புதியவர்களின் கதைகள் என்றபேரில் வெளிவந்த முதல்வரிசைக் கதைகள் நற்றிணை பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்படுகின்றன. இது இரண்டாவது வரிசை. இதுவும் நூலாக வெளிவரும்.
ஏன் இக்கதைவரிசை?
இக்கதைகளை அறிமுகம் செய்வதற்கான முக்கியமான காரணம் ஒன்றுதான். இன்று, தமிழில் எந்தப் பெரும்பத்திரிகையும் சிறுகதைகளை கவனம் கொடுத்து தேர்ந்தெடுப்பதோ வெளியிடுவதோ இல்லை. சிறுகதைகள் வார இதழில் வெளிவந்தாலும் கவனிப்பு பெறுவதில்லை. நீங்கள் கடைசியாக விகடனில் அல்லது கல்கியில் வெளிவந்த எந்தச்சிறுகதையை வாசித்தீர்கள் அல்லது உங்களிடம் எவரேனும் வாசித்ததாகச் சொன்னார்கள் என நினைவுபடுத்திப்பாருங்கள், தெரியும். பெரும்பாலும் கேளிக்கை எழுத்துக்களையே வெளியிடும் வணிகப்பத்திரிகைகள் எப்போதேனும் நல்ல கதைகளையும் வெளியிட்டுவந்தன. இன்று அந்நிலை இல்லை.
மறுபக்கம் சிற்றிதழ்கள். பெரும்பாலும் அவையெல்லாமே இன்று அரசியல் இதழ்கள். ஆங்கிலத்தில் வெளிவரும் அவுட்லுக், கம்யூனலிஸம் காம்பாட் போன்றவற்றின் கட்டுரைகளைத் தழுவி எழுதப்படும் அரசியல் கட்டுரைகளைப் பக்கம் பக்கமாகப் போட்டு நிறைப்பவை. மிச்சபக்கங்களுக்கு சினிமா. ஒரு நாவல் தமிழில் வெளிவந்தால் அரைப்பக்க விமர்சனம் வெளியிடப்படுவதில்லை. அவ்வாரமே மறையும் வணிகசினிமாவுக்கு சிற்றிதழ்களில் பக்கம்பக்கமாக அலசல் விமர்சனம் வருகிறது.
சிற்றிதழ் அறிவுஜீவிகள் தாங்கள் வேறுபட்டவர்கள் என்ற பாவனைகளை எல்லாம் களைந்து பொதுப்போக்கில் ஐக்கியமாகிவிட்டார்கள். குமுதம் அரைப்பக்க விமர்சனம் எழுதும் சினிமாவுக்கு ஐந்துபக்கம் விமர்சனம் எழுதி பதினாறடி பாய்கிறார்கள். சிற்றிதழ்களில் ஐந்து பக்கம் ஒதுக்கப்பட்டு அதில் ஒரு கதை சம்பிரதாயமாகப் பிரசுரிக்கப்படுகிறது. அதையும் அவ்வாசகர்கள் வாசிப்பதில்லை.அவற்றுக்கு விமர்சனமோ விவாதமோ எழுவதேயில்லை.
ஆகவே கவிதைக்கும் சிறுகதைக்கும் வேறு ஊடகங்களைத்தான் நாடவேண்டியிருக்கிறது. செலவில்லாத இணையம் அதற்கு மிகமிக உகந்தது. சிறுகதைக்குழுக்கள், கவிதைக்குழுக்கள் உருவாகி அவற்றுக்குள் படைப்புகளை வெளியிடவும் விவாதிக்கவும் முடியுமென்றால் கவிதையையும் சிறுகதையையும் ஓர் இயக்கமாக நிலைநிறுத்தமுடியும். கவிதை அப்படித்தான் இன்று ஐரோப்பாவில் நீடிக்கிறது.
இணையத்தின் சில இயல்புகள் அதற்குத் தடையாக உள்ளன. ஒன்று, இணையத்தில் எவரும் எதையும் எழுதலாம். நான் பல்வேறு வாசகர்களிடம் இணையத்தில் வெளிவரும் கதைகளை வாசிக்கிறீர்களா என்று கேட்டதுண்டு. இணையம் வர ஆரம்பித்த நாட்களில் வாசித்துக்கொண்டிருந்தவர்கள் நின்றுவிட்டார்கள். பல வாசிப்புகள் ஏமாற்றமாக அமைந்ததே காரணம். ’இணையத்தில் வெளிவரும் படைப்புகளில் 99 சதவீதம் குப்பை சார், வாசித்துப்பார்ப்பது நேர விரயம்’ என்ற பதிலே அதிகமும் கிடைத்தது.
.
இணையத்தில் படைப்புகளுக்கு ஒரு ‘தேர்வு –பரிந்துரை’ தேவையாகிறது. அதாவது ஒரு வடிகட்டல். அதை இங்கே செய்வதற்கான வழி என்பது குழுக்களை அமைத்துக்கொள்வதே. தேர்வுசெய்யும் குழு அல்லது மதிப்பீடு செய்யும் குழு. அது வாசகனுக்குப் படைப்புகளை வடிகட்டி அளிக்கிறது. சிபாரிசு செய்கிறது. அத்தகையக குழுமங்கள் வழியாக கதைகளை எழுதி வாசித்து விவாதிக்கமுடியும்.
அதை சோதனை முறையில் செய்துபார்த்தாலென்ன என்று என் குழுமத்தில் அறிவித்தோம். ஏராளமான படைப்புகள் வெளிவந்தன. அதைக்கண்டு அம்முயற்சியை இணையதளத்திலும் நீட்டிப்பதற்கான முயற்சியாகவே இந்தக் கதைவரிசை அறிவிக்கப்பட்டது.
இணையத்தின் இரண்டாவது சிக்கல், அதன் உடனடித்தன்மை. அது ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கிறது. அன்றாட அரட்டைக்கு அதிலிருக்கும் முக்கியத்துவம் வேறெதிலும் இல்லை. ஆனால் படைப்புகள் சிலகாலம் தொடர்ந்து வாசித்து, விவாதிக்கப்பட்டால் மட்டுமே தங்கள் பாதிப்பை நிகழ்த்தும். ஆகவே இணையத்தின் கவனத்தை வலுக்கட்டாயமாக சிலகாலம் நீட்டிக்க வைக்கவேண்டியிருக்கிறது. அதற்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் அப்படைப்புகளை முன்னிலைப்படுத்தவேண்டியிருக்கிறது
கடைசியாக, இணையத்தின் எதிர்வினைகளின் கட்டற்ற தன்மை. எந்தப்பொறுப்பும் இல்லாமல் புனைபெயரில் வந்து வசைபாடி நக்கலடித்துவிட்டு போவது இங்கே அதிகம். இளம் எழுத்தாளர்களைப் புண்படுத்தவே பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். ஒற்றைவரி அபிப்பிராயங்களுக்குமேலதிகமாக எதிர்வினைகள் மிகமிகக் குறைவாகவே வருகின்றன. ஆகவே அவற்றையும் கட்டுப்படுத்தி வடிகட்டவேண்டியிருக்கிறது. அதற்கும் இந்த இணையதளப்பிரசுரம் உதவியது
ஆனால் இது இதழ்களில் கதைபிரசுரமாவது போன்றதல்ல. கதைகளை எழுதிப் பயிற்சிசெய்யவும் விவாதிக்கவும் பொதுத்தளமாக இணையத்தை பயன்படுத்தமுடியுமா என்பதற்கான முன்னோட்டம்தான் இது. சமானமான மனம் கொண்ட இளம் எழுத்தாளர்கள் இதை முன்மாதிரியாகக் கொண்டு தங்களுக்கான இணையதளங்களை, குழுமங்களை உருவாக்கிக்கொண்டு தொடர்ந்து எழுதினார்கள் என்றால் அது தமிழுக்கு வளம்சேர்க்கும். அவை இதைப்போல கட்டுப்படுத்தப்படும் பிரசுர-விவாதக் களங்களாக இருக்கவேண்டும்.
நிராகரிப்பின் தேவை
இக்கதைகளில் ஒருபகுதி என் இணையக்குழுமத்தில் வெளிவந்தது. மீதி எனக்கு நேரடியாக அனுப்பப்பட்டது. மொத்தம் 68 கதைகளில் இருந்து இவற்றைதேர்ந்தெடுத்திருக்கிறேன். தேர்ந்தெடுக்கப்படாத கதைகளை எழுதியவர்களுக்கெல்லாமே அவை ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எழுதித் தெரிவித்திருக்கிறேன். என் கடுமையான பணிச்சுமைகள் நடுவே இதைச்செய்யவேண்டியிருந்தது.
உண்மையில் இதைச் செய்வதுவழியாக நான் என் எதிரிகளின் எண்ணிக்கையை பெருக்கியிருக்கிறேன். மிகுந்த பிரியத்துடன் கடிதம் எழுதி கதைகளை அனுப்புபவர்கள் அவை நிராகரிக்கப்படும்போது சட்ட்டென்று உக்கிரமான கோபம் கொண்டு வசைபாட ஆரம்பிக்கிறார்கள். என் ரசனையையும் ,நோக்கத்தையும் ஐயப்பட்டு எழுதுகிறார்கள். பிரசுரமாகும் ஒருகதைக்கு ஐந்து வீதம் கதைகள் நிராகரிக்கப்படுவதனால் விரோதிகள் ஐந்துமடங்கு உருவாகிறார்கள் என்று சொல்லலாம். இது எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. அம்மனநிலையைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
அந்த நண்பர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ளவேண்டும். கதை நிராகரிப்பு என்பது அக்கதை எழுதுபவரின் ஆளுமையையோ ரசனையையோ திறமையையோ நிராகரிப்பது அல்ல. கதை என்பது ஆசிரியனால் முன்வைக்கப்படுவது மட்டும் அல்ல. வாசகனால் எடுத்துக்கொள்ளப்படுவதும்கூட. எழுத்தும் வாசிப்பும் சந்திக்கும் அந்தப்புள்ளி அக்கதைகளில் நிகழவில்லை என்பது மட்டுமே அதற்குப்பொருள்.
அது ஏன் நிகழவில்லை என்றே நிராகரிப்பிலிருந்து யோசிக்கவேண்டும். அதற்கு சிலசமயம் கதையின் வடிவம் காரணமாக இருக்கலாம். மொழி காரணமாக இருக்கலாம். கதை சரியான முறையில் முன்வைக்கப்படாமலிருக்கலாம். நம்முடைய எழுத்து முறையை நாமே கூர்ந்து ஆராய்ந்து மேம்படுத்திக்கொள்வதற்கான பெரும் வாய்ப்பு அது
சிலசமயம் அந்தக் கதைக்கரு நம் மனதில் முதிர்ச்சியடையாமலிருக்கலாம். இது எல்லா எழுத்தாளர்களுக்கும் நடக்கக்கூடியது. நான் 1992 இல் எழுதிய கதை நூறுநாற்காலிகள். ஆனால் அன்று அது ஒரு நிகழ்ச்சிவிவரிப்பாக மட்டுமே இருக்கிறது என நண்பர்கள் சொன்னார்கள். இருபதாண்டுகளுக்குப்பின்னரே அக்கதை அதன் சரியான வடிவத்தை அடைந்தது. அதற்கு நான் முதிரவேண்டியிருந்தது.
நிராகரிப்பு என்பது மேலான முறையில் தொடர்புறுத்தல் நிகழவேண்டும் என்பதற்கான ஒரு கட்டாயம் மட்டுமே. அது இல்லாவிட்டால் கதைகளுக்கான இடமே இல்லாமல் போய்விடும். நிராகரிப்பு நிகழாத காரணத்தால்தான் வருடக்கணக்காக இணையதளங்களில் எழுதுபவர்கள் எந்தவகையிலும் மேம்படாமல் அதே நிலையில் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
தெரிந்தவர்களின் கதைகளா?
நான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் விதம் பற்றி நிராகரிப்புக்கு உள்ளானவர்கள் எழுப்பிய ஆவேசமான கேள்விகள் பல. ஒன்று , நான் எனக்குப்பிடித்த அல்லது தெரிந்த குமரிமாவட்டச்சூழலைக் கொண்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறேன் என்பது. இரண்டு, நான் எனக்கு தெரிந்தவர்களின் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறேன் என்பது. மூன்று, குழுமத்தில் எழுதினால் மட்டுமே கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன் என்பது. இந்துத்துவா கதைகளை தேர்ந்தெடுக்கிறேன் என்ற வழக்கமான குற்றச்சாட்டு வரவில்லை. பாதிரியார்களெல்லாம் எழுதியது காரணமாக இருக்கலாம்.
எனக்கு வந்த கதைகளில் குமரிமாவட்டப்பின்னணியில் எழுதப்பட்ட கதைகள்தான் நேர்ப்பாதி என்றால் நம்ப மாட்டீர்கள். ஆனால் அதற்கான சமூக- அரசியல் காரணங்கள் உள்ளன. இன்று குமரிமாவட்டத்தில் நிகழ்வதுபோல தொடர்ச்சியான பண்பாட்டுச்செயல்பாடுகள் தமிழகத்தின் எந்தப்பகுதியிலும் இல்லை. இங்கே இந்த மாவட்டத்துக்குள் மட்டும் மாதாமாதம் வெளிவரும் சமூகவியல்-அரசியல்- பண்பாட்டு இதழ்கள் ஐமபதுக்கும் மேல். ஒவ்வொன்றுக்கும் இரண்டாயிரம் பிரதிகளாவது விற்பனை உள்ளது. ஒவ்வொன்றிலும் கதைகள் வெளியாகின்றன. இவற்றை தொடர்ந்து எழுதும் ஐம்பது அறுபது எழுத்தாளர்கள் இங்குள்ளனர்
இவர்களில் பலர் வெளியே அறியப்படாதவர்கள். அறியப்படவேண்டிய தேவையும் இல்லை. ஏனென்றால் அவர்கள் முன்னிலையாக்குவது குமரிமாவட்ட வாசகர்க்ளை மட்டுமே. இருபது முப்பது தொகுதிகளை வெளியிட்டவர்கள்கூட இவர்களில் உண்டு. புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த அலையின் ஒரு பகுதிதான் பொது இலக்கியத் தளத்திலும் வந்துசேர்கிறது.
இதற்கான காரணங்கள் பல. குமரிமாவட்டத்தில் எப்போதும் இலக்கிய இயக்கம் இருந்துள்ளது. நூறாண்டுகளுக்கும் மேலாக நவீன இலக்கிய மரபு நீடிக்கிறது. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை- கவிமணி- வையாபுரிப்பிள்ளை காலம் முதல் இன்றுவரை அது அறுபட்டதே இல்லை. இன்னொரு காரணம், சமகாலத்தில் வலுவான பொருளியல் அடிப்படையுடன் எழுந்துள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் தங்களை பண்பாட்டுத் தளத்திலும் பரப்பி நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள்.
குமரிக்கு அடுத்துக் கோவையும் கொஞ்சம் நெல்லையும் மட்டும்தான் இலக்கியத்தில் உள்ளன என்பதை கவனியுங்கள். தொண்டைமண்டலத்தையோ தஞ்சையையோ தேடித்தான் பார்க்கவேண்டும். இதற்கான காரணங்களை சமூக ஆய்வாளர்கள்தான் கண்டுபிடிக்கவேண்டும். நேர்மையாகச் செய்யப்படும் எந்த ஒரு இலக்கிய இயக்கத்திலும் இந்த சமூக உண்மை இயல்பாகவே பிரதிபலிக்கும்
இந்தக்கதைகளை எழுதியவர்களில் ஓரிருவர் தவிர பிறர் எனக்குத்தெரியாதவர்கள். இவற்றில் மிகச்சில கதைகளே என் இணையக்குழுமத்தில் இருப்பவர்களால் எழுதப்பட்டவை. வெறும் காழ்ப்பால்தான் இவை எனக்குத்தெரிந்தவர்கள் எழுதுபவை என்று சொல்கிறார்கள்
இக்கதைகள் விமர்சகனாக நான் என் அந்தரங்கமான ரசனையை ஒட்டி தேர்ந்தெடுத்து முன்வைப்பவை. என் ரசனை மீதும் நேர்மை மீதும் நம்பிக்கை உள்ளவர்கள் வாசிக்கலாம். மற்றவர்கள் விலகிச்செல்லலாம்
[மேலும் ]