சீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்

அன்புள்ள அரவிந்த்

சீர்மை குறுநாவலை இப்போதுதான் படித்து முடிக்க வாய்ப்பு கிடைத்தது. மிக அற்புதமான அனுபவத்தைத் தந்திருக்கிறீர்கள். நேற்றிரவு, நெடிய நாளின் சலிப்பையும் பாரங்களையும் இலகுவாக்கிக்கொள்ளும் சாத்தியங்களைக் கைவிடுத்து கென்னின் வாழ்வினுக்குள் எட்டிப்பார்க்கத் தலைப்பட்டேன். தாம் பெற்ற புத்தம் உத்வேகத்தைத் தம்மில் அழித்துக்கொள்ளுமளவு ஒட்டடை படரும் வாழ்வே பலருக்குக் கைவரப்பெற்றது. கென்னின் வாழ்வும் அப்படிப்பட்ட திசையில் செல்லும்போது த்ரேயா வழி அவரது பிரக்ஞையில் வேறேதோ திறப்பை நிகழ்த்திவிட்டது. உறைபனிப்பருவ மனிதன் உருவாக்கிய லாஸ்கோ குகைஓவியங்களின் கச்சிதமான சீர்மை இன்று வரை நவீன ஓவியங்களில் காணக்கிடைக்காது என்பார்கள். கூர்தீட்டப்பட்ட கற்களும், குச்சிகளும் தருவித்த பயன்பாடுள்ள வாழ்வுமுறையைத் தாண்டி கலை எனும் வடிவபோதத்தின் வழி இருள் குகைக்குள் பிரபஞ்சம் தாண்டிய கற்பனைகளை கைவரப்பெற்றவனின் தூய சீர்மை. பிரமிட் போல மனிதன் செய்யக்கூடிய சாத்தியங்களே இல்லை எனும்படியான மனமயக்கத்தைத் தரும் வடிவங்கள். அதனாலேயே சிறு சமன்குலைவுகளும், பிழைவுகளும் கொண்ட கலை ஆக்கங்கள் மனிதனின் உருவாக்கம் எனும் முத்திரையோடு அணுகப்படுகிறது போலும்.

`பருத்தி வெடித்து பஞ்சு ஒன்று அதன் எல்லா மென்மைகளுடன் எல்லா அமைதிகளுடன் மிதந்து எங்களிடையே வந்து அமர்ந்தது` – என நீங்கள் எழுதிய பெருவெடிப்பின் விளைவு மிக அற்புதமான உவமையாகப் பட்டது. `கை தடுக்கிவிட்டது போன்ற ஒரு தீற்றல்` த்ரேயாவின் பிரக்ஞையில் ஒளிந்திருக்கும் சமனின்மை. சீர்மையின் பல ஒழுங்கற்ற கரங்களைப் போல இதுவும் ஒன்றுதானோ? எல்லாக் கோடுகளும் வண்ணங்களும் குவிந்து சமனடையும் புள்ளி.

கென் வில்பரின் தத்துவங்கள் எனக்கு அறிமுகமில்லை. ஆனால் அது ஒரு தடையாக அமையாதபடி தீவிர உணர்வெழுச்சிகளின் மூலம் அமைத்துள்ளீர்கள். கீழையியலை மேற்கு உளவியலோடு இணைக்க முற்பட்டவரின் கதையில் இறப்பு மற்றும் காமம் சார்ந்த மேற்கியல் படிமங்கள் மட்டும் கையாளப்பட்டது கொஞ்சம் உறுத்தலாகப் பட்டது. எந்த விதத்திலும் இது கதை அனுபவத்தைக் குறைக்கவில்லை என்றாலும் கூட. ஒட்டுமொத்தமாக முழுமை நோக்கி தொகுத்தவை கூட மேற்கியல் சார்ந்தவை மட்டுமே. முழுமை நோக்கிய நகர்வு என்பது கிழக்கியல் சிந்தனை எனக்கொண்டாலும் அது ஒவ்வோர் கலாவெளிப்பாட்டிலும் முழுமையைத் தக்கவைக்கும் விழைவு அல்லவா?

மிக அற்புதமான புனைவைப் படித்த நிறைவு கிடைத்தது அரவிந்த். இத்தனை கனமான விஷயத்தைப் பற்றி எழுதியபோதும் ஒரு கணம் கூட கவனம் சிதறாமல் படிக்கவைத்தது. வாழ்த்துகள்..

நன்றி
கிரி

*

எந்த ஒரு படைப்பு என்னை பாதிக்கிறதோ, அதைப்பற்றி எழுதவதே என் வழக்கம். “சீர்மை”
என்னை பல வகைகளில் பாதித்தது – மொழிநடையில், சாரத்தில், அதின் நுண்
விவரங்களில், சாத்தியங்களில்….
நான் Grit an Grace / Ken Wilber படித்ததில்லை. ஆகவே இது ஒரு முன்முடிவில்லாத /
பாரபட்சமில்லாத ஒரு எதிர்வினையாகவே நிங்கள் கருதலாம்.

தர்க்கவியல் வாழ்வில் “சீர்மை’க்கு சாத்தியமேயில்லை. வாழ்வின் முடிவிலா,
அறியமுடியா சாத்தியங்களில் சீர்மையும் ஒன்று. சீர்மை என நாம் நினைப்பது ஒரு
தற்காலிக நிலையேயன்றி, அது ஒரு முடிவாகாது. Symmetry is only one of the
infinite possibilities that are able to be perceived by mankind.
இக்கதை என்னை பாதித்த காரணம் – புற மற்றும் அகச்சூழல். புறச்சூழலில் கோல்டன் கேட்
பாலத்தை நேரில் கண்டபொழுது எனக்குண்டான மனவெழுச்சி இன்னும்
அடங்கவேயில்லை. அதைப்பற்றிப் படிக்கும்பொழுது ஆஹா நாம் சென்ற இடமல்லவா…
அதில் நாம் உணராத ஒன்றல்லவா என தோன்றுகிறது.

அகச்சூழலில் கதைமாந்தராக என்னை உணர்ந்த பல கணமுண்டு.
• முதல் புத்தகம் கொலாரடோ பேராசிரியரால் விமர்சனப்படுத்தப்போது உண்டான ஏமாற்றம்
• விளக்கமுடியாத ஒன்றினால் தனிமையில் ஆழ்ந்து அதனூடாகவே உருப்பெறுதல்
• காதலென்று உணரும் கணம், சீண்டி, விலகி, மறுபடியும் சேர்ந்து, மீண்டும் விலகி….
ஒரு முடிவிலா கண்ணாமூச்சி ஆட்டத்தில் சோர்வடையாமல், விட்டில் பூச்சியைப்போல
அதனுள்ளே விழுதல்
• புத்தியும் இருதயமும் மாறி மாறித் தாக்கும்பொழுது எதோ ஒன்றினைப்பற்றி
முன்னகருதல்.
• தான் தேடிய ஒரு சீர்மை கலைக்கப்பட்டுத் தான் உணராத ஒரு சீர்மை நிகழும் கணம்
புலப்படுதல்.

நிகழ்காலத்தில் தொடங்கும் கதை இறந்தகாலத்தில் பயணித்து, இரு காலத்திற்க்குமிடையில்
ஊடாடி, தானாய் ஒடுங்கும் அலை போல செல்கிறது. தத்துவத்திற்கும், உணர்வகளுக்கும்
புறக்காட்சிகள் மெருகு சேர்கின்றன. குறிப்பாக ஏரி. கதையோட்டத்தில் மொழி நல்ல வலு
சேர்த்து காட்சிகளாய் விரிந்து வாசிப்பனுபவத்தைக் கூட்டுகிறது.
த்ரேயாவின் ஓவியங்களில் அவள் அடைந்த ஒழுங்கமைவும், சீர்மையும் தன் வாழ்வில்
அடையமுடியாத ஒன்றினை அகவயமாக அடைய முயன்று இறுதியில் அந்த
ஒற்றைத் தீற்றலில் நிஜம் உணர்ந்தவளாக இருக்கலாம். அதை கென் அறிந்ததும் அவன்
தேடிய தர்க்கவியலான சீர்மையின் பரிமாணங்கள் உணர்ந்து தன் வாழ்வினை
முன்னகர்த்திச்செல்கிறான்.இக்கதை ஏனோ “ bridges of madison county”யை
நினைவுப்படுத்தியது. May be இரண்டிலும் உள்ள மிகவும் உணர்வுபூர்வமான காதலாக
இருக்கலாம். ஆண் பெண் உறவின் முழுமையைக் காதலின் சீர்மை கொண்டே
புரிந்துகொள்ளமுடியும்.
கதையில் மரணமும், அதை நோக்கி செல்லும் பயணமும் என்னை பாதிக்கவில்லை. May
be மரணத்தின் நிச்சயத்தன்மை, வாழ்வின் அநித்யத்தின், சாத்தியங்களின் முன்பு என்னைக்
கவரவில்லையோ!!! Death is constant, predictable and will / must happen, but
life is unpredictable and has more possibilities than one can imagine and that
makes it worthwhile living.
இப்படைப்பு குறித்த பலவித புரிதல்களில், என் அனுபவம் ஒரு சாதாரண வாசகனுடையதாக
இருக்கும்.
ஒரு நிறைவான படைப்பைப் படித்த நிறைவுடன்,
வாழ்த்துக்கள்
சதீஷ் (மும்பை)

ஜெ,

சீர்மை அளிக்கும் வியப்பிலிருந்து வெளிவரவே முடியவில்லை. கென் வில்பரின் சுயசரிதையைப் பலமுறை வாசித்திருக்கிறேன். அதை ஒட்டியே எழுதப்பட்ட இந்தக் கதை இலக்கியம் என்பது எவ்வளவு வலிமையானது என்று காட்டுகிறது. பூரணத்தைத் தேடிச்செல்பவனின் வாழ்க்கையில் உள்ள குறை என்ற ஒற்றைவரி இப்படி வலியும் கண்ணீரும் கொந்தளிப்புமாக மாற முடிகிறது. புனைவின் மகத்துவம் என்று சொல்லமுடியும். கென் வில்பர் வாசிக்க நேர்ந்தால் கண்ணீருடன் இந்தக்கதையை மார்புடன் அணைத்துக்கொள்வார். இதை அவரால் எழுதியிருக்கமுடியாது

பாலா.கெ

முந்தைய கட்டுரைஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசீர்மை (4) – அரவிந்த்