விஷ்ணுபுரம்-கடிதம்

மதிப்புக்குரிய ஜெயமோகன்,

விஷ்ணுபுரம் வாசிப்பதைப்பற்றி ஒரு தயக்கம். அதர்க்கு முன் என்னைப்பற்றி பின்புலமாக சிறு அறிமுகம்.

நான் ஒரு சாமானிய சென்னைத்தமிழன். இப்பொழுது பெங்களூரில் அலுவலக மேஜைமேல் வேலை. தமிழை முறையாக கற்றுக்கொண்டது, ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை. இந்த வருட ஜனவரியிலிருந்துதான் தமிழிலக்கிய வாசிப்பு திசையும் வேகமும் பெற்றது. எந்த மொழியிலும் இலக்கிய வாசிப்பு துவங்கியது நாலைந்து வருடங்களுக்கு முன்பே. தமிழில் இதுவரை அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், கா.நா.சு முதலியோரின் படைப்புகளை படித்திருக்கிறேன், ஆனால் உங்களின் மொழிநடையும் கதைக்களங்களும்தான் என்னை இதுவரையில் அதிகமும் கவர்ந்திருக்கிறது (பாராட்டாக சொல்லவில்லை, என் ரசனையைப் பற்றிய உண்மை, அவ்வளவுதான்). உங்களின் படைப்புகளில் ஏழாம் உலகம், அறம், ரப்பர் மற்றும் சில சிறுகதைகளையும் படித்திருக்கிறேன்.

சென்றவருட சென்னை புத்தகக்கண்காட்சியில் விஷ்ணுபுரத்தின் கண்ணைப்பறிக்கும் பிரதியைக்கண்டு வாங்கிவிட்டேன், ஆனால் படிக்கத்துவங்க அச்சமாகவேயிருந்தது. தலையணை வடிவத்தைக்கண்டு வந்த அச்சமல்ல. பரந்தவெளியைக்காண மனமோ கண்களோ இன்னும் விரியவில்லை என்று தோன்றியது. விஷ்ணுபுரம் வலைத்தளத்தில் உங்களின் அறிமுகம் படித்தேன். அதில், ”அந்நாவலின் உத்தேசவாசகன் ஆன்மீகமான அடிப்படை வினாக்களைத் தானும் கொண்டவன் என்றே நான் நினைத்திருக்கிறேன். இந்திய ஞானமரபின் படிமங்களையும் கருத்துக்களையும் தொடர்ந்து கற்று வருபவனாகவே அவன் இருக்கவேண்டும். இந்த இரு இயல்புகளும் இல்லாமல் விஷ்ணுபுரத்தை ஒரு கதையாகவோ கருத்துக்கட்டமைப்பாகவோ வாசிப்பவர்களை நான் அதற்கான வாசகர்களாக நினைத்ததில்லை.” என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

முதல் இயல்பு என்னில் உள்ளதுதான் என்று நம்புகிறேன். இரண்டாவது இயல்பு இல்லையோ என்ற சந்தேகம் மிச்சமுள்ளது. இந்திய ஞானமரபைப் பற்றி எந்த அளவுக்கு நான் அறிந்திருக்கவேண்டும்? குறிப்பாக எந்த நூல்களை நான் படித்திருக்கவேண்டும்? நான் எந்த வேதாந்த நூல்களையும் இதுவரையில் படித்தது கிடையாது. கீதையைப் படிக்கவேண்டும் என்ற உத்தேசம் இன்னும் செயலாகவில்லை. உங்களிடமே விஷ்ணுபுரத்தை சென்றடையும் வழியை கேட்டுவிடலாமென்று நினைத்தேன். வழிகாட்டுங்கள்.

– விஜய் கௌசிக்

அன்புள்ள விஜய்,

நான் விஷ்ணுபுரம் வாசிப்பதற்கான முன் தகுதிகள் என்று சொன்னவை ஒருவர் அதை வாசிப்பதற்கு முன்னரே அடைந்திருக்கவேண்டிய வாசிப்புத் தகுதிகள் என்ற பொருளில் அல்ல. அந்நூலைப் புரிந்துகொள்ளத்தேவையான அனைத்தும் அதிலேயே உள்ளன. அவற்றை அதிலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டிய கவனம் வாசகரிடமிருக்கவேண்டுமென்று மட்டுமே நான் குறிப்பிட்டேன். அதன் தத்துவவிவாதங்களைப் பயில வேறு நூல்களை நாடவேண்டியதில்லை. ஆர்வமிருந்தால் அதிலேயே பயிலலாம். அதற்கான முயற்சியை எடுத்துக்கொள்ளவேண்டும். தேவை என்றால் வெளியே வாசிக்கவும் வேண்டும்

ஒருநாவல் எல்லாக் கோணத்திலும் வாசிக்கப்படலாம். வெவ்வேறு வகையில் ரசிக்கப்படலாம். நான் சொல்வது அதன் மிகச்சிறந்த வாசகர் என நான் நினைப்பவர் எவர் என்றுதான்

ஜெ

முந்தைய கட்டுரைவிரிவெளி
அடுத்த கட்டுரைஉச்சவழு [சிறுகதை]