சீர்மை-கடிதங்கள்

pic

அன்புள்ள ஜெ

‘சீர்மை’

இது எழுத வேண்டுமே என்று யோசித்து, வாசிப்பு அனுபவத்தை திரட்டி, உருவாக்கிய எழுத்தாக தெரியவில்லை.. உங்களை குறித்து சொல்வதை போல் , இது பீறிட்டு வந்த எழுத்து. எழுத்தாளனை மீறி நிகழ்ந்த ஒன்று…

சீர்மையை குறித்து பேசும் இந்த நாவலை நாம் கச்சிதம் என்று பேசலாம்.. வடிவ நேர்த்தி, அளவு, கதை கூறல், சம்பவங்கள் அல்லது தகவல்கள் என அனைத்தும் கச்சிதம். நாவல் எவ்வளவோ சொல்கிறது, ஆனால் எல்லாமே கச்சிதமாய் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு நாவலில் எனக்கு பிடித்த பகுதிகளை திரும்ப திரும்ப படிப்பேன். ஆனால் சீர்மை குறித்து எழும் சித்திரம் மொத்தமாக விரிகிறது. தனியாக எதுவுமே தெரியவில்லை. எதையும் தனியாக வாசிக்கவும் முடியவில்லை. முழுதாய் 5 முறை வாசித்து விட்டேன். இப்படி ஒரு முழுமை எப்படி சாத்தியம் ஆயிற்று? இரவு 4 மணிக்கு எழுந்து சீர்மை என கூகுல் படங்களை தேடி 1000 படங்களுக்கு மேல் பார்த்து கொண்டிருந்தேன்..
​ ​
இனி நான் காணும் ஒவ்வொரு வடிவங்களிலும் சீர்மையை என் மனம் தேடும்
​.​

வரலாற்று சம்பவம், நாயகர்கள், கதாபாத்திரங்கள் மேல் பித்து கொள்ளச்செய்யும் எழுத்து உண்டு. ஒரு வார்த்தையின் மேல் இந்த அளவுக்கு பித்தை ஏற்றும் எழுத்து இருக்க முடியுமா?
​ ​
ஆன்மாவை உலுக்கும் எழுத்து. மனம் சீர்மை​, symmetry​ என பிதற்றி கொண்டே இருக்கிறது.

பிரசாத்

சேலம்

 

தங்கள் எழுத்தை சில வருடங்களாக வாசித்து வரும் ஒரு வாசகி நான். தற்போது சீர்மை தொடரை தங்கள் தளத்தில் வாசித்து வருகிறேன். இது வரை வாசித்த மூன்று பகுதிகளுமே மனதில் சில அதிர்வுகளை உருவாக்கிவிட்டது. தனிமையும், அதைத்தொடர்ந்து ஒரு மனித மனது ரகசியமாய் உணரும் வலிகளையும், அதன் தொடர்ச்சியாய் வலிகளை மட்டும் ரசிக்கும் மனப்பான்மையும், அதுவே வாழ்க்கையும் என்றாகும் நிலைப்பாட்டில் திடீரென அந்தத்தனிமை ஏதோ ஒரு தருணத்தில் மிகவும் வேகத்தோடு உடைபடும் போதும் அந்தத்தனிமையையே மறந்து போய் இல்லையெனில் தனிமை உணர்வே மரத்துப் போய்விடுகிறது. கென் வாழ்க்கையில் த்ரேயாவின் வரவு அப்படியே உணரப்படுகிறது. உண்மையிலேயே அவன் உள்மனது விரும்பியது தனிமையையா? இல்லை அது உடைப்பட்ட அந்த தருணங்களையா?

நோய்வாய்ப்பட்டு இருக்கும் நேரங்களில் த்ரேயாவின் மனநிலை, கென்னின் மனநிலை, காதல் கூடி பின்னர் பிரியமனமில்லா பிரியமான காதலில் மௌனமும், உச்சகட்டமாய் உடல்ரீதியான வன்முறையும் நிகழ்ந்தபின் இருவரும் உடைந்து அழும் அந்த நொடி..! மீண்டும் மென்மையான காதல்.. சுட்ட பானை சிதறி உடைந்து மீண்டும் மென்மையான களிமண்ணாய்.. காதல் குழைய… மிகவும் நேர்த்தியாய் உணரப்பட்ட ஆண் பெண்ணின் உணர்ச்சிகரமான அந்தரங்கமான காதல் மனங்கள், அதன் வெளிப்பாடுகள்.. காதலில் வாழ்ந்த எல்லாரும் கண்ணீரையும், காதலையும் ஒருசேர உணர்ந்திருப்பார்கள் இந்த பகுதியை வாசிக்கையில்.

ஒரு பெண் மிகுந்த மன அதிர்ச்சிக்கு ஆளாகையில் மீண்டும் மீண்டும் எழவே முயற்சிக்கிறாள். த்ரேயாவின் மனஉறுதி ஒவ்வொரு நொடியிலும் உடைபட்டாலும் மீண்டும் மீண்டும் அவள் உறுதிப்பாட்டை மேற்கொள்ளவே துடிப்பதும் அதற்கான அவளது முயற்சிகளும்.. என்னவென்று சொல்ல! காதல் இருந்தாலும், கடமை இருந்தாலும் கென் ஒரு கட்டத்தில் சோர்ந்து போகிறான். அந்த சூழ்நிலையில் இருந்து தற்காலிகமாவது அவன் வெளியேறவே துடிக்கிறான். ஆனால் வெளியேறவில்லை… ஒரு சாதாரண ஆணின் மனப்பாட்டில் இருந்து அவன் வேறுபடுகிறான். இது காதலால் நிகழ்கிறதா? இல்லை மீண்டும் தனிமை பயம் ஏற்படும் என்பதினால் நிகழ்கிறதா? அர்விந்த் மிக மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கும் ஆண் பெண் நிலைப்பாடு மற்றும் காதல் வரிகளில் வலிகளும் மிகுந்திருக்கின்றன.. காதலும் நிறைந்திருக்கின்றன.

ஏதோ நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது மனித மனங்களில்.. மேற்கத்திய தனிமையை உணர்ந்தாலும்.. அன்பையும் உணரமுடிகிறது. மனம் உணர்ந்ததை எல்லாம் வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை.

-லலிதா ராகவன்-

 

முந்தைய கட்டுரைகடிதம்
அடுத்த கட்டுரைகதைத்தேர்வின் அளவுகோல்