நோயும் சீர்மையும்-கடிதம்

அன்புள்ள ஜெ, Grace and Grit நான் மிகமிக விரும்பிப்படித்த ஒரு புத்தகம். என்னுடைய வாழ்க்கையில் நான் திருப்புமுனையாக நினைக்கக்கூடிய ஒரு புத்தகம் என்று சொல்லுவேன். என்னுடைய அம்மா கான்சரில் இறந்துபோனாள். அந்த அனுபவங்கள் மிகவும் கொடியவை. என்னை spiritually demoralize செய்த அனுபவங்கள் அவையெல்லாம். என்னால் மாதக்கணக்கிலே சரியாகத் தூங்கமுடிந்ததே கிடையாது. ரொம்பநாட்களுக்குப்பிறகு கூட அடிக்கடி கனவுகள் கண்டு முழித்துக்கொள்ளுவேன். நான் ஒரு சரியான cynic ஆக மாறிவிட்டேன். எதிலுமே ஒரு skeptic பார்வை வந்துவிட்டது. அப்போதுதான் கென் வில்பரின் இந்த புத்தகத்தைஒரு நண்பர் எனக்கு சொன்னார். நான் வாங்கி வாசித்துப்பார்த்தேன். என்னை அடித்து உலுக்கிப் போட்டது எனக்கு சொந்தமாக ஒரு image இதைப்பற்றி வந்தது. அதாவது நாம் வேகமாக ஓடித்தான் ஆகவேண்டும். ஆனால் நம்முடன் கால்கள் இல்லாத ஒருவரையும் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். அதைப்போன்றது இது. அதாவது நோயாளியுடன் வாழ்வது. நமக்கும் கஷ்டம் அவர்களுக்கும் கஷ்டம். ஆனால் ஒன்றுமே செய்ய முடியாது. நோயாளியைப்பற்றி அந்த வகையான அனுபவம் இல்லாதவர்கள் romantic ஆக நிறையவே சொல்வார்கள். அனால் நோயாளியின் கூடவே வாழும்போது உள்ள நிலைமை வேறானது. நோயாளிகளுடன் நம்முடைய personal relation எப்போதுமே மோசமாகத்தான் இருக்கும். எவ்வளவு நெருக்கமான சொந்தமாக இருந்தாலும் சரி. அம்மா ரொம்ப imbalanced ஆக மாறிவிட்டார்கள். தினமும் மற்றவர்களை புண்படுத்துவார்கள். சரியாகப் புண்படுத்துவதற்கு ஏற்ற விஷயங்களை அவர்கள் தேடி எடுப்பதே பயங்கரமாக இருக்கும். சிலசமயம் அதற்காக வருத்தப்பட்டு அழுவார்கள். ஆனால் புண்படுத்துவதில் அவர்களுக்கு ஒரு ரகசியமான சந்தோஷம் இருந்தது இதை நான் பிறகு டால்ஸ்டாய் எழுதிய ஒரு சிறுகதை [பெயர் மறந்துவிட்டேன்,web ல்தான் வாசித்தேன்] யிலே வாசித்தேன். நோயாளி நோய் இல்லாதவரைப்பார்க்கும்போது அவருக்கு ஒரு விஷயம் மட்டும்தான் தெரிகிறது. அவர்களெல்லாம் இருப்பார்கள், நான் செத்துவிடுவேன். அவ்வளவுதான். அதுதான் உண்மை. ஆகவே அவர்களால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. அதுதான் உண்மையில் அவர்களை அப்படி கொடூரமாக ஆக்குகிறது கென் வில்பரின் புத்தகத்தில் நோய் எப்படி மனிதனுடைய உறவுகளை மாற்றுகிறது என்பதெல்லாம் இருந்தது. அந்த நூலுக்கு இப்படி ஒரு narration தமிழிலே வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. அதே கதையை இன்னொரு கோணத்திலே சொல்கிறார் அரவிந்த். [கென் வில்பர் என்று தேடியபோது இவர் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்திருக்கிறேன். இவர்தானா என்று தெரியவில்லை] நல்ல கட்டுரை இந்தக் கதையில் கென் வில்பரின் தத்துவத்தையும் அவரது சொந்தவாழ்க்கையையும் juxtapose செய்கிறார். அவரது சொந்தவாழ்க்கையில் நிகழ்ந்த சோகம் அவரது holistic approach ஐ எப்படி உருவாக்கியது என்று சொல்கிறார். அந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைத்திருக்கும் விதம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. நான் இன்னும்கூட சரியாகப் படிக்கவில்லை. இப்போதைக்கு கென்னுக்கும் திரேயாவுக்கும் இடையே நோய்வந்தபோது வந்த அந்த உறவு எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதை மட்டும்தான் பார்த்தேன். அதில் உள்ள love-hate கடுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தமாதிரி நோய்களில் உடலைவிட மனம்தான் அதிகமாக துன்பம் அடைகிறது. அதை அரவிந்த் சொல்லியிருக்கிறார். அதேபோல அந்த துன்பத்தில் இருந்து தப்புவத்கற்காக கென் போதைக்குச் செல்லும் இடமெல்லாம் அருமையாக இருந்தன ஆனால் த்ரேயாவின் நோயில் இருந்து மீண்டு வந்து கென் கண்டுபிடித்த அந்த theory யை ஆசிரியர் கொஞ்சம் sarcastic ஆகத்தான் சொல்லியிருக்கிறாரோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அல்லது கென் அதை மனசுக்குள் அப்படி பார்த்துக்கொள்கிறான் என்று தோன்றியது. அதாவது இதெல்லாம் சும்மா சொல்லிப்பார்த்துக்கொள்வதுதானே, மரணம் போன்ற ஒரு absolute விஷயத்துக்கு முன்னால் தியரியாவது ஒன்றாவது என்று நினைத்துக்கொள்கிறான் என்று நான் வாசித்துக்கொண்டேன். நானும் அப்படி நினைப்பவன் என்பதனால் இருக்கலாம். நிறைய எழுதவேண்டும். கொஞ்சநாள் தாண்டி இன்னும் விரிவாக ஒரு கடிதம் எழுதுகிறேன்.

ஸ்ரீதர் ராமானுஜம்

பிகு இந்த இணைப்பிலே கென் அவரது புத்தகத்தைப்பற்றிப் பேசுவதைக் கேட்கலாம்

அன்புள்ள ஸ்ரீதர் நீங்கள் சொல்லும் குரங்குத்தவம் தளத்தின் அரவிந்தேதான் கென் வில்பர் செய்த அதே விஷயத்தில்தான் பாஸ்டனில் அவர் முனைவர் பட்ட ஆய்வுசெய்கிறார் நீங்கள் குறிப்பிடுவது லேவ் தல்ஸ்தோயின் இவான் இலியிச்சின் மரணம் என்ற குறுநாவல்- சிறுகதை அல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைஇடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பு
அடுத்த கட்டுரைபுரியாதகதைகள் பற்றி….