புரியாதகதைகள் பற்றி….

அண்ணா
லூசிஃபரின் கதை எனக்குப் புரியவில்லை, மன்னிக்கவும், அது என்ன வகைக் கதை, எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், ப்ளீஸ் விளக்கிச்சொல்லுங்கள்.

கார்த்திக்
ஓசூர்

அன்புள்ள கார்த்திக்,

நவீன இலக்கியம் பற்றி தமிழில் பேச ஆரம்பித்து நூறாண்டுகளாகின்றன. அன்று முதல் இன்றுவரை ‘புரியாமை’ என்ற விஷயத்தை விளக்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

‘இந்தப்படைப்பு புரியவில்லை’ என்ற வரியை படைப்புமீதான குற்றச்சாட்டாக முன்வைப்பதே தமிழின் பொதுவாசகர்களின் வழக்கம். அதையொட்டிய எரிச்சல்கள், நக்கல்கள், வசைகள் வெளிப்படுகின்றன. வணிக எழுத்தில் ஊறியவர்களின் பொது எதிர்வினையே அதுதான்.

இளம்வாசகர் நீங்கள் என்பதனால் இதைச் சொல்கிறேன், ஓர் இலக்கியப்படைப்பு புரியவில்லை என்பதைப் படைப்பின் குறைபாடாகப் பொதுவெளியில் ஒரு போதும் சொல்லாதீர்கள். அதைப்போல அபத்தமான ஒரு பேச்சு வேறில்லை.

இலக்கியப்படைப்புகள் ‘புரியவைப்பதற்காக’ எழுதப்படுவதில்லை. அவை தெளிவாக தர்க்கபுத்திக்குச் சிக்கக்கூடிய விஷயங்களைச் சொல்ல முயல்வதில்லை. ஆகவே ஒரு கதையை ஒருமுறை வேகமாக வாசித்துவிட்டு புரியவில்லை என்று சொல்வதைப்போல பிழை பிறிதில்லை

இலக்கியத்தின் நோக்கமே ‘உணர்த்துவது’தான். எப்போதுமே நல்ல படைப்பு தர்க்கரீதியாக ,புறவயமாக,தெளிவாகச் சொல்லிவிடமுடியாத சிலவற்றைத்தான் குறிவைக்கிறது. அவற்றை அவ்வாசிரியர் வாழ்க்கையில் இருந்து அவதானித்திருக்கிறார். அதைநோக்கி வாசகனைக் கொண்டுசெல்ல கதை வழியாக முயல்கிறார்.

தனக்கு ‘சொல்வதற்கு’ என ஒன்று இருந்தால் அதை ஆசிரியர் நேரடியாகவே சொல்லலாமே. எதற்காக கதை எழுதவேண்டும்? ஆகவே சொல்லமுடியாத விஷயங்களை உணர்த்தவே அவர் எழுதுகிறார்

கதையில் உணர்த்தப்படும் விஷயத்தை வாசகனே சென்றடையும்போதுதான் ஆசிரியன் நோக்கம் வெற்றி பெறுகிறது. ஆகவே எப்போதுமே ஆசிரியன் முழுமையாகச் சொல்வதில்லை. கொஞ்சம் சொல்லி மிச்சத்தை வாசகன் ஊகிக்கவைக்கிறான். இலக்கியத்தின் சவாலே எப்படி சொல்வது என்பதல்ல எப்படிச் சொல்லாமல் விடுவது என்பதுதான்

சொல்லப்படாத அந்த விஷயத்தை நோக்கி கற்பனையால் சென்று சேர்பவனே நல்ல வாசகன். அந்தப்பயிற்சியையே இலக்கியத்தேர்ச்சி என்கிறோம்.அந்தப் பயிற்சியுடன் கொஞ்சம் இயல்பான நுண்ணுணர்வும் தேவை.

இலக்கியத்தின் உத்திகள் எல்லாமே இவ்வாறு சொல்லாமல் சொல்ல, உணரவைக்கத்தான் கையாளப்படுகின்றன. அந்த உத்திகள் வழியாகவே இலக்கியம் இலக்கியமாக ஆகிறது. நேரடியாகச் சொல்லப்பட்டால் அது இலக்கியமே இல்லை

இப்போது மட்டுமல்ல, பழைமையான இலக்கியத்திலும் அப்படித்தான். உவமைகள் , உருவகங்கள், சொல்லணிகள் எல்லாமே வாசகன் ஊகித்து ரசிக்கவேண்டியவை அல்லவா? அவை நமக்கு உரைகள் வழியாக விளக்கப்பட்டுள்ளன. நாம் அவற்றைப் பழகியிருக்கிறோம். ஆகவே அவை எளிதாக உள்ளன. நவீன இலக்கியத்துக்குப் பழகவில்லை, ஆகவே கடினமாக உள்ளது. கொஞ்சம் முயன்றால் நவீன இலக்கியத்தை எளிதில் பழகிக்கொள்ளமுடியும்

ஆகவே புரியாமை என்பது என்றும் இலக்கியத்தின் ஒரு அம்சமாகவே இருக்கும். புரியாமை கொஞ்சமும் இல்லாத எழுத்தை இலக்கியமென்றே கொள்ளமுடியாது.

புரியாமை பல காரணங்களால் அமைகிறது. வாச்கானின் நுண்ணுணர்வின்மையால், பயிற்சியின்மையால் உருவாகும் புரியாமை உண்டு. அத்துடன் அப்படைப்பிலேயே அமையும் புரியாமை உண்டு. தனக்கே திட்டவட்டமாகப் பிடிகிடைக்காத ஒன்றை ஆசிரியன் படைப்பு வழியாகத் தொட முயன்றான் என்றால் அது முழுக்கப் புரியாமலேயே இருக்கும். வாழ்க்கையின் சில அம்சங்கள் எவராலும் முழுக்கப் புரிந்துகொள்ளமுடியாதவை. அவை படைப்பில் வெளிப்பட்டால் அக்கதைகள் புரியாமையை தவிர்க்கவே முடியாது.

ஆகவே புரியாதகதையை கவனியுங்கள். அதன் எல்லாக் கூறுகளையும் கணக்கில் கொண்டு சிந்தியுங்கள். அத்துடன் கதைகளை விவாதியுங்கள். கதையின் உள்ளடுக்குகளை எளிதில் சென்று தொடமுடியும்.

இந்தக்கதைகள் அனைத்துக்கும் எதிர்வினைகள் பிரசுரமாகின்றன. அக்கடிதங்களை வாசித்தாலே போதும் எந்தப் பொதுவாசகனுக்கும் இக்கதைகள் எளிதில் புரியும்.

ஏனென்றால் இக்கதைக்கு அப்படி ஒரு திட்டவட்டமான அர்த்தம் இல்லை. இக்கதை ஒரு கனவு என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்படி ஒரு கனவு உங்களுக்கு வந்தால் எப்படி அதைப் புரிந்துகொள்வீர்கள்? பலகோணங்களில் யோசிப்பீர்கள், கொஞ்சம் புரியும் கொஞ்சம் புரியாது இல்லையா? அப்படியே இக்கதை அளிக்கும் அனுபவத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்

கதையில் கொல்லவரும் ஒன்று உள்ளது. கொடுங்கனவு. nightmare. ஈர்ப்புள்ள இன்னொன்று உள்ளது. இனிய கனவு. dream. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நிகழ்கின்றன. இரண்டுமே மறைந்துவிடுகின்றன. அந்த வெறுமையில் அவன் அமர்ந்து அழுகிறான்

இது ஒரு வாசிப்பு. இப்படி பல வாசிப்புகளுக்கு அதில் இடமிருக்கிறது. நவீனத்துவ இலக்கிய இயக்கம் ஆரம்பித்த காலகட்டத்தில் எழுதப்பட்ட வகையான கதை இது. காஃப்கா அவ்வகை எழுத்தின் உச்சம். அதையும் ஆசிரியரே குறிப்புணர்த்துகிறார்

ஜெ

முந்தைய கட்டுரைநோயும் சீர்மையும்-கடிதம்
அடுத்த கட்டுரைதாத்தாவின் பெயர்கள்