முன்னோடிகளின் முன்பில்…

பத்துவருடங்களுக்கு முன்பு ஒருமுறை தமிழினி வசந்தகுமாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இந்த விமர்சனநூல்வரிசை பற்றிய எண்ணம் எழுந்தது. அன்று பிரபலமாக இருந்த ஒரு விமர்சகர் சமகால இலக்கியப்படைப்பு ஒன்றைப்பற்றி மிகமிக நீளமான விமர்சனக்கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அலசி, ஆராய்ந்து, பிரித்து ,தொகுத்துச் செய்யப்பட்ட ஆராய்ச்சி. ஏராளமான கொள்கைகள்,கோட்பாடுகள், மேற்கோள்கள். ஆனால் அவர் அந்தப்படைப்பை கொஞ்சம்கூட புரிந்துகொள்ளவோ உணர்ந்துகொள்ளவோ இல்லை என்பது அதை வாசித்த எந்த நல்லவாசகருக்கும் தெரிந்தது.

இதை தமிழின் கோட்பாட்டு விமர்சனங்களை இன்றுவாசித்தாலும் காணலாம். நண்பனா பகைவனா, அரசியல்ரீதியான ஏற்புடையவனா இல்லையா என்ற இரு வழக்கமான அளவுகோல்தான் அவற்றுக்குப்பின்னால் இருக்கும். இலக்கியப்படைப்பில் சமகாலத்தைய பொத்தாம்பொதுவான அரசியலுக்கு அப்பால் எதையும் பார்க்கவும் அவர்களால் முடியாது. படைப்பில் அரசியல் இல்லையேல் அதை உருவாக்கிக் கண்டுபிடிப்பார்கள். அதற்குப்பெயர்தான் நுண்வாசிப்பு. ஆனால் இந்த மொண்ணைத்தனத்துக்குமேல்தான் அத்தனை கோட்பாடுகளும் பெய்யப்பட்டிருக்கும்.

விமர்சனம் என்பது எப்படிப்பார்த்தாலும் வாசிப்பதற்கான பயிற்சியை மேம்படுத்துவதற்கான கருவியே. விமர்சனங்களை வாசிப்பதனூடாக நாம் படைப்புகளை மேலும் நுணுகி அறியவேண்டும். நாம்றியாத நுட்பங்களும் கோணங்களும் நமக்குத்தெரியவரவேண்டும். நம்மூர் கோட்பாட்டுவிமர்சனங்களை வாசிப்பவர்கள் ஏற்கனவே அவர்கள் படைப்பில் கண்டறியாத எதையும் அவ்விமர்சனங்களிலிருந்து பெற முடியாது. சரி, கோட்பாடுகளையாவது தெரிந்துகொள்வோம் என்றால் அதுவும் குழப்பியடிக்கப்பட்டிருக்கும்.

வசந்தகுமாரிடம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ரசனை விமர்சனம் பற்றிய பேச்சுவந்தது. ஒரு படைப்பு அடிப்படையில் நேரடியாகத் தன்னை அணுகும் வாசகனுக்காகத்தான் எழுதப்படுகிறது. அப்படிப்பட்ட முன்னுதாரணமான வாசகனாக தன்னை வைத்துக்கொண்டு படைப்பை ஆராய்ந்து மதிப்பிடுவதே ரசனை விமர்சனம். படைப்பைப் புரிந்துகொள்வதற்கும் உணர்ந்துகொள்வதற்குமான ஒரு முயற்சி அது. அதுவே இலக்கியவிமர்சனத்தின் இயல்பான முதல்தளம்.

இங்கே விமர்சகன் தன்னை ஏதேனும் துறைசார்ந்த அறிஞனாக, நிபுணனாக உருவகித்துக்கொள்வதில்லை. தன் கையில் கொள்கையையும் கோட்பாட்டையும் கருவிகளாகக் கூர்தீட்டி வைத்துக்கொள்வதுமில்லை. அவன் வாழும்சூழலில் இருந்து அவனை வந்தடைந்த இலக்கிய மதிப்பீடுகள், வரலாற்றுப்புரிதல்கள், அரசியல்நம்பிக்கைகள், சமூகமனநிலைகள் தன் வாசிப்பில் தன்னையறியாமலேயே செயல்பட அவன் அனுமதிக்கிறான். இந்த தன்னிச்சைத்தன்மைதான் எல்லா வாசகர்களிடமும் செயல்படுகிறது என்பதனால்தான் அவன் ஒரு முன்னுதாரண வாசகனாகிறான்.

ரசனைவிமர்சனம் எப்போதுமே அதுவரையிலான இலக்கிய வாசிப்பின் அனுபவத்தின் அடிப்படையில் புதிய படைப்பை அணுகக்கூடியது. ஆகவே செவ்வியல்- பேரிலக்கிய மரபுதான் அதன் அளவுகோலை தீர்மானிக்கிறது. அத்துடன் சமகாலப்படைப்புகளுடன் தொடர்ச்சியாக படைப்பை ஒப்பிடுவதும் அதன் வழியாக உள்ளது. இந்த ஒப்பிடுதலை தன் சொந்த வாசிப்பனுபவத்தில் இருந்தே அவன் செய்கிறான். அனைத்துக்கும் மேலாக அவ்விமர்சகனின் சுயமான வாழ்க்கைசார்ந்த அவதானிப்புகள் முக்கியமான அளவுகோலாக ஆகின்றன.

இக்காரணத்தால் ரசனைவிமர்சனம் என்பது எந்நிலையிலும் அந்தரங்கமானதாகவே இருக்கமுடியும். அதற்கு முழுமுற்றான புறவயத்தன்மை சாத்தியமல்ல. அது ஓர் ’அபிப்பிராயம்’ என்றே அடிப்படையில் நிலைகொள்கிறது. அந்தவிமர்சகன் முன்னுதாரணமான வாசகனாக இருந்தால் மட்டுமே அதற்கு புறவயத்தன்மை கைகூடுகிறது. க.நா.சு அனேகமாக விமர்சனமே எழுதவில்லை. முடிவுகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் திட்டவட்டமான புறவயமான ஒரு இலக்கிய மதிப்பீட்டை உருவாக்கி தமிழில் நிறுவிவிட்டுச் செல்ல அவரால் முடிந்தது. புறவயமாக விவாதங்களை எழுதிக்குவித்த கைலாசபதியோ நா.வானமாமலையோ அதைச்சாதிக்கமுடியவில்லை.

வ.வே.சு அய்யர் முதல் தொடங்கும் ரசனை விமர்சன மரபுக்கு க.நா.சு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி என ஒரு வலுவான தொடர்ச்சி தமிழில் இருந்தது. தமிழில் இலக்கிய ரசனையை மழுங்கடிக்கும் அரசியல்கூச்சல் எப்போதும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது என்றாலும் நுண்ணிய இலக்கிய மதிப்பீடுகளையும் அம்மதிப்பீடுகளால் அடையாளம் காணப்பட்ட படைப்பாளிகளையும் நிறுவ அந்த மரபால் முடிந்தது. அந்த மரபு தேங்கி விட்டதோ என்ற எண்ணம் அன்று உருவானது.

உலகம் முழுக்க படைப்பிலக்கியவாதிகளில் ஒரு சாரார்தான் ரசனைவிமர்சனத்தை சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். ஆகவேதான் சொந்தமாக ஒரு நல்ல படைப்பையேனும் எழுதாத இலக்கியவிமர்சகனின் கூற்றுக்களை பொருட்படுத்தவேண்டியதில்லை என்றார் எஸ்ரா பவுண்ட். தமிழிலும் அதுவே மரபாக உள்ளது என்றார் வசந்தகுமார். ஆகவே நான் எழுதலாம் என்றார். எந்தவித கொள்கையையும் கோட்பாட்டையும் நிலைபாட்டையும் முன்வைக்காமல் ‘களங்கமற்ற’ வாசகனாக படைப்பின் முன் நின்று மனதில் பட்ட அவதானிப்புகளைச் சொல்லக்கூடிய ஒரு விமர்சனத் தொகையை உருவாக்கவேண்டும் என்ற முடிவுக்கு அப்போது வந்தோம்.

அவ்வாறுதான் இந்த ஏழு நூல்களும் எழுதப்பட்டன. இந்த விமர்சனங்கள் ஆய்வின் பாணியில் அமையக்கூடாது என முன்னதாகவே எனக்கு விதித்துக்கொண்டேன். படைப்பாளிகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்து என் அவதானிப்புகளை நேரடியாகச் சொல்லிக்கொண்டே போகவேண்டும். கட்டுரைகளுக்கு சீரான கட்டமைப்புள்ள வடிவம் அமையாதுபோனாலும் பரவாயில்லை என நினைத்தேன். படைப்பாளிகளைப்பற்றி ஒரு வாசகனாக நான் முன்வைக்கும் அவதானிப்புகள் மட்டுமே முக்கியம் என முடிவெடுத்தேன்.

இலக்கியமுன்னோடிகள் வரிசை என்ற தலைப்பில் வெளியான இந்நூல்கள் தமிழில் பெரும் பாதிப்பை உருவாக்கியிருப்பதை அதன்பின்பு எழுதப்பட்ட கல்வித்துறை ஆய்வேடுகளையும், பிற விமர்சனக்கட்டுரைகளையும் பார்க்கும் எவரும் அறியலாம். சொல்லப்போனால் தமிழில் பல படைப்பாளிகளைப்பற்றி எழுதப்பட்ட முதல் விமர்சனக்கட்டுரைகளே இதில்தான் உள்ளன.

இவை இலக்கிய முன்னோடிகளைப்பற்றிய முடிவுகள் அல்ல. தீர்ப்புகள் அல்ல. ஒரு வாசகனின் அவதானிப்புகள் மட்டுமே. பிறவாசகர்கள் இந்தக் கண்களினூடாகப் பார்க்கையில் இன்னும் சற்று விரிவான வாசிப்பை அடையக்கூடும். இப்படி பல்வேறு கண்கள் வழியாக பார்க்கப்படுகையிலேயே இலக்கியவாசிப்பு முழுமையை நோக்கிச் செல்கிறது. இலக்கியவாதி மேலும் மேலும் காலத்தில் தெளிந்து வருகிறான். இந்த நூலின் நோக்கம் இதுவே

இந்நூல்வரிசை உருவாகக் காரணமாக இருந்த தமிழினி வசந்தகுமாருக்கும் இன்று மீண்டும் ஒரேநூலாக வெளியிடக்கூடிய நற்றிணை பதிப்பகத்துக்கும் நன்றி. 2003 அக்டோபரில் இந்த நூல்களின் வெளியீட்டுவிழா சென்னையில் நிகழ்ந்தபோது ஒரு அற்புதமான பேருரை வழியாக என்னை கௌரவித்த ஜெயகாந்தனுக்கும் கந்தர்வனுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வணக்கமும்

ஜெயமோகன்

[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் இலக்கியமுன்னோடிகள் நூலின் முன்னுரை]

முந்தைய கட்டுரைஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு
அடுத்த கட்டுரை’மனிதர்கள் நல்லவர்கள்’ தெளிவத்தை ஜோசப்