சீர்மை- யின் யாங்-கடிதம்

ஜெ,

சீர்மை குறுநாவலை வாசித்து முடித்ததும் இதை எழுதுகிறேன். ஆசிரியரே சொல்வதுபோல இது யின் – யாங் கின் கதை . சிந்தனைகள் X உணர்ச்சிகள் நோய் X ஆரோக்கியம் என்று அவர் அந்த கறுப்புவெள்ளைக் கட்டங்களை போட்டுக்கொண்டே செல்கிறார். அதில் முக்கியமானது ஆண் X பெண் என்ற யின் – யாங் தான். கென்னும் த்ரேயாவும் ஒரேசமயம் முழுமையை நோக்கிச் செல்லுவதாக கதை சொல்கிறது

நான் இரண்டுமூன்று புள்ளிகளை வைத்து இந்தக் குறுநாவலைத் தொகுத்துக்குக்கொண்டேன். த்ரேயா நோயின் இறுதியில் அவளுடைய கோடுகள் வழியாக சீர்மையை சாதித்தாள் என்பது. ஆனால் அவள் அதை அடைய விரும்பவில்லை.

த்ரேயா அடைந்த அந்த இடத்திலிருந்துதான் கென் கிளம்பி பயணம் செய்கிறான். அங்கிருந்துதான் அவன் சிந்தனையிலே அவனுடைய சீர்மையை கண்டுபிடிக்கிறான் என்பது முக்கியமானது.

. “God, Thou great symmetry” என்ற வரி திமிங்கலம் அதன் அத்தனை எடையையும் தூக்கி கடலில் இருந்து எம்பி குதிப்பது போல் என் அடிவயிற்றிலிருந்து எழுந்து வந்தது.

கென் அடைந்த சிந்தனைவெற்றியை உலகம் எடுத்துக்கொள்ளும் விதம் அடுத்தபடியாக முக்கியமானது. அவர்கள் அதை ஒரு icon ஆக மாற்றிவிடுகிறார்கள். இன்றுவரை உலகத்திலே அடையப்பெற்ற எல்லா ஞானத்தையும் சிலையாகத்தான் மாற்றியிருக்கிறார்கள் என்று விஷ்ணுபுரத்திலே வரும். அதைப்போல உள்ளது.

புத்தகத்தில் இருந்த அந்த வரைபடத்தை மட்டும் மென்தகடாக்கி அதைச்சுற்றி ஒரு மரச்சட்டகத்தைப்போட்டு வைத்திருந்தார்கள். “மக் ஷாட்…மக் ஷாட்” எனச் சொல்லி ஒருவன் மணியடித்தபடி அறை முழுக்க வலம் வந்தான்.

அந்த இடத்தில் தசை கருகும் வாசனையை கென் உணர்வது என்னை உலுக்கிவிட்டது.

அடுப்பில் எண்ணை ஊற்றப்பட்டதால் நெருப்பும் புகையும் அதிகமாகிக்கொண்டே போனது. புகை எங்கும் பரவி கண் எரிச்சலை உண்டாக்கியது. பிறகு திடீரென சதை கருகும் மணம் ஒன்று தோன்றி மறைந்தது. உள்ளுக்குள் எங்கோவொரு வலி மெல்ல மிகமெல்ல எழுந்து என் முழு உடலையும் போட்டு உலுக்கியது. கண்மூடி சுவற்றைப் பிடித்தபடி நின்றிருந்தேன். தூரிகையின் ஒற்றைத் தீற்றல் “இல்லை..” என்ற சொல்லாக தழல் விட்டு எரிந்தது. அது நெஞ்சில் மெல்ல பெருகிப் பெருகி தீயாக வளர்ந்தது. இல்லை இல்லை இல்லை.

சிறந்த ஒரு படைப்பை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்

செம்மணி அருணாச்சலம்

முந்தைய கட்டுரைகதைத்தேர்வின் அளவுகோல்
அடுத்த கட்டுரைசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்