நுண்மைகளால் அள்ளப்படுவது…

2011ல் கன்யாகுமரியில் காலச்சுவடு சார்பாக நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் நான் பங்கெடுக்க நேர்ந்தமைக்குக் காரணம் பி.ஏ.கிருஷ்ணன். அவரது ‘திரும்பிச்சென்ற தருணம்’ என்ற நூலை நான் வெளியிட்டு பேசவேண்டுமென கேட்டுக்கொண்டதுதான். மற்றபடி காலச்சுவடு கூட்டங்களை நான் எங்காவது வாசித்துத் தெரிந்துகொள்வதுடன் சரி. நிகழ்ச்சி கன்யாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடந்தது. பெரும்பாலான பார்வையாளர்கள் வெளியூர்களில் இருந்து வந்த காலச்சுவடு வாசகர்கள் மற்றும் அன்பர்கள்

நான் சென்றபோது மதியம். கூட்டம் காலைமுதலே நடந்துகொண்டிருந்தது. உள்ளே செல்ல அனுமதி உண்டா என்ற ஐயத்தில் வெளியே நின்றிருந்தேன். உள்ளே பேச்சாளர் பேசிக்கொண்டிருந்தார். அவர் சுந்தர ராமசாமியைப்பற்றி குறிப்பிட்ட நிகழ்ச்சி நான் எழுதிய ‘சு.ரா நினைவின் நதியில்’ என்ற நூலில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டது. அவர் அதைக் குறிப்பிட்டுச் சொன்னார். அடுத்த பேச்சாளரும் சுந்தர ராமசாமியைப்பற்றி என் நூலில் இருந்து நூலின்பெயர்சொல்லாமல் ஒரு நிகழ்ச்சியை மேற்கோள்காட்டினார்.

சென்ற ஒன்பதாண்டுக்காலத்தில் சுந்தர ராமசாமியைப்பற்றிய நினைவுகூரல்களில் எப்படியேனும் இந்நூல் மேற்கோள் காட்டப்படுவதைக் கேட்டிருக்கிறேன். ஈரோட்டில், திருப்பூரில், மதுரையில்…ஒருவகையில் அது இலக்கியத்தின் வெற்றி. வெறும் நினைவுகூரலாக எழுதப்படும் எதற்கும் நிரந்தர மதிப்பில்லை. சு.ரா இறந்தபோது எழுதப்பட்ட பலநூறு அஞ்சலிகள் இன்று பழையசெய்திகளாக மாறிவிட்டிருக்கும். இந்நூல் சித்தரிப்பில் புனைவின் கருவிகளை கையாண்ட காரணத்தாலேயே இலக்கியமாகி இன்றும் வாழ்கிறது. ஒரு சிறந்த இலக்கியப்படைப்புக்குண்டான அழியாவாழ்க்கை அதற்கு இருக்கும்

இது ஒருவகை புனைவு என்பதனால்தான் சுந்தர ராமசாமியை நேரில் காணும், பழகும் அனுபவத்தை வாசகர்களுக்கு அளித்தது. சுந்தர ராமசாமியை அறியாதபலர் இந்நூல் வழியாக மிகநெருக்கமாக அவரை உணர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியை மிக நெருங்கி அறிந்தபலர் அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருப்பதைக் கேட்ட அனுபவத்தை அளிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்நூல் வெளிவந்த காலகட்டத்தில் இதன் மீதான எதிர்ப்புகள் சில இருந்தன. அப்போது சுந்தர ராமசாமிக்கும் எனக்குமான கடைசிக்கால விவாதங்கள் அனைவர் நினைவிலும் இருந்தன. இலக்கிய வம்புகளைத் தேடுபவர்கள் நினைவில் அவை மட்டுமே இருந்தன. ஆகவே இந்நூலையும் ஓர் இலக்கிய வம்பாக மட்டுமே எடுத்துக்கொண்டார்கள் பலர். அந்நிலையில் நின்றபடி இந்நூலில் வம்புகளையும் உள்நோக்கங்களையும் மட்டும் பொறுக்கிச்சேர்க்க முயன்றார்கள்.

சுந்தர ராமசாமியின் குடும்பத்தினர் மற்றும் அணுக்கமான சிலர் சுந்தர ராமசாமி பற்றி அவர்கள் உருவாக்க விரும்பிய பூதாகரமான சித்திரத்தை உடைக்கும் நூலாக இதை மதிப்பிட்டனர். அது ஓரளவு உண்மை இன்றும் ‘பாரதி – புதுமைப்பித்தன் – சுந்தர ராமசாமி’ என அவர்கள் உருவாக்க எண்ணும் பிம்பத்துக்கு இந்நூல் எதிராகவே உள்ளது. எந்தவித திறனாய்வுப்பின்புலமும் இல்லாமல் வெறுமே விழாக்கள், மலர்கள் வழியாக அதை உருவாக்கிவிடலாமென்ற நம்பிக்கையைப்பற்றி அனுதாபம் மட்டுமே கொள்ளமுடியும்.

சிலகாலம் இந்நூல் உருவாக்கிய சித்திரத்துக்கு எதிராக சுந்தர ராமசாமியைக் கட்டி எழுப்பும் முயற்சிகளை காலச்சுவடு மேற்கொண்டது. இந்நூலுக்கு எதிரான மதிப்பீடுகள் தொடர்ந்து பிரசுரமாயின. மறுப்புச்செய்திகள் முன்வைக்கப்பட்டன.உதாரணமாக இந்நூல் சுந்தர ராமசாமிக்கு மரபிலக்கிய அறிமுகமோ ஆர்வமோ இல்லை என்று காட்டுகிறது. அதை மறுத்து அவர் ஒரு கம்பராமாயண அறிஞர், கம்பன் கழகத்தில் அவர் பேசினார் என்ற ஒரு செய்தி வெளிக்கொணரப்பட்டது.

ஆனால் தனக்கு கம்பனில் ஆர்வமே இல்லை, ஏனென்றால் கம்பனைப் புகழும் பேச்சுகள் மட்டுமே காதில் விழுகின்றன, கம்பனை கறாராக ரசனைவிமர்சனம் செய்யும் மரபு நமக்கு உருவாகவேண்டும் என்றுதான் அந்தக் கம்பன்விழாவிலேயே சுந்தர ராமசாமி பேசினார் என்பதை எல்லா நண்பர்களிடமும் அவரே சொல்லியிருக்கிறார். சுந்தர ராமசாமியின் மரபிலக்கிய ஆர்வமின்மை அவராலேயே அவரது பல கட்டுரைகளில் வெளிப்படுத்தப்பட்ட ஒன்றும்கூட.

இந்நூலில் ஸ்மிதாபாட்டீலையும் சரிதாவையும் சுந்தர ராமசாமிக்குப் பிடிக்கும் போன்று வரும் வரிகள் அவரை இழிவுபடுத்துபவை என்று அவருக்கு அணுக்கமானவர்கள் கொதித்துக் கொந்தளித்தனர் என கேள்விப்பட்டேன். இலக்கியவாதியை அவரது இலக்கியம்வழியாக அணுகுபவனின் சித்திரம் அவருடைய குடும்பத்தினருக்கு இருக்கவேண்டுமென்பதில்லை. அவரது குடும்பம் கொண்டிருக்கும் சித்திரத்தையே இலக்கியச் சூழலும் கொண்டிருக்கவேண்டுமென்று ஆசைப்படுவது கொஞ்சம் அதிகம்.

சென்ற எட்டாண்டுகளில் தொடர்ச்சியாக சுந்தர ராமசாமி உருவாக்கிய நிறுவனம் அவரை ஒரு பெரும் படைப்பாளியாக, சிந்தனையாளனாக, ஆளுமையாக நிலைநிறுத்த பெரும் பணத்தைச் செலவிட்டு முயன்றுவருகிறது. அவர்கள் முன்வைக்கும் ஒரே படைப்பாளியும் அவர்தான். தமிழில் இப்படிப்பட்ட முயற்சி வேறெந்த இலக்கியவாதிக்கும் செய்யப்பட்டதில்லை.

உண்மையில் அதன் விளைவாக சுந்தர ராமசாமியின் நூல்கள் தொடர்ச்சியாக கல்விநிறுவனங்களுக்குள் செல்லும் வாய்ப்பும் வணிகமும் அதிகரித்தனவே ஒழிய அவரைப்பற்றிய சாதகமான எண்ணம் எதையும் அடுத்த தலைமுறையில் உருவாக்கவில்லை.இந்த மிதமிஞ்சிய பிரச்சாரம் காரணமாக இளையதலைமுறையில் சுந்தர ராமசாமி மீதான எதிர்மறை பிம்பம் வலுவாக அமைகிறது என்பதே உண்மை. அவர் ஓர் அமைப்புமனிதராக அவர்களுக்குத் தெரிகிறார். உண்மையில் வாழ்நாளின் பெரும்பகுதி கலகக்காரராகவும் தனியராகவும் வாழ்ந்த படைப்பாளி அவர்.

மேலும் சுந்தர ராமசாமியின் படைப்புக்கள் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஈர்ப்பு இன்றைய வாசகர் நடுவே இல்லை. அதை அவரைப்பற்றிய விமர்சனத்தில் அவர் வாழ்ந்தகாலத்திலேயே சொல்லியிருக்கிறேன். அவர் ஒரு மொழிநடையாளர். மொழிநடையின் தனித்தன்மையால் அடையாளப்படுத்தப்படும் எழுத்தாளர்கள் மிகவிரைவில் காலாவதியாவார்கள். காரணம் நடை என்பது மிகவேகமாக பழையதாக ஆகக்கூடியது.

சுந்தர ராமசாமியின் மொழிநடையின் தனிய்ழகு காரணமாகவே ரசிக்கப்பட்ட ஜே.ஜே.சிலகுறிப்புகள் இன்று பெரும்பாலான நல்ல வாசகர்களுக்கு பெரிதாகப்படவில்லை. புகழ்பெற்ற பலகதைகள் சர்வசாதாரணமாக மாறி பின்னகர்ந்துவிட்டன. செறிவான மொழி கொண்டவை என பாராட்டப்பட்ட கட்டுரைகள் எளிய நேரடி விஷயங்களை சுற்றிவளைத்து செயற்கையான இறுக்கத்துடன் சொல்பவை என மதிப்பிடப்படுகின்றன

இந்நூலில் சுந்தர ராமசாமி அவரது இறுதிக்காலத்தில் அவரது எழுத்து காலாவதியாகிறது என உணர்ந்து அடைந்த பதற்றத்தைப் பதிவுசெய்கிறது. அவரை ஒரு காலாதீதப்படைப்பாளி என்று காட்டும் முயற்சிக்கு அது எதிராக இருந்தமையால் அது அவதூறு என்று அன்று கடுமையாக குற்றம்சாட்டப்பட்டது. இன்றைய வாசகன், இன்றையசூழலில் அவரது பதற்றம் நியாயமானது என்றே நினைப்பான்.

சுந்தர ராமசாமியை இன்றும் நிலைநிறுத்துபவை புளியமரத்தின்கதை என்னும் நாவல், கதையம்சம் மிக்க சீதைமார்க் சீயக்காய்த்தூள் போன்ற கதைகள் மற்றும் அவரது கறாரான அழகியல் அணுகுமுறை ஆகியவை மட்டுமே. கூடவே இலக்கியத்தை தன் வாழ்க்கையின் மையச்சரடாகக் கொண்டிருந்த அவரது அர்ப்பணிப்பும் அது உருவாக்கிய அவரது ஆளுமையும்.

இந்நூல் சுந்தர ராமசாமியைப்பற்றி அவரது படைப்புகளையும் அவரது ஆளுமையையும் அறியாமல் அவரது அணுக்கமானவர்களால் உருவாக்கப்படும் பிம்பத்துக்கு எதிரானது. அதேசமயம் சுந்தர ராமசாமியின் ஆளுமையை, அவரது இலக்கிய நுண்ணுணர்வை, அவரது தத்துவத்தேடலை புதியவாசகர்கள் முன் திட்டவட்டமாக நிறுவக்கூடியது.

சுந்தர ராமசாமி பற்றி அவரது அமைப்பு உருவாக்கும் பிம்பத்தைப்பற்றிய கசப்புடன் இதற்குள் நுழையும் இன்றைய வாசகன் அவனுக்கு மிகமிக நெருக்கமான ஒரு சுந்தர ராமசாமியை இதில் கண்டடைவான். அந்த ஒற்றைப்படையான பெரும்படிமைக்குப் பதிலாக தன்னுடைய அத்தனை தடுமாற்றங்களையும் கொந்தளிப்புகளையும் தானும் கொண்டிருக்கக்கூடிய ஒரு நவீனப் படைப்பாளியை அவன் அடையாளம் காண்பான்.

சுந்தர ராமசாமியை தனிப்பட்டு நன்கறிந்த சிலருக்கு இந்நூல் வெளிவந்தபோது இது உருவாக்கும் சித்திரம் அவர்களின் அகச்சித்திரங்களுடன் சற்று முரண்படுவதன் அசௌகரியம் இருந்தது. அது இயல்பே. ஒன்று, ஒரு மனிதரை நாம் அவருக்கும் நமக்குமான சில சந்திப்புப் புள்ளிகளைக் கொண்டு மட்டுமே புரிந்துகொள்கிறோம். இன்னொருவர் அவருக்கான சந்திப்புப் புள்ளிகளைக்கொண்டு. சுந்தர ராமசாமி வேடிக்கையாகப்பேசுவார் என்பதே தனக்குத்தெரியாது என்று கூட என்னிடம் ஒருவர் சொன்னார்.

அத்துடன் இந்நூல் முழுமையாக சுந்தர ராமசாமியை உருவாக்கவில்லை. அவரது குடும்பச்சூழல் இந்நூலில் இல்லை. அவரது உறவுகளைப்பற்றிச் சொல்லப்படவே இல்லை. அவரது தொழிலைப்பற்றி ஏதும் இதில் இல்லை. அவற்றைப்பற்றியும் சில சொல்லியிருக்கமுடியும். ஆனால் தவிர்த்துவிட்டேன். ஏனென்றால் இது சுந்தர ராமசாமியை ஒரு படைப்பாளியாக மட்டுமே கருத்தில்கொள்கிறது. படைப்பாளியாக அவரது புரிதல்கள், பிடிவாதங்கள்,, தத்தளிப்புகள் ஆகியவை மட்டுமே இதன் இலக்கு.

ஆகவே அந்த முரண்பாடு இயல்பானதே. ஆனால் காலம் செல்லச்செல்ல பலருக்கும் நினைவுகள் வெளிற ஆரம்பித்தன. அவை சில மனப்பதிவுகள், சில காட்சிகள் மட்டுமாகச் சுருங்கின. அதேசமயம் எழுதப்பட்ட நூலின் நிரந்தரத்தன்மை இதிலுள்ள சித்திரங்களை அப்படியே வைத்திருக்கிறது. சொல்லப்போனால் உடனடியாக உருவான இலக்கியவம்புகள் மறைந்தபின் இன்னும் தெளிவாக தெளிந்துவருகின்றன இந்நூலின் சித்திரங்கள். இன்று பலரும் இந்நூலை அவர்கள் நினைவுக்கான ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

சுந்தர ராமசாமியே எழுதியதைவிடக்கூர்மையாக அவருக்கும் காந்திக்குமான உறவை, அவருக்கும் தல்ஸ்தோய்-தஸ்தயேவ்ஸ்கிக்குமான உரையாடல்களை, அவருக்கு கவிதை ஆன்மீக அனுபவமான விதத்தை, அவருடைய இருத்தலியல் நம்பிக்கைகளை இந்நூல் சித்தரிக்கிறது என இன்று இதை மீண்டும் வாசிக்கும்போது உணர்கிறேன். சின்னச்சின்ன விஷயங்கள் வழியாக அவரது ரசனை ஓடிச்சென்ற விதத்தை, அவரது உரையாடல்களின் சரளமான நகைச்சுவையை இந்நூல் காட்டுமளவு இன்னொரு நூல் காட்டுவதில்லை என எந்த வாசகரும் உணரமுடியும். புகைப்படம் எடுக்கும் நிபுணரை இன்னொருவர் எடுத்த படம் இது எனலாம்.

எவ்வகையிலும் திட்டமிட்டு எழுதப்பட்டதல்ல இது. சுந்தர ராமசாமி 2005ல் மறைந்தபோது அவரது உடல் அமெரிக்காவிலிருந்து வந்துசேர்வதற்காகக் காத்திருந்த நாட்களில் எழுதப்பட்டது இதன் முதல்பகுதி. அவரது இறுதிச்சடங்குகள் நிகழ்ந்தபின் நான் சென்னை சென்று தங்கியிருந்தபோது இரண்டாம்பகுதி எழுதப்பட்டது. முதல்பகுதி நேரடியான நினைவுக்கொந்தளிப்பு. இரண்டாம் பகுதி தொகுத்துக்கொள்ளுதல்.

இரண்டுக்கும் உணர்வுநிலையில் வேறுபாடு உள்ளது. ஆகவே கூறுபொருளும் நடையும் மாறுபடுகின்றன. முதல்பகுதியில் சுந்தர ராமசாமியின் தனிப்பட்ட ஆளுமை உள்ளது என்றால் இரண்டாம்பகுதியில்தான அவரது ஆன்மீகத்தின் சித்தரிப்பு உள்ளது என நினைக்கிறேன்.

இந்நூலில் நான் இருந்துகொண்டே இருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை. ஏனென்றால் இது சுந்தர ராமசாமியின் வரலாறு அல்ல. அவரைப்பற்றிய என் நினைவுகள்தான். நான் அவரை எதிர்கொண்ட புள்ளிகள் மட்டுமே இந்நூலில் உள்ளன. என் வயதின் முதிர்ச்சியின்மை, இயல்பான அசட்டுத்தனங்கள்,அறிவார்ந்ததேடல், ஆன்மீகமான தத்தளிப்புகள் ஆகியவையும் இணைந்தே இந்நூல் உருவாகியிருக்கிறது.

2005ல் எழுதப்பட்ட இந்நூலை இன்று வாசிக்கும்போது இது ஜே.ஜே.சிலகுறிப்புகள் போன்ற ஒரு புனைவாகவும் வாசிக்கப்படலாமென தோன்றுகிறது. பல இடங்களில் நானே புன்னகைசெய்துகொண்டேன். சில இடங்களில் ஆழ்ந்த மனநெகிழ்ச்சியையும் அடைந்தேன்- உதாரணமாக சுந்தர ராமசாமி ஆலமரத்தைப்பார்க்கும் இடம். அது ஒரு மிகச்சிறந்த நாவலின் தருணத்துக்கு நிகரானது.

ஓர் ஆளுமை மறைந்ததும் இரண்டு விஷயங்கள் நிகழ்கின்றன. ஒன்று அவரை மறக்க ஆரம்பிக்கிறார்கள். தவிர்க்கமுடியாமல் அவரது நினைவை காலம் கரைத்துக் கரைத்துச் செல்கிறது. அதைக் கண்டு அஞ்சி அவருக்கு ஒரு சிலையைச் செய்கிறார்கள். நினைவிலோ, மொழியிலோ, மண்ணிலோ, கல்லிலோ. ஒற்றைப்படையான சிலை. ஓரிரு விருப்பக்கற்பனைகள் மட்டுமேயான சிலை.

இத்தகைய ஓர் இலக்கியப்படைப்பு அந்த இரு தரப்புகளுடனும் மோதுகிறது. மறதிக்கு எதிராக அது போராடுகிறது. அந்நினைவை நிலைநிறுத்த முயல்கிறது. மறுபக்கம் இந்த ஒற்றைப்படையான சிலைகளை உடைத்து அவரை ஓர் உயிருள்ள மனிதராக நிலைநிறுத்தப் பாடுபடுகிறது.

இரண்டையும் அது ஒரே வழிமுறைகொண்டுதான் செய்கிறது. நுண்தகவல்களை, அவதானிப்புகளை அள்ளி வைப்பதனூடாக. God is in deltails என்பார்கள். கலை, உண்மை எல்லாமே deltails ல்தான் உள்ளது.இந்நூலின் சிறப்பாக நான் எண்ணுவதே இதன் பக்கங்களில் வந்துகொண்டெ இருக்கும் நுண்சித்தரிப்பைத்தான். இலக்கியமென்பதே அதுதான், பொதுமைகளுக்கு எதிராக தனித்தன்மை கொண்ட நுண்மைகளை முன்வைத்தல்.

இந்நூலின் முதல்பதிப்பை வெளியிட்ட மனுஷ்யபுத்திரனுக்கும் மறுபதிப்பை வெளியிடும் நற்றிணைக்கும் நன்றி.

ஜெ

[நற்றிணை மறுபதிப்பாக வரவிருக்கும் சு.ரா நினைவின் நதியில் நூலுக்கான முன்னுரை ]

முந்தைய கட்டுரைசுரா.நினைவின் நதியில்- ஒருபார்வை
அடுத்த கட்டுரைதேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்