ஜக்கி வாசுதேவ்

ஜக்கி வாசுதேவ் பற்றி என்னிடம் முதலில் சொன்னவர் நண்பர் தண்டபாணி. யுவன் சந்திரசேகரின் உயிர் நண்பர். அவரது மனைவிக்கு பலவிதமான உடல்நலச்சிக்கல்கள். அந்த மன அழுத்தத்தில் அவர் தேடிப்போன பலரில் ஜக்கியும் ஒருவர்.

பின்னர்  ஜூனியர்விகடனில் அவரைப்பற்றிய அவதூறுகள் வந்தன. அவரது மனைவி மர்மமான முறையில் இறந்தார் என்பதும் அங்கே இளம்பெண் நடமாட்டம் அதிகம் என்பதும். சாமியார்களைப்பற்றி எனக்கு எப்போதுமே ஐயம் அதிகம். ஆனால் அச்சமயம் அறிமுகமான ஒரு காவலதிகாரி அந்த அவதூறுகள் முழுக்க முழுக்க அப்பகுதியின் வனநில ஆக்ரமிப்பாளர்களால் உருவாக்கப்படுவது என விளக்கினார்.

ஜக்கியைப்பற்றிய என் மதிப்பு ஜக்கியின் முக்கியமான மாணவர்களில் ஒருவரான சௌந்தர் அண்ணா மூலம் வலுவாக உருவானது. ஆன்மீகமான விடுதலை என நான் எண்ணும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அபூர்வமான மனிதர்களில் ஒருவர் அவர். நெடுங்காலம் ஜக்கி வாசுதேவ் குருகுலத்தில் இருந்தவர்.ஆன்மீகமான சமநிலை கைவந்தவர்களிடம் எப்போதும் எதற்கும் நிலைகலங்காத ஒரு விடுபட்ட நிலையும், அதன் விளைவான அமைதியும், மாறாத மெல்லிய நகைச்சுவையும் இருக்கும். அதுவே அடையாளம். அவர்களை எவரும் அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. அவர்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும், அவர்கள் வேறு என.

சௌந்தர் அண்ணா வழியாக நாஞ்சில்நாடன் ஜக்கியை நோக்கிச் சென்றார். முழுமையான யதார்த்தவாதியான நாஞ்சில்நாடனின் வாழ்க்கையில் பல மனஅல்லல்கள் அதன் மூலம் சமநிலைக்கு வந்தன என்று அறிந்தேன். அதன்பின் ஜக்கி வாசுதேவ் சீடர்களின் குழுமஅமைப்பின் பொறுப்பில் இருப்பவரான ‘மரபின் மைந்தன்’ முத்தையா ஜக்கியை அறிய உதவினார். [‘ரசனை’ ‘நமது நம்பிக்கை’ மாதஇதழ்களின் ஆசிரியர். இலக்கியப்பேச்சாளார். வைரமுத்து வாசகர்களின் அமைப்பான ‘வெற்றிதமிழர் பேரவை’யின் செயலர்.] எழுத்தாளர் சுந்தர ராமசாமி திருவனந்தபுரத்தில் சென்று தங்கி ஜக்கி நடத்திய தியான முகாமில் கலந்துகொண்டதாக அறிந்தேன். ஆனால்  அவர் அதை வெளியே சொல்லவில்லை. தன் மகளின் இறப்புக்குப் பின் அவர் அந்தரங்கமாக கடும் மன அழுத்தத்தில் இருந்தார் அப்போது.

ஏற்கனவே இரண்டுமுறை ஜக்கி குருகுலத்துக்குச் செல்ல திட்டமிட்டு முடியாமல் போயிற்று. சென்ற வாரம் எதிர்பாராமல் நண்பர் லதானந்துடன் குடும்பமாக அங்கே சென்றேன். ஜக்கியைச் சந்திக்க முடியவில்லை. சாதாரணமாக சுற்றுலாப்பயணிகளுடன் சென்று குருகுலத்தைச் சுற்றிப்பார்த்தேன்.

வித்தியாசமான கட்டிடக்கலை கொண்ட இடம் அது. இந்திய ஆலயங்களின் இயல்பு வந்துவிடலாகாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் உருவாக்கப்பட்டது. மாபெரும் சதுரக் கல்தூண்கள் கல்லாலான தாழ்வான கட்டிடங்கள். புல்வெளிகள். பயணிகள் பார்க்கக் கூடுவதாக உள்ளது இரண்டு இடங்கள்தான். ஒன்று ரசலிங்கம்  வைக்கப்பட்டுள்ள நீர்நிலை. இன்னொன்று மாபெரும் தியானலிங்கம் இருக்கும் கூடம்.

பாதரசத்தை உறையவைக்கும் கலை நமது ரசவாதத்தின் ஒரு சாதனையாக நெடுங்காலமாகவே இருந்து வந்துள்ளது. இதை ரசக்கட்டு என்கிறார்கள். பாதரசத்தில் எதுவும் கலக்கப்படுவதில்லை, ஆனால் சில கிரியா ஊக்கிகளின் முன்னிலையில் அது கெட்டியாகிவிடுகிறது. அது ஒருவகை கதிரியக்கம் கொண்டுவிடுகிறது என்கிறார்கள்.

கல்லாலான ஒரு கட்டிடத்தில் பல படிகள் இறங்கிச்சென்றால் ஒரு குளம். அதனுள் நீருக்குள் ரசலிங்கம் இருக்கிறது. கூரையிடப்பட்டு வெயில்படாத  நீள் சதுர வடிவமான குளம் அது. மேலிருந்து கல்சுவர் வழியாக வழிந்து இறங்கும் நீர் சில்லிப்பை உருவாக்குகிறது. வெளியே குளியலறையில் நீராடிவிட்டு அங்கே  அளிக்கப்படும் காவி உடையை வாங்கி அணிந்து நீரில் இறங்கி அந்த ரசகோளத்தை தொட்டு வணங்கலாம்.

தியானலிங்கம் இருக்கும் கூடம் கோல்கும்பாஸ் போல முகலாய மினாரங்களின் அமைப்பு கொண்டது. உள்ளே இருக்கும்போது மினாரங்களின் அதே பாணியில் செங்கற்களை சீராக அடுக்கி உருவாக்கப்பட்ட அரைக்கோளக்கூரை பிரமிப்பூட்டுகிறது. நடுவே மாபெரும் லிங்கம். சுற்றி தியானத்தில் அமர்வதற்கான சிறு குகைகள்.

உள்ளே நுழையும்போது ஒர் இளம் துறவி மெல்லிய குரலில் ‘லிங்கத்தை வணங்காதீர்கள். எதையும் வேண்டிக் கொள்ளாதீர்கள். எந்த மந்திரத்தையும் பிரார்த்தனையையும் செய்யாதீர்கள். சற்று நேரம் அதை நோக்கியபடி அமர்ந்து கண்மூடி சும்மா இருங்கள். வேறு எதையும் செய்ய வேண்டாம். எந்த நினைவு வந்தாலும் தவறில்லை. வந்த நினைவுகளைக் கவனித்தபடி அமைதியாக இருங்கள்…” என்றார்.

தியானகூடத்தில் ஆழமான அமைதி. ஏராளமானவர்கள் அமைதியாக இருக்கும்போது அந்த இடத்தில் ஆழமான ஒன்று உருவாகிவிடுகிறது. ஒரு கனம். ஒருவகை உக்கிரம். அத்துடன் லிங்கம். அது உருவாக்கும் ஆழமான அதிர்வு அலாதியானது. அது சைவ மதத்தின் தெய்வ உருவம். அதே சமயம் மானுடன் உருவாக்கிய முதல் தெய்வவடிவமும் அதுவே என்று சொல்லலாம். ஒரு கிடைக்கல்மேல் வைக்கப்பட்ட நடுகல். திருவண்ணாமலை போன்ற புராதன ஆலயங்களில் உள்ள சிவலிங்கம் எந்த வடிவமும் இல்லாத எளிய கல்லேதான்.

பண்பாடு முளைத்த தொல்பழங்காலத்தில், தமிழ்நிலத்தின் ஏதோ ஓர் எல்லையில், ஒரு முதுமூதாதை கண்டடைந்த ஒரு மகத்தான உச்சகணத்தின் அடையாளம் அது. அதன் அளவிடமுடியாத தொன்மையே அதன் முதல் பெருஞ்சிறப்பு. அது சுட்டுவது எதை என்று ஆயிரம் விளக்கங்கள் சொல்லபப்டலாம். ஆக்க சக்தியின் வடிவம் அது  என்பவர்கள் உண்டு.  நடுகல்லின் அடுத்த கட்ட வடிவம் என்பவர்கள் உண்டு. தொல்குடிகள் தெய்வமாக வழிபட்ட குமரிக்கண்டத்தின் மகேந்திரமலை அல்லது மேரு மலையின் சிறு மாதிரிவடிவம்  என்பவர்கள் உண்டு. ஏதோ ஒன்றாக அது இருப்பதே அதைச்சுற்றி நம் பிரக்ஞையை சிறகடித்துப் பறக்கக்செய்கிறது.

தன் அமைப்புக்கு எந்த வகையான மத அடையாளமும் வந்துவிடலாகாது என்ற கவனம் கொண்டவர் ஜக்கி. அவரது உபதேசங்கள் விவாதங்கள் எதிலும் அவர் மத உருவகங்களைக் கையாள்வதில்லை. இந்த லிங்க வடிவத்தை அவர் தேர்வுசெய்தமைக்கு ஆழ்ந்த காரணம் இருக்கக் கூடும். திருவண்ணாமலையில் ஒரு பண்டாரம் சொன்னார், அவர் தியானிப்பது அந்த மலையை என்று. எங்கே அமர்ந்து ஒரு கல்லைத்தூக்கி முன்னால் வைத்துக் கொண்டாலும் அண்ணாமலையாக ஆகிவிடும். தியானத்துக்கான மிக எளிய புராதனமான ஆதிவடிவம் அதுவேபோலும்.

அங்கேயே விடுதியில் சாப்பிட்டுவிட்டு உடனே கிளம்பிவிட்டோம். தியான லிங்கத்தை பொதுவாக அனைவருமே கைகூப்பி வணங்கி பிரார்த்தனை செய்வதையே கண்டேன். அது அவர்களின் மதம், அதைவிட்டு அவர்களால் எளிதில் விலகி விட இயலாது.

ஆனால் இன்று மீண்டும் மீண்டும் இது தேவையாகிறது.இந்து ஞான மரபு மூன்று அடுக்குகள் கொண்டது. முதல் அடுக்கு என்பது பலநூறு பழங்குடி, நாட்டார் தெய்வ நம்பிக்கைகளினால் ஆனது. மூதாதை வழிபாடு, ஆவி வழிபாடு, இயற்கை வழிபாடு ஆகிய மூன்றின் கலவை அது. அடுத்த தளம் நாம் பரவலாக அறியும் பெருந்தெய்வ வழிபாடுகளினால் ஆனது. மூன்றாம் தளம் தூய தத்துவத்தால் ஆனது.

முதல் அடுக்கில் தெய்வ உருவகம் என்பது நடைமுறைத்தேவை சார்ந்ததாக உள்ளது. நடவுக்கு ஒரு தெய்வம், அறுவடைக்கு இன்னொரு தெய்வம் என. பலியும் கொடையும் அதன் வழிபாட்டு முறைகள். இரண்டாம் அடுக்கில் தெய்வ உருவகம் என்பது முழுமுதல்தெய்வம் என்ற கருதுகோளாக உள்ளது. படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்யும் பிரபஞ்ச அதிபன். அதன் வழிபாடு ஆராதனை,பக்தி.

மூன்றாம் அடுக்கில் தெய்வ உருவகம் என்பது முழுமையான தத்துவ உருவகமே. பிரம்மம் போல. அதன் வழிமுறை யோகம், தியானம்.

இம்மூன்று உருவகங்களும் ஒன்றோடொன்று பிணைந்து ஒரேசமயம் இருந்துகொண்டிருக்கின்றன ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாகிவந்து கொண்டிருக்கிறது. ஒன்று இன்னொன்றாக மாறிக் கொண்டுமிருக்கிறது. என் நோக்கில் மூன்றுமே முக்கியமானவையே.  இம்மூன்றிலும் ஆன்மீக விடுதலையை  அடைந்த மனிதர்களை நான் கண்டிருக்கிறேன்.

இந்து ஞான மரபின்  தத்துவ மையம் என்பது அதன் சிக்கல் மற்றும் நுட்பம் காரணமாகவே மிகச்சிலரால் மட்டுமே அணுக முடிவதாக இருந்து வருகிறது. தத்துவமும் தியானமும் அதற்கான அவகாசமும், அறிவுத்திறனும் ,மனப்போக்கும் கொண்டவர்களுக்கு உரியவை.

இக்காலகட்டத்தில் கல்வி வளர்ச்சியும் உலகளாவிய சிந்தனைகளுடனான அறிமுகமும் ஏராளமான மக்களை தத்துவமையம் நோக்கி ஈர்க்கிறது. எளிய விடைகள் நிறைவளிப்பதில்லை. தருக்க முனை கூர்மை கொள்கிறது. நம்பிக்கையை சார்ந்து இயங்க முடிவதில்லை. ஆகவே இந்து ஞானமரபின் தத்துவ- தியான மரபுகளை இன்றைய நோக்கில் மறு ஆக்கம் செய்து முன்வைக்கும் அறிஞர்களும் ஞானிகளும் இயங்கவேண்டிய தேவை உருவாகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்து ஞானமரபின் தத்துவசாரம் முற்றாக மறக்கப்பட்டு அதன் சடங்குகள் மட்டுமே அதுவாக விளங்கிய காலகட்டத்தில் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண மடம், நாராயண குருகுலம், வள்ளலார் மரபு போன்ற தத்துவநோக்குள்ள அமைப்புகள் உருவாகி தொன்மையான தத்துவ மரபை மீட்டு அளித்தன.

பின்னர் அவற்றை நவீன வாழ்க்கையின் தேவைக்கு ஏற்ப மறுவிளக்கம் அளித்து விரிவாக்கம் செய்யும் ஞானிகள் தேவைப்பட்டார்கள். ஓஷோ, ஜெ.கிருஷ்ணமூர்த்தி,பிரம்மகுமாரிகள் அமைப்பு, ராமச்சந்திரா மிஷன் என பலவேறு அமைப்புகள் உருவாகி வந்தபடியே இருப்பதற்குக் காரணம் இதுவே. வேதாத்திரி மகரிஷியும் ஜக்கியும் அவர்களில் அடங்குவர். மீண்டும் மீண்டும் அவர்கள் முன்வைப்பது அந்த தத்துவ- தியான மரபையே. அது  தேவையாகும் சிலருக்குச் சென்று சேரும். பிறருக்கு இன்னொரு வழிபாட்டு முறையாக எஞ்சும்.இன்று பல்லாயிரம் பேர் அவற்றைச் சார்ந்து உள்ளனர்.

இந்து ஞான மரபின் அடிப்படை இயல்பே சுதந்திர சிந்தனையை அனுமதிப்பதுதான். நிலையான அமைப்பு என எதுவும் அதில் இல்லை. சாதி மதம் சார்ந்து உருவாகும் அமைப்புகள் அவற்றின் இடத்தில் தேங்கி நிற்கையில் அதனால் கழன்று முன்னகர முடியும். ஆகவே அதன் வளர்ச்சி என்பது அதன் வேரிலிருந்து மீண்டும் மீண்டும் முளைத்தெழும் ஏராளமான கிளைகளின் மூலமே நிகழ்கிறது.

 

முந்தைய கட்டுரைசில இணையப்பதிவுகள்
அடுத்த கட்டுரைபாவலர் விருது விழா புகைப்படங்கள்