புறப்படுதல்

இரண்டு வயதாக இருக்கையில் அஜிதன் மேற்கொண்டு சாக்லேட் தின்னக்கூடாதென்று தடுக்கப்பட்டான். கொதித்தெழுந்தவன் அழுதகண்ணீரும் பிதுங்கிய உதடுகளுமாக வீட்டுக்குள் சென்று ஒரு புத்தகம், உடைந்த கார் , நாலைந்து பென்சில்கள்,ஒரு பழைய துண்டு ஆகியவற்றை சேகரித்து வெளியே வந்து என்னைப்பார்க்காமல் தாண்டிச் செல்வதை கண்டேன். தர்மபுரி செந்தில்நகரில் எங்கள் வீட்டுப்படி கொஞ்சம் உயரமானது. அதில் கொஞ்சம் முயற்சி செய்து பக்கவாட்டில் காலெடுத்து வைத்து இறங்கி சாலையை அடைந்து நடந்துசென்றான்.

குட்டிக்கால்கள் மண்ணில் தாவிச் செல்வதை சிரிப்பை அடக்கிக்கொண்டு பார்த்தபடி நான் பின்னால் சென்றேன். சாலை இறுதிவரை சென்றபோது அங்கே மேய்வதற்காக கட்டப்பட்டிருந்த பசு பயலை மறுபரிசீலனை நோக்கி இட்டுச்சென்றது. நின்று திரும்பி என்னைப்பார்த்து அழகிய புருவங்களைத் தூக்கி ‘பசு….பாத்தியா?’ என்றான். என்னை பயமுறுத்த முயல்வதுபோல ‘பசு முட்டீரும்’

நான் அப்படியே அவனை தூக்கிக்கொண்டேன். அவனுக்கு யானை அளவுக்கு பெரிய சாக்லேட் வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்தேன். மொத்த உடைமைகளுடன் பயலை வீடுசேர்த்தபின் மெதுவாக விசாரித்தேன், அவன் எங்கே போனான் என்று. ‘

’ஜீயோட வீட்டுக்கு…’

’எங்க இருக்கு அது?’

’அங்க….’ என்று கையைத் தூக்கிக் காட்டினான்

‘அங்க என்ன இருக்கு?’

‘ஜீயோட வீடு…’

‘அங்க யாரு இருக்கா?’

’ஜீயோட வீட்லே…இருக்கு’

‘அப்பாவை கூட்டிட்டுப்போவியா?’

அது நல்ல யோசனைதானா என பயல் என்னை கூர்ந்து பார்த்தான். பின்பு சுட்டுவிரலை நீட்டி ‘நீ அப்பா’ என்றான். அவனுடைய அந்த வீட்டில் எனக்கும் ஒரு பதவி கிடைக்கப்பெற்றேன்

வீட்டைவிட்டுக் கிளம்பிச்செல்லாத குழந்தைகளே இருக்காது. குழந்தைக்கு அது வாழும் இடத்துக்கு அப்பால் என்ன என்ற பெரும் ஆர்வம் உள்ளூரத் துடித்துக்கொண்டே இருக்கிறது. தவழும் குழந்தைகூட அது சென்றுசேரச் சாத்தியமான எல்லையின் கடைசி விளிம்பில்தான் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. தெரு எல்லைவரை சென்று விடுகிறது. சாக்கடை விளிம்பில் உட்கார்ந்திருக்கிறது. தூக்கிக்கொண்ட உடனே கைநீட்டி ’அங்க போ’ என ஆணையிடுகிறது. அது காணவேண்டிய அனைத்தும் ’அங்கே’தான் இருக்கின்றன.

சிந்தனை முளைத்தபின்புதான் வெளியுலகம் அச்சமூட்டுகிறது. கிளம்பிச்செல்வதென்பது ஒரு அந்தரங்கக் கனவாக மட்டுமே நீடிக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சமேனும் இலக்கிய ஆர்வமும் சிந்தனைப்பழக்கமும் கொண்டவர்கள் பல முறை பலவிஷயங்களுக்காக மானசீகமாகக் கிளம்பிச்சென்றுகொண்டே இருப்பவர்கள்தான்.

நான் நினைவறிந்த நாள் முதலே என் விழிகள் எட்டும் தொலைவுக்கு அப்பாலுள்ளவற்றை கற்பனையில் கண்டுகொண்டிருந்தவன். எனக்கு மூன்றுவயதாக இருந்தபோது கொட்டாரம் என்ற ஊரில் தங்கியிருந்தோம். நான் தெளிவாகத் திட்டமிட்டு வீட்டைவிட்டு கிளம்பி அண்ணா பார்க்காமல் பெரியதெருவுக்குச் சென்று ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் வரை நடந்து ஒரு மளிகைக்கடைக்காரரால் பிடிக்கப்பட்டு அங்கே நிறுத்திவைக்கப்பட்டேன். இன்றுகூட அந்த பயணம் துல்லியமாக நினைவிருக்கிறது. என்னை சைக்கிளில் திரும்பக்கூட்டிவந்தவர் ‘கோட்டி’ பூமேடை ராமையா.

அதன்பின் பலமுறை. பெரும்பாலும் திருவட்டாறு பாட்டிவிட்டுக்குச் சென்றுவிடுவேன். ஒருமுறை பாறசாலை கோயிலுக்குச் சென்று மூன்றுநாள் கழித்து பிடிக்கப்பட்டேன். ஏழாம் வகுப்பில் படிக்கையில் குழித்துறையில் சரியாக அறிமுகம் கூட இல்லாத ஒரு உறவினரின் வீட்டை கச்சிதமாக கண்டுபிடித்து சென்று சேர்ந்து மறுநாளே கொண்டுவரப்பட்டேன்.

நீண்டகாலம் வெளியே தங்கிய இரு புறப்பாடுகள் கல்லூரிக்காலத்தில் நிகழ்ந்தன. அவை என்னை நேரடியாக வாழ்க்கைமுன் தூக்கிப்போட்ட நிகழ்வுகள். நானே என் சொந்த ஆற்றல்களால் புரிந்துகொள்ளவும் தப்பிக்கவும் கற்றுக்கொண்டேன். நான் இன்று எழுதும் பலபுரிதல்கள் அப்போது உருவானவை.

அஜிதனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஊசியால் ஒவ்வாமைக்கு ஆளான ஜான் என்னருகே இன்னொருவனாக மாறிக் கிடந்த அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அதை எழுதலாமென தோன்றியது. அதை எழுதியபின் ஊரிலிருந்து கிளம்பியதை எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து ஒவ்வொருநாளும் எழுதி இரு பகுதிகளாக புறப்பாட்டின் கதையை முடித்தேன்.

இது நேரடி அனுபவங்களின் தொகை. ஆனால் வெறும் அனுபவங்களின் பகுதி அல்ல. உயிருள்ள பலரின் பெயர்களை மாற்றியிருக்கிறேன். இடங்களை மாற்றியிருக்கிறேன். தேவையானவற்றை மட்டும் சொல்லியிருக்கிறேன். அனைத்துக்கும் மேலாக இதில் ஒரு புனைவு உள்ளது. அனுபவங்களின் வழியாக நிகழ்ந்த அகத்திறப்பை மையமாகக் கொண்டு மொத்த அனுபவங்களையும் மறுதொகுப்பு செய்வதற்கு அந்த புனைவு பயன்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரைகள் வெளிவந்தபோது அஜிதன் சொன்னான் . ‘என்னைவிட இதற்கு நல்ல வாசகன் வேறு யாராவது இருக்க முடியுமா?’

ஓர் இலக்கியவாசகனாக அவன் ரசனை மற்றும் வாசிப்பு மீதிருக்கும் நம்பிக்கை எனக்கு மிகச்சிலர் மீதே உள்ளது.’ இல்லை’ என்றேன்

‘அப்படியென்றால் இந்த புத்தகத்தை எனக்கு டெடிகேட் பண்ணு’

‘சரி’ என்றேன்

‘ஐ ஜாலி…!’

ஆகவே இந்த நூலை அஜிதனுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். மகனையே சிறந்த மாணவனாகப் பெறும் அதிருஷ்டம் அதிக தந்தையருக்கு வருவதில்லை. பின்பு அந்த மகனின் சிறந்த மாணவனாக ஆகும் பேரதிருஷ்டம் மிகமிகச் சிலருக்கே அமையும். அவ்விரு உவகைகளையும் எனக்களித்த அஜிக்குட்டிக்கு இந்த நூல்

ஜெ

[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் புறப்பாடு நூலுக்கான முன்னுரை ]

முந்தைய கட்டுரைசென்னையில் சந்திப்பு
அடுத்த கட்டுரைஉதிர்ந்த ரத்தத்துளிகளின் கதை