அன்புள்ள ஜெ,
சீர்மை குறுநாவலை இரண்டுமுறை வாசித்தேன். மீண்டும் Grace and Grit ஐ வாசித்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று A theory of everything வாசித்தேன். கடந்த நான்குநாட்களாக இந்தக்குறுநாவலிலேயேதான் உட்கார்ந்திருக்கிறேன். எல்லாவகையிலும் ஒரு மாஸ்டர்பீஸ்.
அரவிந்த் இரண்டு உலகங்களை பக்கம்பக்கமாக வைத்துப்பார்க்கிறார். ஒன்று உணர்ச்சிகளின் உலகம். அது அப்படியே நேரடியாக வாழ்க்கையின் அனுபவங்களுடன் இணைந்திருக்கிறது. அதிலே துக்கமும் அலைக்கழிப்புகளும் மட்டும்தான் காணப்படுகின்றன. இன்னும் சரியாகச் சொல்வோமென்றால் அதில் உள்ளது ஒரு குறையுணர்ச்சி மட்டும்தான்.நோய், மரணம் மாதிரி ஒன்றுமே இல்லையென்றாலும் கூட அப்படித்தான். நானும் நீங்களும் சமவயது. நமக்கெல்லாம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருப்பதே பெரிய பதற்றத்தை அளிக்கிறது இல்லையா? ஞாபகங்களாக வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒன்றுமே தங்குவதில்லை. சிலசமயம் நான் நினைப்பதுண்டு நீட்டி நீட்டி வைக்கப்பட்ட மரணம்தான் வாழ்க்கை என்று. உணர்ச்சிகளின் உலகம் என்பது இந்த குறையை உணர்வதன்மூலம் வரக்கூடிய ஒரு அமைதியிழப்புதான். அதை நான் ஒரு விரிந்த அடிப்பக்கமும் சுருங்கியபடியே போகக்கூடிய உச்சியும் உடைய ஒரு வடிவமாகப் பார்க்கிறேன்.
இதற்குச் சமானமான மறுபக்கம்தான் சிந்தனைகளின் உலகம். அது நேரடியாக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டது இல்லை. வாழ்க்கையில் இருந்து கிடைக்கக்கூடிய உணர்ச்சிகளில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுவது. நான் இதை ஒருமுறை என்னுடைய டைரியிலே எழுதி வைத்தேன். அதாவது சிந்தனைகள் எவ்வளவு தர்க்கபூர்வமாக இருந்தாலும் தர்க்கமே இல்லாத உணர்ச்சிகளில் இருந்துதான் அவை பிறக்கின்றன. சிந்தனைகள் நேரடியாக வாழ்க்கையில் இருந்து வரமுடியாது, உணர்ச்சிகளில் இருந்துமட்டும்தான் வரமுடியும். எதற்காகச் சிந்திக்கிறான் என்றால் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிவமே இல்லாத அலைச்சல் இருக்கிறதே அதை சரிசெய்யத்தான். நான் குறித்துவைத்திருக்கிறேன். தலைமயிரைச் சீவி கட்டிவைப்பதுபோல உணர்ச்சிகளை சீவி வைப்பதுதான் சிந்தனை என்று. உணர்ச்சிகளிலே ஒரு குறையை நாம் அறிகிறோம் இல்லையா? அதைத்தான் சிந்தனையை வைத்து சரிசெய்து கொள்கிறோம். சிந்தனை என்பதே அப்படி உணர்ச்சிகள் உருவாக்கக் கூடிய பள்ளத்தை நிரப்பிக்கொள்வதற்காகத்தான். அரவிந்த் கதையும் அதைத்தான் காட்டுகிறது. இது அடிப்பக்கம் சிறுத்து போகப்போக விரியக்கூடிய வடிவம். யின் -யாங் மாதிரி இரண்டும் சமன்படுத்திக்கொண்டு இருக்கின்றன.
நான் கென் வில்பரின் theory of everything ஐ ஒரு பெரிய தரிசனமாகவே நினைக்கிறேன். எல்லாவற்றையும் ஒன்றாக ஆக்கிக்கொள்ளமுடியுமா என்று அவர் பார்க்கிறார். அதில் அவர் செய்யும் முயற்சி எப்படியானாலும் கொஞ்சகாலத்திலே காலாவதியாகும். அடுத்தபார்வை கிளம்பி வரும். ஆனால் அதற்கு ஒரு தனியான இடம் இருக்கிறது. இந்தக்கதையிலே தன்னுடைய பள்ளத்தை அதைக்கொண்டு கென் நிரப்புவதுமாதிரி எழுதப்பட்டிருக்கிறது. இந்தக்கதைக்குள் அது மிகச்சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.ஒருவழியாகச் சீவிச்சிடுக்கு எடுத்து ஒரு கொண்டையை கென் போட்டுவிடும் இடத்திலே நாவல் முடிந்துவிடுகிறது.சீர்மைக்காக தேடுபவன் ஒவ்வொருநாளும் குறையையே பார்த்துக்கொண்டு அதனுடன் போராடிக்கொண்டிருந்தான் என்பது அற்புதமான ஒரு பார்வை. அவன் அடைந்தவற்றை வைத்துக்கொண்டு அதற்காக எதையெல்லாம் இழந்திருப்பான் என்று பார்ப்பது மாதிரி.
சீர்மையின் முக்கியமான மர்மம் கிடப்பது ஓர் இடத்தில்தான். அதைத்தான் நிறைய யோசித்துக்கொண்டிருக்கிறேன். கென் தேடக்கூடிய சீர்மையை த்ரேயா அவள் கலை வழியாக எளிமையாகவே தொட்டுவிட்டாள். ஆனால் அவளால் அதைத் தாங்கமுடியவில்லை. அல்லது அதை அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
ஏன் த்ரேயாவுக்கு அது அப்படி பயத்தை கொடுத்தது? ஏனென்றால் சீர்மை என்றால் அது மரணம். முழுமை என்றாலும் மரணம்தான் இல்லையா? நான் இப்படிச் சொல்வேன். மனித உடலும் சரி வாழ்க்கையும்சரி குறையுடையவை. ஆனால் இருபக்கமும் இருக்கும் மரணம் சீர்மை கொண்ட ஒன்று. ஆகவேதான் த்ரேயாவின் கை விலகிச்செல்கிறது. அவளுக்கு பிழைதான் தேவையாக இருக்கிறது. அதுதான் வாழ்க்கை[ நீங்கள் எழுதிய பிழை என்றகதையை நினைவுபடுத்திக்கொண்டேன்] அப்படிப்பார்த்தால் வாழ்க்கைக்குள் இருந்துகொண்டு கென் சீர்மையை எப்படி அடைவான்.
சிறந்த படைப்புகளைப்பற்றி நம்மால் கடைசியாக ஒன்றும் சொல்லிவிடமுடியாது. இதைப்பற்றி இதையெல்லாம் நினைத்தேன் என்று சொல்லிக்கொள்ளலாம். அதெல்லாம் அந்த படைப்பிலே இருந்து வந்ததுதான். ஆனால் அந்தப்படைப்பில் அது இருக்கவேண்டுமென்பதில்லை. நிறையவே சொல்லலாம். பலவிதமான எண்ணங்களை உருவாக்கிய அருமையான குறுநாவல். மீண்டும் வாழ்த்துக்கள்
சண்முகம்