சீர்மை -மதிப்பீடுகள்

grace and grit படிக்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்த கேள்வி

இப்படியொரு வாழ்வு பூமியில் மீது மனிதரால் வாழ முடியுமா என்பதுதான்

இப்படியொரு காதல் இப்படியொரு தீவிரம்

இவ்வளவு சந்தோசம்

இவ்வளவு துக்கம்

இவ்வளவு அமைதி

இது வெறும் புனைவாய் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்

குறிப்பாக நீங்கள் நன்றாகவே விவரித்திருக்கும் அவர்கள் இருவருக்கும் இடையேயான சலிப்பும் ஆங்காரமும் வெறுப்பும் உடைந்து மீண்டும் அன்பு பூக்கும் இடம்.

நான் என் வாழ்வின் துயரங்களோடு அதை ஒப்பிட்டுப் பார்த்து மனம் தளர்ந்தேன் .இதே போன்ற ஒரு இக்கட்டில் (எனது தந்தையின் மனச் சிதைவு )நான் அதை மிக மோசமாக எதிர்கொண்டேன் என்று தோன்றியது

இதேபோல் நோய் முற்றிய ஒரு முறிவு தருணத்தில் அதைத் தாங்கிக் கொள்ளும் வலிவு இல்லாமல் நான் அவரை அடித்தேன்.

ஆம்.அடித்தேன்!இதை எழுதும்போதே மனம் திடுக்கிடுகிறது

என்ன செய்துவிட்டேன்!

கென் ட்ரேயா வாழ்விலும் அது போல ஒரு தருணம் வருகிறது ஒரு முறி தருணம் அதை அற்புதமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

ஆனால் அந்த வெடிப்பிற்குப் பிறகு (அந்த உவமை அற்புதம் )மீண்டும் அன்பு ஒரு சீர்மையைக் கொண்டுவருகிறது

நான் அந்த சீர்மையை என் தந்தை இறந்த பிறகே உணர்ந்தேன் அதை உணர மறுமுனையில் அவர் இல்லை.

பிடி இன்றி காற்றில் அலைந்த கை

ஒரு துக்கத்தை எதிர்கொள்ள ஐந்து படிநிலைகள் உள்ளன என்று elizabeth kubler ross சொல்கிறார்

த்ரேயா கென் காதலில் அவர்கள் புற்று நோயை அதன் சிகிச்சையை இறுதியாக மரணத்தை எதிர்கொள்வதில் இந்த எல்லா நிலைகளையுமே வில்பர் தெளிவாக விவரித்திருப்பார்

அதிலும் த்ரேயாவின் மரணத்தை கென் மிக உருக்கும் விதமாக விவரித்திருப்பார்

அந்த இரவெல்லாம் வெளியே சீறிச் சுழன்ற பனிப்புயல் நின்றபோது த்ரேயா அதனுடன் இரண்டறக் கலந்திருந்தாள்

புத்தக் கதைகளின் படி மகாத்மாக்கள் உயிர் துறக்கும்போது இவ்விதம் நிகழ்வதுண்டு

த்ரேயா தன் நோயின் மூலமாக மரணத்தை நோக்கிய தனது பயணத்தின் மூலமாக தனது முழுமையைக் கண்டுகொண்டாள்

இல்லையா ?

ஒரு வகையில் கென்னும் கூடத்தான்

மிகுந்த நன்றி அரவிந்த்

போகன்

*

மனிதன் தன் மகத்தான கேள்விகளை மரணத்தின் முன் கேட்டுக்கொள்கிறான். அல்லது மரணம் சிலருக்கு வாழ்க்கையின் ஆகப்பெரிய கேள்வியை முன்வைக்கிறது. யோசித்துப்பார்த்தால், இந்தியாவில், ஞானம் அடைந்ததை விவரிக்கும் நிகழ்ச்சியில் எல்லாமே மரணம் என்பது ஒரு பாத்திரமாக இருக்கிறது. மரணம் அல்லது மரண நிகர் அனுபவமாகவே முதலில் அந்த கணம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மரணமும் மரணத்தை நோக்கிய பயணமும் மரணத்தின் நிழல் படியத்துவங்கும் கணங்களும்.. ஆயிரம் ஆயிரம் கேள்விகளை எழுப்பி நம்மை உடைத்துப்போடக்கூடியது.

ராம்

*

சீர்மை குறுநாவல் ஆழ்ந்த, கனத்த வாசிப்பனுபவத்தை அளித்தது. கன்னி முயற்சி போல அல்ல, ஒரு தேர்ந்த எழுத்தாளனின் படைப்பு என்ற எண்ணமே ஏற்பட்டது.

நாவலின் முதல் பாதி பலத்த தத்துவக் கலைச்சொற்களும் அறிவு சார் தர்க்கங்களும் கொண்டிருக்க, அதன் பின்பாதி நேரடியான மானுட உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் கலவையாக இருப்பது இந்த நாவலின் வடிவமே தன்னுள் ஒரு சீர்மையைக் கண்டடையும் முயற்சி என்று எண்ணத் தோன்றுகிறது. மானுட அறிவுக்கும் சக்திக்கும் மீறிய நோயும் மரணமும் மனித அறிவின் மீதும், இயற்கையையும் பிரபஞ்சத்தையும் அறிய முயலும் அவனது அகங்காரத்தின் மீதும், அவன் பொத்திப் பாதுகாக்கும் அன்பும் நேசமும் அழகும் ததும்பும் அவனது சிறு பிரபஞ்சம் மீதும் சம்மட்டி அடியாக இறங்குவதன் சித்திரம் அருமையாக எழுத்தில் கூடி வந்திருக்கிறது.. சாதாரண மனிதன் அந்தக் கணங்களில் நொறுங்கிப் போயிருப்பான், ஆன்மீக அழிவை நோக்கிச் சென்றிருப்பான், ஆனால் பிரக்ஞை விழிப்பும் ஞானத் தேடலும் கொண்ட ஒருவன் அதிலிருந்து மீண்டெழுந்து வருகிறான், தனது வாழ்வின் ஆதாரத் தேடலையே அதில் கண்டடைகிறான்.. ஒளிவீசிச் சுடரும் அந்த ஞான விளக்கின் தூண்டுதலாக, மலரின் மெல்லிய காதலும், பெண்மையின் ஸ்பரிசமும் உள்ளன.. சீரான மலை முகடுகளுக்கு நடுவில் பாதி உறைந்து நின்று விட்ட ஒற்றைப் பனிப்பாளமாக அந்த மெல்லிய சோகம், இளமை முதலே அவன் மனதில் உருவாகிய அந்த துக்கம் – அது தான் அவனது போதி மரம் போலும்.

கதையில் வரும் மேற்கத்திய பல்கலை சூழல், லேக் டாஹோ, அல்கட்ராஸ் போன்ற விஷயங்கள் எனக்கு ஓரளவு பரிச்சயமாகி இருந்ததால், நாவலில் உள்ள சில நுண் தகவல்களை உணர்ந்து ரசிக்க முடிந்தது. இவற்றுடன் பரிச்சயம் இல்லாத தமிழ் வாசகர்களுக்கு இவை அன்னியமாக, சுவாரஸ்யம் அற்றவையாக தோன்றக் கூடும்.. ஆனால் நாவலின் களமும் சூழலுமே அப்படி என்பதால், அவற்றை சித்தரிக்காமல் இருந்திருக்க முடியாது. மேலும், இந்தக் களம் இவ்வளவு தீவிரத் தன்மையுடன் தமிழில் இதுவரை எழுதப் பட்டதில்லை என்பதால், புதுமையானதும் கூட.

கென் வில்பர் என்பாரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன், அவரை நான் அதிகம் வாசித்ததில்லை. Marriage of Sense and Soul என்ற அவரது புத்தகத்தை சிறிது மேய்ந்ததோடு சரி. அந்த நூலை வாசிக்கையில், முழுமை என்பதை கருத்தளவில் ஏற்றாலும், அதீதமாகப் பகுத்துப் பகுத்துக் கொண்டே செல்வது போலத் தோன்றும் அவரது தத்துவ அணுகுமுறை எனக்கு பெருத்த அயர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இந்து/பௌத்த ஞானத்தை குறைத்தல் வாதமாக்கி தனது சொந்த மேற்கத்திய தியரியில் ஒரு சிறு உறுப்பாக மட்டுமே வைத்து பொருத்த விழைகிறாரோ என்ற எண்ணமும் ஏற்பட்டது.

முதுகுக்குப் பின் கென் வில்பர் நிற்பதை முற்றிலுமாக மறந்து விட்டு, ஒரு தனித்த இலக்கியப் பிரதியாக மட்டுமே இந்த நாவலை வாசித்தாலும், இது ஒரு சிறந்த குறுநாவல் என்றே மதிப்பிட முடியும்

ஜடாயு