அழிவின்மையின் முத்துக்கள்

எங்கெல்லாம் முத்து பிறக்கும் என்று சிற்றிலக்கியப்பாடல் ஒன்று சொல்கிறது

சங்கில், கழையில், கழையினில், செஞ்சாலியினும், இப்பியின்,
மீனில், தடியில், கிரியில், கரிமருப்பில், தடந்தாமரையின்
ஆவெயிற்றின்
மங்குல், கதலி, கழுகு, கற்பின் மடவார் களத்தின், குருகின்
அந்தின், மதியின், அரவில், கிடங்கர் என வகுத்த
இருபான் தரு முத்தம்

என் சிறுவயதில் அழகிய எதையுமே முத்து எனச்சொல்வதைக் கேட்டிருக்கிறேன். புளியங்கொட்டையைக் கூட புளியமுத்து என்றுதான் சொல்வார்கள்.- குனிமுத்து. என்ற அழகிய சிறு விதை ஒன்றை நாங்கள் விளையாடுவதற்காகப் பொறுக்குவோம். மஞ்சாடிமுத்து என்பது சிவந்த சப்பையான விதை. அது ஓர் எடையளவாகப் பயன்படுத்தப்படும். புனுகு, பச்சைக்கற்பூரம் போன்ற சித்த மருந்துகளை வாங்கசென்றால் மஞ்சாடிமுத்து வைத்து எடைபோட்டுத் தருவார்கள்.

மருதாசலப் பிள்ளைத்தமிழின் இப்பாடலில் உள்ள முத்துக்கள் எல்லாமே நடைமுறைப் பொருளில் கொள்ளத்தக்கவை என ஆயுர்வேத வைத்தியரான என் பெரியப்பா சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். வலம்புரிச்சங்கின் முத்து என்பது மிக அபூர்வமாகச் சங்கின் கீழ்நுனியில் திரண்டு நிற்கும் வெண்ணிறமான மணி. அதில் சிலசமயம் செந்நிறமான ரேகைகள் ஓடுமாம்.

மூங்கிலில் பிறக்கும் முத்து என்ன? பஞ்சகாலத்தில் பிற அனைத்து தாவங்களும் பட்டுவிடும்போது மூங்கில்மட்டும் பூத்துக்காய்த்து விதைகள் சிந்தும். அம்மணிகளைப் பொறுக்கி நீரிலிட்டு கொதிக்கவைத்துக் குடிப்பார்கள் என்று நூல்கள் சொல்கின்றன. அந்தமுத்துதான் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கரும்பில் பிறக்கும் முத்து கற்கண்டுதான்.

முத்து என்றால் திரண்டுவரும் ஒன்று என்று பொருள்கொள்ளலாம். அந்தபொருளிலேயே உதடுகள் அளிப்பதும் முத்தமாகிறது. பதிவது முத்திரையாகிறது.சங்கிலும் சிப்பியிலும் கரும்பிலும் மூங்கிலிலும் அவற்றின் சாரமான ஏதோ ஒன்று திரண்டு, துளிவிட்டு ,செறிந்து ஒளிகொண்டு முத்தாகிறது. நெஞ்சின் நெகிழ்தல் உதடுகளில் குவிவதுபோல.

நினைத்துக்கொள்வேன், மொழியின் முத்துக்களே கவிதைகள் என. கனிந்து ,குவிந்து ,ஒளிகொண்டு வரும் துளிகள். அந்தரங்கமான செப்புக்குள் சேர்த்துச்சேர்த்து வைக்கப்படவேண்டியவை. எண்ணி எண்ணிக்கோர்த்துக்கொள்ளவேண்டியவை. மாலைகளாகி மார்பில் துவளவேண்டியவை.

சங்கப்பாடல்களை வாசிக்கையில்எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந்திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழியாக மட்டுமே அந்த பேரழகை, பேரன்பை உணரமுடிகிறது.

ஆனால் தரளம் என்றும் முத்து சொல்லப்படுகிறது. தரளிதம் என்றால் ஒளிவிட்டு அதிர்வது. தாமரையிலை நீர்முத்து என தத்தளிப்பது. முத்து என்றாலே ததும்பவேண்டும்தான். நூற்றாண்டுக்கால பழைமைகொண்ட முத்துக்களை நான் கண்டிருக்கிறேன். மறுகணம் உடைந்தழியும் நீர்க்குமிழிகள் போல அவை இமைத்துக்கொண்டிருந்தன. அழிவின்மைகொண்ட தற்கணங்கள் அவை.

சங்கப்பாடல்களை வாசிக்கையிலும் அதே தரளத்தை உணரமுடிகிறது. இக்கணம் நிகழ்ந்தவை போலிருக்கின்றன அவை. சற்று இமைத்தால் இல்லாமலாகிவிடுமெனத் தோன்றவைக்கின்றன.

எனக்குத்தெரியும், இவை தென்மதுரையும் கபாடபுரமும் கண்ட தொல்முத்துக்கள் என. நாளை விண்வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும் இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப்பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம்!

ஜெ

[ நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் சங்கசித்திரங்கள் மறுபதிப்புக்கான முன்னுரை ]

முந்தைய கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 5
அடுத்த கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- 6