இன்னும் இரண்டொரு சூரியன் இருந்தால்தான் கட்டுப்படியாகும் என்று பட்டது அவனுக்கு.
எலும்பைக் குடையும் நுவரெலியா குளிருக்கு. இந்த ஒரு சூரியன் போதாதுதான். டார்வினின் நண்பரும் விஞ்ஞானியும் தத்துவஞானியுமான ஏர்னஸ்ட் ஹெகல் என்பார், உளசு;சோர்வோ உடற்சோர்வோ உள்ளவர்களுக்கு இது ஒரு மெக்கா என்று வர்ணித்த அதே நுவரெலியாதான்.
இவனுக்கு இரண்டு சோர்வுமே சேர்ந்தாற்போல் வந்திருக்கின்றன. நிற்க முடியவில்லை@ வெடவெடக்கிறது. நடக்க முடியவில்லை@ நடுங்குகிறது. உட்கார முடியவில்லை@ ஊசியாய் குத்துகிறது!…… இப்படியும் ஒரு குளிரா! இப்படியும் ஒரு ஊரா!
காற்றின் குளிர், மயிர்கால்கள் ஊடாகத் தோலுக்குள் நுழைத்து, தசைகளுக்குள் வியாபித்து, ஒவ்வொன்று ஒவ்வொன்றாய் எலும்புகளைத் தேடித் தேடி எண்ணிச் சுற்றிச் சுற்றி….. உடல் ஜில்லிட்டு விரைத்துப் போகிறது.
இதே மாதத்தில் மூன்றாவது தடவை இது.
அம்மாவைப் பார்க்கப் போக வேண்டும் என்னும் பேச்செழுந்தபோதே லயத்துக்கு வரமாட்டோம் என்று மக்கார் பண்ணினார்கள் மனைவியும் மகளும். அவனுக்கும் நியாயமாகவேதான் பட்டது.
நுவரெலியாவிலிருந்து பதினெட்டு – இருபது மைல் தொலைவிலுள்ள அந்தத் தேயிலைத் தோட்டத்துக்கு வாடகைக்கு ஒரு கார் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும். பஸ்ஸிலும் போகலாம் தான். ஆனால் நுவரெலியா பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறுவதென்பது ஒரு சர்க்கஸ் விளையாட்டு மாதிரி. ஸ்டாண்டை நோக்கி ஓடிவரும்போதெ பஸ்ஸில் ஏறும் சாகஸம் தெரிந்திருக்க வேண்டும். அடித்துப் பிடித்து முட்டி மோதிக் கொண்டு ஏறத் தைர்யம் வேண்டும். விழாமல், கால் செருப்பை அறுத்துக் கொள்ளாமல் பாய்ந்து தொற்றிக் கொள்ளும் லாவகம் தெரிய வேண்டும். குடையைக் கண்டதும் மிரளும் பசுமாடுபோல் கூட்டத்தைக் கண்டாலே மிரளும் இதுகளுடன் எப்படி பஸ் ஏறுவான்?
ஆகவே அம்மாவைப் பார்க்கத்தானே என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு வாடகைக் கார்தான். இங்கிருந்து ஐம்பது ரூபாயில் முடியும் பயணம் இன்னொரு சைபரைச் சேர்த்துக் கொள்ளும்.
நுவரெலியா டவுனில் அவன் நண்பர் தாயுமானவர் லாயராக இருக்கிறார். அவருடைய வீட்டில் மனைவியையும் மகளையும் நிறுத்திவிட்டு தான் மட்டும் தோட்டத்துக்குச் சென்று வருவதாக ஏற்பாடு.
இந்தமுறை அம்மா ஏமாற்ற மாட்டார்கள் என்றே எண்ணிக் கொண்டான்.
“அங்கே இருந்து நீங்கள் மட்டும் தனியாக அம்மாவைப் பார்க்க போவதென்றால் இங்கிருந்தே தனியாகப் போய் வாருங்களேன்.! நாங்கள் வீட்டில் இருக்கிறோம் என்றாள் மனைவி அவன்தான் சம்மதிக்கவில்லை. ஒருவேளை அம்மா செத்துப்போய்விட்டால் மறுபடி கொழும்பு வந்தல்லவா கூட்டிப் போகவேண்டும் என்று மனைவியைச் சமாதானம் செய்தான். அவள்தான் பிடிவாதமாகத் தோட்டத்துக்கே வருவதென்றாள் – இவ்வளவு தூரம் வந்துவிட்டு இங்கே என்ன தங்குவது என்று.
கார் பிடித்துக் கொண்டெ போனாலும் மேலே கோவிலடியில் நிறுத்திவிட வேண்டும். கோவிலை ஒட்டிக் காடாய் மண்டிக் கிடக்கும் மல்லிகைப் புதர். கரும்பச்சை வானத்தில் நட்சத்திரங்களை வாரி இறைத்தாற்போல் புதர் நிறைய வெள்ளை வெள்ளையாய் வெடித்துச் சிரிக்கும் மலர்கள். கண் மட்டுமல்ல மனமும் கொள்ளாக் காட்சிதான்@ இல்;லை என்று கூறவில்லை!…. மல்லிகைப் புதரை ஒட்டினாற்போல் கொழுந்து நிறுக்கும் மடுவம். மடுவத்தின் ஓரமாக வந்து நின்று கிணற்றுக்குள் எட்டிப் பார்ப்பதுபோல் கீழே பார்த்தால் மலையடிவாரத்தின் பள்ளத்துக்குள் தெரியும் ஏழெட்டுப் பத்து லயத்துக்கூரைகள் சிவப்புச் சிவப்பாய் கோடாகப் புகை விட்டுக் கொண்டு.
அதில் ஒன்றின் ஓரத்துக் காம்பிராதான் அம்மாவின் வாசஸ்தலம். அம்மாவும் தம்பியின் குடும்பமும் அதற்குள்தான்.
வெள்ளைக்காரன் தேயிலை பயிரிடத் தோடங்கிய காலத்தில் கட்டப்பட்டவை இந்த லயங்கள். நூற்றைம்பது – அறுபது ஆண்டு பழைமை வாய்தவை. மாற்றமே இல்லாமல் அப்படியே தொடர்கின்றன. அரசுக்கு அரசு தலைவர்கள் மாறுகிறார்கள் ஆனாலும் இவை மாதுவதில்லை!
கொழுந்து மடுவத்துக்கு இந்தப் பக்கமாக இரண்டு தேயிலைச் செடிகளின் இடைவெளிக்குள் ஒரு குறுக்குபாதை இறங்குகிறது. படிகள் கட்டப்பட்டுக் கல் பெயர்ந்து, பல் விழுந்த எகிறுபோல்…..
அதன் வழியாகக் கீழே இறங்க வேண்டும். நின்று நெளிந்து ஒடிந்து திரும்பி இருநூற்றறுபது படிகள் இறங்கிவிட்டால் அம்மா இருக்கும் லயம் வந்துவிடும்.
அது எப்படி அவ்வளவு கரைக்டாக இறுநூற்றறுபது படி என்று கேட்கத் தோன்றுகிறதா? பள்ளி நாட்களில் தினசரி இரண்டு தடவை ஏறி இறங்கிய படிக்கட்டாயிற்றே! இறங்கி ஓடும்போது முதல் நாலைந்து படிகளை விட்டு விட்டு எண்ணத் தொடங்கினாலோ அல்லது கடைசி நாலைந்து படிகள் வரும் போது எண்ணுவதை எதேட்சையாக விட்டுவிட்டாலோ, கல்லுக்கு கல் கால் வைத்து ஓடும்போது எண்ணி எண்ணி ஓடிய படிகள்தான். பழக்கம்தான். இருநூற்றறுபதுக்குக் கூடுமே தவிர குறையாது.
சப்பாத்தின் உயர்குதி கல்லிடையில் சிக்கிக் கால்புரண்டு சுளுக்கிக் கொண்ட அனுபவங்களால் கழற்றிக் கையில் தூக்கிக் கொண்டு மனைவியும் மகளும் அவன் பின்னால் இறங்குவார்கள்.
அவர்களின் முகத்தைப் பார்த்துக் கண்களைச் சந்திக்கும் தைரியம் அப்போது அவனிக்கிருப்பதில்லை.
கோவிலடியில் கார் நிற்கும்போதே கீழே லயத்தில் பக்கத்துக் காம்பிராக் காமாட்சி, “பெரியத்தம்பி வாறாப்பல இருக்கேம்மா?…..” என்று விசாரிக்கத் தொடங்கியிருக்கும்.
வாசல்வரை வந்து பூவரச மரத்தடியில் அம்மா நிற்பார்கள். தம்பியின் பிள்ளைகள் பின்னால் நிற்கும். தம்பி பட்டியில் இருப்பான். ஏதாவது மண்ணை நோண்டிக் கொண்டு.
“பாத்து, பாத்துப்பா!…. பாத மாதிரியா இருக்கு?…. அட மழயில மண்மணல்லாம் அரிச்சுக்கிட்டுப் போயிறுச்சி!……. பொந்துக்குள்ளாற ஏதுங் கால விட்டுக்குறாம!…..” என்று குரல் கொடுத்தபடி இரு கைகளையும் நீட்டிக் கொண்டு அவர்களை வரவேற்கும் அம்மா…..
வயதால் பாதியும் குளிரால் மீதியுமாகச் சுருங்கித் தொங்கும் தொல்களுடன் அந்த முகம், அந்தக் கைகள்!……
அள்ளி அணைத்துக் கொள்ளும் அந்தக் கைகளின் சிலிர்ப்பு இவனுடலுடன் இழைய, அப்படியே அலாக்காக அம்மாவைத் தூக்கி ஒரு சுற்றுச் சுற்றி உள்ளே நுழைந்து விடுவான்.
பின்னால் நிற்கும் சின்னதுகள் பேந்த பேந்த முழிக்கும்.
“விடுப்பா விடு!… நான் புள்ளையக் கொஞ்சணும்!” என்று தன்னை விடுவிடுத்துக்கொண்டு வெளியே திரும்புகையில் மருமகளும் கொழும்புப் பேத்தியும் லயத்துக்குள் நுழைவார்கள்.
மருமகளின் நெற்றியில் கையை வைத்துக் கன்னம் வழிதாவாய் வரை உருவி நெற்றிப் பொட்டில் விரல்களை நெரித்துப் படபடவென்று முறித்துக்கொண்டு, “பாத்தியா எவ்வளவு திருஸ்டி என் செல்லத்துக்கு!” என்றபடி துணிகளை இழுத்துக் கொடியில் பொட்டுவிட்டு நாற்காலியை இழுத்துப் போட்டு “இரும்மா!” என்பார்கள். கொழும்புப் பேத்தியின் ஆப்பிள் கன்னங்களைத் தனது கைக்குள் அடக்கி அப்படியே இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்வார்கள்…. பேத்தி, ‘ஹ{ய்ய்’ என்று கத்துவாள். “பாட்டி கை குளிருதாம்மா?” என்பார்கள் சிரித்தபடி… “குத்துது~!’ என்பாள் பேத்தி.
அவனும் மகளும் கட்டிலில் அமர்ந்து கொள்வார்கள். அம்மா இருவருக்கும் நடுவில் படத்துக்கு அமர்வதுபோல் அமர்ந்து கொள்வார்கள்.
தம்பியின் மனைவி ஆவி பறக்கப் பறக்கத் தேனீர் கிளாஸ்களுடன் வந்து நிற்பாள்.
“தேத்தண்ணி குடிப்பியாம்மமா?” என்று தேனீர்’ கிளாஸை எடுத்து நீட்டுவார் அம்மா பேத்தியிடம்.
“ம்!” என்றபடி கிளாஸை வாங்கிக் கொள்வாள் பேத்தி. ‘காலையில் தேத்தண்ணி குடிக்க மாட்டோம். கோப்பிதான்’ என்பது போன்ற பாட்டிக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் பேச்சுக்கள் கூடாது என்று சின்னவளுக்குச் சொல்லிக் கொடுத்து வைத்திருக்கிறான். எது எது என்பதெல்லாம் அந்தச் சிறிசுக்கு எப்படித் தெரியும்? ஆகவே எல்லாவற்றிற்கும் ‘ம்’ தான்!
“அம்மா, டீ!” என்றவாறு அம்மாவிடம் மகள் எழுந்து செல்வதன் அர்த்தம், ‘எனக்கு டீ வேணாம்! என்பதுதான்! “ட்றிங் லிட்டில்@ வெரி கோல்ட், நோ?” என்றபடி கிளாஸை வாங்கி மகளுக்குப் பருக்கத் தொடங்குவாள் தாய்.
“நீ குடிம்மா@ நான் குடுக்கிறேன் பாப்பாவுக்கு!” என்றவாறு அம்மா கட்டிலை விட்டிறங்குவார்கள்.
“எல்லாம் ஆயும் மகளும் பாத்துக்கிறுங்க@ நீங்க இருங்க!” என்று, தான் பாதி குடித்த கிளாஸை அம்மாவின் வாயில் வைத்து மெதுமெதுவாகச் சாய்ப்பான் அவன்.
“நீ குடிப்பா!” என்’றாலும் அம்மாவின் தொண்டைக்குள் அது ஜீவாம்ருதமாய் இறங்கும். கண்கள் படபடத்துக் கசியும் புருவத்துக்கும் தெரியாமல்.
வேரும் மண்ணுமாய்; நாலைந்து நோக்கல் கிழங்குடன் வந்து நிற்பான் தம்பி.
தோட்டத்தில் அவனுக்கு சுப்பர்வைஸர் வேலை கொடுத்திருக்கின்றார் துரை! ஒரு வருஸம்போல் ஆகிறது அரைக்கால் சட்டை, சப்பாத்து, மேஸ் போட்டு, அதுவரை கையில் கத்தியும் தோளில் மண்வெட்டியும்தான். அவன் மனைவி தோட்டத்தில் வேலை. பழைய மலையோ மட்டக் கொழுந்தோ கொழுந்துதான்.
கட்டைவிரல் நுனியும் ஆள்காட்டி விரலோரங்களும் வரியாய்த் தேயிலைக் காட்டையுடன் கறுப்புப் கறுப்பாய்க் கோடு பாய்ந்து கிடப்பதெல்லாம் கொழுந்தாய்வின் முத்திரைகள். பெரியண்ணன் சம்சாரம் வந்தால் அந்தப் பளிங்கு விரல்கள் தான் இவளை முதலில் கவர்வது. அக்காவின் மோதிரம்கூட அந்த விரலால்தான் பெருமை அடைவதாக எண்ணிக்கொள்வாள்!
நோக்கல் கிழங்கை வேருடன் பார்த்தே இராத மகளுக்கு ஒரே வியப்பு! கண் விரிய நிற்பாள்!
“வேர வெட்டி வீசுங்க! இல்லாட்டி மண்ண அலசிக்கிட்டு வாங்க!” என்று மனைவியும் “கோழியத் தொறந்து உட்றாதப்பா! கோணக்கொண்ட சேவல சுத்தம் பண்ணிக் குடுத்துறு! என்று அம்மாவும் அவனுக்கு உத்தவிடுவார்கள்.
இருவருக்குமே தலையை ஆட்டிவிட்டு அண்ணனைப் பார்ப்பான் தம்பி.
“ராத் தங்கிட்டு நாளைக்குப் போங்களேன்? ஆள் நெருங்கி என்னா ஆயிறப் போவுது?….. மனசிருந்தா எடமாஇருக்காது!….. கார்க்காரன நாளைக்கு வான்னு அனுப்பிட்டு வரவா?…..” அண்ணன் குடும்பத்தை ஒரு இரவு தங்களுடன் தங்கவைத்துக் கொள்ளும் ஆசை அவன் முகத்தில் நர்த்தனம் ஆடும்.
அம்மாவுடன் தங்கி இரவைக் கழிக்க அவனுக்கும் ஆசைதான். ஆனாலும் இருக்கும் அந்த ஒரே காம்பிராவில் படுக்க, எழுந்திருக்க, காலையில் வெளியே தெருவே போக எங்கே வசதி இருக்கிறது?
லயத்தின் முன் லைசன் கல்லில் நின்றுதான் பல் துலக்கி முகம் கழுவ வேண்டும். முழு லயமுமே நின்று வேடிக்கை பார்க்கும். இல்லாவிட்டால் பட்டிப் பக்கம் போய்விட வேண்டும்…..
முழு லயத்துக்குமே இருப்பது இரண்டே மலசல கூடங்கள் அதுவும் தேயிலைக்குள்ளே போக வேண்டும்- கையில் செம்புடனோ கைவாளியுடனோ!
கொழும்பிலேயே பழகிவிட்ட மனைவி மக்களுடன் இதெல்லாம் பெரும் சிரமம். ஆகவேதான் மனதைக் கடித்துக்கொண்டு வந்த அன்றே கிளம்பிவிடுவான்!
தனியாக வந்தால் தங்கிவிட்டே செல்வான். அவன் புரண்டெழுந்த மண் அது!
ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் தம்பியைப் பார்த்து ஒருவகை ஏமாற்றத்துடன் கூறுவான், “இல்ல ராசு கார்க்காரன நாலு மணிபோல வான்னு சொல்லி அனுப்பீட்டுத்தான் வந்தேன்….” என்று.
“அம்மி அரைக்கிற சத்தங்கேக்குது என்னா அரைபடுது?” என்பான்.
“நீ சும்மா இரேன்; கொச்சிக்கா அரைக்கிறா உன் கொழுந்தியா” என்று கூறியபடி அம்மா தேனீர் கிளாஸ்களை எடுத்துக்கொண்டு அடுப்படியை நோக்கி நடப்பார்கள்.
அந்த வயதிலும் அந்தக் குளிரிலும் அம்மா சிட்டைப்போல் பறப்பதாகத் தெரியும் அவனுக்கு. உழைத்து உரமேறிய உடல் சீக்கிற்கோ தளர்வுக்கோ அது இடமளிக்காது. அவனுடைய வருகையும் அவளுக்கு ஒரு புதுத் தென்பைக் கொடுக்கிறது. உடலிலே ஒரு இளமை@ நடையிலே ஒரு துள்ளல்!
தம்பி மனைவியைக் கொழுந்தியாள் என்றழைக்கும் உறவு முறையின் உரிமை, குழம்பாக்கக் கொச்சிக்காய் அரைபடும் அம்மிச் சத்தம் – இத்தியாதிகளைக் கேட்க இங்கு வரவேண்டும்!
கொழும்பில் யார் அம்மியில் அரைக்கிறார்கள்? பொலித்தீன் பொட்டலங்கள் தானே!
“ என்னாப்பா, அப்படியே உக்காந்துட்டா எப்படி?……..” என்று மனைவியைக் கிளப்புவான். அவன் மகள் இன்னும் அம்மாவின் மடியிலிருந்து எழவில்லை!
கூரையில் செருகியிருக்கும் தீட்டுக்கட்டையும் கத்தியுமாகத் தம்பி தோட்டத்துக்குள் சென்றுவிடுவான். கோழி கறேபுறே என்று கூக்குரலிடும்.
மனைவியையும் மகளையும் கூட்டிக் கொண்டு அவனும் தோட்டத்துக்குள் செல்வான். தம்பியின் சின்னது இரண்டும் அக்காவின் கைகளை பிடித்துக்கொண்டு உடன் நடக்கும்.
அம்மாவின் மடியில் அவனும் அவன் மடியில் அம்மாவுமாய் ஆனந்தமாக அந்தக் கொஞ்ச நேரப் பொழுதைப் போக்கி விடுவான் அவன்.
ஆனால் மனைவியும் மகளும் எத்தனை நேரம் அதற்குள்ளேயே அமர்ந்திருப்பார்கள்?
லயத்துக்கும் காய்கறி தோட்டத்துக்கும் நடுவில் இருக்கும் வேலியிடம் நிற்கிறது ஒரு மாதுளை மரம். சின்னவனுக்கும் அதற்கும் ஒரு வயசு என்று இறக்கும்முன் அப்பா அடிக்கடி கூறுவதுண்டு.
கிளை நுனிகளில் சிவப்புச் சிவப்பாய் சின்னச் சின்னப் பூக்களும் குண்டு குண்டாய்க் காய்களுமாய்…..
ஒரு காயைத் தொட்டுப் பார்க்கின்றாள் மகள். தனது மொட்டுக்கள் விரிய “மாதுளை” என்பாள் தகப்பனைப் பார்த்து.
“புடுங்கி திண்ணும்மா@ குடற் பூச்சிக்கும் நெஞ்சுச் சளிக்கும் நல்லது” என்று உள்ளிருந்து ஓடி வருகிறது அம்மாவின் குரல்.
தங்களைச் சுற்றி சுற்றியே வலம் வரும் அம்மாவின் அன்புப் பார்வை அவனைத் தடுமாறச் செய்கிறது.
அம்மாவுக்கென்று அவன் என்ன செய்திருக்கின்றான்? படித்து பாஸாகி உத்தியோகம் தேடி காதலித்துக் கல்யாணம் கட்டிக் குழந்தை பெற்று …..
என் மகன் இப்படி இப்படி இருக்கிறான் என்று கூறிக் கூறிப் பெருமை படும் நெஞ்சம் அது!
எனக்கு என்ன செய்தாய் என்று எதிர்ப்பார்க்கும் நெஞ்சமல்ல… இப்படி ஒருநாள் வருவதுவும் “இனி எப்பப்பா?…..” என்னும் கேள்வியுடன் விடை பெறுவதுவும்தான்; அவன் செய்வது!
இந்த வருகைதான் அந்தத் தாயுள்ளத்தை எப்படி ஆட்கொண்டுவிடுகிறது!
அம்மாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்னும் உறுத்தலில் ஒரு தடவை கொழும்புக்குக் கூட்டிக்கொண்டு போனான் தன்னுடன் வைத்துக்கொள்ள!
இந்தக் குளிருக்கும் கொழும்பின் சூட்டிற்கும் அம்மா திண்டாடிப் போனார்கள். பட்டியில்லை, மாடில்லை, சுற்றிவரத் தோட்டமில்லை, பிடுங்கித் சமைக்கக் காய்கறியில்லை! அம்மாவுக்கு ஒரு நாள் போவது ஒரு மாதம் போல் தெரிகிறது.
மகன் வீட்டில் மாட்டிறைச்சி ஆக்குகின்றார்கள்! கொழும்பில் இதெல்லாம் சகஜம்;: சாதாரணம். ஆனால் அம்மாவுக்கு…
“ …..எனக்கு…… தனியா……” என்றார்கள் மகனிடம் ஒரு நாள்.
“ உங்களுக்கு அதெல்லாம் இல்லே தனியாத்தான்” என்று தொடங்கிய மகனிடம் மெதுவாகக் கூறினார்கள்:- “தனியா ஒரு கோப்பயும் ஆப்பயும்பா!…… நீங்க பாவிக்ற ஆப்ப, கரண்டி எல்லாம்…… வாணாம்”
மருமகளிடம் அம்மா மூச்சு விடமாட்டார்கள். ‘ வாம்மா, இரும்மா’ என்றுகூடச் சொல்லமாட்டார்கள்: ‘வாங்க, இருங்க’ தான். மருமகள் அம்மாவுக்கு ஒரு மகாராணி மாதிரி! என் மகளை நம்பி வந்தவளாயிற்றே என்னும் நினைவு.
பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு பத்து நாள் இருப்பார்கள் அவ்வளவுதான்!
தான் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டும் என்பதைத் தவிரப் பிள்ளைகள் தனக்குச் செய்யவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு இல்லாதவள் தாய்.
நம்மைச் சுற்றி ஆயிரம்பேர் இருக்கலாம். அன்பைச் சொரியலாம். ஆனால் யாருமே அம்மாவாக ஆகிவிட முடியாது!
அம்மா அம்மாதான்!
மாதுளை மரத்தைத் தாண்டிப் பட்டியில் மாடுகளிடம் நின்று பயந்து பயந்து தொடும் மனைவி, மகளைக் கேலியாகப் பார்த்துப் பசுவின் மடியில் கை வைத்துக் காம்பை இழுத்துப் பாலைப் பீய்ச்சிக்காட்டிப் பெருமைப்பட்டுக்கொண்டு கீழே நடப்பான், அவன்.
மடியில் கை பட்டதும் பசு சிலிர்த்துக் கொள்வதை வேடிக்கை பார்த்து நிற்கும் மகள், உடலைக் கூனி வாலை உயர்த்தி அது தடதடவென்று பெய்ய ஆரம்பித்ததும் தெறிக் ஆரம்பித்ததும் காலைத் துடைத்தபடி ஓடி வந்துவிடுவாள்!
பட்டிக்குக் கீழே ஒரு நீரோடை. தண்ணீர்க் கான் அருகே தம்பி ராசு கோழி வெட்டிக்கொண்டிருப்பான். அவன் தலைக்கு மேலாகப் பலாமரத்தில் முற்றாத காய்களின்மேல் தாவித்தாவிப் பாய்ந்து, பழுத்திருக்கிறதா என்று வாசனை பிடிக்கிறது அணிற் கூட்டம்.
“ அணில் பழம் தேடுது, பாத்தியா” என்று மகளுக்குக் காட்டுவான்.
தம்பி கோழி வெட்டும் லாவகத்தை ரசித்துக்கொண்டு நிற்பாள் மனைவி.
ஏதோ வாசம் மூக்கைத் துளைக்கிறது. நுனி மூக்கு விரிந்து வாசனைக் காற்றை மாற்றிக்கொள்கிறது.
“ அன்னாசி ஒண்ணு பழுத்திரிச்சி. கொஞ்சம் இலை சருகெல்லாம் போட்டு மூடித்தான் வச்சேன்! காக்கா சனியனுக உடுமா! கொத்தியிருக்கும்: அதுதான் கமகமக்குது!……..” என்று கோழியை அப்படியே வைத்துவிட்டுத் தம்பி எழுந்து போய் அன்னாசிப் பழத்தை ஒடித்து எடுத்து வந்து நீட்டுவான்.
மகள் வாங்கிக்கொள்வாள். கொண்டைக்குக் கீழே லேசாகக் கொத்தியிருக்கிறது காகம். வாசனை தாங்கமுடியவில்லை.
“ வெட்டித் தர்றேன் பெறகு” என்றபடி கோழி வெட்டுவதில் குந்திக்கொள்வான் தம்பி.
நீரோடையின் இருமருங்கிலும் கரும்பு செழித்து நிற்கிறது. கரும்போலையின் அடிப்பக்கம் கறுப்புக் கறுப்பாய் ஆடியாடி அமர்ந்திருக்கும் அழகான சின்னச் சின்ன பூச்சிகள் இலை ஆடியதும் பறந்து மறுபடியும் அதேபோல் கூட்டமாக அமரும் காட்சி கண் கொள்ளாதது.
மனைவிக்கும் மகளுக்கும் கரும்பை ஆட்டி ஆட்டிக் காட்டிக்கொண்டிருப்பான் அவன். பூச்சிகள் எழுந்து பறப்பதையும் மீண்டும் அமர்வதையும் கண்டு ரசிக்க.
இப்படி ஒவ்வொன்றையும் வியப்புறும் வண்ணம் காட்டி அவர்களின் ஆயாசத்தை, தனிமையை, இட வித்தியாசத்தை விரட்டிப் பொழுதைக் கழித்துவிடும் எண்ணம் அவனுடையது.
“அண்ணிக்கும் மகளுக்கும் வேடிக்க காட்டுறியா, கோழி வேல நடக்குதா? அரக்கப் பறக்க அள்ளிப்போட்டுக்கிட்டு அனுப்பத்தான் வேண்டி வரும்! சுருக்காக் கொண்டாந்து குடு” என்று இளைய மகனை எச்சரித்த அம்மாவின் குரல், “கரும்போலயத் தடவிப் பார்க்க வேணாம்ணு அம்மாகிட்ட சொல்லும்மா வெட்டுறது தெரியாம வெட்டிப்புடும் வெரல….” என்று பேத்திக்கும் எச்சரிக்கை விடுக்கிறது.
கரும்பிடமிருந்து விலகி நின்றுகொள்வாள் மருமகள்!
“அதே பஞ்சு மாதிரி வெரல்! அறுத்தாலும் ஆழமாத்தான் அறுத்துப்புடும்” என்று ஒத்தூதும் தம்பி மனைவியின் குரல்.
அம்மா நீரோடை அருகே வந்துவிடுவார்கள். “இதறுதி பாத்தது போதும், இனிப் பெறகு பாக்கலாம், வாங்க தேத்தண்ணி குடிக்க!…..”
“இப்பத்தானே குடிச்சோம்?”
“அது வெறுந் தேத்தண்ணிதானே, காலையாகாரம் ஏதுஞ் சாப்புடுறதில்லியா! சுடச்சுட உப்புமா கௌறியிருக்கேன்…. ஆறிப்போயிறும், வாங்க” என்று மருமகளையும் பேத்தியையும் அழைப்பாள். பேத்தியிடமிருந்து வாங்கும் அன்னாசிப் பழத்தைக் கீழே வைப்பாள்- “ பச்சப் புள்ள கையில் இதத் தூக்கிக் குடுத்தா எம்மா நேரம் வச்சிருக்கும்!” என்றபடி.
“நீ வல்லையா சாப்புட?” என்று தம்பியைக் கேட்பான் அவன்.
“இதோ முடிஞ்சிறிச்சி நீங்க நடங்க நான் வந்துடுறேன்” என்பான் தம்பி.
எட்டி நாலைந்து வாழை இலை நுனிகளை நறுக்கிக்கொள்வார்கள் அம்மா.
அவனால் நம்ப முடியவில்லை! அதற்குள் அம்மா என்னென்ன செய்கிறார்கள்! அந்தக் கைகளுக்குள் என்ன மாயை இருக்கிறது!
தாயுடன் அறுசுவைபோம் என்று அன்று சொன்னவன் சும்மாவா சொல்லி வைத்திருப்பான்?
இன்னும் காய்கறித் தோட்டம் காட்ட வேண்டும்! கொண்டை நாரான் மரம், பனைபோல உயர்ந்து நிற்கும். கறி வேப்பிலை மரம், சேனையில் நிற்கும் கொய்யா மரங்கள்…..
அத்தனையும் பார்த்து, பறித்து, மென்று, துப்பி முடிய நேரம் சரியாகிவிடும். பிறகு நடந்த களைப்பு நீங்கக் கொஞ்சம் உட்காரப், பகல் சாப்பாட்டு நேரம் வந்துவிடும். பகல் சாப்பாடு விருந்து தான்.
சாப்பிட்டு முடித்துக் களைப்பாறி அவசர அவசரமாகத் தேனீர் தயாரித்து அதையும் குடித்து ரெடியாகியதும் மலை போல் நிற்கும் படியேறும் படலம்! இருநூற்றறுபது படிகளை ஏறி முடிப்பதென்றால்
சாப்பிட்ட விருந்துச் சாப்பாடு, குடித்த தேனீர் அத்தனையும் எங்கேயென்று போய்விடும்!
கார்க்காரன் வந்து ஹோர்ன் அடித்துக்கொண்டு நிற்பான்.
இதுதான் ஆண்டுக்கு இரண்டு தடவை அல்லது மூன்று தடவை என்று நடக்கும் அம்மா தரிசனம்! பழைய கதை.
அப்போதெல்லாம் அவ்வளவாகத் தோன்றுவது கிடையாது. முழுமுதற் காரணமே அம்மா! அம்மாவின் பராமரிப்பு! தங்களைச் சுற்றிச் சுற்றி வந்து நிற்கும் அம்மாவின் அன்புவட்டம்!
இப்போது அம்மா படுக்கையில். ஒரு பழந்துணிபோல் கட்டிலின் ஒரு மூலையில் கிடக்கின்றார்கள்.
கையில் ஆட்ட ஓட்டமில்லை. கால்களில் ஒரு அசைவில்லை. உடலில் ஒன்றுமே இல்லை.
சீக்கிற்கோ தளர்ச்சிக்கோ இடம் கொடாத, உழைத்து உரமேறிய உடல் என்று அவனே பெருமைப்பட்ட உடல்தான் இப்படிக் கசங்கி, நொடிந்து, நைந்துபோய் நார் நாராய்………கிடக்கிறது.
அவனையும் மருமகளையும் பேத்தியையும் கண்டதும் அந்தக் கண்களிலே ஒரு ஒளி! உதட்டிலே ஒரு சிரிப்பின் நெளிவு! அவ்வளவுதான். ‘வந்துட்டியாப்பா!’ என்னும் மனத்திருப்தி!
கைகள் போர்வைக்குள் நடுங்குவதுபோல் ஒரு துடிப்பு. கம்பளிக்குள் கையை விட்டு அம்மாவின் கைகளைப் பற்றிப் பிடித்தான். மனைவியினதும் மகளினதும் கைகளையும் உணர்வற்றுச் சோர்ந்து கிடக்கும் அந்தக் கைகளுடன் சேர்த்துப் பின் எடுத்து விட்டான்.
இந்த மாதத்திலேயே இது இரண்டாவது வருகை. இரண்டு தடவையும் தம்பிதான் தந்தி கொடுத்திருந்தான்.
‘அம்மாவை நம்ப ஏலாதிருக்கிறது. உடனே வரவும்.’ என்று.
அம்மாவைப் பார்த்த டாக்டர்கூட, “ஆஸ்பத்திரி அது இதெல்லாம் வேண்டாம்! மிஞ்சிமிஞ்சிப் போனா ரெண்டு மூணு நாள் தாங்கும்! எதுக்கு ஆஸ்பத்திரியில சாக விடணும்? ஆண்டு அநுபவிச்ச வீட்டுலயே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டார்!
அம்மாவுக்கும் எழுபது பிந்திவிட்டதுதானே!………..
அம்மா கண்களை மூடிக்கொண்டதும் வெளியே வந்து அவர்கள் நின்று கொண்டார்கள்.
அம்மா எழுந்து நடமாடாத அந்தச் சின்னக் காம்பிராவை அவனால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.
அம்மா சுற்றுமுற்றும் பார்த்து விழித்தார்களாம். வாயே திறக்காத அவர்கள் “அண்ணன் வரலையா?…..” என்று மெதுவாகக் கேட்டார்களாம். பயந்துபோன தம்பி என்ன செய்வான்? தந்தி அடித்திருக்கின்றான்!
‘இருங்கம்மா’ என்று அம்மா இஸ்தோப்பில் இழுத்துப் போட்டு மகாராணி மருமகளை அமரச் சொல்லும் அந்த நாற்காலியில் ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு, பச்சை அரிசி, உறைந்து கட்டியாகிவிட்ட ஒரு போத்தல் தேங்காயெண்ணை, ஊதுபத்தி மஞ்சள் இத்தியாதிகள் ரெடியாக இருக்கின்றன. அறுபதாம் பச்சைக் கொப்புகள் லோட்டாத் தண்ணீரில் தலையாட்டிக்கொண்டிருக்கின்றன.
மகன்களால் என்ன செய்துவிட முடியும் இப்படித் தயாராய் வைத்துக்கொண்டு சோகம் காட்டும் முகங்களுடன் சுற்றிவந்து நிற்பதைத் தவிர?
மூத்தவன்பாடு தர்மசங்கடமாக இருக்கிறது. எவ்வளவு நேரம் என்று இருக்க முடியும்?
நான் போகட்டா என்று எப்படிக் கேட்க முடியும்?……. மனைவி மாதுளை மரத்தடியில், மகள் பாட்டியின் கால்மாட்டில்……சீக்கிரம் செத்துப் போம்மா என்று அம்மாவின் காதுக்குள் சொல்லவா முடியும்?
சென்ற முறையும் இப்படித்தான். இருந்த்pருந்து பார்த்துவிட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள்.
ஏழெட்டு நாட்களுக்குள் இரண்டாவது முறையாக வந்திருக்கின்றான் குடும்பத்துடன். கோச்சுக்காரனும், பஸ்காரனும் கார்க்காரர்களும் இவனைக் கடனாளியாக்குகின்றனர்.
அண்ணன் தம்பியையும் தம்பி அண்ணனையும் பார்ப்பதுவும் திரும்பிக் கொள்வதுவுமாக…….
“இந்த முறை … அம்மா ….. ஏமாத்த மாட்டார்கள்……..” என்று திக்கித் தடுமாறிக் கூறுகின்றான் தம்பி.
அண்ணன் குடும்பத்தை அனாவசியமாக அசௌகர்யத்துக்குள்ளாக்கிவிடுகின்றோமோ என்னும் ஒரு குற்ற உணர்வு தம்பிக்கு.
தம்பியின் வாயைத் தனது விரலால் மூடுகின்றான் தமையன்.
“ டாடி, டாடி! பாட்டி எழும்புது!” என்று கத்திக் கொண்டே வெளியே ஓடி வந்தாள் மகள்.
எல்லாரும் உள்ளே ஓடி வந்து சுற்றி நின்றார்கள்.
அசையாமல் கிடந்த அம்மாவின் கை, ஓட்டை நகங்களுடன் கம்பளிக்கு வெளியே எழுந்து நிற்கிறது. வாயைக் குவித்துக் காட்டுகின்றார்கள் அம்மா.
“பாலூத்தச் சொல்லுங்க மூத்த மகந்தானே?” என்கிறது கூட்டத்துக்குள் இருந்து ஒரு கிழக் குரல்.
“……..த…தண்ணி…” என்ற சத்தம் வருகிறது அம்மாவின் குழிந்த வாயிலிருந்து!
வெதுவெதுப்பான சூட்டுடன் வெள்ளித் தம்ளரில் தண்ணீர் வருகிறது.
மூத்தவன் கட்டில் விளிம்பில் அமர்ந்து அம்மாவின் தலையை உயர்த்தித் தண்ணீரைப் பருக்குகின்றான். மடக் மடக் என்று குடித்துவிட்டு அம்மா படுத்துக்கொண்டார்கள்!
குனிந்து படுக்க வைக்கும்போது அவனிடம் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்குமாப்போல் கூறினார்கள் :- “என்னயச் சுருக்கா செத்துப்போகச் சொல்றீங்களா?….. பாலூத்தக் காத்திருக்கிங்களா?….. கேட்டு தே ஒரு குரல்….”
கண்களை மூடிக்கொண்டார்கள்.
இமைக் கோடுகளில் ஈரம் கசிகிறது… அம்மா பேசினார்களா… அல்லது அவன் மனம் பேசியதா? அவனுக்கு புரியவில்லை.
தம்பியும் மனைவியும் அவனை சோகமாக பார்த்தார்கள்.
இந்த முறையும் ஏம்மாற்றம் தான்.
“….. நெறய…. செலவாகுமே பயணத்துக்கு?”
“பறவாயில்லை வேற என்னதான் செய்யலாம்…. என்றபடி கிளம்பினார்கள்…
கைக்கும் வாய்குமான வாழ்க்கை வாழும் நடுத்தர குடும்பம் அவனுடையது. கொழும்பில் இவன் போன்றோரின் வாழ்வே வித்தியாசமானது… ஆப+ர்வங்கள் நிறைந்தது.
திடீரென்று குஷி வந்து விட்டால் இருநூறு ரூபாய்க்கு ஐஸ்கிரிம் வாங்கி தின்பார்கள். நூறு ரூபாய்க்குக் குடைவாங்க சங்கடப்பட்டுக்கொண்டு கழுத்தில் டையுடன் மழைக்கு கையை தலையில் வைத்துக் கொண்டு றோட்டில் ஓடுவார்கள்.. அந்த வர்க்கத்தின் அச்சொட்டான பிரதிநிதிதான் இவனும்… இல்லாவிட்டால் ழும்பது ரூபாயில் பஸ்ஸில் செல்வதை விடுத்து ஐநூறு ரூபாய் செலவு செய்து காரில் போவானா?
ஆண்டுக்கு இரண்டு தடைவ என்றால் பரவாயில்லை..
இந்த பத்து பதினைந்து நாட்களுக்குள் இரண்டு தடைவ என்றால்….
“அடுத்து எப்பங்க?…. என்னா செய்யபோறீங்க?…” என்டறாள் மனைவி
கேள்வியின் ரகசியம் அவனுக்கும் புரிகிறது… ஏற்கனவே இருந்த நகைகளை பேங்கில் வைத்தாகி விட்டது… அடுத்த முறைக்கு என்ன செய்வது…?
அம்மாதானே என்ன செய்திருக்கோம் அவுங்களுக்கு..? இதையாவது செய்வோம்… சிலுவையாக நினைத்துக் கொள்ளாமல்….
அம்மா அவனை கடன் காரனாக்கிவிட்டு போகமாட்டார்கள்.. அம்மாவுக்கு தெரியும்!
தன்னைத்தானே சமாதானமும் செய்து கொள்கிறான்.
அடுத்த நாள் ஆபீசில் சீ.சீ.யிடம் ஒரு கடன் விண்ணப்பம் எழுதி கொடுத்தான். நிலைமையை விளக்கி…
லஞ்ச் டைமில் சீஃப் கிளாக் அவனை கூப்பிட்டு அவன் கொடுத்த கடிதத்தை திருப்பிக் கொடுத்தார்…
அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.. வட்டிக்குத்தான் வாங்க வேண்டுமோ…? “ஐய்யாயிரம் வாங்கினாலும் மாசத்துக்கு எழுநூற்றைம்பது வட்டி கேட்பானே சில்வா…. வட்டியைத்தான் கட்டலாம், முதல் அப்படியே இருக்குமே என்று குழம்பி போனான் அவன்.
“இது தேவையில்லை” என்ற சீ.சி.… தொடர்ந்தார். “டெத் ஃபண்ட் ஸ்கீம்” பற்றி உங்களுக்குத் தெரியாதா.. இந்த ஸ்கீம் அறிமுகமாகி ஆறேழு மாதங்கள் தான் ஆகின்றன. நிரந்தர ஊழியர்களுக்கு இந்த ஃபண்ட் கிடைக்கும். அதுவுமு; ஒரே நாளில் கிடைக்கும்…. ஆனால் இறந்தவர் ஊழியரின் அம்மாவாக அல்லது அப்பாவாக இருக்க வேண்டும்…
டெத் சர்ட்டிபிகேட் தர வேண்டும்.. உங்கள் சம்பளம் என்ன இப்போது…?
“ஈ.பி.எஃப் கழிக்காம பதினாறு சர்”
“மூன்றுமாத சம்பளம் கிடைக்கும் யூவில் கெட்டிட்”
“தாங்க் யூ சர்” என்று எழுந்தான் அவன்.
அம்மா ஏமாற்றமாட்டார்கள்.