலிக்கயிறு தனியாகத்தான் இருக்கின்றது. அதில் தங்கம் இல்லை.

கியூவுக்கு வெளியே அவன் குட்டிச் சாக்கை கயிற்றால் கட்டிக் கொண்டிருக்கின்றான்.

“யாங்க கைப்புடி உட்டுறிச்சோ?”

ஆமாம் என்பதற்காக தலையை ஆட்டியவன் “இப்படி சுத்திக் கட்டித்தர்றேன் தூக்கிணுபோயிறு. நான், அஞ்சு மணிக்கு ஆளுகளை விடயில ஆத்தாளைப் பார்த்துவிட்டு இசுக்கோத்து தேத்தண்ணி வாங்கிக் குடுத்துட்டு ஆறுமணி வஸ்லே வந்துடுறேன்”.

அவன் குட்டிச்சாக்கை கட்டி நிமிர்ந்ததும் அவள் பிள்ளையை நீட்டுகின்றாள்.

“பாப்பாவை வெளியேனாச்சும் வச்சிக்கிடுங்க இங்கே வெந்து தொலையுது.”

“ஆசுருபத்துல ஆளு இருக்கோ?” சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த முன்வரிசைக் கிழவியின் கேள்வி இது.

“அரிசி வாங்குனீகளோ…”

“அரிசிக்கெல்லாம் நாங்கவ தளைக்கு வாறதில்லை. நாட்டுலேருந்து கொண்டாந்து தருவானுக. வெங்காயம் பருப்பு பயறு எதாச்சும் பாத்துக்கிட்டுப் போவலாம்ணு வந்தேன்.”

“கோப்புறட்டுலே குடுக்குறதில்லையே?”

“ப்க்கும் ‘கட்டவளை’ கோப்புறெட்டுல மூச்சு காட்டேதுன்னுட்டானுக. “தீகொலை’ கோப்புறேட்டுல வச்சுகிட்டே இல்லேன்னுட்டானுக தீஞ்ச மூதேவிக….. இங்கதான் இம்புட்டு இம்புட்டா பத்துக் கடயில பிச்சை வாங்கென வாங்கிச் சேத்தேன்….” கையை குழித்துக் காட்டுகின்றாள்.

மணி ஒன்று பதினைந்தாகிறது. ஒன்றரை மணி பஸ்சை இன்னும் காணவில்லை.

வெள்ளைக்கவுனும் சப்பாத்துமாக நாலைந்து ஸ்கூல் பிள்ளைகள் ஓடிவந்து வரிசைக்குள் மறைகின்றனர்.

மற்றவர்களின் இடுப்பளவுக்கு நிற்கும் ஒரு சிறுவன் கத்துகின்றான். அவனுக்கு மூச்சு முட்டித் திணறுகின்றது.

கியூவுக்குச் சிறியவனாகவும்@ தூக்கி வைத்துக் கொள்ளப் பெரியவனாகவும் இருப்பதே அவனுடைய பிரச்சினை.

இந்த மக்களின் பிரச்சினைகள் போல் அதுவும் அவனுடைய எந்தவித முயற்சியாலும் தீர்க்க முடியாதது! அவன் கியுவில் நிற்கும் மற்றவர்கள் அளவுக்கு வளர்ந்துவிட வேண்டும் அல்லது சிசுவாகி யாhரவது ஒருவருடைய இடுப்பிலோ தோளிலோ ஏறிக்கொள்ள வேண்டும். இரண்டுமில்லாவிட்டால் யாராவது வளர்ந்தவர்கள் அவனைத் தூக்கி வெளியே வீசி விடவேண்டும். இல்லாவிட்டால் அவன் இப்படியே நடிங்கி கத்திக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

தோளில் இருக்கும் வாண்டு ஒன்று நிலக்கடலைத்தோலை உரித்து பக்கத்தில் நிற்பவர் தலையில் போட்டுக் கொண்டே இருக்கின்றது. அவரும் தட்டி விட்டுக் கொண்டே இருக்கின்றார்.

ஒரு இளவட்டம் சட்டையைக் கழட்டி கம்கட்டில் திணித்துக் கொள்கிறது.

மணி ஒன்று முப்பது. கியூவில் நிற்கும் கூட்டத்தில் ஒரு சலசலப்பு.

அதோ பஸ் வருகிறது!

என்னமோ வாரிக் கட்டிக் கொள்ள வருவதுபோல்தான் கண்மண் தெரியாமல் வந்து சட்டென்று பிரேக்கடித்து நிற்கின்றான் பஸ்காரன்.

‘தக தக’ வென்று மிதந்து கொண்டிருந்த தூசி புழுதிப் படலமாகக் கிளம்பி கியூவில் நின்றவர்களின் கண், காது, வாய், மூக்கு, செவி ஆகிய துவாரங்களில் துழைந்து கொள்கிறது. தும்மல்கள், ஏச்சுக்கள், முனகல்கள் எல்லாம் பொருமி வெடிக்கின்றன.

“எங்கேயோ செறைக்குப் போறது மாதிரிதான்…….”

“அப்பாடா இப்பவாச்சும் வந்தானே!….”

ஒன்றைக்குக் கிளம்ப வேண்டியவன் ஒன்றைக்காவது கியூவிடம் வந்தானே. இத்தனை ஜனங்களுக்கும் எப்போது டிக்கெட் எழுதுவது! எப்போது ஏற்றுவது! எப்போது கிளம்புவது!

சுறுசுறுப்பான கண்டக்டர் என்றால் இன்னும் ஒரு அரை மணித்தியாலம் வைத்துப் பார்க்கலாம். இவனுக்கு பென்சில் பிடிக்கவே தெரியாது. எழுத்தாணி பிடித்து எழுதியே பழகிவிட்டவன். மூன்றுக்குத்தான் கிளம்புவான்.

“ஒன்றைக்கே போயிறுவான்று ஒரு வாய் தேத்தணிக் கொட ஊத்திக்கிறாம ஒடியாந்ததேன்….”

“மயக்கம் கியக்கம் போட்டுறாதே இந்தச்சன நெரிசல்லே அது வேறெ நசல்….”

முழங்கால் மடிய ஒருகாலைத் தூக்கி முன் இரும்பில் வைத்துக்கொண்டு நின்கின்றான் கண்டக்டர்.

அங்கே நடக்கும் நாடகத்தில் அவன் தான் கதாநாயகன். ராஜ பார்ட் அனைத்தும்.

“ஆலி எல@ அத்தாமெ@ கீரியக்கொலை, யாரும் இருந்தா வெளியே போயிறு…”

டிக்கெட் புத்தகத்தை தூக்கி ஆட்டியபடி கூறிவிட்டு டிக்கெட் எழுதத் தொடங்கினான்.

முதலாவதாக ஏறிக்கொண்ட அந்த சிங்களப் பெண்கள் சீட் மாறி மாறி அமர்ந்து ஆசை தீர்த்துக் கொள்கின்றனர்.

முதலாவதாக நின்றவர்களைச் சாட்டி கம்பிக்குள் எல்லாம் வசதியாக இடம் பிடித்து உட்கார்ந்து கொள்ளுகின்றனர்.

“மே தெனவா மம லியான்னங் உம்ப சல்லி கணிங்…..”

இன்னொரு சி.டி.பி. அவனுக்கு ஒத்தாசை செய்கிறது. ஒருவன் டிக்கெட் எழுத மற்றவன் காசு வாங்குகின்றான்.

விறு விறு வென்று எழுதிக் கொண்டிருந்தவன் திரும்பி பஸ்சைப் பார்க்கின்றான். அவனுக்குப் பற்றிக் கொண்டு வருகிறது.

கியூவில் பாதி அப்படியே இருக்கிறது. அவனிடம் இப்போது டிக்கெட் வாங்கியவன் ஃபுட்போர்டில் நிற்கின்றான்.

“இந்தா ஓய் பின்னக்குப் போல… இன்னும் போ. தள்ளு நல்லா இன்னம் போ இந்த ஆளெல்லாம் போறதில்லையா….?”

கண்டக்டர் கத்தினாலும் ஏறியவனால் பின்னுக்குப்போக முடியவில்லை. முன்னால் நிற்பவர்கள் போனால்தானே இவனால் போக முடியும்! போறதா இல்லையா இப்ப….” என்று கத்தியபடி டப்பென்று டிக்கெட் புத்தகத்தை மூடி கம்கட்டில் இடுக்கிக் கொண்டு பின் டயரியல் காலூன்றி ஏறி ஜன்னலுக்குள்ளாகப் பிளிருகின்றான்.

“தூணுக்குப் பின்னுக்குப்போ…. இன்னம் கொஞ்சம்போ…. இன்னம் இன்னம் ஏ அம்மா பின்னுக்குப் போகமுடியாட்டி எறங்கு சுருக்குனா…. ம்ம்….. பஸ்ஸட்ட…..”

மறுபடியும் வந்து எழுதத் தொடங்கி விட்டான். கியூ குறைகிறது. பஸ் திமிர்கிறது.

உள்ளே ‘காள்பூல்’ என்று கத்தல்கள், சின்னஞ்சிறுசுகள் என்ன செய்யும்? பெரியவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை! அவர்களோ கஷ்டப்பட்டு மூச்சு விடுகின்றார்கள்.

“ஓடுன்னாத்தான் கொஞ்சம் காத்தோட்டமா இருக்கும்….”

‘அடச்சீ முதுகுல குந்தாதே’

“செத்த வெலகிக்கிறது எச்சிதுப்பிர்றேன்….”;

இந்த லெச்சணத்துல வெத்தலை வேறயா…. அப்படியே நைசா சன்னல்கிட்ட நின்னுக்கிடாதே…..”

இப்போது டிக்கெட் வாங்கியவன் ஏற இடமில்லாமல் வெளியே நிற்கின்றான்.

“மே யக்குந்தெக்க மல கறதர” என்று உறுமியபடி பேய்போல் உள்ளே நுழைகின்றான் கண்டக்டர்.

முதன் முதலாக டிக்கெட் வாங்கிக் கொண்டு ஏறிய பெண்களில் இருவர். ஒரு மூன்றாள் சீட்டில் உட்கார்ந்திருக்கின்றனர். சற்று நெருக்கி உட்கார்ந்தால் இன்னும் இருவர் இருவர் உட்காரலாம்.

“லெடெக் என்ட இன்னவா” என்று அவர்கள் அடம் பிடிக்கின்றனர்.

காதறுந்த கை ஒரு கையிலும் கத்தும் சிறு மறு கையிலுமாக எறிய பெண் அங்கு தனக்குக் கொஞ்சம் இடம் தருமாறு கெஞ்சுகின்றாள். கையில் குழந்தையை வைத்துக் கொண்டு நெரிசலில் நிற்கும் பரிதாபத்தைக் காட்டி அவர்களை வெற்றி கொள்ளும் முயற்சியில் அவள் ஈடுபட்டு கெஞ்சிக் கொண்டிருக்கையில் தான் கண்டக்டர் நுழைகின்றான்.

“இந்தா அம்மா உள்ளுக்குப் போறதா இல்லையா….” என்று கோபத்தில் அவள் நெஞ்சில் கைப் போட்டுத் தள்ளுகின்றான். அவன் உந்தித் தள்ளிய வேகத்தில் விழப்போனவள் தடுமாhறிச் சமாளித்து குட்டிச்சாக்கை கை விட்டு கம்பியைத் தாவி பிடித்து நின்றாள்.

சிசு குய்யோ முறையோ என்று அலறத் தொடங்கியது.

மற்றவர்களையும் அப்படியே தள்ளித் தள்ளி லொறியில் செங்கல் அடுக்குவது போல் அடுக்கிவிட்டு வெளியே வருகின்றான் கண்டக்டர்.

அத்தனை சட்டம் பேசியவன் அந்த “அட்வாஸ் புக்கிங்’ யாருக்கு என்று கேட்கவில்லை. கைக்குழந்தையுடன் அல்லல் படும் அவளுக்கு அதில் கொஞ்சம் இடம் கொடுக்கும் படிக்கூறவில்லை.

அவள் ஒரு தோட்டத்துத் தமிழச்சிதானே?

நிற்பவர்களுக்கு மூச்சுவிட முடியவில்லை. பிடித்துக் கொள்ள இடம் இல்லை. காலூன்ற வசதியில்லை. எங்கேயோ நிற்பவர்கள் எட்டி எங்கேயோ பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தப் பெண்ணும் வாயால் ஊதி ஊதி குழந்தையைக் களைப் பாற்றிக் கொண்டிருக்கின்றாள். எப்போது மயக்கம் போடுமோ எப்போது சாகுமோ தெரியாது.

இன்னும் கொஞ்சம் பேர் ஏறினார்கள், அப்படி ஏறியவர்களில் ஒரு தடியன் நிற்பவர்களை நசுக்கி நெரித்துக் கொண்டு உள்ளே போய் அந்த பெண்கள் பிடித்து வைத்திருந்த சீட்டில் அமுங்கிக் கொண்டான்.

‘அவன்தான் நோயாளியோ” என்று சுற்றி நின்றவர்கள் பொருமிக் கொண்டாலும் அவர்களிடம் வாய் கொடுக்க யாரும் விரும்வில்லை.

பஞ்சு திணித்த சாக்குப் போல் வாய் வழிய நிற்கிறது பஸ்.

கிளம்பி ஓடாதா! காற்று கொஞ்சம் வீசாதா! என்று விலையில்லாத காற்றுக்கு ஏங்கினார்கள். அத்தனை பேரும்.

கண்டக்டர் டிரைவரைக் கூப்பிட்டான். கையிலிருந்த சிகரெட்டைக் காட்டினான் டிரைவர். சிகரட்டை முடித்து விட்டுத்தான் அவன் வருவான். கண்டக்டர் ஒரு ‘டீ’ அடிக்கப் போனான். உள்ளே இவர்கள் வெந்து கொண்டிருந்தார்கள்.

மணி மூன்றுக்குப் பத்து. அப்பாடா ஒன்றரை மணி கிளம்பிவிட்டது.

தபாலாபீஸ் சந்தியில் வட்டமடித்துத் திரும்பும் போதே மற்றவர்களின் எழும்புகள் முறிந்தன.

கை வண்விண்ணென்று தெறிக்கிறது. முதுகு முறிகிறது. இடுப்பு நோகிறது. கால்கள் சூகை பிடித்துக் கொள்ளுகின்றன. எதிலாவது மோதிக் கொண்ட சிறிசுகள் கத்துகின்றன.

டிரைவர் பிறேக் அடிக்கும் போதெல்லாம் உள்ளே இருப்பவர்கள் உயிரைப் பிடித்துக் கொள்ளுகின்றனர். எங்கே பெரட்டித் தொலைச்சிடுவானோ என்று அல்ல. அப்படி பிரட்டி விட்டாலாவது பரவாயில்லை பஸ்சை விட்டு வெளியேயாவது விழலாம்.

தாகம் ஒன்றும் அதில் உள்ள ஆக்கினையும் இத்தனை கொடுமையாக இருக்க முடியாது.

ஆறுகாமம், அமிர்தவல்லி, ஆளிஎல என்று ஒரு இடத்திலும் நிற்காமல் ‘ஜீவ்’ வென்று பறந்து கொண்டிருந்தது பஸ்.

அந்தப் பெண்ணின் கைக்குழந்தை தோளில் மயங்கிக் கிடக்கிறது. இன்னும் சாகவில்லை. தன்னுடைய மெலிந்த மார்புக்குள் அதை அமுக்கி அணைத்துக் கொண்டு நிற்கின்றாள் தாய். குட்டிச் சாக்கு எங்கே கிடக்கிறதோ தெரியாது! கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த கை ஒடிந்து விட்டதுபோல் வலிக்கிறது.

பஸ் ஆடு பாலத்தைத் தாண்டியதும் ‘பெல்’ அடிப்படுகிறது ‘சீரியக்கொலை’ எல்லாம் ஏத்தமாட்டேன்னானே…. யார் ஏறங்கப் போறது’ என்று அனைவரும் பார்க்கின்றனர்.

‘ஆலிஎலை அத்தாமி கீரியக்கொலை எல்லாம் வராதே’ கண்டக்டர் தமிழில் சொன்ன தன் மர்மம் நமக்கு இப்போது புலனாகிறது.

இவர்கள் சிங்களவர்களாயிற்றே!

பஸ் மீண்டும் ஓடத் தொடங்குகிறது.

தோட்டத்துக் கூட்டம் அதற்குள் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

இது ஒரு சின்னப் பயணம். பத்துமைல் தூரம் ஓடும் பஸ் பயணம். இதே இந்த மக்களுக்கு இத்தனை சிரமமானதும், சிக்கலானதுமாக இருக்கிறதென்றால் வாழ்க்கை எனும் பெரும்பயணம்…..?

முந்தைய கட்டுரைஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்
அடுத்த கட்டுரைஇரவு -கடிதம்